சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! - பகுதி 3

சந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் நமக்கு போதை உண்டாகும் என்பதைக் கண்டோம். அந்த போதை நல்லதா கெட்டதா, அதனால் நம் வாழ்க்கை என்னாகும் என்பதைப் பற்றி இந்த வாரப் பதிவில் அறிவோம்...

சத்குரு:

நீங்கள் உடலில் போதுமான அளவுக்கு ஆனந்தத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றால், அப்போது நீங்கள் எப்போதும் போதையில் இருப்பீர்கள். ஆனால், விழிப்புடன் முழுதும் விழிப்புடன் இருப்பீர்கள். இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியில் செலவிடுவதற்கு பதில், என்னைக் கேட்டிருந்தால், வெளியிலிருந்து எந்த வித தூண்டுதலும் இல்லாமலேயே உங்களுக்கு போதையைக் கொடுத்திருப்பேன். வெளியிலிருந்து உள்ளே எதையும் கொடுக்காமல் சாதாரண யோகா மூலம் உங்களை முழுதும் போதையில் மூழ்கடித்து இருப்பேன். எதுவும் செய்யாமல் நீங்கள் இங்கு வெறுமனே உட்கார முடிந்தால், உங்களை முழுக்க முழுக்க போதையில், மது மயக்கத்தில் ஆழ்த்தி இருப்பேன். ஆனால் நீங்கள் முழுவதும் சுய உணர்வுடன் இருப்பீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சாரயம் தரும் போதை...

மிகவும் சிறந்த ஒரு வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கு ஒரே வழி என்னவென்றால், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் அதே சமயத்தில் விழிப்புடனும் இருப்பதுதான்.

சாராயம் மற்றும் போதை மருந்துகளை ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், அது உங்களை போதை மயக்கத்தில் (intoxication) ஆழ்த்தி உங்களுடைய விழிப்புணர்வைத் தொலைப்பது மட்டுமின்றி உடல் நலத்தைக் கெடுத்து, உங்களை அழித்துவிடுகிறது. ஒருவேளை இந்த மருந்துகள் உங்களுக்கு மது மயக்கத்தைத் தந்து, அதே நேரத்தில் உங்களை மிகுந்த விழிப்புடனும் கெட்டிக்காரத்தனமாகவும் ஆக்கி உங்கள் உடல் நலத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும் என்றால், நாம் அனைவருமே அதில் முழுதாக மூழ்கி இருப்போம்.

உங்கள் உள்ளே இருக்கும் இறைத்தன்மை என்னும் போதை மயக்கத்தைப்பற்றி தெரியாவிட்டால், விழிப்புடன் இருக்கும் மனத்தைப் பற்றி தெரியாவிட்டால், நீங்கள் வாழ்க்கையை முழுவதும் தொலைத்து விடுவீர்கள். மிகவும் சிறந்த ஒரு வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கு ஒரே வழி என்னவென்றால், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் அதே சமயத்தில் விழிப்புடனும் இருப்பதுதான். தற்போது மக்களில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், ஒருவரை தீவிரமான நிலையில் இருங்கள் என்றால், அவர்கள் இறுக்கமாகி விடுகிறார்கள். ஓய்வு நிலையில் இருங்கள் என்றால், ஒரேயடியாக தளர்ந்து போய்விடுகிறார்கள் (சிரிக்கிறார்). கட்டுப்பாடிழந்த நிலை மற்றும் இறுக்கமான நிலை இரண்டிலும் நீங்கள் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள். தீவிரமான நிலையிலும் அதே சமயத்தில் ஓய்வு நிலையிலும் இருக்க ஒரே வழி - முழுவதும் சுய உணர்வுடனும் அதே சமயத்தில் முழுக்க போதை நிலையிலும் இருப்பதுதான்.

போதையின் விளைவு?

அதாவது, நீங்களே உங்களுடைய போதைப் பொருளை உண்டாக்கி நீங்களே அதை பயன்படுத்துகிறீர்கள். அதன் விளைவாக உங்கள் உடல்நலத்திலும், நல்வாழ்விலும், மனத்தின் விழிப்புணர்விலும், புரிந்துகொள்ளும் திறமையிலும் எல்லாவற்றிலும் சிறந்த விளைவுகள் ஏற்படும். நீங்களே பந்து, மட்டை அத்துடன் பந்தைப் பிடிப்பவரும் கூட, அல்லவா? ஆம். அப்படித்தான் உங்களுடைய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அப்படித்தான் ஒவ்வொரு அணுவும் அமைந்துள்ளது. சுயமாகவே அனைத்தும் நிறைந்துள்ளது. அவ்வாறே அணுவின் ஒவ்வொரு சிறு துகளும் உள்ளது. அப்படித்தான் ஒரு தனிமனிதனும் படைக்கப்பட்டுள்ளான். அப்படித்தான் இந்த அண்டமும் உருவாக்கப் பட்டுள்ளது.

நான் முன்பே கூறியது போல, இத்தகைய பேரானந்தநிலை என்பது மட்டும் நம் குறிக்கோள் அல்ல. இந்த பேரானந்த நிலை துன்பம் பற்றிய நமது பயத்தை முற்றிலும் நீக்கிவிடும். துன்பம் என்னும் பயத்தை ஒழித்தால்தான் “எனக்கு என்ன ஆகும்” என்ற கவலை நீங்கினால்தான், வாழ்க்கை என்பதை ஆழ்ந்து பார்க்கும் தைரியம் வரும். இல்லை என்றால் வாழ்க்கையைப் பாதுகாக்கவே விரும்புவீர்கள். நீங்கள் பேரானந்த நிலையில் இல்லாவிட்டால், பாதுகாப்பு என்பதே ஒரு பெரிய கவலையாக உங்களுக்கு இருக்கும், அப்படித்தானே?

நாம் அதை நன்றாகப் பார்ப்போம். நீங்கள் ஏன் கல்வி கற்றீர்கள்? பாதுகாப்பின் பொருட்டுதான் கல்வியைத் தேடிப் போனீர்கள். வேலை என்றாலும் வியாபாரம் என்றாலும் எல்லாமே பாதுகாப்பைத் தேடித்தான். திருமணம் என்பதும் பாதுகாப்பு பற்றியது தான். அனைத்தும் பாதுகாப்பு குறித்துதான். உடல் பாதுகாப்பு, உணர்வுகள் குறித்த பாதுகாப்பு, மனநலம் குறித்த பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு இதைப்போல் எத்தனையோ பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒவ்வொன்றுமே பாதுகாப்பைப் பற்றியதுதான்.

துயரம் பற்றிய அச்சம் தொடர்ந்து அதன் வேலையைச் செய்துகொண்டிருக்கும் வரை, நீங்கள் வாழ்க்கையின் பரிமாணத்தைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க மாட்டீர்கள். ஆனால் இம்மாதிரி போதையில் மூழ்கி இருந்தால், அதே சமயம் விழிப்புடன் இருந்தால், துயரம் குறித்த அச்சமே உங்களுக்கு இருக்காது. இந்த நிலையில் நீங்கள் எங்கும் போகத் தயாராக இருப்பீர்கள். உங்களை நரகத்திற்குப் போகச் சொன்னால், அங்கும் போவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு துயரம் குறித்த அச்சமே கிடையாது. நீங்கள் அத்தகைய போதை மயக்க நிலையில் இருந்தால்தான் வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதற்கு விருப்பமாக இருப்பீர்கள்.


அடுத்த வாரம்...

அமாவாசை மற்றும் பௌர்ணமியின் முக்கியத்துவம் என்ன என்பதைக் காண்போம்...


சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! தொடரின் பிற பதிவுகள்