Question: சத்குரு, உடலளவில் முழுமையான ஆரோக்கியநிலை இல்லாதவர்களும் உடல்தாண்டி உச்சநிலை அடைய வாய்ப்பு உள்ளதா?

சத்குரு:

ஆரோக்கியம் இல்லாதவர்கள் மிகவும் சுலபமாக உடல் தாண்டி விடுவார்கள். ஆரோக்கியம் இருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். (சிரிக்கிறார்) நான் ஆரோக்கியம் அற்றவர்களைக் குறித்து கேலி செய்யவில்லை. உடல் தாண்டுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தமே கிடையாது. ஆரோக்கியமாக இருக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு இந்த உணர்வு வராது. ஆரோக்கியம் இல்லாத காரணத்தினால்தானே நிறைய பேர் யோகாவிற்கே வந்திருக்கிறீர்கள்? இல்லையா? ஏதோ உடல் பிரச்சனையினால்தான் யோகா செய்யலாமென்ற எண்ணமே வந்துள்ளது. ஆரோக்கியம் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒருநாள் உடல் தாண்டிவிடுவீர்கள், இல்லையா? எப்பொழுது என்று உங்களுக்குத் தெரியுமா? நாளையே உடல் தாண்டி சென்று விடுவீர்களோ என்னவோ?

கௌதம புத்தர் என்ன பார்த்தார்? ஒரு ஆரோக்கியமில்லாத மனிதன், ஒரு வயோதிக மனிதன், ஒரு உயிரற்ற சவம். இந்த மூன்றும் பார்த்தார். இது, தானும் இதேபோன்று ஆரோக்கியமற்ற நிலையையும், வயோதிகப் பருவத்தையும், மரணத்தையும் சந்திக்க நேரிடலாம் என்று சிந்திக்க வைத்தது.

போக வேண்டுமென்ற ஆர்வம் இல்லை. ஆனாலும் கணித்துக் கூற முடியாது, அப்படித்தானே? உங்களில் யாருக்காவது உத்தரவாதம் இருக்கின்றதா? இல்லை. இந்த உயிர் என்பது மிகவும் சூட்சுமமானது. உங்களுடைய மூச்சின் போக்கைச் சற்று கவனித்துப் பாருங்கள். காற்று உள்ளே போகிறது, வெளியே வருகிறது, உள்ளே போகிறது, வெளியே வருகிறது. வெளியே வந்த காற்று மறுபடி உள்ளே போகவில்லையென்றால்....? அவ்வளவுதான், இல்லையா? எவ்வளவு சூட்சுமமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்! அதே நேரத்தில் மிகவும் உறுதியாகவும் இருக்கிறது. மனிதன் எதையும் செய்யக்கூடிய அளவிற்கு மிகவும் உறுதியாகவும் இருக்கிறது.

திருக்கயிலாயம் என்பது, கடல் மட்டத்திலிருந்து பதினேழாயிரம் அடி உயரத்தில் இருக்கின்றது. அங்கே சென்றுவிட்டால், நடக்காமல் வெறுமனே அமர்ந்திருந்தால் கூட மூச்சானது மிகவும் சிரமத்துடன்தான் உடலின் உள்ளே சென்று வரவேண்டும். மிகவும் முடியாத நிலையில் கருவி (oxygen cylinder) மூலம் பிராணவாயு எடுக்க வேண்டும். உயிர் எங்கே இருக்கிறது என்பதே புரியாது. வாயில் ஒரு சிறிய இழையில் ஒட்டிக் கொண்டிருக்கும். சிறிது இழை பிசகினாலும் அவ்வளவுதான், உயிர் போய்விடும். சாதாரணமாக, ஒரு வருடத்தில் 35,000-லிருந்து 40,000 மக்கள் கயிலாயமலை செல்கின்றனர். அவர்களில் குறைந்தபட்சம் 40, 50 பேராவது இறந்துவிடுவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் ஒவ்வொரு முறையும் 200, 300 பேரை அங்கு அழைத்துச் செல்கிறோம். ஆனால் நம் தியான அன்பர்கள் யோகா செய்வதால் அவ்வளவு சுலபமாக உயிரை விடமாட்டார்கள். உயிர் மீது ஆசை இல்லையென்று கூறிக்கொண்டாலும் அவ்வளவு சுலபமாக உயிரை விடமாட்டார்கள். (அனைவரும் சிரித்து கை தட்டுகின்றனர்) அந்த அளவு உயரத்தில் இருக்கும்போது உயிர் ஒன்றும் உறுதியானதல்ல என்பதை உணர முடியும். எப்பொழுதுமே மூச்சு இந்த வாயின் நுனியில் இருந்தாலும் மிகவும் சூட்சுமமாகவே இருக்கின்றது. அதேநேரத்தில் மிகவும் உறுதியாகவும் தோன்றுகிறது.

இந்த உயிர் நீண்டகாலமாக நம்முடனேயே இருப்பது போல இருக்கின்றது. ஆனால் நாளைக்கு காலையில் ‘பொசுக்’கென்று போனாலும் போய்விடும். ஒருவிதத்தில் பார்த்தால் வாழ்க்கை மிகவும் குறுகியது. என்னவென்று புரிவதற்குள் முடிந்து போய்விடும். இன்னொரு வகையில் பார்த்தால் வாழ்க்கை சூட்சுமமானது. அதேநேரத்தில் மிகவும் உறுதியானது. எல்லை இல்லாதது. நாம் எந்த அளவுக்கு வாழ்க்கையை கிரகித்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நம் வாழ்க்கை நடக்கிறது.

ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும்போது இந்த உடல் தரும் பிரச்சனையினால் இதைத் தாண்டி என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவல் அதிகமாகும், அப்படித்தானே? கௌதம புத்தர் என்ன பார்த்தார்? ஒரு ஆரோக்கியமில்லாத மனிதன், ஒரு வயோதிக மனிதன், ஒரு உயிரற்ற சவம். இந்த மூன்றும் பார்த்தார். இது, தானும் இதேபோன்று ஆரோக்கியமற்ற நிலையையும், வயோதிகப் பருவத்தையும், மரணத்தையும் சந்திக்க நேரிடலாம் என்று சிந்திக்க வைத்தது. தன்னுடைய வாழ்வின் போக்கும் இந்த வழியில்தான் இருக்கும் என்று புரிந்ததும், இதனைத் தாண்டி என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் பொதுவாக சாதாரண மனிதருக்கு ஆரோக்கியம் சிறிது இழக்கும் நிலையில்தான் ஆர்வம் வரக்கூடும். அதற்குப் பிறகு தான் இந்த உடல் தாண்டி என்ன இருக்குமென்று அறியக்கூடிய நோக்கம் வரும்.

உங்களுடைய உயிர் என்ன சொல்கிறது என்று உங்களுக்குப் புரியவில்லை. உயிரில் இரண்டு விஷயங்கள் பொதிந்துள்ளன. ஒன்று பிழைப்பு. அதாவது ஒவ்வொரு உயிருக்கும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. உதாரணமாக ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால், நாம் அதைப் பிடிக்க முயலும்போது பிடிபடாமல் தப்பிக்க என்னென்ன வழியில் செல்ல வேண்டுமோ, அதையெல்லாம் அது செய்கிறது. தான் ஒரு அற்ப எறும்பு உயிர்தானே என்று தப்பிக்க முயலாமல் இருக்கிறதா? தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு உயிருக்கும் ஒரு அடிப்படையான உணர்வு.

ஆனால், அந்த எறும்புக்குள்ளே இல்லாத ஒரு உணர்வு உங்களுக்குள்ளே இருக்கிறது. விரிவடைய வேண்டும் என்ற உணர்வு. எங்கே இருந்தாலும் சரி, இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர வேண்டுமென்ற ஆசை உங்களுக்குள் இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் தான் இருக்கும் தன்மை போதவில்லை, இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசை, இருக்கிறதா? இல்லையா? உலகத்தையே உங்களின் கரங்களில் வைத்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டுமென்று ஆசை எழுகிறது.

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று நான் கூறியதைக் குறித்து பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். “இது எப்படிப்பட்ட ஆன்மீகம்?” என்று கேட்டனர். “நான் ஏதும் கூறமாட்டேன். நீங்கள் ஆசையை விட்டுவிடுங்கள் பார்க்கலாம்” என்றேன். “உங்களால் ஆசையை விட முடியுமா? அதுவே ஒரு பெரிய ஆசைதான்” என்றேன். “இல்லையில்லை. எனக்கு வீடு, பொருள் என்று எந்த ஆசையும் இல்லை. ஆனால் கடவுள் ஆசை மட்டும்தான்” என்றார்கள். இதைப் பேராசையாகத்தான் என்னால் பார்க்க முடியும். படைத்தவனுக்கே ஆசைப்படுவது பேராசைதானே? ஆன்மீகம் என்பது பேராசை. ஏனென்றால் சிறிய விஷயங்களுக்கெல்லாம் ஆசைப்பட்டு தேடி அடைந்தாலும் ஆசை முற்றுப் பெறவில்லை. தவணை, தவணையாக வாழ்நாள் முழுக்கத் தேடிச் சென்றடைந்தாலும் நம் ஆசைகள் தீருவதற்கு காலம் போதாது. இது மிகவும் குறுகிய வாழ்க்கையாக உள்ளது. ஆகவே ஒரே தவணையில் அத்தனைக்கும் ஆசைப்பட்டு விடுவோமா? நாம் ஒவ்வொன்றாக ஆசைப்பட்டு படிப்படியாகச் சென்று கொண்டிருந்தால் எப்பொழுது முடிப்பது? பிரபஞ்சமே நம்முடையது என்று நாம் செய்து கொள்ளலாமா?

நீங்கள் இப்பொழுது இவர் என் மனைவி, இவர் என் கணவர், இவர் என் குழந்தை, இது என் வீடு என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கின்றீர்களே, இவையெல்லாம் எங்கே இருக்கின்றன? கருத்து வடிவில், உங்களுடைய மனதில்தான் இருக்கின்றன. மற்றவர்களும் உங்களை அப்படி நினைக்கிறார்களா, இல்லையா என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அவ்விதமாக நினைப்பதனால் உங்களுக்கு சுகமாக இருக்கிறது. அவரும் அப்படியே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவருக்கும் அது சுகமாக இருக்கும், அவ்வளவுதானே? உங்களின் மனைவி, கணவர், வீடு, எல்லாம் எங்கோ கண்காணாத தேசத்தில் இருந்தாலும் என் மனைவி, என் கணவர், என் குழந்தை, என் வீடு என்று நினைத்தால் உங்களுக்குச் சுகமாகத்தான் இருக்கிறது. அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களோ? போய்விட்டார்களோ? ஆனால் நீங்கள் அவர்களை நினைத்தால் உங்களுக்கு சுகமாக இருக்கிறது, அப்படித்தானே? அதனால் ஒரு மனிதரை இவர் என்னுடையவர் என்றும், ஏதோ ஒரு பொருளை இது என்னுடையது என்றும் சொந்தம் கொண்டாடி சுகம் அடைவதற்கு நமக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. சுகம் என்பது நம்முடைய உணர்வில்தான் உள்ளது. இப்படியிருக்கையில் இந்த பிரபஞ்சமே நமது என்றும் உணர்ந்துவிடலாமே? இது நம்முடைய உணர்வில்தானே இருக்கின்றது.

ஆகவே, இந்த உடல் தாண்டிப் போவது என்றால் உடலை விட்டுப்போவது அல்ல. உடலுடைய வளையத்தில் சிக்கிக்கொள்ளும் ஆசை நமக்கு இல்லை, அவ்வளவுதான். இந்த உடலின் கட்டுப்பாட்டிலேயே சிக்கிப் போய்விடக் கூடாது என்று மட்டும்தான் நமக்கு ஆசை. உடல் தாண்டிய ஒரு உணர்வு நமக்கு இருக்க வேண்டுமென்று மிக, மிக ஆசை.

இப்பொழுது ஆரோக்கியம் என்பதும், ஆரோக்கியமின்மை என்பதும், இரண்டுமே உடல் கட்டுப்பாடு தொடர்புடையதுதான். இன்பமாக இருப்பதும், இன்பமின்றி இருப்பதும் இரண்டுமே உடலின் கட்டுப்பாடுதான். இப்பொழுது வயிற்றில் பசி வந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். பசியாக இருக்கும் ஒரு உடலுடைய நோக்கம் என்னவாக இருக்குமென்றால், எது கிடைத்தாலும் எடுத்து சாப்பிட்டு விடவேண்டும் என்பதுதான். இப்பொழுது நீங்கள் மனிதனாக இருப்பதனால் பசி இருந்தாலும் ஒருவிதமாக அமைதியாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு குரங்காக இருந்து, பசியோடு இருப்பீர்களேயானால் இந்த நிமிடம் ஏதோ ஒரு பூச்சி உங்கள் கண்ணில் பட்டால் உடனே எடுத்து வாயில் போட்டுவிடுவீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது ஒரு மனிதனாக இருப்பதனால் பசியாகவே இருந்தாலும் அதைத் தாண்டி அமர்ந்திருக்கக்கூடிய ஒரு மனநிலை இருக்கின்றது. ஒரு வகையில் சிறிது உடல் தாண்டித்தான் இருக்கிறீர்கள்.

இப்போது உங்களுக்கு இயற்கை உடல் உபாதைகளும் இருக்கலாம். ஆனாலும் கூட்டத்தில் 3 மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறீர்கள். இதுவே கூட சிறிது உடல் தாண்டி அமர்ந்திருப்பது போலத்தான். ஆனால் இந்த நிலையிலேயே மேலும் கூடுதலாக இரண்டு மணி நேரம் அமரும் நிலை ஏற்பட்டால் அலறிவிடுவீர்கள், அப்படித்தானே? என்னைப் பொறுத்தவரை இரவு முழுவதும் இங்கேயே ஒரு அங்குலம் கூட நகராமல் அமர வேண்டியிருந்தாலும் என்னால் உட்கார முடியும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதருக்கும் உடல் தாண்டக்கூடிய தன்மையானது பல நிலைகளில் இருக்கிறது.

அதிகமாக உடல் தாண்டிச் செல்ல வேண்டுமென்றால், உடலை மேன்மேலும் வருத்த வேண்டுமா? அப்படியில்லை. இந்த உடல் தாண்டி எப்பொழுது நமது அனுபவத்தில் ஏதோ ஒன்று இருக்கிறதோ, அப்பொழுது நமக்கு உடலின் கட்டுப்பாடுகள் குறைந்து போய்விடும். அப்படியென்றால் சாப்பிடக்கூடாது, இயற்கை உபாதைகளுக்கு செவி சாய்க்கக்கூடாது என்பதல்ல. அதற்கான அவசியம் ஏற்படும்போது நாம் அவற்றை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு அடிமையாகக் கூடாது. அவ்வளவுதான். எந்தப் பழக்கமும், தேவையும் நம்மை அடிமையாக்கக் கூடாது.

ஆகவே உடல் தாண்டி இருப்பது, உடல் தாண்டி செயல்படுவது என்றால் உடலை விட்டுப் போவது என்ற பொருளல்ல. நம்முடைய கவனத்தை நாம் உள்நோக்கி வைத்திருந்தால் அப்போது உடல் தாண்டி இன்னொரு சக்தி நிகழ்கிறது. அந்த சக்தியுடன் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டால் நாம் எப்பொழுதுமே உடல் தாண்டித்தான் இருக்கிறோம். உடலை விட்டுப்போகாத நிலையிலேயே உடல் தாண்டி இன்னொரு தன்மை நமக்குள்ளே நிகழ்கிறது. அதனால் அதன் பிறகு உடல் ஒரு பெரிய கட்டுப்பாடாக நமக்குத் தெரிவதில்லை. ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமாக இல்லையென்றாலும் உயிருடன் இருப்பவர்கள் அனைவருமே நிச்சயமாக தங்களுக்கு இதை நிகழ்த்திக் கொள்ளமுடியும்.