இன்னொன்று தேவையா?
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சத்குரு அவர்கள் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பேசும் அதே சமயம், ஒற்றைக் குழந்தை பெற்றால் அது தனிமையாக உணருமா எனும் பெற்றோரின் கேள்விக்கும் பதில் தருகிறார்...
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சத்குரு அவர்கள் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பேசும் அதே சமயம், ஒற்றைக் குழந்தை பெற்றால் அது தனிமையாக உணருமா எனும் பெற்றோரின் கேள்விக்கும் பதில் தருகிறார்...
Subscribe
எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனால் இந்த குழந்தை தனிமையாக உணரும் என்று சொல்லி அனைவரும் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள் என்கின்றனர். நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது ஒரு குழந்தை போதுமா?
சத்குரு:
இன்றைய உலக மக்கள் தொகை 720 கோடி. இது மிக மிக அதிகமான ஒரு எண்ணிக்கை. உலக வரலாற்றில் இதற்கு முன்னதாக இத்தனை மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்ததில்லை. இதுவரை இந்த உலகில் வாழ்ந்தவர்கள் எண்ணிக்கையில் மொத்தம் 6.5% பேர் தற்போது இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். இது ஒரு சதவீதத்தை மிஞ்சக் கூடாது என்பது கணக்கு. தீவிரமான ஒரு பிரச்சனை இது.
இன்றைய உலக சூழ்நிலையில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வது வன்குற்றமாகும். உலக வெப்பமயமாதல்தான் மிகப் பெரிய பிரச்சனை என்று நாம் நினைக்கிறோம். இல்லை, மக்கள் தொகைப் பெருக்கம்தான் மிகப் பெரிய பிரச்சனை. மக்கள் தொகை குறைக்கப்பட்டால் புவி வெப்பமயமாதல் குறைக்கப்படும். மிகையாய் நாம் இனப்பெருக்கம் செய்தால், யாருமே தன்னுடைய முழு ஆயுளுக்கு இங்கு வாழ முடியாது. பல்வேறு பற்றாக்குறைகளாலும் குறைப்பாடுகளாலும் மக்கள் இறக்க நேரிடும். ஏற்கனவே, இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதே பாதி ஜனத்தொகைக்கு உணவு கிடைப்பதில்லை. யார் இங்கு வாழ்கிறார்களோ அவர்கள் முழு ஆயுளுக்கு செழிப்பாய் வாழ்வதையே நாம் விரும்புகிறோம்.
உங்கள் குழந்தை தனிமையாக உணர்வதைப் பற்றி பார்ப்போம். உங்கள் குழந்தை தனிமையாக உணரக் காரணம் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளுடன் மாற்றானைப் போல் இருக்கின்றனர். ஒரு குழந்தை வரும்போது, அதிகாரம் செய்து கொண்டு சுற்றித் திரிவது தேவையில்லை. பெற்றோராய் இருப்பதை நிறுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு தேவையெல்லாம் நல்ல நண்பர் மட்டுமே. பெற்றோர் வடிவத்தில் ஒரு மேலதிகாரி குழந்தைக்கு தேவையில்லை. அடக்குமுறை செய்யும் உயரதிகாரியைப் போல குழந்தையிடம் நடந்துகொண்டால், அங்கு 12 குழந்தைகள் இருந்தாலும் அவை தனிமையாகத்தான் உணரும். அதனால், அடக்குமுறையும் வேண்டாம், ஒடுக்குமுறையும் வேண்டாம். உங்கள் குழந்தையுடன் நல்ல நண்பராக பழகுங்கள். நீங்கள் நல்ல நண்பராய் இருந்தால், அவன் தனிமையாக உணர்வானா? அவனுக்கு மற்றொரு சகோதர, சகோதரியை ஈன்று தரும் பொறுப்பு உங்களுக்கு தேவையிருக்காதே!