கோயில்-குளம் என சுற்றித்திரிந்து, புனித நூல்களை பாடம்செய்து, பல்வேறு விரதங்களை முறை தவறாமல் கடைபிடித்தாலும் இன்னும் பலருக்கு தெய்வீகத்தின் ருசி அனுபவத்திற்கு வந்ததாய் தெரியவில்லை! எனில், தெய்வீகத்தை உணர சித்தமாய் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அந்த அடிப்படை என்ன? சத்குரு இங்கே தன் இளமைக்கால மோட்டார் பயண அனுபவத்துடன் அந்த உண்மையை விளக்குகிறார்!

சத்குரு:

"இந்த உடம்புக்குள் ஊடுருவியிருக்கின்றன, தெய்வீகத்தின் வேர்கள்;
இதன் வேர்களை நீங்கள் பராமரித்தால் மலர்தலைத் தடுக்க இயலாது;
எங்கே தெய்வீகம் மலர்கிறதோ, அங்கே சொர்க்கம் நிகழ்கிறது;
மலர்ந்ததை பிறர் பாராமல் இருக்கலாம், ஆனால் அதன் நறுமணத்தைத் தவிர்க்க இயலுமா?"

இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் எதை முயன்றாலும், எவ்வளவு தீவிரமாகவும் ஆழமாகவும் முயல்கிறீர்களோ, அதன் எல்லை வரை சென்று பார்த்தால், அந்த எல்லைதான் தெய்வீகம் எனப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் எதைச் செய்தாலும், அதை முழுமையான தீவிரத்துடன் செய்யும்போது அதன் எல்லையைத் தொடுவீர்கள். முழுமையில்லாத முயற்சிதான் எப்போதும் சிக்கலை விளைவிக்கும்.

ஆகாயமோ, ஒரு மலரோ, ஒரு மனிதரோ ஒரு விலங்கோ, ஒரு மண்துகளோ, எதுவாக இருந்தாலும் தீவிரமாக ஊடுருவிப் பார்க்க உங்களால் முடிந்தால் அதன் எல்லைதான் தெய்வீகம்.

இப்படிச் சொல்வதன் காரணம், நீங்கள் தெய்வீகம் என்று எதைக் குறிக்கிறீர்களோ, அது ஆகாயத்தில் மிதக்கிறது, மலரில் மணக்கிறது, பறவைக்குள் பறக்கிறது, பூச்சிக்குள் ஊர்கிறது, மண்துகளில் கிடக்கிறது என்றெல்லாம் நான் சொல்வதாகப் பொருளில்லை. உங்களால் உங்கள் உள்நிலை தவிர, எதையும் ஊடுருவிப் பார்க்க முடிவதில்லை. காண்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொடுவது என்று எந்தப் புலன்வழி நீங்கள் உணந்தாலும் அவற்றை நீங்கள் உணர்வதெல்லாம் உங்கள் உள்நிலை என்கிற திரையில்தான். ஆனால், அந்தத் திரையை நீங்கள் கவனிக்கிற வரை விதம் விதமான காட்சிகளைக் காண்கிறீர்கள். ஆனால் காட்சிகளையும் கடந்து, திரையை நீங்கள் தொடுகிறபோது, அந்த எல்லைதான் தெய்வீகம் என்பதை உணர்வீர்கள்.

மேலே பார்ப்பதாலோ கீழே பார்ப்பதாலோ தெய்வீகத்தை நீங்கள் உணர முடியாது. கடவுள் மேலே இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். கடவுள் பூமியில் இருப்பதாக சிலர் கருதுகிறார்கள். கடவுள் மேலே இருப்பதாகக் கருதுபவர்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். இந்த பூமியை எரித்து விட்டாவது மேலே போக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். கடவுள் பூமியில் இருப்பதாகக் கருதுபவர்கள் இந்த பூமியை மதித்து நடந்து கொள்வார்கள். கடவுள் பூமியில் இல்லை என்று கருதுபவர்கள் எடுத்து வைக்கும் காலடி ஒவ்வொன்றும் அலட்சியத்தின் அடிச்சுவடுகளாக இருக்கும்.

தன்னுடைய உள்ளுணர்வில் பிரதிபலிக்காத எதையும் ஒரு மனிதன் உணர்வதில்லை என்பதால், தெய்வீகத்தை கீழேயும் மேலேயும் தேடுவது எந்தப் பயனையும் தரப்போவதில்லை. உங்கள் முன்னர் இலட்சக்கணக்கான இடங்கள் இருந்து உங்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அந்தத் தேர்வு மிகவும் சிரமமான காரியமாகி விடுகிறது. ஆனால் உங்கள் வாழ்க்கையை முழு தீவிரத்துடன் உற்றுக் கவனிப்பீர்களென்றால், இருப்பது ஒரே இடம்தான் என்பதை உணர்வீர்கள்.

நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் எங்களில் பலருக்கும் மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. பெட்ரோல் இருந்தால் போதும். எங்களால் வகுப்பில் உட்காரவே முடியாது. நான் இருந்தது மைசூரில். அங்கிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பெங்களூருக்கு என்னுடைய ஜாவா மோட்டார் சைக்கிள் பறக்கும். ஜாவா மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியானதே மைசூரில்தான். அதே போல பெங்களூரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பைக்குகளில் மைசூர் வருவார்கள். நாங்கள் பெங்களூரைச் சுற்றிவிட்டு மைசூர் திரும்புவோம். அவர்கள் மைசூரைச் சுற்றிவிட்டு பெங்களூர் திரும்புவார்கள். காலப்போக்கில் நாங்கள் நண்பர்களானோம். அவர்கள் பெங்களூருக்கு எங்களை அழைப்பார்கள்.

அங்கே நாங்கள் சந்திக்க ஓரிடம் உண்டு. அங்கே மேசைகள் இருக்காது. நாற்காலிகள் கிடையாது. மோட்டார் சைக்கிள்கள் மட்டும்தான். சிற்றுண்டிகள், காபி, தேநீர் எல்லாம் கிடைக்கும். அந்த இடத்திற்குப் பெயரே 'ஒன்லி ப்ளேஸ்' - ஒரே இடம். உண்மையிலேயே நீங்கள் போவதற்கு ஒரே இடம்தான் உள்ளது. மற்றபடி நீங்கள் என்னவெல்லாம் செய்வதாக நினைக்கிறீர்களோ அவையெல்லாம் நிகழ்வது உங்களுக்குள்தான். நீங்கள் சென்று சேரவேண்டிய ஒரே இடம், உங்களுக்குள்தான் இருக்கிறது.

தெய்வீகம் என்பதே கட்டுச்சோறு போலத்தான். கையில் கட்டுச்சோறு இருக்கும்போது, எப்படி நீங்கள் உணவுக்காக உணவகம் செல்ல வேண்டியதில்லையோ, அதேபோல தெய்வீகத்தைத் தேடி நீங்கள் கோவிலுக்கோ சொர்க்கத்துக்கோ செல்ல வேண்டியதில்லை. உங்களுக்குள் எத்தனை காட்சிகள் தெரிந்தாலும் ஒன்றையே உறுதியாகப் பற்றி அதன் எல்லைவரை ஊடுருவினால் அதுவே தெய்வீகம்.

ஆகாயமோ, ஒரு மலரோ, ஒரு மனிதரோ ஒரு விலங்கோ, ஒரு மண்துகளோ, எதுவாக இருந்தாலும் தீவிரமாக ஊடுருவிப் பார்க்க உங்களால் முடிந்தால் அதன் எல்லைதான் தெய்வீகம்.

ஒரு முனிவரிடம் ஓர் இளைஞன் வந்தான். "நான் எத்தனையோ முயற்சிகள் செய்கிறேன். ஆனால் என்னுடைய எல்லா முயற்சிகளும் பாவம் செய்வதிலேயே முடிந்து விடுகின்றன" என்றான். உடனே முனிவர் சொன்னார், "அப்படியானால் தீவிரமாகப் பாவம் செய்" என்று.

நீங்கள் எதைச் செய்தாலும், அதை முழுமையான தீவிரத்துடன் செய்யும்போது அதன் எல்லையைத் தொடுவீர்கள். முழுமையில்லாத முயற்சிதான் எப்போதும் சிக்கலை விளைவிக்கும். எப்போதும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிக் கொண்டேயிருக்கிறீர்கள். கோபம் மிகவும் அசிங்கமானது. ஒரு மனிதர் மிகவும் அசிங்கமாகத் தெரிவது கோபமாக இருக்கும் போதுதான். ஆனால் 24 மணிநேரம், முழுத் தீவிரத்துடன் நீங்கள் கோபமாகவே இருந்தால் ஞானோதயமடைந்து விடுவீர்கள். ஆனால் அது மிகவும் சிரமம். 24 மணிநேரமும் கோபமாக இருக்க அசாத்தியமான சக்திநிலை தேவை. உங்களால் 24 மணிநேரம் அன்பாக இருக்க முடியும். ஆனால் 24 மணிநேரம் கோபமாக இருக்க முடியாது. சத்குரு ஸ்ரீ பிரம்மா அப்படி இருக்கக் கூடியவர். அவருடைய கோபம் இன்னார் மீது என்றோ குறிப்பிட்ட காரணம் என்றோ இல்லை. அவருடைய இயல்பே அப்படியிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் அவர்கள் காட்டும் தீவிரமும் முழு கவனக்குவிப்பும்தான் முக்கியம். தங்களிடம் இல்லாத இயல்புகளை இருப்பதாகக் காட்ட முற்படும் நேரத்தில்தான் வெற்று நடிப்பில் இவர்கள் வாழ்வே வீணாகிறது. அன்பாக இருப்பது, நல்லவிதமாக நடந்து கொள்வது என்பதெல்லாம் இயல்பிலிருந்து வராத போது தீவிரத்தை உணர வாய்ப்பில்லை.

இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவருமே தங்கள் தவறான நடவடிக்கைக்குப் புகழ் பெற்றவர்கள். போதை, சூது, கொடுமைப்படுத்துதல் என்று விதம் விதமான பழக்கங்களுக்கு ஆளாகியிருந்தார்கள். அவர்களில் மூத்த சகோதரர் இறந்துவிட்டார். உடனே, இளைய சகோதரர் அவர்கள் பங்கு வகித்த தேவாலயத்திற்குச் சென்று, பாதிரியாரிடம், "புதிய தேவாலயமே கட்டித்தருகிறேன். ஆனால் இறந்த என் சகோதரரை புனிதர் என்று அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பாதிரியார் ஒப்புக்கொண்டார். அந்த நாளும் வந்தது. தன் உரையைத் தொடங்கினார் பாதிரியார். "மாண்டு போனவர், சமூகத்தைக் கெடுத்தவர். லஞ்சம் தந்து அதிகார வர்க்கத்தைக் கெடுத்தவர். குடும்பத்தை மோசமாக நடத்தியவர். கடவுளை இகழ்ந்தவர். ஆனால் அவருடைய தம்பியுடன் ஒப்பிடும்போது அவர் புனிதர்" என்றார்.

நீங்கள் நல்லவர் என்பதே பிறருடன் ஒப்பிடுவதால் சொல்லப்பட வேண்டியிருக்கிறது. இதனால் எந்தப் பயனுமில்லை. உள்நோக்கிப் போவதே வழி என்கிறபோது இன்னொன்றுடன் ஒப்பிடுவது ஆபாசமானது. எல்லாவற்றையும் உணர ஒரே இடம், உங்கள் உள்நிலைதான். நீங்கள் சொர்க்கத்துக்கே போனாலும் அதனை உங்கள் உள்நிலையில்தான் உணரமுடியும். தெய்வீகம் நிகழ்வது உங்களுக்குள்தான், வேறெங்கும் இல்லை.