ஆன்மீகம் என்றாலே, பல இடங்களில் உடலின் சக்கரங்களை சக்தியூட்டுவது, சக்கரங்களை சுத்தப்படுத்துதல்(chakra cleaning) போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் நம்மை ஈர்த்த வண்ணம் உள்ளன. உண்மையில் இந்த 7 சக்கரங்கள் என்னென்ன? அதைப் பற்றி ஒரு தகவல் இங்கே...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்வின் ஏழு பரிமாணங்கள் அல்லது வாழ்வை உணரும் ஏழு பரிமாணங்களை குறிக்கும் வகையில் உடலுக்குள், ஏழு அடிப்படையான மையங்கள் இருக்கின்றன.

இந்த ஏழு சக்கரங்கள்:

  • மூலாதாரம் - ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது;
  • ஸ்வாதிஷ்டானம் - பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது;
  • மணிபூரகம் - தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது;
  • அனாஹதம் - விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது;
  • விஷுத்தி - தொண்டை குழியில்;
  • ஆக்னா - புருவ மத்தியில்;
  • சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் - உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது.

1

சக்கரங்களின் குணங்கள்:

  • உங்கள் சக்தி மூலாதாரத்தில் ஓங்கி இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உணவும், தூக்கமும்தான் பிரதானமாக இருக்கும்.
  • உங்கள் சக்தி ஸ்வாதிஷ்டானத்தில் ஓங்கி இருந்தால், இன்பங்களை பின்தொடர்ந்தே தான் உங்கள் வாழ்க்கை இருக்கும் (அ) உடல் அளவிலான பல வகையான இன்பங்கள் உங்களை ஆக்கிரமிக்கும்.
  • உங்கள் சக்தி மணிபூரகத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் செயல்வீரராக இருப்பீர்கள்; உலகத்தில் பல செயல்கள் செய்ய முனைவீர்கள்.
  • உங்கள் சக்தி அனாஹதத்தில் ஓங்கி இருந்தால், நீங்கள் ஒரு படைப்பாளியாக இருப்பீர்கள்.
  • உங்கள் சக்தி விஷுத்தியில் ஓங்கி இருந்தால், நீங்கள் சக்திமிக்கவராக இருப்பீர்கள்.
  • உங்கள் சக்தி ஆக்னாவில் ஓங்கி இருந்தால், அல்லது நீங்கள் ஆக்னாவை அடைந்துவிட்டால், புத்தி அளவில் நீங்கள் உணர்ந்துவிட்டவர் ஆவீர்கள். இந்த நிலை உங்களுக்கு அமைதியைத் தரும். அனுபவத்தில் உணரவில்லை என்றாலும் புத்தியில் முழுமையான புரிதல் ஏற்பட்டிருப்பதால், உங்களுக்குள் அமைதியும், நிதானமும் ஏற்படும். வெளியுலகத்தில் என்ன நடந்தாலும் அது உங்களை எவ்வகையிலும் பாதிக்காது.

இதை சற்றே கவனித்தால், இது நாம் வாழ்வை வாழும் தீவிரத்தின் ஏழு நிலைகள். உண்பதையும், உறங்குவதையும் வாழ்க்கையாகக் கொண்டவரை விட இன்பத்தை நாடுபவருடைய வாழ்க்கை சற்று அதிகமான தீவிரத்துடன் நடக்கிறதா, இல்லையா? இந்த உலகத்தில் ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று வேலையில் இறங்குபவரின் வாழ்க்கை இன்பமே பிரதானமாய் இருப்பவரை விட அதிக தீவிரத்துடன் இருக்கும். ஒரு கலைஞரோ அல்லது படைப்பாளியோ, இம்மூவரையும் விட அதிக தீவிரத்துடன் இருப்பார்.

நீங்கள் விஷுத்திக்கு நகர்ந்து விட்டால், அது தீவிரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணம்; ஆக்னாவுக்கு நகரும்போது, அது இன்னும் அதிகமாகும். சஹஸ்ராரத்தை எட்டிடும்போது, விவரிக்க முடியாத பேரானந்தத்தில் திளைத்திடுவீர்கள். உங்கள் சக்தி சஹஸ்ராரத்தை அடையும்போது, பித்துப் பிடித்தாற் போன்ற பேரானந்தமே உங்கள் நிலையாகும். வெளியிலிருந்து எவ்வித தூண்டுதலும் இல்லை, எந்தக் காரணமும் இல்லை, என்றாலும் உங்கள் சக்தி ஒரு உச்சத்தை அடைந்துவிட்டதால் பேரானந்தக் களிப்பில் திளைப்பீர்கள்.

உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான். கோபம், துயரம், அமைதி, ஆனந்தம், பேரானந்தம் என அனைத்தும் ஒரே சக்தியின் வெவ்வேறு நிலையிலான வெளிப்பாடு. அதனால் இந்த சக்கரங்கள் என்பது ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இருக்கும் ஏழு பரிமாணங்கள்.