காரண அறிவின் மூலம் ஞானமடைய வழி உண்டா?
பெரும் கல்வியாளர்களையோ அல்லது போட்டித் தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்களையோ நம் கலாச்சாரத்தில் ஞானி என்று சொல்வதில்லை! மாறாக, காரண அறிவைத் தாண்டி இந்த பிரபஞ்ச இரகசியத்தை உணர்ந்து கொண்டவர்களையே அப்படி அழைக்கிறோம். ஆனால், சிலரோ காரண அறிவின் உச்சம்தான் ஞானம் என்று நம்பிக்கொண்டிருக்க, சத்குருவின் இந்த பதில் தெளிவுபடுத்துகிறது!
பெரும் கல்வியாளர்களையோ அல்லது போட்டித் தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்களையோ நம் கலாச்சாரத்தில் ஞானி என்று சொல்வதில்லை! மாறாக, காரண அறிவைத் தாண்டி இந்த பிரபஞ்ச இரகசியத்தை உணர்ந்து கொண்டவர்களையே அப்படி அழைக்கிறோம். ஆனால், சிலரோ காரண அறிவின் உச்சம்தான் ஞானம் என்று நம்பிக்கொண்டிருக்க, சத்குருவின் இந்த பதில் தெளிவுபடுத்துகிறது!
சத்குரு:
உங்களுடைய காரண அறிவானது அதை கிரகித்துக்கொள்ள முடிந்தால், ஏன் நீங்கள் அதனை மறைபொருள் என்று கூறவேண்டும்? மறைபொருள் என்று நாம் குறிப்பிடுவது எதுவோ அது காரண அறிவின் புரிதலுக்கு உட்பட்டது அல்ல என்பதால்தான் அது மறைபொருளாக உள்ளது.
ஒரு ஞானயோகி என்பவர், ஆரம்பநிலையில் தனது காரண அறிவை உபயோகித்து, அதன்பிறகு பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்துகிறார். அவர் காரண அறிவை ஆரவாரமாக பயன்படுத்தும் மனிதர் என்றால் அவர் ஒரு ஞானயோகி அல்ல. உண்மையிலேயே அவர் ஞானயோகியாக இருந்தால், காரண அறிவானது தகவல் இல்லாமல் ஒருபோதும் செயல்பட முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறார். உங்கள் நினைவிலிருந்து எல்லாத் தகவல்களையும் எடுத்துவிட்டால், உங்களது காரண அறிவு எப்படிச் செயல்படும்? காரண அறிவு என்பது முற்றிலும் ஒரு தகவல் தொழில்நுட்பமாக இருக்கிறது. அந்தத் தகவல் அனைத்தும் நீங்கள் வெளியிலிருந்து சேகரிப்பதாகவே உள்ளது. தகவல் சேகரிப்புக்கான ஒரே வழியாக இருப்பது, ஐம்புலன்கள்தான். ஐந்து புலன் உறுப்புகளால் உணர்வது நம்பமுடியாதது.
Subscribe
புலன் உறுப்புகளால் ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள முடியும். உங்கள் வாழ்வில் நீங்கள் இருளைப் பார்த்ததில்லை என்றால், வெளிச்சம் என்றால் என்ன என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியாது. வெளிச்சம் என்றால் என்ன என்பதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தே அறிகிறீர்கள். இப்போது உங்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். அவன் உங்களுக்குச் சிறுவனாகத் தெரிகிறான். ஆனால், அது உண்மை அல்ல. தரையில் ஊர்ந்து செல்லும் எறும்புக்கு அவன் இராட்சசனாகத் தெரிகிறான். பெரியது-சிறியது, வெளிச்சம்-இருள் மற்றும் நல்லது-கெட்டது போன்றவை குறித்த அபிப்பிராயங்கள் அனைத்தும் நீங்கள் எதனுடன் அடையாளம் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. நீங்கள் இந்த உடலுடன் அடையாளம் கொண்டிருக்கும் காரணத்தால், ஒரு டைனோசர் பெரியதாக இருப்பது போலவும், ஒரு எறும்பு சிறியதாக இருப்பது போலவும் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல. எந்த ஒன்றையும் நீங்கள் ஒப்பிடுவதன் மூலம்தான் உணர்கிறீர்கள். இது பிழைப்பிற்கு நல்லது. ஆனால் உண்மையான ஒரு புரிதலை அது தருவதில்லை.
நீங்கள் எந்த ஒன்றைப் பார்த்தாலும், அது எப்படி இருக்கிறதோ அந்தவிதமாக ஒருபோதும் பார்ப்பதில்லை என்று நவீன நரம்பியல் விஞ்ஞானம் கூறுகிறது. உங்களது கண்கள் புகைப்படக் கருவி போன்றது அல்ல. உங்களது கண் ஒரு தகவலை கிரகித்து, அந்தத் தகவலை பன்னிரண்டு வெவ்வேறு பகுதிகளாக வகைப்படுத்துகிறது. இந்தப் பன்னிரண்டு வெவ்வேறு அம்சங்களும் உங்களுடைய மூளையின் பன்னிரண்டு வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, அங்கே அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு, உங்கள் மூளை ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், இந்த உலகம் எவ்விதமாக இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்த விதமாக அது இல்லை. இது ஒரு தத்துவமோ அல்லது மறைஞானமோ அல்ல. இது நரம்பு மண்டல அறிவியல். அவர்கள் மேலும் கூறுவதாவது, உங்கள் மனதில் கடந்த காலத் தகவல் பதிவுகள் இல்லையென்றால், சிலவற்றை உங்களால் உண்மையில் பார்க்கமுடியாது.
உங்களுடைய காரண அறிவானது ஏற்கனவே சேகரித்துள்ள தகவலின் உதவியுடன் செயல்படுகிறது. தகவலின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், நீங்கள் எவ்வளவு தகவலைச் சேகரிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, தகவல் எப்போதும் ஒரு எல்லைக்குட்பட்டது. எல்லைக்குட்படாத தகவல் என்பதே இல்லை. நவீன விஞ்ஞானம் பிரபஞ்சம் குறித்த தகவலை அலசி ஆராய்ந்தாலும், எதையும் அறிந்துகொள்ள இயலவில்லை. முன்பு எப்போதும் இருந்ததைவிடவும், திகைப்பும், குழப்பமும்தான் அதிகரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தோன்றுவதற்கு முன்பு, மூதாதையர்கள் தங்களுக்கே உரிய எளிய முறைகளின் வாயிலாக, எல்லாவறையும் குறித்து சர்வ நிச்சயமாக அறிந்திருந்தனர். இப்போது யாருக்கும், எதுவும் தெரியவில்லை.
ஏராளமான தகவல் சேகரிப்பு இருந்தாலும், அவை உங்களை ஞானத்திற்கு சற்றே நெருக்கமாகக்கூட கொண்டு செல்லவில்லை. அறிந்துகொள்வதிலிருந்து உங்களை தூரமாகத்தான் விலக்கி வைத்துள்ளது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர், ஒரு மருத்துவராக மட்டும் இருந்தார். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு மருத்துவர், வெறும் மருத்துவர் அல்ல; சிறப்பு மருத்துவராக, ஒரு குறிப்பிட்ட உடல் பகுதிக்கு கூடுதல் சிறப்பு மருத்துவத்திறனும், பயிற்சியும் பெற்றிருந்தார். உங்கள் உடலுக்கு மூன்று வெவ்வேறு மருத்துவர்கள் தேவைப்பட்டனர். இன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவங்கள் உண்டு. ஆகவே உண்மையாகவே உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால், நீங்கள் நூறு மருத்துவர்கள் அல்லது அதற்கும் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை நாட வேண்டியதுள்ளது.
சமீபத்தில், நான் அட்லாண்டாவில் இருந்தபோது எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது. என்னுடன் இருந்த குழுவினரில் ஒருவர், “நான் உங்கள் முழங்காலைப் பரிசோதிக்க விரும்புகிறேன்” என்றார்.
அவரிடம் நான், “ஏன்?” என்று கேட்டேன்.
அவர், “நான் ஒரு முழங்கால் மருத்துவர்” என்றார்.
நான், “ஓ, நீங்கள் எலும்பியல் நிபுணரா?” என்று கேட்டேன்.
“இல்லை, நான் முழங்கால் மருத்துவர்” என்றார் அவர். அதற்கு நான் கேட்டேன், “ஓ, எனக்குத் தெரியவில்லை..... எந்த முழங்கால்?” ஏனென்றால், வலது முழங்காலுக்கு ஒரு மருத்துவர், இடது முழங்காலுக்கு வேறொரு மருத்துவர் என்று நீங்கள் தேடவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை!
படைப்பைப் பற்றி நாம் மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து, அதிகத் தகவல் சேகரிக்கும்போது, உங்களுடைய உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் ஒவ்வொரு மருத்துவர் உங்களுக்குத் தேவைப்படுவது ஒருநாள் நிகழும். ஏனெனில் உடலின் ஒவ்வொரு அணுவும் அவ்வளவு சிக்கலானது, நுணுக்கமானது. ஒரே ஒரு அணுவைப்பற்றிக் கூட மனிதரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் ஒரு மருத்துவர் குழு உங்களுக்குத் தேவைப்படும். படைப்பு குறித்து விஞ்ஞானம் ஆழமாகச் செல்லச் செல்ல, அதன் தகவல் சேகரிப்பு அதிகரிக்க அதிகரிக்க, வாழ்வு பற்றி நீங்கள் அதிகம் குழப்பமடைவீர்கள்.
ஒரு குடிகாரன், உறுதுணையாகப் பற்றிக் கொள்வதற்கு மட்டுமே ஒரு விளக்குத்தூணை உபயோகிப்பது போலத்தான், ஒருவர், தகவல் மற்றும் காரண அறிவை தனக்கு உறுதுணையாக மட்டுமே பயன்படுத்தவேண்டும், மற்றபடி அந்தக்காரண அறிவிலிருந்து உங்களுக்கு எந்த வெளிச்சமும் கிடைக்காது. தகவல் அறிவுதான் ஒரு ஞானயோகியின் வாழ்வை பிரகாசமாக்குகிறது என்று நீங்கள் நினைப்பது தவறானது. ஏனென்றால் எப்படி இருந்தாலும் பிதற்றல்காரர்களுக்கு அவர் எதையும் தெளிவுபடுத்த முடியாது.
ஒரு ஞானயோகி என்பவர் வெறுமனே மதிநுட்பமான முட்டாள் அல்ல. அவர் ஒரு முனைவர் பட்டம் (Ph.D)வாங்கியவரைப் போல அல்ல. நான் உயர் கல்விக்கு எதிராக இருக்கிறேன் என்பதாக நினைக்காதீர்கள். ஒரு பிஹெச்.டி. பட்டதாரர், தான் சேகரித்த தகவல் அறிவைக் கொண்டாடுகிறார். ஒரு ஞானயோகி அப்படிப்பட்டவர் அல்ல. தனது தர்க்கமும், காரண அறிவும் தனக்கு ஒரு பக்கபலமாக இருக்கிறதே தவிர, அதுவே ஞானம் அல்ல என்பதை அவர் புரிந்துள்ளார், அதைத் தெளிவாக அறிந்திருக்கிறார்.
தர்க்கம் என்பது ஒரு கத்தி போன்றது. உங்களது காரண அறிவு ஒரு கத்தி போன்றது. கூர்மையான காரண அறிவினால் கூறுகூறாக வெட்டி உள்ளே சென்று பார்க்கமுடியும். வெறுமனே வெட்டுவதால் மட்டுமே உங்களால் அறிந்துகொள்ள முடியாது. அதற்கும் அடுத்து உள்ளே பார்ப்பதால்தான் உங்களால் அறிந்துகொள்ள முடியும். உங்களது காரண அறிவும், தர்க்கமும் வெட்டத்தான் உதவும், பார்ப்பதற்கு உதவாது. உங்களுடைய காரண அறிவு வியக்கத்தக்க அளவில் தர்க்க ரீதியான வாதங்கள் செய்ய முடியும்.
நீங்கள் இந்த பூமியிலேயே மாபெரும் தர்க்கவாதங்களை இதுவரை அறிந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர். ஆனால், ஒன்றை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தியக் கலாச்சாரத்தில் இருப்பதைப் போல, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் மக்கள் தங்களது தர்க்கத்தை அவ்வளவு ஆழமாகப் பயன்படுத்தியதில்லை. இந்த மண்ணில் தர்க்கம் அதன் உச்சம் வரை சென்றடைந்திருந்தது. வேதாந்தத் தத்துவத்திற்குள் நீங்கள் சென்றால், உங்களை முற்றிலும் பைத்தியமாக்கும் அளவுக்கு தர்க்கம் ஆழமாகச் செல்லும். தர்க்கம் ஒரு விண்வெளிக்கணை போல் செயல்பட்டு, நீங்கள் தலைசுற்றி, மயக்கமாகும் அளவுக்கு உங்களை உயர உயர எடுத்துச் செல்கிறது. அதன்பிறகுதான், அது உங்களை எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்றும் அதீத தர்க்கத்தின் கனம் தாங்காமல்தான் உங்கள் தலைக்குள் ஒரு கிறுகிறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நீங்கள் உணர்கிறீர்கள். காரண அறிவைக் கொண்டு, விஷயங்களை பகுத்துப் பிரிக்கமட்டுமே இயலும் என்பதையும் பிறகு புரிந்துகொள்கிறீர்கள். காரண அறிவு ஞானத்திற்கு உகந்த கருவி அல்ல.
ஞானத்திற்கு, உங்களுக்கு பிரபஞ்ச அறிவு தேவை. பிரபஞ்ச அறிவு என்பது காரண அறிவு அல்ல. உதாரணத்திற்கு உங்கள் உடலைப் பல வழிகளில் பார்க்கலாம். இந்த உடலை ஒரு சிக்கலான இரசாயனத் தொழிற்கூடம் என்று கூறலாம். இந்த ஒட்டுமொத்த இரசாயன நாட்டியத்தையும் நிகழ்த்தி, நிர்வகிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான பிரபஞ்ச அறிவு உள்ளது. என்றைக்காவது ஒருநாள் இந்த இரசாயன விளையாட்டு முழுவதையும், காரணஅறிவினால் நிகழ்த்திவிடலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஒரு முட்டாள்தான் அப்படி நம்பமுடியும். காரண அறிவின் வழியில் உங்கள் உடலின் ஒரே ஒரு அணுவைக்கூட உங்களால் நிர்வகிக்க முடியாது.
தர்க்க அறிவின் எல்லையையும், பிரபஞ்ச அறிவு செயல்படக்கூடிய அபரிமிதமான தன்மையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்ச அறிவு என்பதும் படைத்தவன் என்று நீங்கள் குறிப்பிடுவதும் வெவ்வேறு அல்ல. படைத்தவன் முழுமையும் பிரபஞ்ச அறிவாகத்தான் இருக்கிறான். காரண அறிவையும் கடந்த பிரபஞ்ச அறிவு படைத்தவனாக அல்லது நீங்கள் குறிப்பிடும் கடவுளாக இருக்கிறார். உங்களது தர்க்க அறிவின் வரையறைக்குள்ளும், அதன் எல்லைக்குள்ளிருந்து மட்டும் நீங்கள் செயல்பட்டால், படைத்தவன் என்று நாம் குறிப்பிடும் அந்தத் தன்மையை ஒருபோதும் நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்கள். வாழ்வின் சர்க்கஸை மட்டும் நடத்துவீர்கள். உங்களது தர்க்க அறிவும், உடலும் மட்டும் செயல்படும்போது, வாழ்க்கை என்பது சர்க்கஸ் வித்தையாக உள்ளது. பிரபஞ்ச அறிவு தனது பங்களிப்பைத் தொடங்கும்போது, வாழ்க்கை ஒரு நடனமாகிறது.