இன்று சத்குருவுடன் நடந்த தரிசன நேரத்தில் அவர் பேசிய சுவையான பல அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆதியோகிக்கு கிடைத்த அனுபவம் எனக்கு கிடைக்குமா? கடந்த கால துயரத்தை நான் மறப்பது எப்படி? என நீண்டன கேள்விகள், நறுக்குத் தெரித்தன பதில்கள். அவற்றில் சில உங்களுக்காக...


மாலை 6.15

ஞாயிறு மாலை, ஏராளமான தியான அன்பர்கள், சிவாங்கா விரதமிருந்து வெள்ளியங்கிரி மலையேறி இறங்கியிருக்கும் பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை பூண்டு தியானலிங்கத்தை தரிசிக்க வந்திருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் என இன்று சத்குரு தரிசனம் காண கூடியிருப்போர் இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குருவிற்காக காத்திருக்கிறார்கள்.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 6.25

சத்குரு வந்தமர்ந்தவுடன் சொன்ன மந்திர உச்சாடனை நெருப்பாய் சூழ்நிலையை தகிக்கவிட துவங்கியது தரிசன நேரம்.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 6.35

மார்கழி - உத்தராயணம் பிறக்கவிருக்கும் மாதம். இந்த மாதத்தில் இயற்கையில் மந்தத்தன்மை அதிகரிக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுருங்குவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. இதனால்தான், இந்த காலத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்வதில்லை. இந்த காலகட்டத்தில் கருவுருதல் நடக்கக் கூடாது என்று திருமணங்களை நம் கலாச்சாரத்தில் செய்யமாட்டார்கள். ஆன்மீகத்தில் அதிகமாக நாட்டம் கொண்டார்கள்.

மேலும், ஆன்மீகப் பயிற்சிகளை செய்துவரும் ஒருவருக்கு வரும் மாதங்களில், தான் சாதனா செய்ததற்கான பலன்களை சுவைக்க முடியும். மார்கழியை தொடர்ந்து வரவிருக்கும் அறுவடை காலம் வெறுமனே பயிர்களை மட்டும் அறுவடை செய்வதற்கான நேரமல்ல மனித ஆற்றலையும் அறுவடை செய்வதற்கான காலமிது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 6.45

பீஷ்மர் இந்த காலகட்டத்தில உடல்விட வேண்டும் என்று அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்த கதை. இந்த காலகட்டத்தை பல யோகிகளும், ஞானிகளும் தங்கள் உடல்நீப்பதற்காக பயன்படுத்தினர், இதற்காக காத்திருந்தனர். உங்கள் வாழ்நாள் முழுவதையும் நீங்கள் ஆனந்தமாக வாழ்ந்தால், உங்கள் இறப்பு தேதியை நீங்களும் தேர்ந்தெடுக்க முடியும். அந்த வாய்ப்பு ஒருவருக்கு உண்டு.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 6.55

இன்று முக்கியமான நாள். இன்று இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றனவோ அவையெல்லாம் உங்களுக்கும் நடக்கிறது. உங்களைச் சுற்றி நிகழும் படைப்பை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இந்தப் படைப்பின் ஒரு பாகம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வது அவசியம்.

இன்று கைவல்ய பாதை பிறக்கிறது. கடந்த சில மாதங்களாக உங்கள் சாதனாவை தீவிரப்படுத்துங்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். நேற்று வரை உங்கள் சுவாசம் நிகழ்ந்ததைவிட இன்று உங்கள் சுவாசம் மாறுவதை நீங்கள் உணர முடியும். அத்தனை மாற்றங்கள் இன்று நடக்கத் துவங்கியிருக்கிறது. இன்று புது சாதனா துவங்குவதற்கான நாள் அல்ல, விட்டவை தொட்டவை என சாதனாவை தூசிதட்டி தீவிரப்படுத்துவதற்கான காலம்.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 7.05

கேள்வியாளர்

ஆதியோகியான சிவன் நீங்கள் கற்றுக்கொடுக்கும் யோக அறிவியலையே தானும் செய்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் ஆழமான போதையில் இருப்பவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்? அந்தப் பேரானந்தம் எங்களுக்கும் சாத்தியமா?

சத்குரு

ஒருவர் போதையில் இருக்கும்போது, அவர் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறாரா அல்லது குறைந்த விழிப்புணர்விலா? ஒருவர் குறைந்த விழிப்புணர்வில் இருக்கும்போது தெய்வீகத்தை உணர முடியுமா என்ன?

சிவனது சிரசில் அமர்ந்திருக்கும் நிலவு - சோமா என்று அழைக்கப்படுகிறது. அவன் எந்நேரமும் போதையில் இருக்கிறான் என்பதை அது குறித்துச் சொல்கிறது. அவன் போதையில் இருப்பதை பார்த்தவர்கள் தாங்களும் போதை வஸ்துக்களை பருகினர். ஆனால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை, போரானந்தம் நிகழவில்லை, போதை மட்டுமே நிகழ்ந்தது. அதனால், பிறரைப் பார்த்து செய்வதனால் அவர்கள் பெறும் அனுபவத்தை நம்மால் உணர முடியாது.

யாரோ செய்வதைப் பார்த்து நாமும் செய்யும்போது, அவரைப் போல் ஆகாமல் செயல்களுக்கும், பயன்படுத்தும் பொருட்களுக்கும் அடிமைகளாகிப் போவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர் என்ன செய்தார் என்பதை விடுத்து, அவரைப் போன்ற ஒரு உயிராய் நீங்கள் மாறலாம். அவருக்கு கிட்டிய சாத்தியம் அனைவருக்கும் உண்டு.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 7.20

கடந்த காலத்தை மறப்பது, மன்னிப்பது எப்படி? அதன் வலிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?கடந்த காலத்தின் ஞாபகங்கள் இருப்பதாலேயே நேற்று நீங்கள் செய்த முட்டாள்தனங்களை இன்று மறுபடியும் செய்யாமல் இருக்கிறீர்கள். அதனால் கடந்த காலத்தை மறப்பது உசிதமான விஷயமல்ல. ஞாபகங்கள் நமக்கு சுமையாக இருக்கிறது என்பதே உண்மை. ஞாபகங்கள் இல்லாது போனால் உங்களால் சிந்திக்க முடியாது.பிற உயிர்களிடமிருந்து உங்களை தனித்துவமான உயிராக காட்டுவது உங்கள் ஞாபக சக்தியும், கற்பனைத் திறனும்தான். மனதின் அற்புதமான இரு அம்சங்கள் உங்களுக்கு துயரத்தை தருகின்றன.

உங்கள் கைகளில் இரு வாய்ப்புகள் உள்ளன. ஞாபகத்தை பயன்படுத்தி காயப்படலாம் அல்லது வளரலாம். கடந்த காலம் எத்தனைக்கு எத்தனை கசப்புடையதாக இருந்திருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை நீங்கள் பிறரைவிட முதிர்ச்சி அடைந்த உயிராக இருக்க வேண்டுமல்லவா? ஆனால், நீங்கள் அதனை துன்பமாக பாவிக்கிறீர்கள். நீங்கள் மீளா துயரத்தில் இருந்தால், உங்களைச் சுற்றியுள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்துவீர்கள். ஞாபகங்களை வரமாய் மாற்றிக் கொள்வதும் சாபமாய் ஆக்கி கொள்வதும் முழுமையாய உங்கள் கைகளில் இருக்கும் வாய்ப்பு.

#Darshan #Sadhguru #IshaYogaCenter


மாலை 7. 40

தேவி பைரவி ஜெய தேவி பைரவி... எனும் பாடல் இசைக்க, மௌனமாய் விடைபெற்றுச் சென்றார் சத்குரு. இன்று இரவு சத்குருவின் கரங்களால் லிங்கபைரவி யந்திரம் வாங்கவிருக்கும் அன்பர்களுக்கு தாங்கள் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சிக்கான முன்னோட்டமா இது?

மீண்டும் மற்றொரு தரிசன நேரத்தில் இணைவோம். வணக்கம்.