மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?
என் மனதை நான் எப்படி அமைதிப்படுத்துவது? நான் எவ்வளவு அதிகநேரம் பயிற்சிகள் செய்கிறேனோ, அந்த அளவிற்கு மனம் எனக்குச் சொல்கிறது, "வெளியே இதைவிட முக்கியமாக வேலைகள் இருக்கின்றன" என்று. ஆனால், பயிற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தாலும் இது தோன்றுகிறது.
சத்குரு:
ஈஷா யோகா வகுப்பின் முதல் படிநிலையே, எது நடந்தாலும் அது என் பொறுப்பு என்று பார்ப்பது. இப்போது உங்கள் மனதோடு உங்களுக்கிருக்கிற அடையாளம் நீங்கிவிட்டது என்று பொருளல்ல. ஆனால் ஏதோ அடையாளம் நீங்கிவிட்டது போலப் பேசுகிறீர்கள். மனம் மீது பழி போடுகிறீர்கள். "காரணம் நான் அல்ல. எனக்குப் பயிற்சி செய்ய ஆசை, ஆனால் என் மனம் தடை செய்கிறது" என்று. உங்கள் வீட்டில் மாமியார் இருந்திருந்தால், மாமியாரைக் காரணம் காட்டியிருப்பீர்கள். அவர் இல்லாததால் உங்கள் மனதைக் காரணம் காட்டுகிறீர்கள்.
பழிபோட உங்களுக்கு யாராவது வேண்டும். (சிரிப்பு) எனவே, உங்கள் மனம் உங்களைத் தடுக்கிறது. உங்கள் உடல் நன்றாக இருக்கிறது. உங்கள் உடல் நோய் வாய்ப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தாலும் முதலில் நீங்கள் பார்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதற்குப் பிறகு எல்லாம் ஒரே இடத்தில் மையம் கொள்கிறது. இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை இப்படித்தான் சிதறிக்கிடக்கும். என் மனம் இப்படியிருக்கிறது, அதனால் என் தொழில் இப்படியிருக்கிறது. இப்படியிருப்பதால் என் பயிற்சி இப்படியிருப்பதற்கு என் முதலாளி காரணம். ஏதோ ஒன்று இப்படியிருக்கிறது. அதற்கு வேறொருவர் காரணம். இப்படிப் பார்த்தால் உங்கள் வாழ்க்கை சிதறிக் கிடப்பதாகத்தானே அர்த்தம். அதனை ஒரு இடத்தில் மையப்படுத்துங்கள். அதன்பிறகு, அதற்குப் பொறுப்பு நீங்கள்தான், வேறெதுவும் இல்லை என்று பாருங்கள். என்ன நடந்தாலும், எது நடக்காமல் இருந்தாலும், நான்தான் அதற்குப் பொறுப்பு என்று பாருங்கள்.
இப்போதுதான் வாழ்க்கையை நேரடியாக எதிர்கொள்கிறீர்கள். இது ஆன்மீகம் அல்ல. இது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பதற்கான ஒரு கல்வி. இதுதான் முதல் படிநிலை. ஆனால் இருப்பதிலேயே முக்கியமான படிநிலை. மதத்தின் பெயரால், நேர்மையாயிருக்கிற அடிப்படைத் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
துரதிர்ஷ்டவசமாக எல்லா மனங்களையும் கவனமாக ஆராய்ந்தால், தங்களை மதவாதிகள் என்று சொல்லிக்கொள்கிற மனங்களை விட, குற்றவாளிகளுடைய மனம் நேர்மையாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை மதிப்பீடுகளாவது நேராக இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கு என்ன தேவை என்று தெளிவாக அவர்களுக்குத் தெரியும். அதில் வருகிற அபாயங்களையும் தாண்டி அந்தப் பாதையில் அவர்கள் நடைபோடுகிறார்கள், இல்லையா?
ஆனால் மதத்தின் பெயரில் மனதை நாம் பலவாறு திசை திருப்பியிருக்கிறோம். எல்லோரும் சொல்கிறார்கள், நான் கடவுளை நேசிக்கிறேன், நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று. அது எந்தக் கடவுளாயிருந்தாலும் சரி, இங்கு இயேசு என்கிறீர்கள், அங்கே வேறொரு கடவுளைப் பற்றிச் சொல்கிறார்கள், அவ்வளவுதான்.
நீங்கள் பார்த்தேயிராத மனிதரை எப்படி நேசிக்கிறீர்கள்? பக்கத்திலிருக்கிற ஒரு மனிதர் மீது உங்களுக்கு நேசம் இல்லை. அவருக்கு வணக்கம் சொல்ல உங்களால் முடியாது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதர் மீது எங்கிருந்து நேசம் வருகிறது? நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுளை நேசித்தால் துன்பம் வரும் என்று யாராவது சொல்லியிருந்தால் கடவுளை நீங்கள் நேசிப்பீர்களா?
Subscribe
கடவுளால் உங்கள் வாழ்க்கை அழகாகும் என்று சொல்லியிருக்கிறார்கள், எல்லாம் கைகூடும், உங்கள் தொழில் சிறக்கும், உங்கள் வங்கியிருப்பு வளரும், உறவுகள் அற்புதமாக இருக்கும், சொர்க்கத்திற்குப் போவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள், இல்லையா?
எனவே, நீங்கள் தேடுவதெல்லாம் ஒரு மிட்டாயைத்தான், கடவுளை அல்ல. ஆனால் கடவுளைத் தேடுகிற பாவனையில் தந்திரமாக இதைச் செய்கிறீர்கள். உண்மையில் நீங்கள் தேடுவது என்னவோ டாலரைவிட மதிப்பு குறைந்த செலாவணியை. டாலர் மூலம் அடைவதைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கடவுளை அதைவிடக் குறைந்த செலாவணியாக ஆக்கிவிட்டீர்கள். கடவுளை வணங்கினால் எல்லாவற்றையும் இழந்துவிடுவீர்கள் என்றால் நீங்கள் வணங்கமாட்டீர்கள், இல்லையா?
இதனால்தான் ஒரு முழு கலாச்சாரமே உருவாக்கப்பட்டது. சிவனை வழிபட்டால் அவர் உங்களை அழித்துவிடுவார் என்று இந்தியாவில் எப்பொழுதும் சொல்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை அவர் அழித்துவிடுவார். எனவே, இந்தியாவின் தொன்மையான வழிபாட்டில் பக்தர்களின் பிரார்த்தனை, "என்னை தயவுசெய்து அழித்துவிடு. என்னிடம் இருப்பதையெல்லாம் எடுத்துவிடு, எனக்கு ஒரு கைப்பிடி உணவுகூட கிடைக்கவிடாதே, என்னை அப்படிச் செய்துவிடு" என்பதுதான்.
இதைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் அப்படித்தான் இந்த வழிபாடு இருக்கிறது. இந்த மனிதன், "தான் இருக்கும் நிலையிலிருந்து தன்னை அழித்துவிடு" என்று கேட்கிறான். "என்னைக் காப்பாற்று" என்று கேட்கவில்லை. "என்னை அழித்துவிடு" என்கிறான். நீங்கள் தேடுவது கடவுளை அல்ல. நீங்கள் தேடுவது சொர்க்கத்தை அல்ல. எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடுகிறீர்கள், இல்லையா?
கடவுளைத் தேடினால் துன்பம்தான் வரும் என்று யாராவது கூறியிருந்தால் நீங்கள் கடவுளைத் தேடமாட்டீர்கள். ஆனால் கடவுளை நாடினால் எல்லா நலமும் உண்டாகும் என்று சொன்னால்தான் கடவுளைத் தேடுகிறீர்கள். எனவே, நீங்கள் கேட்பதெல்லாம் ஒரு நலமான வாழ்க்கையை. அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனம் இல்லை. அதை ஒப்புக்கொள்வதுதான் நல்லது. வாழ்க்கையோடு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கையோடு நீங்கள் நேர்மையாக நடந்தால்தான் அடுத்தது என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். அதன்பிறகு எல்லாமே இருந்தாலும்கூட, உங்கள் வாழ்க்கையே நலமாயிருந்தாலும் இன்னும் அதிலே சில எல்லைகள் இருப்பதைக் காண்பீர்கள்.
அவற்றை எப்படிக் கடப்பது என்று பிறகு பார்க்கலாம். நீங்கள் உங்களோடு நேர்மையாக நடந்து கொள்ளாவிட்டால், அடுத்தபடிக்கு எப்படி போவது? இந்த உலகில் எல்லோரோடும் நேர்மையாக நடந்து கொள்ளாவிட்டாலும், உங்களுடனாவது நேர்மையாக நடந்து கொள்ளலாம், இல்லையா? (சிரிப்பு)
தாங்கள் கடவுளின் பக்தர்கள் என்று நம்புகிறவர், அதுமாதிரி இருப்பார்களே தவிர, உண்மையில் கடவுளோடு மனம் ஒன்றி இருப்பதில்லை. அது ஏறக்குறைய இந்தக் கதை மாதிரிதான். ஒரு குழந்தை பள்ளிவிட்டு வந்தவுடன், நேராக விளையாடப் போனால், அவள் தாய் அவளைத் தடுத்து நிறுத்தி, "இன்று உன் கணக்குப் பரிட்சை என்ன ஆனது?" என்று கேட்டாள். "அம்மா ஏறக்குறைய 100 மார்க் வாங்கிவிட்டேன்" என்றது. "அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே. எவ்வளவு 98 மதிப்பெண் வாங்கினாயா?". "இல்லையம்மா இரண்டு 00 வாங்கினேன்." (அவையில் சிரிப்பு)
நீங்கள் ஏறக்குறைய அங்கேதான் இருக்கிறீர்கள். (சிரிப்பு) அந்த 1 நிகழ்கிறவரையில் அடுத்த இரண்டு 0க்களால் பயனில்லை அல்லவா? இந்த ஒன்று பக்குவப்பட்டால்தான் அந்த இரண்டு 00 களுக்கு ஏதாவது பயனிருக்கும். இப்பொழுது நீங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது நீங்களில்லை. உங்களிடம் நிறைய அபத்தங்கள் இருக்கின்றன. வாழ்க்கைச் சூழலிலிருந்து பெற்றுக்கொண்டவை அவை. நிறைய பண்பாட்டுப் பிணைப்புகள் உங்களுக்கு இருக்கின்றன. ஏன் இவை இருக்கின்றன என்றால், நீங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது நீங்களில்லை. நீங்கள் இந்த சமூகத்தின் குப்பைத் தொட்டியாகயிருக்கிறீர்கள். உங்கள் உருவாக்கமே மற்றவர்களால் நிகழ்ந்திருக்கிறது.
இந்த 1 நிகழ்ந்துவிட்டால் பல பூஜ்யங்கள் தொடரலாம். ஆனால் இந்த 1 நிகழாவிட்டால் நீங்கள் வெறும் பூஜ்யங்களைத்தான் சேர்த்துக் கொண்டு போவீர்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்கள் கல்வி வெளியிலிருந்து தானே வந்தது. உங்கள் மொழி வெளியிலிருந்து வருகிறது. உங்களுக்கு என்ன தெரிகிறதோ அது வெளியிலிருந்து வருகிறது. உங்கள் மொழி வெளியிலிருந்து வந்திருக்கிறது. நீங்கள் உங்கள் மதம் என்று எதை நம்பினீர்களோ, அது வெளியிலிருந்து வந்திருக்கிறது. நன்மை, தீமை என்று நம்புகிற அனைத்துமே வெளியிலிருந்துதான் வந்திருக்கிறது. வாழ்க்கை குறித்த ஒழுக்கங்களும் வெளியிலிருந்தே வந்திருக்கின்றன.
இப்படி, வெளியிலிருந்து வந்த ஒவ்வொன்றையும், நீங்கள் கழித்துக் கொண்டே வந்தால், அதற்கும், உங்களுக்கும் இருக்கிற இடைவெளியை அதிகரித்துக்கொண்டே இருந்தால் போதும். அவற்றை விட்டுவிடக்கூட வேண்டாம். இன்னும் இந்த சமூகத்தில் வாழ உங்களுக்கு சில விஷயங்கள் தேவை. ஆனாலும் உங்களுக்கும், அவற்றிற்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்துங்கள், இது நான் இல்லை என்று. அதன் பிறகு நீங்கள் பயிற்சி என்று செய்வன எல்லாம் இன்னும் வேகமாகப் போவதைப் பார்ப்பீர்கள். இப்போது உங்களுக்கென்று ஒரு ஆன்மீகப் பாதை இல்லை, நான்கைந்து இருக்கின்றன. (சிரிப்பு)
ஏனென்றால், இன்று பலரும் பல விஷயங்களைப் பற்றி படிக்கிறார்கள். ஆன்மீகப் பாதை பற்றி புத்தகங்கள் எழுதுபவர்களும் நிறைய இருக்கிறார்கள். மூன்று புத்தகங்கள் படித்தால் நான்காவதாக ஒரு புத்தகத்தை எழுதிவிடலாம். வீட்டில் 100 புத்தகங்களை வைத்துக்கொண்டு அனைத்தையுமே படிக்கிறார்கள். இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம் என்று ஒன்றாகச் சேர்ந்து, தங்களுக்கென்று ஒரு பாதையை அமைக்க முற்படுகிறார்கள். ஒரு பெண்ணிற்குப் பிரசவமானது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிரசவம் நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு 9வது மாதமும். நேற்றுகூட இரண்டு சிறுநீரகங்களை அவள் பிரசவித்தாள். கடந்த வருடம் இதயத்தைப் பிரசவித்தாள். அதற்கு முந்தைய வருடம் நுரையீரலை, அது ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. அடுத்த வருடம் கால் கட்டை விரல்களைப் பிரசவிப்பாள். இப்படிப் போனால் ஒரு முழுக் குழந்தை பிறந்துவிடும், இல்லையா?
அங்கங்கே இருக்கிற பாகங்களைச் சேர்த்தால், அது குழந்தையாகிவிடாது. துரதிர்ஷ்டவசமாக உங்கள் ஆன்மீகப் பாதை அப்படித்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒரு ஆன்மீகப்பாதை தேவையென்றால் இயேசு சொன்னதைப் பின்பற்றியிருந்தாலே போதும். அதில் ஒரு வழி கிடைத்திருக்கும். அவருடைய போதனைகள் மிக எளிதானவை. அவர் சொன்னதெல்லாம் "வாருங்கள்! என்னைப் பின்பற்றுங்கள்" என்பதுதான். நீங்கள் அந்த அளவுக்கு அப்பாவியாக இல்லை.
உங்களால் அவரைப் பின்பற்ற முடியாது. ஏனெனில் உங்கள் மனதில் ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். உங்களால் இயேசுவைப் பின்பற்ற முடியாது. குழந்தைகள்தான் அவரை அடைவார்கள் என்று அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஏனென்றால், சிந்திக்கும் மனங்களால் அவரைப் பின்தொடர முடியாது என்பது அவருக்குத் தெரியும். "வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்" என்று சொன்னபோதுகூட சில மீனவர்களும், விவசாயிகளும் தான் அவர் பின்னே போனார்கள். சமூகத்தின் சிந்தனையாளர்கள், மேதைகள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் எல்லாம் அவர் பின்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. அவர் மீது குற்றம் சுமத்தத்தான் அவர்கள் முயற்சித்தார்கள்.
இன்று 2000 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டதாக நினைக்கிறீர்கள். "இதை எப்படி அவர்களால் செய்ய முடிந்தது" என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள்தான் அதையும் செய்தார்கள். அவர்கள் நம்பிய அனைத்து அபத்தங்களுக்கும் எதிராக, இயேசு பேசிக் கொண்டிருந்தார். அவரை வேறென்ன செய்வது?
அவர் சொல்வது நியாயமாகப்படுவதால் அவரைப் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவர் சொன்னது மிக அபத்தமாகயிருந்தால் அதைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் பேசுவது நியாயமாகப்படுகிறது. எனவே, சிறந்த வழி அவரை சிலுவையில் அறைவதுதான். அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக மனித மனம் இதைத்தான் செய்யமுடியும்.
ஒன்றை நீங்கள் நம்பத் தொடங்கிவிட்டால், ஒன்றோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டால், நீங்கள் சரியானதென்று கருதுகிற உண்மையை சிலுவையில் அறையத்தான் செய்வீர்கள். நிஜமாகவே ஆணி எடுத்து நீங்கள் அறையாமல் இருக்கலாம். ஆனால் மனதளவில் அதைப் பலவிதமாகச் செய்வீர்கள். ஏனென்றால் உங்கள் அடையாளம் முழுக்க முழுக்க நீங்கள் சரியென்று நினைப்பது மட்டுமே சரி என்று ஆகிவிட்டது.
உங்கள் கருத்தே சரி என்ற உணர்வோடு நீங்கள் இருக்கும்போது, மற்றவர்கள் நேரெதிராகத் தொடங்குவார்களேயானால், மற்றவர்கள் நேரெதிராக எதையாவது சொன்னால், அவரை ஏதாவது செய்ய நினைக்கிறீர்கள். இந்த வகுப்பின் இரண்டாவது நாளில் அப்படித்தான் உங்களுக்குப்பட்டது, இல்லையா? (சிரிப்பு) எனவே உங்கள் பயிற்சிகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. அதை நீங்கள் செய்ய வேண்டியிருந்தால் அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.
"இல்லை, என் மனம் என்னை திசை திருப்புகிறது" என்கிறீர்கள். அது பேசட்டும். உங்கள் மனம் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னோமா? இந்தத் தவறை பலபேர் செய்திருக்கிறார்கள். உங்கள் மனம் அமைதியாயிருக்க வேண்டும் என்று பிறர் சொல்கிறார்கள். "அது பேசட்டும்" என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் தூய்மையான மனம் பற்றிப் பேசுகிறவர்கள் தங்களைத் தாங்களே கவனித்ததில்லை. பெரிய ஏமாற்று வேலை இது.
தூய்மையான மனம் என்று இந்த கிரகத்திலேயே இல்லை. யார் மனமாக இருந்தாலும் அது ஒரு குப்பைத் தொட்டிதான். அதோடு எவ்வளவு இடைவெளி கொள்கிறீர்கள் என்பதில்தான் வித்தியாசமே. நீங்கள் ஒரு தூய்மையான உயிராயிருக்கலாம். தூய்மையான மனம் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் மனதை நீங்கள் தூய்மைப்படுத்துவதென்றால் அது முழுக்கக் காலியாக வேண்டும். இது சாத்தியமில்லை. உள்ளே ஒரு வெற்றிடம் ஏற்பட வேண்டும்.
உங்கள் மனதோடு உங்களால் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஒரு தூய்மையான மனம் ஒன்று இருக்கிறது என்று நம்புகிறீர்களா? அப்படிச் சொல்பவர்கள் தங்களைத் தாங்களே என்றுமே பார்த்துக் கொள்ளவேயில்லை.