சத்குரு: பெரும்பாலான மக்களுக்கு, அவர்களது வாழ்க்கையில் அமையும் உறவுகளின் தரம்தான் அவர்கள் வாழும் வாழ்வின் தரத்தையே பெரிதளவுக்கு முடிவு செய்கிறது. உறவு என்பது உங்கள் வாழ்வில் முக்கிய பங்காற்றும்போது, அதை ஆராய்ந்து பார்க்கத் தேவைப்படுகிறது. ஒரு உறவின் அடிப்படை என்ன? ஏன் மனிதர்களுக்கு ஒரு உறவு தேவைப்படுகிறது? உறவுகள் பல நிலைகளில் உருவாகின்றன; பல்வேறான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பல வகையான உறவுகள் உள்ளன. அந்தத் தேவைகள் உடல் சார்ந்ததாக, மனம் சார்ந்ததாக, உணர்வு சார்ந்ததாக, சமூகம் சார்ந்ததாக, பொருளாதாரம் சார்ந்ததாக அல்லது அரசியல் சார்ந்ததாக இருக்கலாம் – அவைகள் எந்த விதமாகவும் இருக்கக்கூடும். 

இந்த உயிர்த்தன்மையே தன்னளவில் முழுமையான ஒன்றாகத்தான் இருக்கிறது – அது ஏன் முழுமையற்றதாக உணருகிறது? இது மற்றொரு உயிர்த்துளியுடன் இணைந்து நிறைவு பெறுவதற்கு ஏன் முயற்சிக்கிறது?

உறவின் இயல்பு என்னவாக இருந்தாலும், உறவு எந்த வகைப்பட்டதாக இருந்தாலும், உங்களுக்குப் பூர்த்தி செய்வதற்கான ஒரு தேவை இருப்பது அடிப்படையான அம்சமாக இருக்கிறது. அந்த உறவு உங்களின் தேவையை பூர்த்திசெய்யவே உருவானது. "இல்லை எனக்குப் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. நான் கொடுப்பதையே விரும்புகிறேன்" - பெற்றுக்கொள்ள விரும்புவதுபோலவே கொடுக்கவேண்டும் என்பதும் ஒரு தேவைதான். "நான் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்றைக் கொடுக்கவேண்டும்" என்பதுகூட "எனக்கு ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்பதற்கு நிகரான தேவைதான். அங்கு ஒரு தேவை இருக்கிறது. தேவைகள் பலவிதமாக இருக்கலாம், அதைப் பொறுத்து உறவுகளும் பலவிதமாக இருக்கக்கூடும்.

ஒரு மனிதருக்குள் தேவை எழுவது ஏனென்றால் அவருக்குள் ஒருவிதமான முழுமையற்ற உணர்வு இருக்கிறது. எனவே அவர்களுக்குள்ளேயே ஒரு முழுமையடைந்த உணர்வை அனுபவிப்பதற்காகவே மக்கள் உறவுகளை அமைத்துக்கொள்கின்றனர். உங்களுக்குப் பிரியமான யாரோ ஒருவரோடு நீங்கள் ஒரு நல்ல உறவில் இருந்தால், முழுமைபெற்றதாக நீங்கள் உணருகிறீர்கள். அது உங்களுக்கு இல்லாதபோது, நீங்கள் முழுமையின்மையை உணருகிறீர்கள். இது ஏன் இவ்வாறு இருக்கிறது? இந்த உயிர்த்தன்மையே தன்னளவில் முழுமையான ஒன்றாகத்தான் இருக்கிறது – அது ஏன் முழுமையற்றதாக உணருகிறது? இது மற்றொரு உயிர்த்துளியுடன் இணைந்து நிறைவு பெறுவதற்கு ஏன் முயற்சிக்கிறது? அதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால், இந்த உயிரை அதனதன் முழுஆழத்தையும், பரிமாணத்தையும் நாம் கண்டுணராமல் இருந்துகொண்டிருக்கிறோம்.

எதிர்பார்ப்பின் மூலம்

எங்கே ஒரு உறவு இருக்கிறதோ, அங்கே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் உருவாக்கும் எதிர்பார்ப்புகள் எப்படிபட்டவை என்றால், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஒரு மனிதர்கூட இந்த பூமியில் இல்லை என்ற அளவில் இருக்கின்றன. குறிப்பாக ஒரு ஆண்-பெண் உறவில் எதிர்பார்ப்புகள் அளவு கடந்த நிலையில், நீங்கள் ஒரு ஆண் கடவுளையோ அல்லது பெண் கடவுளையோ மணந்து கொண்டால்கூட, அவர்கள் உங்களுக்கு ஏமாற்றத்தைத்தான் அளிப்பார்கள். எதிர்பார்ப்புகளை அல்லது எதிர்பார்ப்புகளின் மூலத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாதபோது, உங்களால் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய முடியாது. ஆனால் நீங்கள் இந்த எதிர்பார்ப்புகளின் மூலத்தைப் புரிந்துகொண்டால், ஒரு மிக அழகான இணைதலை உங்களால் உருவாக்க முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் இயல்பாகவே மகிழ்ச்சியானவராக இருந்தால், உறவுகள் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வழியாக இருக்குமே தவிர; உங்கள் மகிழ்ச்சியை தேடுவதற்கானதாக இருக்காது.

அடிப்படையில், நீங்கள் ஏன் ஒரு உறவை நாடியுள்ளீர்கள்? ஏனெனில் உங்கள் வாழ்வில் எந்த ஒரு உறவும் இல்லாமல் போனால் நீங்கள் மனச்சோர்வு அடையக்கூடும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருப்பதற்கு, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு உறவை நாடுகிறீர்கள். அல்லது இதை வேறுவிதமாக கூறினால், நீங்கள் மற்றொருவரை உங்கள் மகிழ்ச்சிக்கான மூலமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள். நீங்கள் இயல்பாகவே மகிழ்ச்சியானவராக இருந்தால், உறவுகள் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வழியாக இருக்குமே தவிர; உங்கள் மகிழ்ச்சியை தேடுவதற்கானதாக இருக்காது. நீங்கள் வேறொருவரிடம் இருந்து மகிழ்ச்சியை பிழிந்தெடுக்க முயற்சித்தால் அந்த நபரும் உங்களிடம் இருந்து மகிழ்ச்சியை பிழிந்தெடுக்க முயற்சித்தால், சிறிது காலத்திற்குப் பிறகு அது வலி மிகுந்த ஒரு உறவாகத்தான் இருக்கப்போகிறது. ஏதோ ஒன்று பூர்த்தியடையும் காரணத்தினால், ஆரம்பத்தில் அது சரியாக இருக்கலாம். ஆனால் உங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த விரும்பி நீங்கள் ஒரு உறவை உருவாக்கிக்கொண்டால் யாரும் உங்களைப்பற்றி குறைகூறப் போவதில்லை. ஏனெனில், நீங்கள் மற்றவரிடமிருந்து மகிழ்ச்சியைத் தேடுபவராக இல்லாமல், நீங்கள் உங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் செயல்முறையில் இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை ஆனந்தத் தேடுதலில் இல்லாமல், உங்களுடைய ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருக்கும்பட்சத்தில் உங்களின் எல்லா உறவுகளும் இயல்பாகவே அற்புதமாக இருக்கும். நீங்கள் பல லட்சம் உறவுகள் கொண்டிருக்கலாம், எனினும் அவை அனைத்தையும் நன்முறையில் கையாளுவீர்கள். மற்றவரின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முயற்சிக்கும் இந்த ஒட்டுமொத்த சர்க்கஸும் இல்லாமல் போகிறது, ஏனெனில் நீங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருந்தால், எப்படியும் அவர்கள் உங்களோடு இருக்கவே விரும்புவார்கள். எல்லா நிலைகளிலும் உள்ள பலவிதமான உறவுகளும் உண்மையிலேயே நன்றாகச் செயல்பட வேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் தேடுதலில் இருந்து, ஆனந்தக்களிப்பின் ஒரு வெளிப்பாடாக மாற்றிக்கொள்வதுதான் நிகழத் தேவைப்படுகிறது.

 

பலவகையான உறவுகள்

தற்போது உங்களது உடல் எந்த விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு ஒரு உறவு தேவை என்ற நிலையில்தான் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது. உங்களது மனம் எந்த விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், இன்னமும் அதற்கு ஒரு உறவு தேவைப்படுகிறது. உங்களது உணர்ச்சிகள் எந்த விதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றால், அதற்கு இன்னமும் ஒரு உறவு தேவையாக இருக்கிறது. மேலும் ஆழமானதொரு தளத்தில், உங்களது சக்தி நிலைகளே எந்த விதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றால், அந்தத் தளத்தில்கூட இன்னமும் உங்களுக்கு ஒரு உறவு தேவையாக இருக்கிறது. உங்களது உடல் உறவைத் தேடிச் சென்றால், நாம் இதை பாலுறவு என்று அழைக்கிறோம். உங்களது மனம் உறவுகளைத் தேடிச் சென்றால், இதை நாம் தோழமை என்று அழைக்கிறோம். உங்கள் உணர்ச்சி உறவுகளைத் தேடிச் சென்றால், நாம் இதனை காதல், அன்பு என்றழைக்கிறோம். உங்களது சக்தி நிலைகள் ஒரு உறவைத் தேடினால், இதை நாம் யோகா என்று அழைக்கிறோம்.

உங்களுக்குள் நிர்பந்தங்கள் இல்லாமல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் விழிப்புணர்வோடு நிகழும்போது, உங்களின் உறவு உண்மையான ஆசீர்வாதமாக அமையும் என்பதுடன் – எந்த ஒரு ஏக்கமும், போராட்டமும் ஒருபோதும் இருக்காது.

நீங்கள் தேடுவது பாலுறவாக இருக்கலாம், தோழமையாக, அன்பாக அல்லது யோகாவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றுடன் ஒருமைப்படுவதற்கு முயற்சிக்கிறீர்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் தற்பொழுது நீங்கள் உங்களுக்குள் ஒரு போதாமையை உணர்கிறீர்கள். யாரோ ஒருவருடன் எவ்வாறு நீங்கள் ஒன்றாக முடியும்? உடல்ரீதியாக நீங்கள் முயற்சிசெய்துள்ளீர்கள். நீங்கள் முழுமையை எட்டப்போவது போல் தெரிகிறது, ஆனால் உடனே வேறுபடுவது உங்களுக்குத் தெரிந்ததே. மனதளவில் நீங்கள் முயற்சித்துள்ளீர்கள், பல தருணங்களில் அதை அடைந்துவிட்டதாக நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் இரண்டு மனங்கள் எப்போதும் ஒன்றாவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். உணர்ச்சி நிலையில் உண்மையிலேயே அதில் வெற்றி கண்டுவிட்டதாக நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் பிளவுகள் மிகச் சுலபமாக எழுந்துவிடுகின்றன.

வேறொன்றோடு ஒன்றாகும் இந்த ஏக்கத்தை நிறைவேற்றுவதற்கு என்ன வழி இருக்கிறது? இதைப் பார்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. உங்கள் வாழ்வின் சில பொழுதுகளில் இதை நீங்கள் கவனித்திருக்கலாம், நீங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தபோதோ அல்லது அன்பாக அல்லது பரவசமாக இருந்ததுடன், உங்களது உயிர் சக்திகள் கட்டுக்கடங்கா உற்சாகத்தை உணர்ந்திருக்கும் நிலையில், நீங்கள் ஒருவிதமான விரிவடைந்த தன்மையை உணர்கிறீர்கள். இந்த விரிவடைதல், அதற்கு என்ன பொருள்? முதலில் "நான்" என்று நீங்கள் அழைக்கும் அது என்ன? "இது நான், இது நான் அல்ல" என்று நீங்கள் அறிந்துகொள்வதற்கான அடிப்படை என்ன? புலனுணர்வு, அப்படித்தானே?! உங்கள் புலனுணர்வின் எல்லைக்குள் இருப்பது என்னவாக இருந்தாலும், அதனை “நீங்கள்” என்று உணர்கிறீர்கள். உங்களது இந்த புலனுணர்வின் எல்லைக்கு வெளியில் இருப்பது என்னவாக இருந்தாலும், அது "மற்றது” என்பதுடன், இந்த "மற்றது" எப்போதும் ஒரு நரகமாக இருக்கிறது. இந்த நரகத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பவில்லை, எனவே குறைந்தபட்சம் மனித குலத்தின் ஒரு சிறு பகுதியையாவது உங்களின் ஒரு பாகமாக உணர்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். யாரோ ஒருவரை அல்லது மற்றவரை உங்களின் வாழ்வின் ஒரு அங்கமாக நீங்கள் இணைத்துக்கொள்வதற்கான இந்த ஏக்கமே உறவுகளாக அழைக்கப்படுகிறது. நீங்கள் மற்றவரை இணைத்துக்கொண்டால் நரகம் உங்களது சொர்க்கமாகக் கூடும். அந்த சொர்க்கத்தை உங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பதும், அந்த சொர்க்கத்தின் ஒரு சிறு துளியை கைக்கொள்வதும்தான் ஒரு உறவை நாடும் இறுதிகட்ட முயற்சியாக இருக்கிறது.

எந்த ஒரு உறவுக்கும் பின்புலமான ஏக்கம் என்னவாக இருந்தாலும், நீங்கள் உடல் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ அல்லது உணர்ச்சியின் மூலமாகவோ முயற்சித்தாலும், நீங்கள் தீராத ஏக்கத்தில்தான் இருப்பீர்கள்; அந்த ஒருமையை நீங்கள் ஒருபோதும் உணரமாட்டீர்கள். ஒருமையின் கணங்களை நீங்கள் அறிவீர்கள், ஆனால் அது உண்மையில் ஒருபோதும் நிகழாது.

உங்களைச் சுற்றியுள்ள இந்த அனைத்து உயிர்களையும் உங்கள் அங்கமாகவே நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இங்கு வாழும் தன்மையே மிகவும் வித்தியாசமாக இருக்கும். யோகா இந்த ஒருமையை உணர்வதற்கான வழியாக இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தால், மற்றவரின் தேவையைக் கவனித்துக்கொள்வதற்கான ஒரு வழியாக மட்டும்தான் உறவுகள் இருக்குமே தவிர, உங்களின் தேவைக்கானதாய் இருக்காது. ஏனெனில் உங்களுக்கான தேவையே இல்லாமல் போகிறது. உங்களுக்குள் நிர்பந்தங்கள் இல்லாமல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் விழிப்புணர்வோடு நிகழும்போது, உங்களின் உறவு உண்மையான ஆசீர்வாதமாக அமையும் என்பதுடன் – எந்த ஒரு ஏக்கமும், போராட்டமும் ஒருபோதும் இருக்காது.

Photo by Eric Ward on Unsplash