ஈஷா சம்ஸ்கிருதி என்றால் என்ன? இதன் கல்விமுறை எத்தகையது?
ஈஷா சம்ஸ்கிருதி பற்றியும் அங்குள்ள குழந்தைகள் எப்படி மிகச்சிறந்த ஒழுக்கம் மற்றும் உள்ளார்ந்த வலிமையுடன் வளர்கிறார்கள் என்பதைப் பற்றி சத்குருவின் வார்த்தைகளில்...
ஈஷா சம்ஸ்கிருதி பற்றியும் அங்குள்ள குழந்தைகள் எப்படி மிகச்சிறந்த ஒழுக்கம் மற்றும் உள்ளார்ந்த வலிமையுடன் வளர்கிறார்கள் என்பதைப் பற்றி சத்குருவின் வார்த்தைகளில்...
சத்குரு:
உடல் மன வளர்ச்சி:
சம்ஸ்கிருதி என்றால் வாழ்க்கையை உற்சாகத்துடனும், சமநிலையுடனும் நடத்திச் செல்வது என்று பொருள். பெரும்பாலானவர்களுக்கு இதுதான் பிரச்சினையே - சமநிலையாக இருந்தால் அவர்களுக்குள் உற்சாகம் இருக்காது, உற்சாகம் இருந்தால், சமநிலை இழந்து விடுவார்கள். உற்சாகத்துடனும், சமநிலையாகவும் வாழத் தெரிந்திருந்தால் அங்கு பயம் என்பது இருக்காது. எந்த மாதிரியான ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் அழகுடன் விளங்கும். எப்போது உங்களிடத்தில் உற்சாகமும் சமநிலையும் இருக்கிறதோ, அப்போது உங்கள் வாழ்க்கை உங்கள் சூழல் பொறுத்து அமையாது, உங்களுக்குள் என்ன நிகழ்கிறதோ அதைப் பொறுத்தே அமையும்.
சம்ஸ்கிருதி என்றால் ஒருவர்- அவர் ஆணோ அல்லது பெண்ணோ - ஒரு டாக்டராக வேண்டும் அல்லது ஒரு என்ஜினியராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல் அவருடைய உடல் மற்றும் மனதின் முழுத் திறமைக்கேற்ப வளர ஊக்குவிப்பது. பெற்றோர்களுக்கு எப்பொழுதும் தம் குழந்தைகள் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றிய கவலை இருக்கும். குழந்தைகள் முழு ஆற்றலுடன் செயல்பட்டால் உயிர் வாழ்வது என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. ஒரு மண் புழுவுக்கு உயிர் வாழத் தெரிந்திருக்கும்பொழுது, பரிணாம வளர்ச்சியின் உச்சியில் இருக்கும் மனிதன் - அவன் உடல் மனம் இரண்டும் முழுமையாக வளர்ந்திருந்தால் - வாழ்க்கையைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
Subscribe
சம்ஸ்கிருதியில் பாரம்பரிய கலைகளான சங்கீதம், நடனம், தற்காப்புக்கலை, யோக கலை, சமஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் - வாழ்க்கையில் ஆங்கிலம் ஒரு துருப்புச்சீட்டு - ஆகியவை கற்றுத் தருவதன் மூலம் நாம் இதை சாதிக்கிறோம். நவீன கலைகளைப் போல மனம் போனபடி உள்ளுணர்வை வெளிப்படுத்தும் கலையாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ அல்லாமல், இவை விழிப்புணர்வுடன், மனித தன்மையைப் புரிந்து கொண்டு, அதன் ஆற்றலை விஞ்ஞான முறையில் மேம்படுத்த உருவாக்கப்பட்டது.
உகந்த நேரம்:
ஆறிலிருந்து எட்டு வயது இருக்கும்போது குழந்தைகள் எங்களிடம் வருகிறார்கள். அந்த வயதில் அவர்கள் மிகவும் ஏற்றுக் கொள்ளும் தன்மையில் இருப்பார்கள். வர்ணாஸ்ரம தர்மம் வழக்கில் இருந்த காலத்தில், 0 - 12 வயதுவரை பாலவஸ்தா(பால்ய பருவம்) என்றும், 12 - 24 வயது வரை பிரம்மச்சரிய (சீடர்) பருவம் என்றும் இருந்தது. பிரம்மச்சரிய காலமான பன்னிரெண்டு வருடங்கள் குழந்தைகள், பெற்றோர்களை விட்டுப் பிரிந்து குருகுல வாழ்கையில் இருப்பார்கள். அந்தக் காலத்தில் அவர்கள் தங்கள் பெற்றோரை சந்திக்கவே மாட்டார்கள். எனவே மக்கள் அதை குரு-சிஷ்ய உறவு என்று அடிக்கடி தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். குரு தனது சிஷ்யர்களுடன் எந்த வித உறவையும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார். குருவை சூரிய ஒளிக்கு ஒப்பிடலாம். எப்படி சூரியன் எல்லாவற்றையும் ஒளி மயமாக்கி இருளை நீக்குகிறதோ, அது போல குரு வாழ்க்கையில் ஒளி பரப்புவார்.
பயனுள்ள வேலை:
அந்த காலத்தில் இதே முறையான பள்ளிகள் இருந்தாலும், சம்ஸ்கிருதி பாரம்பரியத்தை எதிரொலிக்கும் ஒரு பள்ளி அல்ல. மக்கள் பாரம்பரியத்துடன் அடையாளப் படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதுவே ஒருவித கட்டுப்பாடாகி விடும். விஞ்ஞான முறையில் மனித உடலும் மனமும் முழுமையாக மலர்வதற்கு தேவையான செயல் புரிய முனைவது. அந்தக் காலத்தில் செய்த செயல்களும் மனிதத் தன்மை எப்படி வெளிப்படுகிறது என்பதறிந்து உருவாக்கப்பட்டவை தான்.
ஒவ்வொரு குழந்தையும் இந்த மாதிரியான கல்விப் பயிற்சித் திட்டத்தை விரும்புவார்கள். ஒரு குழந்தை கல்வி முறையில் தன்னை பொருத்திக்கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு குழந்தையும் தத்தம் இயல்புப்படி மலர வேண்டும். அதற்காக புதிய எண்ணம் என்று தற்போது போல் மனம்போன போக்கில் ஏதோ செய்வது அல்ல. இன்று சுதந்திரம் என்ற பெயரில், ஏதேதோ நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகிறோம். இதற்கு நேர் எதிராக சம்ஸ்கிருதியில் எல்லா விதமான நிர்ப்பந்தங்களையும் களைந்துவிடுவதால், இந்தக் குழந்தைகள், காலப்போக்கில் விழிப்புணர்வுடன் இருப்பதன் அழகையும் சுதந்திரத்தையும் கற்றுக்கொண்டு, பிறகு எது தேவையோ அந்த செயல்களை செய்ய கற்றுக் கொள்கிறார்கள்.
குறிப்பாக இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து மக்களின் வருவாய் அதிகரிக்கும் நிலைமையில், ஆசிரியர்களுக்கும், பாரம்பரிய கலைவல்லுனர்களுக்குமான தேவை மிக அதிகமாகும். உண்மையில் இப்பொழுதே தேவை இருக்கிறது. இன்று ஓரளவு நல்ல வாய்ப்பாட்டு ஆசிரியரின் வருமானம் ஒரு டாக்டரை விட அதிகம். எனவே இவர்கள் எப்படி சம்பாதிப்பார்கள் என்ற கவலை தேவையில்லை. ஒரு சிலர் சங்கீதம், நடன வல்லுனர்களாக - உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் - திகழ்வார்கள். மற்றவர்கள் வாய்ப்பாட்டு ஆசிரியர்களாகவோ, நடன ஆசிரியர்களாகவோ, களரிப்பயிட்டு, யோகா அல்லது சமஸ்க்ருத ஆசிரியர்களாக ஆகலாம். இப்பொழுது யோகா ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய அளவில் தேவை உள்ளது. மேலும் மற்ற யோகா ஆசிரியர்கள் யாரும் இவர்களைப் போல் யோக விஞ்ஞானத்தில் ஒன்றுவதில்லை. ஏனெனில் இவர்கள் ஆறு வயதிலிருந்து வளர்வதே யோக சூழ்நிலையில்தான் நிகழ்கிறது.
ஆழ்ந்த ஞானத்தின் அர்ப்பணிப்பு
இவர்கள் பாரம்பரிய யோகக்கலையை தருவார்கள். இன்றைய ஸ்டுடியோ-முறை யோகாவாக அல்லாமல், மிகவும் சக்தி-வாய்ந்த முறையை அர்ப்பணிப்பார்கள். அதிலேயே ஊறிப்போனால்தான் இந்த அர்பணிப்பு சாத்தியமாகும். யோகா மட்டுமல்லாமல் மற்ற கலைகளும் இதே மாதிரிதான். கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், களரி மற்றும் யோகா விஞ்ஞானம் ஆகியவைகளை ஒரு பொழுது போக்காக கற்க முடியாது - அதிலேயே மூழ்கி விட வேண்டும்.
இம்மாதிரி அந்த கலைகளிலேயே மூழ்கி இருக்க வேண்டுமென்றுதான் இக்குழந்தைகளுக்கு அந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துள்ளோம். இந்த மாதிரி கலாச்சாரம், சூழ்நிலை இல்லையென்றால் அம்மாதிரியான தனித்துவமிக்க குணத்தை வளர்ப்பது கடினம். இவ்விதமான கலைகளுக்கென்று மிக தீவிரமான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் தேவை. அது பாரம்பரிய சங்கீதமாகட்டும், நடனமாகட்டும் அல்லது களரி - இவை எதுவுமே பொழுது போக்கோ, போட்டியோ அல்லது சமூக குழு ஏற்படுத்தவோ அல்ல. இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், முக்கியமான விஷயம் என்னவென்றால் இம்மாதிரியான கலைகளை நடத்துவது மட்டுமல்லாமல், இவைகளை பார்த்து பாராட்டுவதற்கே ஒருவர் ஆழ்ந்த புரிதலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
என் வாழ்வின் ஒரு கட்டத்தில், நான் பல மணி நேரம் தியானம் செய்ய ஆரம்பித்து என் புரிதல் விரிவடைய ஆரம்பமான நேரம், இந்திய பாரம்பரிய சங்கீதத்தின் தாக்கத்தை நான் உணர்ந்தேன். ஈஷாவிலிருந்து வெளிப்படும் சங்கீதம், நடனம் மற்றும் பிற கலைகள் எல்லாமே உயிரின் ஆழ்ந்த வெளிப்பாடு, ஏனென்றால் வாழ்வின் மிக ஆழமான சில ஞானங்களை நாம்தான் உலகுக்கு எடுத்து செல்ல வேண்டும், ஆழ்ந்த ஞானங்கள் நாகரீகம் என்ற பெயரில் கேலிக்கூத்தாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இது மிக முக்கியம். இதை மாற்றுவதுதான் சம்ஸ்கிருதியின் ஒரு முக்கியமான முயற்சி.
அடுத்த அடி:
இக்குழந்தைகள் வெளி உலகத்திற்குள் அடி எடுத்து வைக்கையில், எங்கு சென்றாலும் தங்கள் கட்டுப்பாடான, ஆரோக்கிய சூழல் நிறைந்த வளர்ப்பினால், நுட்பமான மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். எவர் ஒருவர் விழிப்புணர்வான ஒரு கட்டுப்பாட்டில் வளர்கிறாரோ அவர் வாழ்வில் வெகு தூரம் செல்வார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முதிர்ச்சி பெற்றவராக இருந்தால், உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வார். நாம் ஒரு நிறுவனமாகவும், உலகில் உள்ள மற்ற தன்னார்வத் தொண்டர்களும், அவர்களுக்கு பக்க பலமாக இருப்போம்.
இக்குழந்தைகள் என்னை பல விதங்களில் வியக்க வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, 15-18 வயதினுள் இருக்கும் சிலர் இப்பொழுது “இன்னர் இன்ஜினீரிங்” ஆசிரியர் பயிற்சியில் இருக்கிறார்கள். உலகில் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்திருக்கும் மிக அதிகம் படித்த, வயது நிறைந்த பயிற்சியாளர்களை விட, சம்ஸ்கிருதி குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுதே மிக மன உறுதியுடன் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அவர்களை இப்பொழுதே வேகப்பாதையில் அனுப்ப இஷ்டமில்லை. முழுதாக வளர்ந்த மரமாக இருந்தால், தானே பூக்களும், பழங்களும் வரும், வலுக்கட்டாயமாக எதுவும் செய்ய தேவை இல்லை. உலகத்தை இந்த குழந்தைகள் மாற்றுவார்கள்.