தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 21

"தியானலிங்கம் எப்படி ஒரு குருவாக இருக்கிறார்? தியானலிங்கத்திற்குள் செல்லும்போது என்ன மனநிலையுடன் செல்ல வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு தொடரின் இந்த இறுதிப் பகுதியில் பதில் பகிர்ந்து தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளர்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

தியானலிங்கம் அபூர்வமானது; தெய்வீகத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு. ஒரு மிகச் சிறந்த குருவுக்கும், தியானலிங்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குரு மனித உடலில், மனித வடிவில் ஏழு சக்கரங்களுடன் இயங்குகிறார். தியானலிங்கமும் மிக உச்சமாக தூண்டப்பட்ட ஏழு சக்கரங்களுடன் இயங்குகிறது. ஆனால் அதற்கு மனித வடிவம் இல்லை. ஸ்தூல வடிவத்தில், சூட்சும நிலையில் அவர் இயங்குகிறார். ஒரு குரு உங்களுடன் உரையாடி வழி காட்டுவார். ஆனால் தியானலிங்கம் மௌனமாகவே வழி காட்டுவார். தியானலிங்கத்தை நிச்சயமாக நீங்கள் உங்கள் குருவாக பயன்படுத்த முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் தியானலிங்கத்திற்கு முன்பாகப் போய் அமர்கிறபோது வெறுமனே அமருங்கள். நீங்கள் எதையும் நம்பவோ. நம்பாமல் இருக்கவோ அவசியம் இல்லை.

சில நிமிடங்கள் தியானலிங்கத்தை கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு கண் மூடி அமருங்கள். எதையும் காட்சிப்படுத்த நினைக்காதீர்கள். எதையும் கற்பனை செய்யாதீர்கள். மீண்டும் நினைவுகளுக்குள் செல்லாதீர்கள். இப்போது அது தானாகவே நிகழும். தியானலிங்கத்தின் சக்தி வடிவம் தானாகவே உங்கள் மனங்களில் பதியும். அப்படிப் பதிய வைப்பதே தியானலிங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம். உங்கள் உள்ளத்தில் பதியும் சக்தி வடிவம் உங்கள் அனுமதிக்கும் தன்மையைப் பொறுத்து உடனடியாகவோ. பத்து வருடம் கழித்தோ உங்களுக்குள்ளிருந்து செயல்படும். இதை நிகழ அனுமதிப்பீர்களெனில் அது என்றும் உங்களுக்குள் இருக்கும். என்றும் வழி காட்டும்.. ஒரு குருவைப் போல.

வாழ்கின்ற ஒரு குருவின் முன்னால் நீங்கள் அமரும்போது அவரைப் பற்றி உங்களுக்கு சில மதிப்பீடுகள் இருக்கலாம். என்னதான் அவரை உங்கள் குரு என்று ஏற்றுக் கொண்டாலும், அவரை விருப்பு, வெறுப்பு கொண்ட ஒரு மனிதராகத்தான் பார்ப்பீர்கள். அவர் தன்னை உணர்ந்த ஞானி என்பதை பரிபூரணமாக ஒப்புக் கொள்வதில் உங்கள் அகங்காரத்திற்குச் சிரமம் இருக்கிறது. சிலர் சின்னச் சின்ன காரணங்களுக்காக தம் குருவை விட்டுப் பிரிகிறார்கள். அது அவர்களின் முட்டாள்தனமான மதிப்பீடுகளால் நிகழ்வது. தியானலிங்கத்தின் முன்பாக அமரும்போது இந்த மதிப்பீடு பிரச்சினை இல்லை. இதை சக்தியின் வடிவம் என்று ஏற்பதா, இல்லையா என்கிற ஒரே பிரச்சினை மட்டும் தான்.

நீங்கள் அன்றாட வாழ்வில் மனதில் சிக்குண்டு இருக்கிறீர்கள். உள்ளே நிகழ்பவை எவையும் ஆழ்ந்த பரிமாணங்களில் நிகழ்வதில்லை. ஒவ்வொரு விநாடியும் விழிப்புணர்வுடன் நீங்கள் இருப்பதில்லை. சில விநாடிகள் இதுதான் உங்கள் வாழ்விலேயே மிக அற்புதமான விஷயம் என்று உங்களுக்குத் தெரியும். மற்ற நேரங்களில் உங்கள் மனம் பலவாறாக வாதம் செய்து அப்படியில்லை என்று நிரூபிக்க முயலும். ஆகவே இந்த அடிப்படையில் பார்த்தால் தியானலிங்கத்தை ஒரு குருவைவிடச் சிறந்த வழிகாட்டி என்றே சொல்லலாம்.

தியானலிங்கத்தை ஒருமுறை சரியாக உணர்ந்து விட்டீர்களென்றால் பிறகு அதன் முன்பாக அமரும் ஒவ்வொரு முறையும் அதன் புனிதத் தன்மையை உணர்வீர்கள். இத்தனைச் சிறப்புகளைக் கொண்டுள்ள ஒரு தெய்வீக வரம் நம் தியானலிங்கம். சக்தியின் உச்சம் நம் தியானலிங்கம். இந்த தியானலிங்கத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நமது சத்குரு அவர்களின் வார்த்தைகளுடன் தந்து.. எனக்குள் இருந்து இதை எழுதச் செய்த சத்குருவை வணங்கி இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

சத்குரு தியானலிங்கம் குறித்து பேசும்போது...

"நீங்கள் தியானலிங்கத்திற்கு முன்பாகப் போய் அமர்கிறபோது வெறுமனே அமருங்கள். நீங்கள் எதையும் நம்பவோ. நம்பாமல் இருக்கவோ அவசியம் இல்லை. அது உங்கள் முன்பு நல்ல விருந்து பரிமாறப்படுவது போல, நீங்கள் கடுமையான பசியிலும் இல்லை. அந்த உணவை வெறுக்கவும் இல்லை. வெறுமனே அமருங்கள். அதை அள்ளி உண்ண முயலாதீர்கள். திறந்த மனதுடன் இருங்கள். உங்கள் முன்பு வைக்கப்பட்ட உணவு குறித்து எந்த மதிப்பீட்டையும் செய்யாதீர்கள். தியானலிங்கத்தின் முன்னால் அப்படித்தான் அமர வேண்டும். எதையும் செய்யாமல், அந்த உணவை காலால் மிதித்துவிடாமல் இருக்க வேண்டும். ஒரு விருப்பத்தோடு, திறந்த மனதோடு நீங்கள் அங்கே அமர்வீர்களேயனால், இது வெறும் குறியீடு மட்டுமல்ல என்பதை உணர்வீர்கள். உங்களுக்கு தியானலிங்கம் என்பது வெறும் கல்லாக மட்டும் இருக்காது. எல்லாவிதங்களிலும் அது உயிருள்ள ஒரு தன்மை என்பதை உணர்வீர்கள்."

..... திக்கெட்டும் தியானலிங்கத்தின் சக்தி வெளிச்சம் பரவட்டும் ....

இந்த வாரத்துடன் இந்த தொடர் நிறைவுறுகிறது.


அடுத்த வாரம்...

தியானலிங்கம் சம்பந்தமான கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதற்கு சத்குரு அளித்த சுவாரஸ்யமான பதில்களும் காத்திருக்கிறது.

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை