ஊசியும் வாராது சிறு தூசியும் வாராது - மரணத்தைத் தாண்டி உடலும் வாராது
கடல்போன்ற உன் செல்வம் வாராது
உற்றவர் மற்றவர் எவரும் வாரார். கற்றதும் வாராது
உண்மையை மறந்து செல்வம் குவிப்பதுதான் ஏனோ? 

சத்குரு:

ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி

"இந்தாருங்கள் இந்த ஊசியை வைத்துக் கொள்ளுங்கள்!” அந்த மகான் ஒரு ஊசியை அந்த செல்வந்தரிடம் அளித்தார். காரணமே இல்லாமல் ஒரு சிறிய ஊசியை அந்த செல்வந்தருக்கு இவர் ஏன் அளிக்க வேண்டும்?

“இதனை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! நீங்கள் என்னை அடுத்தமுறை பார்க்கும்போது திருப்பி அளித்துவிடுங்கள்,” என்றார். 

குருநானக் கருணைமிக்க அதேநேரத்தில் தைரியமான ஒரு மனிதர். எப்போதும் புன்னகையுடனும் மென்மையாகவும் இருக்கும் துறவி அவரில்லை. சில நேரங்களில் மென்மையாகவும், தேவைப்பட்டால் கடினமாகவும் நடந்துகொள்ளும் மனிதர். ஒவ்வொரு ஊரிலும் சென்று தனது செய்தியை மக்களுக்கு அளித்துவிட்டு வந்தார். இப்படி ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டில் தங்க நேர்ந்தபோது ஒரு ஊசியை அளித்துவிட்டுக் கிளம்பினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அந்த மனிதருக்கு குருநானக் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது. உடனே அவர் குருநானக்கின் பாதங்களில் விழுந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியதும் தனக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு பிறவற்றை மக்களின் நன்மைக்காக அளித்திட்டார்.

குருநானக் கிளம்பியபோது அந்த ஊசியைப் பற்றி அவர் தன் மனைவியிடம் கூறிக்கொண்டு இருந்தார். அவர் மனைவி உடனே அந்த மனிதரை கடிந்து கொண்டார்.

“ஏன் இப்படி முட்டாள்தனமாக குருவிடம் இருந்து ஊசியை வாங்கினீர்கள்? அவரோ வயதானவர். ஒருவேளை அவரை நீங்கள் சந்திக்கும் முன்னே அவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவருக்கு ஏதாவது நாம் அர்ப்பணிப்பாக வழங்கிவிடலாம். ஆனால் அவரிடமிருந்து நாம் எதையும் வாங்கிடக் கூடாது. இதைப் போன்றவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கிடக் கூடாது. அவர் இறந்துவிட்டால் அது நமக்கு எப்போதும் கடனாக இருந்துவிடும். இந்த கர்மவினையை நாம் எப்போதும் அழித்திட இயலாது. இதனால் நீங்கள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட வேண்டியிருக்கும். அது நமக்கு நன்மை அல்ல. எப்படியாவது அவரைத் தேடிக் கண்டுபிடித்து அதனை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்,” என்றார்.

அதனால் அந்த மனிதர் குருநானக்கை பின்தொடர ஆரம்பித்தார். 2 மாதத் தேடலுக்குப் பிறகு அவர் குருநானக்கைக் கண்டுபிடித்தார், “குருவே இந்த ஊசியை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்! நீங்களோ வயதானவர். ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால் என்னால் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு சொர்க்கத்தைத் தேடி வர இயலாது. என்னால் இதை உங்களிடம் திருப்பித்தர இயலாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன்? நான் எப்போதும் உங்களுக்குக் கடன்பட்டவனாகி விடுவேன்,” என்றார் அந்த செல்வந்தர்.

அதற்கு குருநானக் “சரி! அப்படியானால் இந்த ஊசியை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்ல இயலாது என்பது உனக்குத் தெரியும். ஊசியைக் கூட எடுத்துச்செல்ல இயலாது என்பது உனக்குத் தெரியும்போது நீ சேர்த்து வைத்திருக்கிறாயே இந்தப் பெரும் சொத்து, இதனை என்ன செய்யப் போகிறாய்? அதில் இருந்தும் எதையும் எடுத்துச் செல்ல இயலாதே,” என்றார். அந்த மனிதருக்கு குருநானக் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது. உடனே அவர் குருநானக்கின் பாதங்களில் விழுந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியதும் தனக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு பிறவற்றை மக்களின் நன்மைக்காக அளித்திட்டார்.

குருநானக் எப்படிப்பட்ட ஞானி?

குருநானக் இதுபோல பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து கிராமம் கிராமமாக பயணம் செய்து கொண்டிருந்தார். பலரும் அவர் ஒரு மதத்தினை உருவாக்கியவர் என்று நினைக்கிறார்கள். அவர் எப்போதும் தனியாக ஒரு மதத்தினை நிறுவிட விரும்பவில்லை. அவர் எந்த வேதத்தையும் படித்ததில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் இந்த உயிர்தான். அவருடைய போதனைகள் என்று நமக்குத் தெரிந்ததெல்லாம் மிக மிகக் குறைவு.

அவர் கூறியவற்றில், தற்போது இந்த உலகில் ஐந்து சதவீதம்கூட இல்லை. ஆனால், அவர் என்ன கூறியிருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடியும். ஏனெனில், உள்நிலை அனுபவத்திலிருந்து பேசுபவர்கள் அனைவருமே ஒன்றையேதான் கூறுவார்கள்.

ஆன்மீகப் புத்தகங்கள் பழையதாகிப் போயிருக்கலாம். ஆனால், உள்நிலை அனுபவம் எப்போதும் பழையதாகிவிட இயலாது. அதற்கு காலம் தேதியே இல்லை. நேரமும் தேதியும் வெறும் திடப் பொருட்களுக்குத்தான். உள்நிலையில் என்ன இருக்கிறதோ, அது எந்தக் காலத்தையும் சேர்ந்ததில்லை.

உள்ளே இருப்பது இந்தக் காலத்தையோ அல்லது பழங்காலத்தையோ சேர்ந்ததில்லை.

இந்த உலகம் ஒரு எல்லைக்குட்பட்ட இடம். ஒரு தனிமனிதனோ ஒரு சமூகமோ அல்லது தேசமோ, அவர் தொடர்ந்து செல்வத்தைக் குவித்துக்கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு வலியையே தரும். ஒவ்வொரு மனிதனும் எனக்கு இவ்வளவுதான் வேண்டும். இதற்கு மேல் உள்ளவற்றை நான் பிறருக்காக அளிப்பேன் என தனக்குள் நிலைநிறுத்தும் வரை, உலகம் அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு பேரிடர்தான்.

இந்த பூமியில் உண்மையான பேரிடர் பூகம்பம் அல்ல, எரிமலை அல்ல, சுனாமி அல்ல. மனிதனின் அறியாமைதான் ஒரே பேரிடர்! ஞானோதயமே ஒரே தீர்வு!

குறிப்பு:

இந்தக் கட்டுரை சத்குருவின் "யோகாவும் யோகிகளும்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்!

Photo Credit: Guru Nanak Image from Wikimedia