கசப்பான அனுபவங்களை எதிர்கொள்வது எப்படி?
வாழ்க்கையில் மோசமான தருணங்கள் வரும்போது அதை எதிர்கொள்ளும் விதம் தெரியாமல் பலரும் தங்கள் வாழ்வை கசப்பாக மாற்றிக்கொள்வதைப் பார்க்கிறோம். கசப்பான அனுபவங்கள் நிகழும்போதும் வாழ்வை இனிமையாக மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதை சத்குருவின் பதில் உணர்த்துகிறது!
சத்குரு:
Subscribe
எப்போதும் துன்பத்திலேயே இருக்கக்கூடிய ஒரு மனிதன் ஒரு கல்லறையில் தன் தலையை முட்டி மோதி அழுது கொண்டிருந்தான். "ஓ! என் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமற்றதாக ஆகிவிட்டது. நீ போய்விட்டதால் என் வாழ்க்கை இந்நிலைக்கு வந்துவிட்டதே. நீ மட்டும் வாழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். உன்னை இந்த உலகத்திலிருந்து பிரித்துக் கொண்டுபோன விதிதான் எவ்வளவு கொடுமையானது" என்றெல்லாம் கதறிக் கொண்டிருந்தான். அருகே இருந்த ஒரு மதபோதகர், "இங்கே புதைக்கப்பட்ட மனிதன் உனக்கு மிக முக்கியமான மனிதன் என்று நினைக்கிறேன்" என்று ஆறுதலாகச் சொன்னார். "ஆமாம்" என்று இன்னும் அதிகமாக அழுதுகொண்டு அந்த மனிதன் சொன்னான்." இங்கே புதைக்கப்பட்டிருப்பவன் தான் என் மனைவியின் முதல் கணவன்" என்று. எனவே இந்தக் கசப்பு இப்போது நடப்பதால் நேர்ந்ததல்ல. அதை உணர எப்படி உங்களை நீங்களே அனுமதிக்கிறீர்கள். எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
எல்லா சூழ்நிலையிலும் எது தேவையென்று உங்கள் விழிப்புணர்வு சொல்கிறதோ உங்கள் தகுதிக்கேற்றவாறு அதைச் செய்யுங்கள்.
மக்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்பது, "உங்கள் லட்சியம் என்ன?" என்பது. எனக்கு எந்த லட்சியமும் இல்லை. நான் வெறுமனே இருக்கிறேன் என்று சொன்னால், நான் ஏதோ விளையாட்டுக்குச் சொல்வதாகக் கருதுகிறார்கள். இந்த உலகத்தில் வாழ்வது பற்றி நான் வெளிப்படுத்தக்கூடிய ஆழமான செய்தி இதுவாகத்தான் இருக்கமுடியும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எனக்கென்று தனியாக பற்று ஏதுமில்லாததால் என்ன வேண்டுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன்.