ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகள் பிரிந்தது அந்தஸ்தால். நட்பின் நெருக்கம் கசந்தது ஈகோவால். இனித்த திருமணம் புளித்தது சலிப்பால். இப்படி தினசரி வாழ்க்கையில் உறவுகள் நம்மை வாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றின் தாக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?

Question: நன்றாகப் படித்து, என் சொந்த முயற்சிகளால், கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி, இன்று ஒரு பெரிய பதவியில் இருக்கிறேன். என் பழைய நண்பர்களுடன், உறவினர்களுடன் சமமாகப் பழக ஆசைதான். ஆனால், என் அந்தஸ்தைத் தங்கள் ஆதாயங்களுக்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். அதனால், அவர்களை ஒரு தொலைவிலேயே வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வது என் அந்தஸ்து பற்றிய ஒரு குற்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. என்ன செய்வேன்?

undefined
சத்குரு: நீங்கள் படித்தது, சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்தது... இவற்றை ஓர் அந்தஸ்து என்று நினைப்பதே முட்டாள்தனம்.
முதலில் அதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் படித்தது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன். அதில் உங்கள் திறனைக் காட்டினீர்கள். அதன் விளைவாக, இந்த நிலைக்கு வந்தீர்கள். வேறு ஒருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்துக்குப் பயணமானார்கள், அவ்வளவுதான். இதில் அந்தஸ்து எங்கே வந்தது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாவீரன் என்று அழைக்கப்பட்ட அலெக்ஸாண்டர் பற்றி ஒரு கதை உண்டு. பல சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றிய பின், வெற்றிக் களிப்பில் சொந்த நாட்டுக்குத் திரும்ப முனைந்தான் அலெக்ஸாண்டர். பயணத்தின்போது, திடீரென்று தீவிரமான நோய் ஒன்று அவனைத் தாக்கியது. உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலை. தன் தாயின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறாமல் மரணம் அடையப்போகிறோம் என்று அலெக்ஸாண்டருக்குப் புரிந்தது. தன் தளபதிகளை அழைத்தான்.

'என் கடைசி ஆசைகள் மூன்றைத் தவறாமல் நிறைவேற்றி வையுங்கள் என்றான். என் சவப்பெட்டியை என் மருத்துவர்கள் தான் சுமக்க வேண்டும். என் இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் இடுகாடு வரையில் முத்தும், மணியும் நான் வெற்றிக்கொண்ட மற்ற நவரத்தினங்களும் தூவப்பட வேண்டும். என்னுடைய இரண்டு கைகளும் வெளியே ஊசலாடும்படிதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும்'.

தளபதிகள் கண்ணீரோடு மண்டியிட்டனர்

'மாமன்னா, இந்த விசித்திர ஆசைகளின் நோக்கம் என்ன?'

அலெக்ஸாண்டர் சொன்னான், 'வாழ்வில் நான் கற்றுக்கொண்ட மூன்று முக்கியப் பாடங்களை மக்களுக்குச் சொல்லிவிட்டுப் போக விரும்புகிறேன். எப்பேர்ப்பட்ட மாமன்னனாக இருந்தாலும், மருத்துவர்களால் அவன் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்கவேண்டும் என்றேன்.

ஒரு குன்றிமணிகூட என்னுடன் வரப்போவது இல்லை என்பதைத் தெரிவிக்கவே வழியெங்கும் நவரத்தினங்களைச் சிதறடிக்கச் சொன்னேன். இந்த பூமிக்கு வந்தபோது ஒன்றும் அற்றவனாக வந்தேன். விட்டுப் போகும்போதும், ஒன்றும் அற்றவனாகப் போகிறேன் என்பதை, சவப்பெட்டிக்கு வெளியே ஊசலாடும் என் திறந்த கைகள் மக்களுக்குச் சொல்லட்டும்' என்றான் அலெக்ஸாண்டர்.

இதுதான் வாழ்வின் உண்மை. இதில் அந்தஸ்து என்பது ஏது? உங்களுடன் பள்ளிக்கூடத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு கட்டத்துக்குப்பின் நண்பர்களாகத் தொடர வாய்ப்பு இல்லாமல் வெவ்வேறு பாதைகளில் போயிருக்கலாம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்தஸ்து என்றா அன்றைக்குத் தோன்றியது?

இப்போதும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வெவ்வேறு தனித்தனியான நோக்கங்களுடன் வெவ்வேறுவிதமாக வாழ்ந்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார்கள். அந்த வித்தியாசங்களை அப்படியே பார்க்கத் தெரியாமல், அந்தஸ்துடன் தொடர்புப்படுத்துவது என்பது ஒருவித அகங்காரம். அது தேவை இல்லை.

நண்பராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், அவரைச் சமமாக நினைப்பதே ஒரு பேருதவி போல் எண்ணுவது ஒருவிதமான நோய். அந்த அகங்காரமான நோயினால் எப்பேர்ப்பட்ட செயல்கள் வேண்டுமானாலும் செய்யத் துணிவு வரும். பொய் சொல்லத் தோன்றும். மற்றவரை ஏமாற்றத் தோன்றும். வேறு ஒரு மனநிலையில் குற்றம் புரியக்கூட மனம் தயாராகும்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். விதை எப்படியோ, இயல்பு எப்படியோ, அப்படித்தான் மரங்கள் வளர்கின்றன. ஆலமரமும் தென்னை மரமும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று நிரூபிக்க முயல்வது இல்லை. பனை மரமும், மா மரமும் யாருக்குக் கிளைகள் அதிகம் என்று சண்டையிட்டுக் கொள்வதில்லை.

நான்கு மரங்களும் ஒரே தோட்டத்தில் இருக்க முடியுமா? கட்டாயமாக இருக்க முடியும். ஆனால் நான்கு மரங்களும் ஒரே மட்டத்தில் இருக்க முடியுமா? கட்டாயமாக இருக்க முடியாது.

மனிதர்களும் அப்படித்தான். அவரவர் திறமைக்கான வளர்ச்சியைக் கண்டிருக்கிறார்கள். இதில் யாரும் தாழ்ந்தவர் இல்லை. யாரும் உயர்ந்தவர் இல்லை.

அதிகாரம், பதவி, செல்வம், அதற்கான அந்தஸ்து எல்லாமே மனிதனுக்கு ஏதோ ஒரு திறமையினால் வந்திருக்கலாம். அதை எதற்கு உபயோகப்படுத்த வேண்டும். எதற்கெல்லாம் உபயோகப்படுத்தக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளும் கூடுதல் திறமையும் அவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.

அந்தத் தெளிவு இருந்தால், நெருங்கி வருபவர்களை விலக்கி ஒரு தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் நிலையைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும் அது சரியல்ல என்பதை அன்புடன் புரியவைக்க முடியும். அப்படிச் செய்தால், உங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இருக்காது.”