தியானலிங்கத்திற்கும் மற்ற லிங்கங்களுக்கும் உள்ள வேறுபாடு...?
மற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்தி ரூபங்களுக்கு பூஜைகளும் சடங்குகளும் தினந்தோறும் தேவைப்படுகின்றன. ஆனால், தியானலிங்கத்திற்கு எந்தவித பூஜைகளோ மந்திர அர்ச்சனைகளோ செய்யப்படுவதில்லை. இது எதனால்? இந்த வாரப் பகுதியில் விளக்குகிறார் எழுத்தாளர்.
தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 20
மற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்தி ரூபங்களுக்கு பூஜைகளும் சடங்குகளும் தினந்தோறும் தேவைப்படுகின்றன. ஆனால், தியானலிங்கத்திற்கு எந்தவித பூஜைகளோ மந்திர அர்ச்சனைகளோ செய்யப்படுவதில்லை. இது எதனால்? இந்த வாரப் பகுதியில் விளக்குகிறார் எழுத்தாளர்.
பட்டுக்கோட்டை பிரபாகர்:
தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கும் இந்த ஆலயத்தில் எந்தவிதமான பூஜைகளோ, சடங்குகளோ, சம்பிரதாயங்களோ கடைபிடிக்கப் படுவதில்லை. அபிஷேகம் இல்லை. அர்ச்சனை இல்லை. ஆராதனை இல்லை. படைத்தல் இல்லை. இவையெல்லாம் ஏன் இங்கு இல்லை?
Subscribe
இந்தச் சடங்குகள், மற்றும் பூஜை போன்ற சம்பிரதாயங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்றால்... அவை நிகழுமிடத்தில் உயரிய சக்தி நிலையை உருவாக்கி, அங்கு வரும் அன்பர்களுக்கு அவரவர் சக்தியை பலப்படுத்த உதவுவதே நோக்கம். ஆனால்... தியானலிங்கமோ ஏற்கெனவே உச்சமான சக்தியின் வடிவம். மிக அதிகமான சக்தியூட்டிதான் தியானலிங்கமே உருவாக்கப்பட்டுள்ளது. மந்திரங்களைப் பயன்படுத்தாமல் பிராணப் பிரதிஷ்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த தியானலிங்கத்திற்கு பூஜைகள் மூலம் மேலும் சக்தியூட்ட வேண்டிய அவசியமில்லை என்பதே உண்மை. நமது வழக்கத்திற்காக பூஜைகளை அனுமதித்தால்... அது பொருளற்றது.
எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமானால்... நீர் சக்தி, காற்று சக்தி, அணு சக்தி, அனல் சக்தி, சூரிய சக்தி இவற்றை முறையான விஞ்ஞான வழிமுறைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறோம். நமது பேட்டரிகள் பலவீனமடையும் போது அந்த மின்சாரத்திலிருந்து சார்ஜ் ஏற்றிக் கொள்கிறோம். மின்சாரத்தை பலப்படுத்த அதற்கு ஏதாவது சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியமிருக்கிறதா? தயாரித்து முடித்ததுமே மற்றவர்களுக்கு பயனளிக்கும் சக்தியாக அது மாறிவிடுகிறதல்லவா? அதைப்போன்ற சக்தி கொண்டு உருவாக்கப்பட்ட தியானலிங்கம் கொண்டு மற்றவர்கள் சக்தி பெற வேண்டுமே ஒழிய, தியானலிங்கத்திற்கு இனி சக்தியூட்ட வேண்டிய, அல்லது அந்தச் சக்தியைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஆகவே தான் தியானலிங்கத்திற்கு பூஜைகளோ, அபிஷேகங்களோ இல்லை.
தியானலிங்கத்தை அணுகும் அன்பர்கள் என்ன நோக்கத்துடன், என்ன மனநிலையுடன் அணுக வேண்டும்? முதல் விஷயம் - அர்ப்பணிக்கிற மனநிலையில் ஒருவர் அணுகினால், அவருக்கு தியானலிங்கம் மிக அதிகமான பலன்களைத் தரும். எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, நம்பிக்கையின்மை இதையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, ஏதாவது மனரீதியான நல்ல மாற்றங்கள் நடந்தால் அதை ஏற்கிற திறந்த அமைதியான மனநிலையுடன் அணுகுவது மிகவும் சிறப்பானது.
தியானலிங்கம் சக்திநிலையின் வடிவம். அந்தச் சூழலே வேறு. பரீட்சையில் பாஸ் செய்ய வைத்துவிடு என்றோ.. மகளுக்கு திருமணம் முடித்துத் தந்துவிடு என்றோ.. அலுவலகத்தில் பதவி உயர்வைத் தருவாயாக என்றோ.. என் காதல் கைகூட அருள் செய்வாய் என்றோ லௌஹீக வாழ்வின் தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இடமில்லை அது. இவையெல்லாம் மிகக் குறுகிய எல்லைகள் கொண்ட கோரிக்கைகள். ஆனால்.. அங்கு கிடைக்கச் சாத்தியமுள்ள விஷயங்களோ பலமடங்கு மகத்தானவை. அரிதானவை, ஆன்மீக ரீதியானவை.
தெய்வத்தை உங்களுக்காக இயக்கித் தரும் ஒரு கருவியாக பயன்படுத்த விரும்பாமல், தெய்வீகம் உங்களுக்குள் இயங்குவதற்கு அனுமதிக்கும் இடம் அது. கடவுளுக்கு நிச்சயமாக உங்களைவிடச் சிறந்த அறிவுண்டு என்று நீங்கள் நம்புகிறீர்களென்றால்.. அந்த அறிவாளியை நமக்கான தேவைகளை அவராகவே பூர்த்தி செய்ய அனுமதித்து பிரார்த்தனைகள் அற்று, அமைதியாக அவர் நம் மனதோடு உரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தர வேண்டும். அங்கு உங்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யத் தேவையில்லை. வேண்டுகோள்களைப் புறம் தள்ளி, எதிர்பார்ப்புகளை ஓரமாக ஒதுக்கி வைத்து, எது நடக்க வேண்டுமோ அதை உங்களுக்கு நடக்க அனுமதித்து அமைதியாக அமர்ந்திருந்தாலே போதுமானது. உங்களை விட அறிவு நிலையிலும், சக்தி நிலையிலும் மேம்பட்ட கடவுளை உங்கள் இயக்கத்தின் மூலம் உங்களுக்குள் செயல்படுவதற்கு அனுமதித்தால் போதும்.
அடுத்த வாரம்...
தியானலிங்கம் எப்படி ஒரு குருவாக இருக்கிறார் என்பதை, தியானலிங்கத்திற்குள் செல்லும்போது என்ன மனநிலையுடன் செல்ல வேண்டும் என்பதையும் வரும் வாரத்தில் தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளர்.
இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை