பொருளடக்கம்
1. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பத்து கருவிகள்
1.1 ஆனந்தமாக இருப்பது உங்களது அடிப்படையான பொறுப்பு என்பதை உறுதி செய்யவும்
1.2 ஆனந்தம் உங்களது உண்மையான தன்மை என்பதை உணர்ந்திடுங்கள்
1.3 நீங்கள் விஷயங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்
1.4 மனதை, அது உள்ளபடியே பாருங்கள்
1.5 மனதின் செயல்பாட்டிலிருந்து, இருத்தலியலுக்கு மாறுங்கள்
1.6 தேடுவதை நிறுத்துங்கள், வெளிப்படுத்தத் தொடங்குங்கள்
1.7 புன்னகை செய்யுங்கள்!
1.8 புன்னகைப்பதற்கு உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்
1.9 உங்களுக்குள் இருப்பதை மாற்றத்துக்கு உள்ளாக்குங்கள்
1.10 மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்

சத்குரு: நீங்கள் அடிப்படையிலேயே ஆனந்தமாக இருந்தால், ஆனந்தமாக இருப்பதற்காக நீங்கள் எதுவும் செய்யத்தேவையில்லை என்றால், அப்போது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிணாமமும் - நீங்கள் புரிந்துணரும் விதமும், உங்களை நீங்கள் வெளிப்படுத்தும் விதமும் மற்றும் உலகமும் – மாற்றமடையும். உங்களுக்கு என்று ஆதாயம் தேடும் ஆர்வங்கள் எதுவும் இருக்காது, ஏனென்றால் நீங்கள் என்ன செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், உங்களுக்கு ஏதாவது கிடைத்தாலும் அல்லது எதுவும் கிடைக்காவிட்டாலும், ஏதாவது நிகழ்ந்தாலும் அல்லது நிகழாவிட்டாலும் நீங்கள் உங்கள் இயல்பிலேயே ஆனந்தமாக இருப்பீர்கள். நீங்கள், உங்கள் இயல்பிலேயே ஆனந்தமாக இருந்தால், உங்களது செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமான ஒரு நிலைக்கு மேம்படும்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பத்து கருவிகள்

1. ஆனந்தமாக இருப்பது உங்களது அடிப்படையான பொறுப்பு என்பதைப் பார்க்கவும்

மகிழ்ச்சி, Happy Life Tips in Tamil

ஒரு மனிதருக்கு முதன்மையான மற்றும் மிக அடிப்படையான பொறுப்பு என்னவென்றால் ஆனந்தமான ஒரு மனிதராக அவர் உருவெடுப்பது. ஆனந்தமாக இருப்பது என்பது வாழ்க்கையின் உச்சபட்ச அம்சம் அல்ல. அது வாழ்க்கையின் அடிப்படையான அம்சம். நீங்கள் ஆனந்தமாக இல்லாவிட்டால், உங்கள் வாழ்க்கையில் வேறென்ன செய்ய முடியும்? நீங்கள் ஆனந்தமாக இருந்தால்தான், வேறு மகத்தான சாத்தியங்கள் வெளிப்படும்.

நீங்கள் என்ன செய்தாலும், உங்களது உள்தன்மையைத்தான் நீங்கள் பரப்பிவிடப் போகிறீர்கள். அதனை நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இதுதான் யதார்த்தம். உண்மையிலேயே மதிப்பு மிகுந்த ஏதோவொன்று உங்களுக்குள் நிகழ்ந்தால் தான், நீங்கள் இந்த உலகிற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஏதோவொன்றை வழங்கமுடியும். அதனால், நீங்கள் உண்மையிலேயே, உலகத்தைப் பற்றிய அக்கறையுடன் இருந்தால், நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம், உங்களை நீங்களே ஒரு ஆனந்தமான மனிதராக மாற்றிக்கொள்வது தான்.

2. ஆனந்தம் உங்களது உண்மையான தன்மை என்பதை உணர்ந்திடுங்கள்

மகிழ்ச்சி, Happiness

நீங்கள் உங்களது வாழ்க்கையில் எதனைப் பின்தொடர்ந்து செல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அது வியாபாரமாக, அதிகாரமாக, கல்வியாக அல்லது சேவையாக இருக்கலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று உங்களுக்குள் ஆழமாக உணர்ந்ததால் தான், நீங்கள் இதனைச் செய்கிறீர்கள். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு நோக்கத்திலிருந்தே எழுகிறது, ஏனென்றால் அதுதான் உண்மையான தன்மை. நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது வெறுமனே மகிழ்ச்சியாக இருந்தீர்கள். அதுதான் உங்களது இயல்பு. ஆனந்தத்தின் மூலம், உங்களுக்குள் உள்ளது; அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள முடியும்.

3. நீங்கள் விஷயங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரபஞ்சம், Cosmos

இன்று காலை, சூரியன் அற்புதமாக உதித்ததை நீங்கள் பார்த்தீர்களா? பூக்கள் அழகாக மலர்ந்தன, நக்ஷத்திரங்கள் கீழே விழவில்லை, பால்வெளிகள் மிக நன்றாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அனைத்தும் ஒழுங்காக இருக்கின்றன. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இன்றைக்கு அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்கள் மண்டைக்குள் நெளிந்து கொண்டிருக்கும் ஒரு எண்ணம், இன்றைக்கு ஒரு கெட்ட நாள் என்று உங்களை நம்பச் செய்கின்றது.

அடிப்படையில் துன்பம் நிகழ்வது ஏனென்றால், பெரும்பாலான மக்கள் இந்த வாழ்க்கை எதைப் பற்றியது என்ற சரியான கண்ணோட்டத்தைத் தொலைத்துவிட்டனர். இருத்தலியல் செயல்முறையை விட அவர்களது மனரீதியான செயல்முறை மிகவும் பெரிதாகிவிட்டது. நேரடியாகக் கூறவேண்டுமென்றால், படைத்தவனின் படைப்பை விட, உங்களது அற்பமான உருவாக்கம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அதுதான் எல்லாத் துன்பத்திற்கும் அடிப்படையில் மூலகாரணமாக இருக்கிறது. நாம் இங்கு உயிரோட்டத்துடன் இருப்பதென்றால் என்ன என்ற முழுமையான உணர்வையே தவறவிட்டுவிட்டோம். உங்களது தலைக்குள் ஓடும் ஒரு எண்ணமோ அல்லது உங்களுக்குள் எழும் ஒரு உணர்ச்சியோ, அதுதான் தற்போது உங்களது அனுபவத்தின் தன்மையைத் தீர்மானிக்கின்றது. மேலும் உங்களுடைய எண்ணமும், உணர்ச்சியும், உங்களது வாழ்க்கையின் எல்லைக்குட்பட்ட யதார்த்தத்துடன் தொடர்பில்லாமல் இருக்கலாம். இந்த ஒட்டுமொத்த படைப்பும் மிகவும் அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது, ஆனால் ஒரே ஒரு எண்ணமோ அல்லது உணர்ச்சியோ அனைத்தையும் அழித்துவிட முடியும்.

4. மனதை, அது உள்ளபடியே பாருங்கள்

எண்ணங்கள், Thoughts

நீங்கள் "என் மனம்" என்று சொல்வது உண்மையில் உங்களுடையது அல்ல. உங்களுக்கே உரிய ஒரு மனம் என்பது இல்லை. இதைச் சற்று கவனமாகப் பாருங்கள். நீங்கள் எதை "எனது மனம்" என்று அழைத்துக்கொள்கிறீர்களோ, அது இந்த சமூகத்தின் குப்பைத் தொட்டியாகத்தான் உள்ளது. உங்களைக் கடந்து செல்லும் யாரோ ஒருவரோ அல்லது அனைவருமோ உங்களது தலைக்குள் எதையாவது திணித்து விடுகின்றனர். யாரிடமிருந்து பெறவேண்டும் அல்லது யாரிடமிருந்து பெற வேண்டாம் என்ற தேர்ந்தெடுத்தல் உண்மையில் உங்களிடம் இல்லை. நீங்கள், "எனக்கு இந்த நபரைப் பிடிக்கவில்லை" என்று கூறினால், வேறு எவரிடமிருந்தும் பெறுவதைவிட, அவரிடம் இருந்துதான் அதிகம் பெறுவீர்கள். உண்மையில் உங்களுக்கு தேர்ந்தெடுத்தல் எதுவும் கிடையாது. ஆனால், இந்தக் குப்பையை எப்படி வகைப்படுத்தி, உபயோகிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், இந்த குப்பைத்தொட்டி உபயோகமாக இருக்கிறது. நீங்கள் சேகரித்துள்ள இந்தப்பதிவுகள் மற்றும் தகவல்களின் குவியல், இந்த உலகத்தில் பிழைப்பு நடத்துவதற்கு மட்டும்தான் உபயோகமாக இருக்கிறது. 'நீங்கள் யார்' என்பதற்கும், அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

5. மனதின் செயல்பாட்டிலிருந்து, இருத்தலியலுக்கு மாறுங்கள்

தியானம், Meditation

நாம் ஆன்மீக செயல்முறையைப் பற்றி பேசும்போது, மனதின் செயல்பாட்டிலிருந்து, இருத்தலியலுக்கு நகர்வதைப் பற்றியே நாம் பேசுகிறோம். வாழ்க்கை என்பது, தற்போது இங்கு இருக்கும் படைத்தலைப் பற்றியது. அதனைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, அது எப்படி இருக்கின்றதோ அப்படியே அனுபவித்து உணர்வது; நீங்கள் விரும்பும்படி அதனைச் சிதைப்பது அல்ல. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் இருத்தலியலின் யதார்த்தத்திற்கு நகர்வதற்கு, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதும், என்ன உணர்கிறீர்கள் என்பதும் முக்கியம் அல்ல என்பதை மட்டும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கும், யதார்த்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வாழ்க்கையுடன் அதற்கு மகத்தான இணக்கம் இல்லை. எங்கிருந்தெல்லாமோ நீங்கள் சேகரித்துள்ள முட்டாள்தனங்களுடன், மனம் ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்கின்றது. அது முக்கியமானது என்று நீங்கள் எண்ணினால், அதனைக் கடந்து ஒருபோதும் நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.

நீங்கள் எதனை முக்கியம் என்று நினைக்கிறீர்களோ, அந்தத் திசையில் இயற்கையாகவே உங்கள் கவனம் பாய்கிறது. உங்களது எண்ணமும், உணர்ச்சியும் முக்கியமாக இருந்தால், இயற்கையாக உங்கள் கவனம் முழுவதும் அங்குதான் இருக்கும். ஆனால் அது ஒரு மனரீதியான யதார்த்தம். அதற்கும், இருத்தலியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

துன்பங்கள் நம் மீது பொழிவதில்லை, அது உருவாக்கப்படுகிறது. மேலும் அது உற்பத்தி செய்யப்படும் இடம், உங்கள் மனம்தான். இந்த உற்பத்திக் கலனை மூடுவதற்கான நேரம் வந்துவிட்டது.

6. தேடுவதை நிறுத்துங்கள், வெளிப்படுத்தத் தொடங்குங்கள்

மகிழ்ச்சி, Happy Life Tips in Tamil

நாம் இன்றைக்கு மகிழ்ச்சியை எந்த அளவுக்குத் தீவிரமாக தேடுகிறோம் என்றால், இந்த பூமியின் வாழ்வே அச்சுறுத்தலில் இருக்கின்றது. மகிழ்ச்சியின் தேடுதலில் இருக்காதீர்கள். உங்களது மகிழ்ச்சியை உலகத்தில் எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கடந்தகால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், உங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் கணங்கள்தான் வாழ்க்கையின் மிக அழகான கணங்களாக இருக்கின்றனவே தவிர, நீங்கள் அதனைத் தேடிக்கொண்டிருக்கும்போது அல்ல.

நீங்கள் சேமித்து வைப்பது ஒருபோதும் உங்கள் தன்மையாக இருக்காது. நீங்கள் எதனை வெளிப்படுத்துகிறீர்களோ அதுதான் உங்கள் தன்மையாக இருக்கும். நீங்கள் உங்கள் ஆனந்தத்தை சேமித்து வைத்தால், உங்கள் வாழ்க்கையின் முடிவில், "அவள் ஒவ்வொரு துளி ஆனந்தத்தையும் தனக்குள் சேமித்து வைத்தாள்; அவளுக்கு மிக ஆனந்தமான இறப்பு" என்று யாரும் கூறமாட்டார்கள். அவர்கள், "இந்த மோசமான ஜந்து ஒருபோதும் தன்னுடைய வாழ்க்கையில் சிரிக்கக்கூட இல்லை" என்று கூறுவார்கள். ஆனால் நீங்கள் தினமும் உங்கள் ஆனந்தத்தையும், அன்பையும் வெளிப்படுத்தினால், மக்கள், "ஓ, அவள் ஒரு ஆனந்தமான, அன்பான உயிராக இருந்தாள்" என்று கூறுவார்கள்.

7. புன்னகை செய்யுங்கள்!

நீங்கள் காலையில் கண் விழித்தவுடன், புன்னகைப்பது தான் உங்கள் முதல் வேலையாக இருக்க வேண்டும். யாரைப் பார்த்து? ஒருவரைப் பார்த்தும் அல்ல. ஏனென்றால், நீங்கள் விழித்தெழுந்துவிட்ட உண்மை ஒன்றும் சிறிய விஷயமல்ல. நேற்றிரவு உறங்கிய இலட்சக்கணக்கான மக்கள் இன்று எழுந்திருக்கவில்லை, ஆனால் நீங்களும், நானும் விழித்தெழுந்து விட்டோம். நீங்கள் விழித்தெழுந்தது மகத்தான விஷயமல்லவா? அதனால், நீங்கள் விழித்து எழுந்துவிட்டதால் புன்னகைக்கவும். அதன்பிறகு, உங்களைச் சுற்றிலும் பார்த்து, அங்கு யாராவது இருந்தால் அவர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். பலருக்கும், அவர்களது அன்புக்குரியவர்களாக இருந்தவர்கள், இன்று காலை எழுந்திருக்கவில்லை. ஆனால், உங்களுக்கு நெருக்கமான அனைவரும் விழித்து எழுந்துவிட்டார்கள் - வாவ்! இது ஒரு மகத்தான நாள், இல்லையா? அதன்பிறகு நீங்கள் சற்று வெளியே சென்று மரங்களைப் பாருங்கள். அவைகளும் நேற்றிரவு இறக்கவில்லை.

இதனை நீங்கள் கேலிக்குரியதாக நினைக்கலாம், ஆனால் உங்களது அன்புக்குரிய யாரோ ஒருவர், உறக்கத்திலிருந்து எழுந்திருக்காதபோது, நீங்கள் அதன் யதார்த்தத்தை அறிந்துகொள்வீர்கள். அதன் மதிப்பை அறிவதற்கு, அதுவரைக்கும் காத்திருக்க வேண்டாம். இது கேலிக்குரிய ஒன்றல்ல, இது மிகவும் மதிப்பு வாய்ந்தது – நீங்கள் உயிரோடு இருப்பது மற்றும் உங்களுக்கு முக்கியமானதாக உள்ள அனைத்தும் உயிரோடு இருப்பது. இந்தப் பேரழிவான இரவில், பல மனிதர்களும், மற்ற பலரின் அன்புக்கு உரியவர்களும் விழித்து எழுந்திருக்காதபோது, நீங்களும், உங்கள் அன்புக்கு உரியவர்களும் எழுந்துவிட்டீர்கள். இது ஒரு அற்புதமான சம்பவம் அல்லவா? அதனைப் பாராட்டி, குறைந்தபட்சம் புன்னகை செய்யுங்கள். ஒரு சில மனிதர்களையாவது அன்பாக பார்ப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.

8. புன்னகைப்பதற்கு உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!

மகிழ்ச்சி, Happy Life Tips in Tamil

பல மனிதர்களுக்கு, இதையெல்லாம் ஒரு மணி நேரத்திலேயே மறக்கமுடியும் என்பதுடன், வெகுவிரைவிலேயே அவர்களது ஊர்வன மூளை (reptilian brain) யாரையாவது கடிக்கவும் விரும்புகிறது. அதனால் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை, வாழ்க்கையின் மதிப்பைப் பற்றி உங்களுக்கே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சிறிதும் உணர்திறனே இல்லாதவர் என்றால், ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒருமுறை உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் முழுவதுமாக உணர்திறனே இல்லாதவர் என்றால், ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை, உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இதனை உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு பத்து நொடிகளே தேவைப்படுகிறது. இதை இரண்டே இரண்டு நொடிகளிலும்கூட நீங்கள் செய்யலாம் – "நான் உயிருடன் இருக்கிறேன், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், வேறென்ன வேண்டும்?"

9. உங்களுக்குள் இருப்பதை மாற்றத்துக்கு உள்ளாக்குங்கள்

தியானம், Meditation

தற்போது உங்கள் வாழ்க்கையின் தரம், நீங்கள் அணியும் ஆடைகளாலோ, உங்கள் கல்வித் தகுதிகளினாலோ, எந்தக் குடும்பப் பின்னணியில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதிலோ அல்லது நீங்கள் வைத்திருக்கும் வங்கி இருப்புகளாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, உங்கள் வாழ்க்கைத் தரமானது, நீங்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்கள் என்பதையே சார்ந்துள்ளது.

யாரோ ஒருவர் உணவு இல்லாமலும், மற்றும் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் இல்லாமலும் இருந்தால், கண்டிப்பாக அவர் உடலளவில் துன்பம் அடையமுடியும். அது கவனிக்கப்பட வேண்டியது. அப்படிப்பட்ட மக்களுக்கு, முதலில் அந்த விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, அவர்களின் தேவைகள் ஒரு முடிவில்லாத பட்டியலாக உள்ளது. வீதியில் நடந்து செல்லும் மனிதரைவிட, கார் ஓட்டிச் செல்லும் மனிதர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. உங்களிடம் என்ன இருக்கிறது என்பதால் அது முடிவு செய்யப்படுவதில்லை. நீங்கள் அந்தக் கணத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்பதையே அது சார்ந்துள்ளது. 

10. மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்

ஒப்பீடு, Comparison

பெரும்பாலான மனிதர்கள், அவர்களிடம் இல்லாத ஏதோவொன்றுக்காகத் துன்பப்படவில்லை. அவர்கள் தங்களை வேறொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். நீங்கள் ஒரு மோட்டர் பைக்கில் செல்லும்போது, மற்றொருவர் ‘மெர்சிடீஸ்’ காரில் செல்வதைப் பார்த்து, உங்களுக்கு நீங்களே துன்பம் ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். சைக்கிள் ஓட்டிச் செல்லும் ஒருவருக்கு, நீங்கள் மோட்டர் பைக்கில் செல்வதை  பார்க்கும்போது, அது அவருக்கு ஒரு ‘லிமோஸின்’ உல்லாசக் காராக இருக்கிறது. வீதியில் கால்நடையாக நடந்து செல்லும் யாரோ ஒருவர், சைக்கிளைப் பார்த்து, “வாவ், எனக்கு மட்டும் அது கிடைத்திருந்தால், என் வாழ்க்கையில் என்னவெல்லாம் நான் செய்திருப்பேன்!” என்று நினைக்கிறார். இது ஒரு முட்டாள்தனமான விளையாட்டு என்பதுடன், தொடர்ந்து இது நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது.

மகிழ்ச்சியாக இருப்பதற்கு, வெளிச்சூழ்நிலைகளை சார்ந்திருக்கும் அனைவருமே, தங்கள் வாழ்வில் உண்மையான ஆனந்தத்தை ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டார்கள். நாம் உள்முகமாகப் பார்த்து, நமது நலனை எப்படி நாமே உருவாக்கிக்கொள்வது என்பதை பார்க்க வேண்டிய நேரம் இது. உங்களது உள்தன்மை மாறினால்தான், உண்மையான நல்வாழ்வு கிடைக்கும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நீங்கள் தெளிவாகப் பார்க்கமுடியும். நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கு, வெளிச்சூழ்நிலைகளைச் சார்ந்திருந்தால், நீங்கள் புரிந்துகொள்ள  வேண்டியது என்னவென்றால், வெளிச்சூழ்நிலையானது 100% நீங்கள் விரும்பியவாறு ஒருபோதும் நிகழ்வதில்லை. இதுதான் யதார்த்தம் என்பதால், குறைந்தபட்சம் இந்த ஒரு நபராவது – அதாவது நீங்கள் – எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த விதமாக இருக்கவேண்டும். நீங்கள் விரும்புகிற விதமாக நீங்களே இருப்பது நிகழ்ந்துவிட்டால், ஆனந்தமாக இருப்பதுதான் இயற்கையான தேர்வு. இதனை நீங்கள் எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள், உங்களது உண்மையான தன்மைக்கு மாறிவிட்டால், நீங்கள் ஆனந்தமாகத்தான் இருப்பீர்கள்.