பாபாஜி போன்ற யோகிகள் பல்லாயிரம் வருடங்கள் வாழ்வது உண்மையா?
இமயமலையில் மஹாஅவதார் பாபாஜி போன்ற யோகிகள் ஆயிரமாண்டுகள் கடந்தும் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கூறப்படுவது வெறும் கற்பனையா? அல்லது அதற்கு சாத்தியம் உள்ளதா? சத்குருவின் பார்வை என்ன? இந்தக் கட்டுரை விடை தருகிறது.
கேள்வியாளர்: காலப்பயணம் சாத்தியம்தானா - குறிப்பாக பாபாஜி இமயமலையில் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்பதைப் போன்ற விஷயங்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, இதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வமாக உள்ளது.
பாபாஜி பற்றிய சினிமாவும் கற்பனைகளும்…
சத்குரு: நீண்டகாலத்துக்கு முன்பு, பாபாஜியைப் பற்றி ஏதோ கூறினார்கள், இப்போது எல்லோரும் அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர், அவரைப்பற்றி திரைப்படங்கள் உருவாக்கத் தொடங்கினர், அதன்பிறகு, மக்கள் அவரை எல்லா இடங்களிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்களின் அனுபவத்தில் இல்லாத எதையும் பேசுவதை நான் எப்போதும் தவிர்த்து வந்திருப்பதற்குக் காரணம், மக்களுக்குத் தங்களது கற்பனையின் மீது கட்டுப்பாடு இருப்பதில்லை; அவர்கள் கற்பனையிலேயே மூழ்கிவிடுவார்கள். மதம் என்பது தொண்ணூறு சதவிகிதம் மனப்பிரம்மையாக மாறிவிட்டது, ஏனென்றால் மக்களுக்குத் தங்கள் கற்பனையின் மீது எந்தக் கட்டுப்பாட்டும் இல்லை.
Subscribe
கௌதம புத்தர், நிர்மாணகாயர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அன்றைக்கு இருந்ததைப்போல, அவர்கள் விருப்பத்துக்கேற்ற ஒரு இளமையான உடலை மீண்டும் உருவாக்கும் திறன் கொண்ட மற்ற பலரும் இருக்கின்றனர்.
இப்போது, நான் தேவதைகளைப் பற்றி பேசத் தொடங்கினேன் என்று வைத்துக்கொள்வோம், உடனே நீங்கள் எல்லா வெண்ணிற, நீலநிற மேகங்களையும் பார்க்கிறீர்கள். எனவே, மக்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி பேசும் கணமே, எந்த ஒரு மக்கள் குழுவிலும் இருக்கும் மிகவும் முட்டாள்தனமானவர்கள், முதலில் அதைப் பார்ப்பதை நீங்கள் காணமுடியும். அவர்களுடன் அமர்ந்திருக்கும் புத்திசாலிகள், இங்கே என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று ஆச்சரியப்படுவார்கள், ஆனால் தேவதைகள், கடவுள் மற்றும் எல்லாவற்றையும் கேட்டமாத்திரத்தில், அந்தக் கணமே இந்த முட்டாள்கள் பார்ப்பார்கள்.
ஏனென்றால், அவர்களுக்குத் தங்களது கற்பனை மீது எந்த கட்டுப்பாடும் இல்லை, அது இறக்கை கட்டிப் பறக்கிறது. அதனால் உடனடியாக அவர்கள் பார்க்கத் தொடங்குகிறார்கள் - அவர்கள் பொய் சொல்லவில்லை - அவர்கள் கண்களுக்கு அது தெரிகிறது, ஏனென்றால் அவர்களுக்குத் தங்களுடைய கற்பனையின் மீது கட்டுப்பாடு இல்லை.
காலம் கடந்து வாழும் யோகிகள்
எனவே, பாபாஜியைப் பற்றி அந்த மாதிரி நான் பேச விரும்பவில்லை, ஏனென்றால் அவருடைய பெயரில் மிக அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு விஷயம் சாத்தியம்தானா? கடந்த காலத்தின் பல யோகிகள், குறிப்பிட்ட சில வழிகளில் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உடலின் சூட்சும பாகத்தைத் தக்கவைத்து, அப்படியே விட்டுச் செல்கின்றனர், அவர்கள் அவசியமாக உணரும்போதெல்லாம், தங்கள் பழைய உடலை மீண்டும் உருவாக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். இது நிர்மாணகாயம் என்று அழைக்கப்படுகிறது. தங்களுக்கான உடலை மீண்டும் உருவாக்குபவர்கள் நிர்மாணகாயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
கௌதம புத்தர், நிர்மாணகாயர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அன்றைக்கு இருந்ததைப்போல, அவர்கள் விருப்பத்துக்கேற்ற ஒரு இளமையான உடலை மீண்டும் உருவாக்கும் திறன் கொண்ட மற்ற பலரும் இருக்கின்றனர். இது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுகூட நிகழலாம். எத்தனை ஆண்டுகளானாலும் இது நிகழலாம், ஏனெனில், நிர்மாணகாயர்களுக்கு வருடங்களின் எண்ணிக்கை பிரச்சனையே அல்ல. ஒவ்வொரு உடலுக்கும் வெவ்வேறு காலம் இருக்கிறது.
மாறும் காலக் கணக்கு
உங்களது உடலுக்கு, பத்து வருடங்கள், இருபது வருடங்கள், முப்பது வருடங்கள், எழுபது வருடங்கள் என்றால் அதற்கென்று ஒரு கால அளவை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நாயை எடுத்துக்கொண்டால், உங்களுடைய ஒரு வருடம் என்பது, அவருடைய அனுபவத்தில் பதினைந்து வருடங்களாக இருக்கலாம், நீங்கள் ஒரு பூச்சியை எடுத்துக் கொண்டால், உங்களுடைய ஒரு நாள் என்பது அவருக்கு ஐம்பது வருடங்களாக இருக்கலாம், ஏனென்றால் இரண்டு நாட்களில் அவரது காலம் முடிந்துவிடும். எனவே, காலத்தின் உணர்வும், காலத்தை வாழ்க்கை அனுபவிக்கும் விதமும், மிகவும் வித்தியாசமானது. இந்த பூமிக்கிரகத்தின் வாழ்வில், நூறு வருடங்கள் என்பது ஒரே ஒரு நொடியாக இருக்கலாம், அந்தக் கணக்கீடு நமக்குத் தெரியாது, ஆனால் அது மிகக் குறுகியதாகவே இருக்கிறது.
எனவே, இது மனிதக் கண்ணோட்டத்திலிருந்து மட்டும் அல்ல. ஒவ்வொன்றையும் நம் வாழ்நாளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைக் குறித்தது அல்ல. அந்தக் குறிப்பிட்ட உயிரினத்தின் வாழ்வியல் கண்ணோட்டத்தில் கூட, நாம் கணக்கிடுவது போல ஒரே விதமாக இல்லை. ஆனால் காலத்தை உணர்தல், அதனதன் கண்ணோட்டத்தில் வித்தியாசமாக இருக்கக்கூடும். எனவே, நீங்கள் உடல்தன்மை மற்றும் தர்க்கரீதியான மனதின் எல்லைகளைக் கடந்துவிட்டாலே, காலம் ஒரு பிரச்சனையல்ல. உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட நிலையிலான அனுபவத்தை நீங்கள் அடைந்துவிட்டால், அசைவற்று அமர்ந்துவிடுகிறீர்கள். நீங்கள் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தால்கூட, ஒரு நிமிடம் போல் உணர்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.
காலம் எப்போதும் மற்றொன்றுடன் தொடர்புடைய ஒரு அனுபவமாகவே இருந்து வருகிறது. உங்கள் வாழ்க்கையிலும், சாதாரண வாழ்வியல் அனுபவத்திலும்கூட, ஒரு குறிப்பிட்ட நாளில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, இருபத்தி நான்கு மணிநேரமும் நொடிப்பொழுதில் கடந்துவிடுகிறது. வேறொரு நாள் நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்பொழுது, இருபத்தி நான்கு மணிநேரத்தை ஒரு வருடம் போல் உணர்கிறீர்கள். எனவே, காலம் எப்போதும் ஒரு தொடர்புடைய அனுபவமாகவே இருக்கிறது.
உங்கள் சக்திநிலை மேன்மேலும் தீவிரமடையும்போது, காலம் அதிவேகமாகப் பறப்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருந்தால், இருபத்தி நான்கு மணிநேரத்தை, ஒரு நிமிடம் போல் உணர்கிறீர்கள். உங்களுக்குள் நீங்கள் தீவிரமாக வாழும் காரணத்தால், ஒரு வருடம் என்பது, ஒரு நொடி போல் பறந்துவிடுகிறது. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதே உங்களுக்குத் தெரிவதில்லை. நீங்கள் தீவிரமாக வாழும் காரணத்தால், நீங்கள் திரும்பிப் பார்ப்பதற்கு முன், ஆண்டுகள் கடந்துவிடுகிறது.
உங்கள் அனுபவத்தில் நீங்கள் மேலும் மேலும் தீவிரமடையும்போது, காலம் வேகமாக செல்வதைக் காண்பீர்கள். எனவே, நீங்கள் உங்கள் உடலை விட்டு - இந்த கிரகத்திலிருந்து நீங்கள் சேகரித்த மண்தன்மையாகிய உடலைவிட்டு - நீங்கிவிட்டீர்கள் என்றால், சட்டென்று இப்போது காலம் ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு என்று நீங்கள் நினைப்பது எதுவோ, அது ஒரு கணத்திற்குப் பிறகு இருக்கிறது. எனவே, ஒரு கணம் கழித்து அவர் திரும்பி வந்திருக்கலாம், ஆனால் அவர் ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவரது அனுபவத்தில், அவர் அப்படியே வட்டமடித்துத் திரும்பி வந்தார். ஆனால் உங்கள் அனுபவத்தில், அது ஐநூறு ஆண்டுகள் கழிந்ததுபோல் இருக்கிறது.
எனவே, நான் அதைப் பற்றி எந்த அளவு அதிகமாகப் பேசுகிறேனோ, அந்த அளவு அது முட்டாள்தனமாக மாறும், ஏனென்றால் அதில் தர்க்கரீதியாகப் பேச முடியாத ஒரு கட்டம் உள்ளது. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் தெளிவற்ற தர்க்கம் (Fuzzy logic) பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. தெளிவற்ற தர்க்கம் என்றால் தர்க்கம் இல்லை என்பது பொருள். ஆனால் அவர்கள் தர்க்கமற்றவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. தர்க்கமற்றவராக இருப்பது ஒரு விஞ்ஞானிக்கு அவமானகரமானது, ஆகவே அவர்கள் புதிய சொற்களைக் கண்டுபிடித்து, அதை தெளிவற்ற தர்க்கம் என்று கூறுகிறார்கள். தெளிவில்லாமல் இருந்தால், அது தர்க்கம் கிடையாது.