கடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்!
கடுக்காய் எனும் அற்புத மூலிகையை அன்றாடம் உட்கொன்டு, வயோதிகம் தாண்டியும் இளமைத் துடிப்போடு ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை உமையாள் பாட்டியிடம் கேட்டறியலாம் வாங்க!
‘கடைசி ஓவர் வரை இழுத்தடித்து கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றிபெறுவதே இந்த டோனி அணியினருக்கு வேலையாகிவிட்டது… ச்சே மனுசனுக்கு எவ்வளவு பரபரப்பை உண்டாக்குறாங்க?!’ என்று மனதிற்குள் யோசித்தபடியே, என் பால்ய கால கிரிக்கெட் நாட்களை நினைவுகூர்ந்தேன். நானும் அப்போது இந்த வீரர்களைப் போலவே மிகவும் துடிப்போடு விளையாடி ஓடியாடி திரிந்துகொண்டிருந்தேன். இப்போது அந்த விடலைப் பருவத்தையெல்லாம் தாண்டி வந்துவிட்டதாலும், பொறுப்புகள் கூடிவிட்டதாலும், அன்றாட வேலைகளில் தடைகள் இல்லாமல் இருக்கும் வகையிலான ஆரோக்கியத்தை பேணுவதே பெரிய பாடாகிவிடுகிறது!
இந்த உமையாள் பாட்டியை இப்போதும்கூட ஐ.பி.எல். போட்டிகளில் இறக்கிவிட்டால், அநாயசமாக சதம் அடிப்பார். அவரது தோற்றமும்கூட அவரது வயதை வெளியே காட்டாதபடி பொலிவுடன் உள்ளது! இதற்கெல்லாம் என்ன காரணம்? இதற்காக அவர் தினமும் ஏதேனும் இரகசிய மூலிகை உட்கொள்கிறாரா? கேள்விகள் என்னைச் சூழ, வண்டியை பாட்டியின் வீடுநோக்கி திருப்பினேன்.
“வாப்பா… வா! என்னடா ரொம்ப நாளா ஆளக்காணோமேன்னு, இப்போதான் நெனச்சிட்டு இருந்தேன்; உனக்கு ஆயுசு நூறுதான் போ!”
“ம்கும்… அட போங்க பாட்டி, நமக்கு உடம்பு இருக்குற நிலைமைக்கு நூறெல்லாம் இல்லபாட்டி, அதுல பாதிகூட தேறாது!”
“அடப்பாவி ஏம்ப்பா அப்படி சொல்ற… உனக்கு என்ன பிரச்சன அதச்சொல்லு!”
Subscribe
“எனக்கு உங்கள பாத்தா பொறாமையா இருக்கு பாட்டி! உங்க வயசுல உள்ளவங்கல்லாம் தோல் சுறுங்கி, தலைமுடியெல்லாம் பஞ்சாய் வெளுத்து, முழுசா வயோதிகத்த எட்டிட்டாங்க. ஆனா நீங்க உங்க வயோதிகத்த தள்ளிப்போட்டு, உற்சாகமா எப்படி இப்படி இருக்கீங்க? இந்த இரகசியத்த கொஞ்சம் சொல்லுங்களேன்?! பாருங்க, எனக்குகூட இப்பவே கிரே ஹேர் வந்திருச்சு!”
“கம்பு ஊன்றும் கிழவனும் கடுக்காய் சாப்பிட்டால் கம்பீரமாய் நடப்பான்னு சொல்லுவாங்க! நானும் அந்த கடுக்காய தினமும் சாப்பிடறதனாலதான் என்னோட ஆரோக்கியத்த பேணி வயோதிகத்த தள்ளிப்போட முடிஞ்சது!” பாட்டி தன் இரகசியத்தை அவிழ்த்துவிட நானும் கேட்க ஆர்வமானேன்.
“தாயினும் சிறந்தது கடுக்காய்னு பதார்த்த குண சிந்தாமணி நூல் சொல்லுது; அடுக்கடுக்காய் வந்த பிணியெல்லாம் கடுக்காய் சாப்பிட்டா காணாமல் போகும்னு நம்ம ஊர்கள்ல பழமொழி சொல்லுவாங்க. கடுக்காய்க்கு நம்ம குடல சுத்தமாக்குற தன்மை இருக்கு. மேலும், இரத்தத்தை சுத்தமாக்கும்; மலச்சிக்கல போக்கும்; வயித்துல உள்ள உறுப்புகள பலப்படுத்தும்; மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும்; நினைவாற்றலயும் பெருக்கும்!”
“வாவ்… கடுக்காய்ல இவ்வளவு பலன்கள் இருக்கா… சரி பாட்டி இத எப்படி சாப்பிடுறது”
“கடுக்காய் கொட்டையை நீக்கிட்டு முறைப்படி சுத்தம் செஞ்சு மேல்தோலை மட்டும் இடிச்சு சலிச்செடுத்து சாப்பிடலாம். நாம செய்யுறதுக்கு டைம் இல்லேன்னா நாட்டு மருந்து கடைகள்லயே பொடி பண்ணி வச்சிருப்பாங்க. நம்ம ஈஷா ஆரோக்கியா ஸ்டால் எல்லாத்துலயும் கடுக்காய் பொடி கிடைக்குது. தினமும் தேன்கலந்து கடுக்காய் பொடிய ஒரு ஆண்டு முழுசும் காலையில சாப்பிட்டு வந்தா வயோதிகத்தால வந்த முகச்சுறுக்கமும், நரையும் நீங்கும். கடுக்காய துவையல் செஞ்சு சாப்பிட்டா, நாக்கு ருசி இல்லாம இருக்குற தன்மை சரியாகும். கடுக்காய் பொடிய வச்சு பல் துலக்குற பழக்கம் இருக்கா உனக்கு?”
“என்ன பாட்டி சொல்றீங்க… கடுக்காய் பொடிய வச்சு பல் துலக்குறதா? ‘உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா’ன்னு தான கேப்பாங்க அந்த விளம்பரத்துல?! நீங்க என்ன கடுக்காய் இருக்கான்னு கேக்குறீங்க?!”
25கிராம் கடுக்காய் பொடியில 1 டம்ளர் தண்ணி விட்டு அத 50மில்லியா வற்ற வச்சு குடிச்சு வந்தா, கண் சம்பந்தமான நோய்களும் சர்க்கரை நோயும் கட்டுப்படும். கடுக்காய் பொடியோட அதே அளவு நெய்விட்டு வறுத்து, இந்து உப்போட சேத்து 2கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தா வயிற்றுப்புண் சரியாகும்.
பச்சை கடுக்காயை கொட்டையை நீக்கி முறையா சுத்தம்செஞ்சு பாலில் அரைச்சு சாப்பிட்டா இருமல் இறைப்பு, வறட்டு இருமல், இரத்தமும் சீழுமா போகும் வயித்துக்கடுப்பெல்லாம் நீங்கும். அட இன்னும் சொல்லிக்கிட்டே போலாம்ப்பா இந்த கடுக்காய் பத்தி!”
“இன்னும் நிறைய பலன்கள் இருக்கா… சரி பாட்டி நான் உடனே கிளம்பணும்! அப்புறமா வந்து கேட்டுக்குறேன்!”
“ம்… நீ எங்க போறேன்னு எனக்கு தெரியும், 20/20 மேச் டிவியில ஆரம்பிக்குற டைம் ஆச்சுல்ல!”
“இல்ல பாட்டி… நான் இப்போ ஈஷா ஆரோக்கியாவுக்கு போறேன், அங்க போயி கடுக்காய் பொடி வாங்க போறேன். இனிமே நம்ம ஊர் பசங்ககூட நானே களத்துல இறங்கி விளையாடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!” பாட்டியிடம் விடைபெற்று விரைந்தேன், கடுக்காய் பொடி வாங்குவதற்கு!