பிரம்மச்சரியத்தின் உண்மையான அர்த்தம்

சத்குரு: “பிரம்மன்” என்றால் “தெய்வீகம்” அல்லது உச்சபட்சம் என்று பொருள், “சரியம்” என்றால் “பாதை” என்று பொருள். நீங்கள் தெய்வீகத்தின் பாதையில் இருந்தால், பிரம்மச்சாரி என்று அர்த்தம். தெய்வீகத்தின் பாதையில் இருப்பதென்றால் தனக்கென தனிப்பட்ட எந்தவித திட்டங்களும் வைத்திராது இருப்பது. என்ன தேவையோ அதை வெறுமனே செய்வது. நீங்கள் வாழ்க்கையில் எங்கே போக வேண்டும்; என்ன செய்ய வேண்டும்; உங்களுக்கு பிடித்தது பிடிக்காதது இவை அனைத்தும் உங்களிடமிருந்து எடுக்கப்படும். இதனை நீங்கள் விருப்பமின்றி செய்தால், சித்திரவதை போல இருக்கும். விருப்பத்தோடு செய்தால் அதன்பின் உங்களுக்கு எதும் தொந்தரவு இல்லை என்பதால், உங்கள் வாழ்வு மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் இருக்கும். என்ன தேவையோ அதை மட்டும் செய்ய வேண்டும்; அவ்வளவுதான். வாழ்க்கையும் மிகவும் எளிதாக மாறிவிடும். நீங்கள் உங்களையே அவ்வாறு அர்ப்பணித்த பின், உங்களின் ஆன்மீகத்தைப் பற்றியோ ஆன்மீகப்பாதை பற்றியோ கவலைப்பட தேவையில்லை. அது தானாகவே பார்த்து கொள்ளப்படும். அதைப் பற்றி ஏதும் செய்ய அவசியமில்லை.

பிரம்மச்சரியம் என்றால் பெரிய தியாகம் செய்வது; வாழ்க்கையை மறுப்பது என்று மக்கள் நினைக்கலாம். ஒருவர் தான் அணியும் ஆடையில் மட்டும் பிரம்மச்சாரியாக இருந்தால் வாழ்க்கை ஒரு சித்திரவாதை என்பது உண்மைதான். ஆனால் யார் ஒருவர் தெய்வீகத்தின் பாதையில் உண்மையாக நடக்கிறாரோ, அவருக்கு உலக வாழ்வின் அற்ப இன்பங்கள் அர்த்தமற்றதாக போய்விடும். உள்நிலையின் ஆனந்தத்தை உணர்ந்த பிறகு, வெளிவாழ்க்கையின் இன்பங்கள் அர்த்தமற்றதாகிவிடும்.

அனைவரும் வாழ்க்கை முறையில் பிரம்மச்சரியாக வேண்டும் என்று தேவையல்ல; ஆனால் உள்நிலையில் அவசியம் அனைவரும் தெய்வீகத்தின் பாதையில் இருக்க வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்படியென்றால் அனைவரும் பிரம்மச்சாரியாக வேண்டும் என்று அர்த்தமா? அனைவரும் வாழ்க்கை முறையில் பிரம்மச்சரியாக வேண்டும் என்று தேவையல்ல; ஆனால் உள்நிலையில் அவசியம் அனைவரும் தெய்வீகத்தின் பாதையில் இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் இல்லாதது மட்டும் பிரம்மச்சரியம் அல்ல. இந்த பாதைக்கு உதவுவதற்காக கடைபிடிக்கப்படும் ஒரு அம்சம் தான் இது. பிரம்மச்சரியம் என்றால் உங்கள் இயல்பினாலேயே பரவசமாக இருப்பது. நீங்கள் திருமணம் செய்து கொண்டும் பிரம்மச்சரியாக இருக்கலாம், அதுவும் சாத்தியமானதே. நீங்கள் உங்களுடைய இயல்பினாலேயே ஆனந்தமாக இருப்பீர்கள். உங்கள் கணவனிடமிருந்தோ மனைவியிடமிருந்தோ ஆனந்தத்தை கரக்க நீங்கள் முயலவில்லை. இப்படிதான் இருக்க வேண்டும். அனைவரும் தங்களின் இயல்பிலேயே ஆனந்தமாக இருக்க வேண்டும். இரண்டு பேர் ஒன்றாக சேரும்போது அது ஆனந்தத்தின் பரிமாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, ஆனந்தத்தை ஒருவரிடமிருந்து இன்னொருவர் பிழிய முயல்வதாக அல்ல.

எதிர்காலத்திற்கான முதலீடு

இதுபோன்றதொரு குறிப்பிட்ட ஒழுங்கு ஏற்படுத்த காரணம் என்ன? சாகப்போகும் தருவாயில் தன்னை உணர்தலை ஒருவர் தேடினால் அதனை பலவிதங்களில் பார்த்துகொள்ள முடியும். அந்நாளுக்காக உங்களிடம் நான் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக்கொள்ள முடியும். ஆனால் அதுமட்டும் போதாமல் அதனை ஆராயவும் வேண்டுமென்றால் மேலும் மற்றவர்களுக்கு இதனை வழங்கும் ஒரு கருவியாகவும் இருக்க வேண்டும் என்றாலும் பிரம்மச்சரியம் மிக முக்கியமானதாகிறது. ஆன்மீகத்தை அதன் தூய்மையோடு ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்து செல்வதற்கு பிரம்மச்சாரிகள் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு. தீவிரமான ஒரே நோக்குடன் ஒரு சிறிய குழுவிலான மக்கள் தேவை. இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதத்தில் தீட்சை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களுடைய சக்தி முற்றிலும் வேறு திசையில் செலுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் அந்தப் படி எடுக்கவேண்டிய தேவையில்லை. அது தேவையில்லை என்பதால் நாம் அனைவரையும் எடுத்துக்கொள்ளவும் மாட்டோம், அதற்கு அவசியமான, அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சாதனாவை வழங்கவும் மாட்டோம்.

நாம் அனைவரும் மாம்பழம் சாப்பிட்டு இருக்கிறோம், ஆனால் எத்தனை பேர் மாம்பழ மரங்களை நட்டு, அதனை வளர்த்து அதிலிருந்து பழங்களை சாப்பிட்டீர்கள்.

நாம் அனைவரும் மாம்பழம் சாப்பிட்டு இருக்கிறோம், ஆனால் எத்தனை பேர் மாம்பழ மரங்களை நட்டு, அதனை வளர்த்து அதிலிருந்து பழங்களை சாப்பிட்டீர்கள். பெரும்பாலான மக்கள் வேறு யாரோ ஒருவர் நட்ட மரத்திலிருந்து காய்த்த மாம்பழங்களை சாப்பிடுகின்றனர். ஒவ்வொரு சமுதாயத்திலும், ஆயிரம் பேரில் பத்து பேராவது மாம்பழ மரங்கள் நடப்படுவதை பார்த்துக்கொள்ள வேண்டும். இதேபோல, சில மக்கள் பிரம்மச்சரியப் பாதையை எடுக்க வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க விருப்பத்துடன் இருக்கும் சிலர் சமுதாயத்திற்கு தேவை. மற்றவர்களின் நலனைப் பற்றிய எண்ணமே இல்லையென்றால் அந்த சமுதாயம் அழிவை நோக்கி செல்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையே இப்போது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்கள் நலனைப் பற்றி சிந்திப்பவர்கள் நம் சமுதாயத்தில் ஒரு சிலரே.

ஏவுகணையைப் போல!

அடிப்படையில், மனித இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சக்தி இயக்கம். அதனை திறந்த நிலையில் வைத்து கொண்டு உலகுடன் பரிமாறும் விதம் இருக்கலாம் அல்லது அதனை மூடிய சுற்று பாதையாக ஒருங்கிணைந்த ஒன்றாகவும் அமைத்துகொள்ள முடியும். ஏவுகணை ஒரே ஒரு திசையில் எரிவதால்தான் மேலே செல்கிறது. அனைத்து பக்கங்களிலும் எரிந்தால் அது எங்கும் செல்லாது; அல்லது எந்த திசையிலுமின்றி எங்கேயோ சென்றுவிடும்; உடைந்து போய்விடும். நாம் ஒரு பிரம்மச்சரியிடம் என்ன உருவாக்க விரும்புகிறோம் என்றால், அவர்கள் ஒரே ஒரு பக்கத்திலிருந்து மட்டும் தான் எரிவார்கள். அப்படி ஒரு திசையில் எரிவது மட்டுமே நேராக மேலே செல்லும்; இப்படி உருவாக்குவதற்கு பின் ஒரு குறிப்பிட்ட பயன் இருக்கிறது.

இந்த கருவியைப் பலவிதமான வகையில் பயன்படுத்தப்படலாம். இது உலகையே ஆன்மீக செயல்முறையில் வெடிக்க செய்யும் ஆயுதம்.

இதுபோன்ற ஒரு மூடிய சுற்றுப்பாதை இயக்கம் மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும். இந்த கருவியைப் பலவிதமான வகையில் பயன்படுத்தப்படலாம். இது உலகையே ஆன்மீக செயல்முறையில் வெடிக்க செய்யும் ஆயுதம்.

எங்கெல்லாம் உண்மையான ஞானோதயத்திற்கான செயல்முறை இருந்ததோ அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி அதனை முழுமையான ஒருங்கிணைந்த அமைப்பாக உருவாக்கினார்கள். அதனால் பிரம்மச்சரிகள் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருந்தார்கள். வெளியில் எந்தவித பரிமாற்றமும் இன்றி முழுக்க முழுக்க தானாக இயங்கும் ஒன்று இது. உலகை ஒரு குறிப்பிட்ட விதத்தில் உலுக்க; குறிப்பிட்ட சில செயல்முறைகளை உருவாக்க; குறிப்பிட்ட விஷயங்களை அணுக இந்த அமைப்புகள் தேவை. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செயற்கை கோள் அனுப்பவேண்டும் என்றால் அதற்கு ஏவுகணை வேண்டும். வளிமண்டலத்திலேயே பயணம் செய்வதென்றால் விமானமே போதுமானது. இதுதான் வித்தியாசம். சில வரம்புகளைத் தாண்டி எதையோ திட்டமிட்டு செயல்பட வேண்டுமென்றால், பிரம்மச்சாரிகள் அவசியம்.