இந்திய பாரம்பரிய இசையின் இரண்டு முக்கியமான முறைகளான, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீதத்தில், அதன் ஒலி மற்றும் உணர்ச்சி அடிப்படையில் உள்ள வித்தியாசம் பற்றி இக்கட்டுரையில் சத்குரு தெளிவுபடுத்துகிறார். பொழுதுபோக்கைத் தாண்டி பரிணாம வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக இசையை பயன்படுத்துவது பற்றியும் பேசுகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

சப்தத்தை புரிந்துகொள்ளும் அடிப்படையிலும், அதை மனிதர்களுக்கு மாற்றத்தை உண்டாக்க பயன்படுத்துவதிலும் உள்ள அம்சம் குறித்து, என்னுடைய எல்லா பயணங்களிலும், ஆய்வு செய்திருக்கிறேன். ஹிந்துஸ்தானி இசையில் ஒலியை ஆழமாக பார்த்த விதம், உலகில் வேறு எங்கும் இல்லை.

இந்திய இசையின் இரு வகைகள்

இந்திய பாரம்பரிய இசையில் இரண்டு அடிப்படையான வகைகள் உள்ளன. கர்நாடக சங்கீதம் - தென்னிந்தியாவை சேர்ந்தது, ஹிந்துஸ்தானி சங்கீதம் - வடஇந்தியாவை சேர்ந்தது. ஒலியை அதிகமாக கொண்டுள்ளது ஹிந்துஸ்தானி சங்கீதம்; கர்நாடக சங்கீதம் உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. அவர்கள், ஒலியை பற்றி புரிந்து கொள்ளாமல் இல்லை; நிச்சயமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள், ஆனால், உணர்வே மேலோங்கி இருக்கிறது. முந்தைய காலங்களைவிட, கடந்த நானூறு ஆண்டுகளில், தென்னிந்தியாவில் நடந்த பக்தி இயக்கத்தின் காரணமாக கர்நாடக சங்கீதம் அதிகம் உணர்வு சார்ந்ததாக மாறிவிட்டது. அற்புதமான பல கர்நாடக பாடல்கள் தியாகராஜர் அல்லது புரந்தரதாஸர் போன்ற பக்தர்களால் இயற்றப்பட்டது, ஆதலால், இசையில் பக்தி உணர்வை அவர்களால் கொண்டு வர முடிந்தது.

ஒலியை அதிகமாக கொண்டுள்ளது ஹிந்துஸ்தானி சங்கீதம்; கர்நாடக சங்கீதம் உணர்வுகளை அடிப்படையாக கொண்டது.

ஹிந்துஸ்தானி இசையில் உணர்வு தவிர்க்கப்பட்டிருந்தாலும், ஒலி பயன்படுத்த வேண்டிய வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தானி இசைக்குள்ளேயே பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவை இந்த இசையை பல்வேறு வழிகளில் கையாள்கின்றன. உண்மையான ஹிந்துஸ்தானி இசையை உணர, இந்த இசையில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள - கற்றுக்கொள்ளவோ, கச்சேரியில் பாடவோ அல்ல - குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பயிற்சி தேவை. அவர்கள், ஒலியை பயன்படுத்திய விதம் எப்படியென்றால், நீங்கள் திறந்த மனதுடன் தயாராக இருந்தால், அது உங்களுக்கு அற்புதமான விஷயங்களை செய்யும்.

ஒலி என்றால் என்ன?

ஒலி என்றால் என்ன அர்த்தம்? யோகத்தில், நாத ப்ரம்மா என்று சொல்கிறோம். அப்படியென்றால் நாதம் தெய்வீகமானது என்று அர்த்தம். ஏனெனில் இந்த பிரபஞ்சத்தின் மூலமே அதிர்வுகளாகத்தான் இருக்கிறது. அதிர்வு என்பது ஒலிதான். ஒவ்வொரு மனிதனும் இதை அனுபவிக்க முடியும். நீங்கள் உங்களுக்குள் எதோ ஒரு உன்னத நிலைக்குள் நுழையும் போது, இந்த பிரபஞ்சமே ஒலியாக மாறுகிறது. இப்படிப்பட்ட அனுபவத்திலிருந்தும், புரிதலிலிருந்தும் வெளியானதுதான் இந்த இசை. கர்நாடக இசையில் ஈடுபட்டவர்களை கவனித்தீர்கள் என்றால், அவர்கள், இயல்பாகவே தியான நிலையில் இருப்பதை பார்க்க முடியும். ரிஷிகள் மாதிரி, கிட்டத்தட்ட ஞானியை போல் இருப்பர். ஆதலால், இந்த இசை பொழுதுபோக்காக பார்க்கப்படவில்லை. ஆன்மீக செயல்முறைக்கான ஒரு கருவியாக இருந்தது. மனிதனின் புரிதல், அனுபவம், பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த பரிமாணங்களை அடைய ராகங்கள் உபயோகப்படுத்தபட்டன.

பாரம்பரிய இசை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதைக் குறித்த தற்போதய வெளியீடுகளை கேட்பதுதான். மக்கள் எந்தவித பயிற்சியுமின்றி இந்த இசையை பற்றி புரிந்துகொள்ள முடிகிறது ஏனெனில் இது சிறிது மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, "The Music Today" தொடரில், காலை, மதியம், மாலை, இரவு நேரங்களுக்கென்று குறிப்பிட்ட ராகங்களின் தொகுப்பு உள்ளது. சில அற்புதமான மற்றும் உயர்ந்த இசைக் கலைஞர்களின் இசையை நீங்கள் வாங்கி கேட்கமுடியும். இந்த இசைக்கலைஞர்களில் பலர் ஈஷா மையத்தில் வந்து இசைநிகழ்ச்சி அளித்திருக்கிறார்கள். ஈஷா யோக மையத்தில், ஆண்டில் இரண்டு முறை கச்சேரிகள் நடைபெறுகின்றன.