சத்குரு: புராணங்களின்படி பார்த்தால் கைலாயம், சிவனும் பார்வதியும் உடலோடு உலவிய இடம். கைலாயத்தைப் பொறுத்தவரை அதற்கு மூன்று பரிமாணங்கள் உண்டு. ஒன்று அந்த மலையின் மகத்தான இருப்பு, இன்னொன்று அதிலிருக்கும் அளவிடற்கரிய ஞானம். மூன்றாவது கைலாயத்தினுடைய மூலமாக விளங்கக்கூடிய சக்தி.

கைலாஷ் - வார்த்தைகளில் அடங்கா தெய்வீக அழகு

Sadhguru bowing down to Kailash | The Three Dimensions of Kailash

 

இமயமலைப் பரப்பில் எத்தனையோ மலைச்சிகரங்கள் உண்டு. கைலாயத்தைவிட பன்மடங்கு பெரிய சிகரங்களும் உண்டு. 24,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் நூற்றுக்கணக்கான சிகரங்களை நீங்கள் பார்க்கலாம். இந்தியாவின் சில பகுதிகளிலிருந்து கைலாயம் வருகிறபோது, எவரெஸ்ட் சிகரம் கண்களில் தென்படும். அதனுடைய பிரம்மாண்டத்தோடு எதையும் ஒப்பிட இயலாது.

எனவே, கைலாயத்தை அதனுடைய இயற்கை அழகுக்காக மட்டும் நாம் காணவில்லை. ஆனால், இமயமலைத் தொடரில் இருக்கக்கூடிய மற்ற பெரிய மலைகளோடு பார்க்கிறபோது கைலாயத்திற்கென்று, அதன் இருப்புக்கென்று ஒரு தனித்தன்மை இருப்பதை உணர்ந்தார்கள்.

 

உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு A, B, C என்ற மூன்றெழுத்துக்கள்தான் தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குழந்தையை பல லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கக்கூடிய ஒரு பெரிய நூலகத்திற்குள்ளே கொண்டுபோய் விடுகிறீர்கள். A எனும் எழுத்தே பல லட்சம் புத்தகங்களில் தென்படுகின்றது. B என்கிற எழுத்தும் அப்படித்தான். C என்கிற எழுத்தும் பல லட்சக்கணக்கான புத்தகங்களில் இருக்கிறது என்றால், அந்தக் குழந்தை திக்குமுக்காடிப் போகும். கைலாயத்தைப் பொறுத்தவரையிலும் அதுதான் உங்கள் அனுபவம்.

கைலாயத்தை உங்கள் செல்லிடப் பேசியின் வழியாகப் பார்த்து செல்ஃபி எடுப்பதன் மூலம் உங்கள் இரண்டு விரல்களுக்கு இடையில் கைலாயத்தை அடக்க நீங்கள் முற்படுபவராக இருந்தாலொழிய, கைலாயத்தின் மகத்துவத்தை உங்களால் இழக்க இயலாது.

அதனுடைய மகத்தான தன்மையை உங்களால் புறக்கணிக்க இயலாது. நீங்கள் மிக இறுக்கமானவராக இருந்தாலோ அல்லது கைலாயத்தை உங்கள் செல்லிடப் பேசியின் வழியாகப் பார்த்து செல்ஃபி எடுப்பதன் மூலம் உங்கள் இரண்டு விரல்களுக்கு இடையில் கைலாயத்தை அடக்க நீங்கள் முற்படுபவராக இருந்தாலொழிய, கைலாயத்தின் மகத்துவத்தை உங்களால் இழக்க இயலாது.

அதை இழப்பது என்று சொன்னாலும்கூட அது அறைக்குள் இருக்கும் காற்று மாதிரி. நீங்கள் விழிப்புணர்வு இல்லாமலேயேகூட அந்தக் காற்றை சுவாசித்துக் கொண்டுதான் இருப்பீர்கள். அந்தக் காற்று உங்களை உயிரோடு வைத்திருக்கும். ஆனால் விழிப்புணர்வோடு சுவாசிக்கத் தொடங்குவீர்களேயானால் உங்கள் அனுபவம் வேறுவிதமாக இருக்கும். அதை இன்று இரவு உணவின்போது கூட நீங்கள் பரிசோதித்துப் பார்க்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மிக சக்திமிக்க உணவை நன்றாக அரைத்து, அதை வாயில் ஒரு குழாயை வைத்து நேராக ஊற்றிவிட்டீர்கள் என்றாலும் உங்களுக்கு ஊட்டச்சத்தினை அது கொடுத்துவிடும். ஆனால், உணவு உண்பதனுடைய அழகையும் சுவையையும் நீங்கள் இழப்பீர்கள். இதுவே கைலாயத்தில் உங்களுக்கு நிகழக்கூடும். அது வழங்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும் என்றாலும், அந்த அனுபவம் உங்களுக்கு அவசியம்.

அறிதல் மற்றும் ஞானத்தின் மகத்தான நூலகம்!

கைலாயத்தின் இரண்டாவது பரிமாணம் என்னவென்றால், மகத்தான அறிதலும் ஞானமும் அங்கே பொதிந்திருக்கிறது. இந்த நூலகம் உங்களை திக்குமுக்காடச் செய்யும். ஆனால், இதை வாசிக்க வேண்டுமென்றால் அதற்கு வேறுவிதமான தன்மை தேவைப்படுகிறது. ஒரு மொழியை கற்பதற்குக்கூட, நன்றாக படிப்பதற்கு ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்றால், கைலாயத்தின் ஞானத்தை நீங்கள் அணுக விரும்பினால், அதற்கென்று தயாரிப்பு நிலையும் ஈடுபாடும் முற்றிலும் வேறொரு தளத்தைச் சார்ந்தவை.

சில நாட்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம் கேட்டார், பாமரர் ஒருவரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்றால் என்ன செய்வீர்கள் என்று. உள்ளபடியே நீங்கள் ஒரு பாமரராக இருந்தால் கைலாயத்தை அணுகுவது மிக எளிது.

சில நாட்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம் கேட்டார், பாமரர் ஒருவரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்றால் என்ன செய்வீர்கள் என்று. உள்ளபடியே நீங்கள் ஒரு பாமரராக இருந்தால் கைலாயத்தை அணுகுவது மிக எளிது. ஏனென்றால், பாமரர் என்று ஒருவர் கிடையாது. ஒருவர் பாமரராக உண்மையிலேயே இருக்கும் பட்சத்தில் அவருக்குள் என்னால் எளிதாக கைலாயத்தை ஊற்றிவிட இயலும்.

பாமரர் என்றால் ஒன்றும் அறியாதவர். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் ஒரு சாமர்த்தியசாலி. பிறர் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, நீங்களாவது உங்களைப்பற்றி அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோருமே தங்களைத் தனித்தன்மை வாய்ந்தவர்களாகத்தான் நினைக்கிறார்கள். எனவே பாமரர் என்று யாருமே கிடையாது. நீங்கள் உள்ளபடியே அறிவாளியாக இருந்து உங்களைச் சுற்றி இருப்பதை கூர்ந்து கவனிக்கிறவராக இருந்தால், ஒரு சின்ன மலருக்கு முன்பும் ஒரு இலைக்கு முன்பும் உங்களுடைய அறிவு ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு புலப்படும். பாமரர்கள் என்று கருதப்படுபவர்கள், கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள், ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குள் அந்தத் தன்மையை நம்மால் எளிதில் நிரப்பிவிட முடியும்.

நீங்கள் உள்ளபடியே அறிவாளியாக இருந்து உங்களைச் சுற்றி இருப்பதை கூர்ந்து கவனிக்கிறவராக இருந்தால், ஒரு சின்ன மலருக்கு முன்பும் ஒரு இலைக்கு முன்பும் உங்களுடைய அறிவு ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு புலப்படும்.

அல்லது நீங்கள் உள்ளபடியே கூரிய அறிவு உள்ளவராக இருக்கவேண்டும். அறிவு என்பது பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதல்ல. சாமர்த்தியத்திற்கு எப்போதுமே ஒப்பிட்டு பார்க்கத் தோன்றும். நீங்கள் சாமர்த்தியசாலி என்றால், பக்கத்தில் இருப்பவரைவிட மேலும் சாமர்த்தியமாக செயல்படுபவர் என்று பொருள். சாமர்த்தியத்திற்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. உங்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டுமானால் அது உதவும். ஆனால், வாழ்வினுடைய தன்மையில் அது உங்களை எங்கும் கொண்டு செல்லாது.

அறிவு, ஒப்பிடுவதை தேடுவதில்லை. அதற்கென்று சார்புத் தன்மையும் கிடையாது. ஏனென்றால், உண்மையான அறிவு, தான் எவ்வளவு சிறியது என்பதை உணர்ந்தே இருக்கிறது. நீங்கள் உள்ளபடியே அறிவாளியாக இருந்து, உங்களைச் சுற்றி இருப்பதையெல்லாம் கவனிப்பீர்களேயானால் நீங்கள் எவ்வளவு சிறியவர் என்று உங்களுக்குத் தெரியும். அறிவினுடைய இயல்பே தன்னுடைய குறுகிய தன்மைகளை உணர்ந்து கொள்வதுதான். ஒரு பாமரன் ஏன் அறிவாளி என்றால், தன்னைச் சுற்றி இருப்போரைப் பார்த்து அவனால் உள்வாங்க முடிகிறது.

கைலாயத்தின் மூலமாகிய சக்திநிலை!

 

கைலாயத்தினுடைய மூன்றாவது அம்சம் அதனுடைய மூலமாகிய சக்திநிலை. அதுவும் அங்கே ஒரு மகத்தான இருப்பாக இருக்கிறது. ஆனால், மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. உங்களுக்குள் ஒரு தீவிரமான உயர்நிலையிலான நேர்மை இருக்குமேயானால், உடலளவிலேயும், உள்ள அளவிலேயும், சக்தி நிலையிலும் அந்த நேர்மை இருக்குமேயானால், கைலாயத்தின் அந்த மூலத்தை உங்களால் தொட்டுவிட முடியும். அது ஒரு வெற்றிடம் போன்றது. நீங்கள் ஆகாயத்தைப் பார்த்தால் நட்சத்திரங்களைப் பார்ப்பீர்கள், நிலவைப் பார்ப்பீர்கள். ஆனால், அது இருக்கிற வெற்றிடத்தை பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை. அதுதான் அங்கே 99 சதவிகிதம் நிறைந்திருக்கிறது. பிரபஞ்சத்தினுடைய 99 சதவிகிதம் வெற்றிடம்தான். ஆனால், மனிதர்கள் அதைப் பார்ப்பதில்லை. அவர்களால் உணர முடியாத அளவிற்கு அது மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. எனவே, உடலளவில், உள்ள அளவில், சக்திஅளவில் உங்களுக்கு இருக்கிற நேர்மை உங்களை கைலாயத்தினுடைய மூலத்தை உணரச்செய்யும்.

அது மிகவும் சூட்சுமமானது. அதற்கான சாத்தியம் இருக்கிறது. ஏனென்றால், அதற்கு எந்தத் தகுதியும் தேவை இல்லை. அதற்கு ஒரு முழுமையான நேர்மை தேவைப்படுகிறது. நேர்மை என்றால், சமூக அளவிலான நேர்மை அல்ல. இதில், சக்திநிலையிலான ஒருமைக்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம். ஆனால், கைலாயத்தை நீங்கள் சில நாட்கள் பார்ப்பீர்களேயானால் உடலளவிலேயும், உள்ள அளவிலேயும் மிக விரைவில் ஒன்றிப் போய்விடுவீர்கள். அதற்கு சில எளிய முயற்சிகள் போதும்.

உடலளவில், உள்ள அளவில், சக்திஅளவில் உங்களுக்கு இருக்கிற நேர்மை உங்களை கைலாயத்தினுடைய மூலத்தை உணரச்செய்யும்.

நீங்கள் கைலாயத்திற்கு செல்வதாக இருந்தால், சில நாட்களுக்கு ஒருநாளைக்கு எவ்வளவு முறை சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்காணியுங்கள். எவ்வளவு முறை சாப்பிட வேண்டும் என்று முடிவுசெய்யுங்கள். அதற்குமேல் ஒருவேளை சாப்பிடுவது இல்லை என்று தீர்மானியுங்கள். அதைப்போல உங்கள் தொலைபேசியை ஒரு நாளைக்கு எவ்வளவுமுறை பார்ப்பது என்றும் முடிவு செய்யுங்கள். அதை முழுக்க நிறுத்திவிட்டால் நல்லது. முடியாவிட்டால் உங்கள் தேவைக்கேற்ப அதற்கு ஒரு அளவை நிர்ணயுங்கள்.

நிர்ப்பந்தம் காரணமாகவே உங்களால் அமைதியாக இருக்க முடிவதில்லை. அதே முட்டாள்தனமான விஷயங்களை திரும்ப திரும்பச் சொல்லுகிறீர்கள். குறைந்தபட்சம் கைலாயம் போகிறபோதாவது இவற்றையெல்லாம் விட்டு விடுங்கள், தனித்திருங்கள், உச்சாடனங்களில் ஈடுபடுங்கள். முழு கவனத்தோடு ஒன்றி இருங்கள். சுற்றி நடப்பது என்ன என்ற விழிப்புணர்வோடு இருங்கள். ஏனென்றால், உங்கள் உடல்தன்மை தன்னை தயார் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் அது எல்லாவற்றையும் காணத் தவறும்.

கைலாயம் என்பது மிகப்பெரிய சக்திநிலைக்கான வாய்ப்பு.

கைலாயம் என்பது மிகப்பெரிய சக்திநிலைக்கான வாய்ப்பு. அப்படியானால், நான் மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டாமா சத்குரு என்று கேட்டால், அப்புறம் நீங்கள் அங்கே போய் திரும்பி வரமாட்டீர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு முறை, உங்களுடைய வாயை, சாப்பிடுவதற்காகத் திறக்கப் போகிறீர்கள், பேசுவதற்காக திறக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாடு என்றால் நான்காவது வேளை கிடையாது என்று தீர்மானியுங்கள். அதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உறுதியாக இருக்கவேண்டும். அதைச் செய்கிறேன் என்பதற்குத்தான் நேர்மை என்கிற சொல்லை நான் பயன்படுத்துகிறேன்.

இது ஒழுக்கம் சார்ந்ததல்ல. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதையே செய்தால் அதற்குத்தான் நேர்மை என்று பெயர். நான் இங்கே சமூகம் சார்ந்த நேர்மையை பேசவில்லை. உடல் சார்ந்து, உள்ளம் சார்ந்து, இருக்கக்கூடிய நேர்மையை பேசுகிறேன். அந்த நேர்மை உங்களுக்கு வந்ததால்தான் ஏதோ ஒன்றை உள்ளே உணரவும், அந்த அனுபவத்தைப் பெறவும் உங்களால் முடியும்.

ஆசிரியர் குறிப்பு : ஈஷா புனித பயணம் வழங்கும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பாக, கைலாய புனிதப் பயணம் அமைகிறது! மேலும் அறிவதற்கு sacredwalks.org