Question: பணம் செலவு செய்யாமல், இலவசமாக இறைவனை அடைய முடிவதில்லையே ஏன்?

சத்குரு:

கட்டணம் உண்டென்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? ஆன்மீக செயல்முறைகளுக்கு கட்டணம் ஏதுமில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: அப்படியானால் ஆன்மீக வகுப்புகளுக்கு ஏன் பணம் செலுத்த வேண்டும்?

சத்குரு:

ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு ஏன் தொகை செலுத்த வேண்டும் என்று கேட்கிறீர்கள். நீங்கள் ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்றால், மின் விளக்குகள் எரிய வேண்டும். அதற்கு மின்சாரம் வேண்டும். உட்கார வேண்டும் என்றாலும் நிற்க வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு செலவு இருக்கிறது. அதை யார் செலுத்துவது? ‘அதற்கு யாரோ பணம் கொடுத்தால் நீங்கள் செய்வது ஆன்மீகம்; நீங்களே பணம் செலுத்தினால் அது ஆன்மீகம் இல்லை’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது அப்படி அல்ல. அத்தகைய எண்ணமே கீழானது என்பேன்.

உங்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் நிகழ்ச்சி நடக்க வேண்டும்; ஆனால் இலவசமாக வேண்டும்!!

ஈஷாவின் செயல்களின் 70% கிராமங்களில்தான் நிகழ்கின்றன. அவற்றை 100% இலவசமாக செய்கிறோம். கிராமங்களில் ஆன்மீகம், பள்ளிகள், மருத்துவமனை, சமூக நிகழ்வுகள் என்று எல்லாமே இலவசமாக நடைபெறுகின்றன. ஆனால் நகரங்களில் செய்யும்போது செலவாகிறது. நகரங்களிலும் கூட பணம் செலவழிக்காமல் கலந்து கொள்ள வேண்டும் என்றால், ஒரு சேரிப் பகுதியில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், அதில் கலந்து கொள்வீர்களா என்ன? நிச்சயம் இல்லை.

உங்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் நிகழ்ச்சி நடக்க வேண்டும்; ஆனால் இலவசமாக வேண்டும்!! உங்களுக்கு குறிப்பிட்ட விதமான வசதிகள், மதிய உணவு, இரவு உணவு எல்லாம் தேவை என்பதால், அதற்கு பணம் செலுத்துகிறீர்கள். ஆனாலும் வழங்கப்படும் ஆன்மீக செயல்முறை இலவசம்தான். ஏனென்றால், நீங்கள் எனக்கோ அல்லது இங்குள்ள ஆசிரியர்களுக்கோ பணம் செலுத்துவதில்லை. ஈஷாவில் யோகா வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அத்தனைப் பேரும் 100% தன்னார்வத் தொண்டர்களே. நீங்கள் செலுத்தும் தொகை முழுவதும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகளுக்காகத்தான்.

ஒரு காலத்தில், நாம் நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்கினோம். ஆனால் மக்கள் வெளியே செல்வதும் உள்ளே வருவதும் என்று அதற்கான மதிப்பை கொடுக்கத் தவறிவிட்டார்கள். பெரும்பாலான மக்கள் பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பை, தங்கள் வாக்குறுதிக்கே கொடுப்பதில்லை. “நான் வருகிறேன்” என்று அவர்கள் சொல்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் பணம் செலுத்தினால் எப்படியும் வருவார்கள்.
இலவசம் என்பது வேலை செய்யவில்லை என்று அறிந்தபின், நீங்கள் உங்கள் மாத வருமானத்தில் 20% செலுத்தவேண்டும் என்று சொன்னோம். அப்போது மக்கள், வருமான வரித்துறைக்கு செல்வது போல், எங்களிடம் வந்தார்கள், நிறைய பொய்களுடன். அந்த பொய்களுடன்தான் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தோம். பிறகு சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறான தொகை என்று முடிவு செய்தோம். நகரங்களில் ஒருவிதமான தொகையும், சிறிய ஊர்களில் இன்னும் குறைந்த தொகையும் உள்ளது. பின்தங்கிய குக்கிராமங்களில் இலவசமாகவே வழங்குகிறோம்.

ஆனால் சம்யமா போன்ற உயர்நிலை வகுப்புகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. சம்யமா நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் முழுமையான உறுதியில் வருகிறார்கள். எனவே அங்கு பணம் என்பது இல்லை. சம்யமா நிகழ்ச்சியில், 1000 பேர் எட்டு நாட்கள் கலந்து கொள்வதற்கு மிக அதிகமாகச் செலவாகிறது. ஆனாலும் அதற்கு கட்டணம் இல்லை, முற்றிலும் இலவசம்தான். அதற்கு வருபவர்கள் தங்களால் இயன்றதை கொடுத்து விட்டுச் செல்வார்கள். ஆனால் பொது மக்களுக்கு இதுபோல் இலவசமாக வழங்கும்போது, அது கேலிக் கூத்தாகி விடுகிறது. மக்களுக்கு யோகம் கற்றுக்கொள்ள தேவையான உறுதியும், ஒழுக்கமும் இல்லாதபோது, எப்போது வேண்டுமோ வருவார்கள், எப்போது வேண்டுமோ வெளியேறுவார்கள். அவர்களை இருத்தி வைக்க, துரதிஷ்டமான ஒரே வழி பணம்தான்!