கேள்வி: “ஓர் ஆணுக்குப் பெண்ணிடத்திலும், பெண்ணுக்கு ஆணிடத்திலும் வரும் ஈர்ப்பு நல்லதா, கெட்டதா? நல்லது எனில் எந்தவிதத்தில்? கெட்டது என்றால், ஏன்?”

சத்குரு: மேற்கில் ஆண் பெண் உறவுகளைச் சுதந்திரமாக வைத்துக்கொண்டால், வாழ்க்கை சுதந்திரமாக அமையும் என்று கணக்கு போட்டார்கள். இளம் வயதில் அது பிரமாதமாக வேலை செய்தது. ஆனால் வயது ஏற ஏற போதிய பாதுகாப்பு இல்லையோ என்ற உணர்வு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

பந்தம் இல்லை, குடும்பம் இல்லை, உறவில் எந்த உறுதியும் இல்லையென்றாகிப் போனதால், ஒரு தலைமுறையே அநாதைகளாக வளர்ந்து நிற்கும் அவலம் அங்கே காணப்படுகிறது. சமூகத்தில் பெரும்பகுதியே மனரீதியாகப் பின்னமாகிவிட்டது.
பொறுப்பு ஏற்காமல் விளையாட்டுத்தனமாக எதில் ஈடுபட்டாலும், விளைவு இப்படித்தான் இருக்கும்.

இளமைக் காலத்தில் உங்கள் சுகங்களில் பெரும் பகுதியைத் தீர்மானிக்கும் இதே உடல் வெகுகாலம் அதே நிலையில் தங்காது. இனக்கவர்ச்சி, இளமையில் முக்கியமானதோ, இல்லையோ, இளமைப் பருவத்தில் மற்றவற்றைவிட அது முன்னிலையில் பிரதானமாய் இருப்பதை மறுக்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது. அதை நல்லது என்றோ கெட்டது என்றோ ஏன் முத்திரை குத்த வேண்டும்? அதில் சுகம் என்று முழுவதுமாக ஆழ்ந்து போனாலும், சிக்கிக் கொள்வீர்கள். தப்பு என்று தவிர்க்கப் பார்த்தாலும் அதனுடன் ஒட்டிக் கொண்டு விடுவீர்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான அளவோடு அதை நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதைக் கடந்து போக முடிந்தால் அற்புதம்!

 

கேள்வி: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?

சத்குரு: நீங்கள் கேட்பதைப் பார்த்தால், அது இறந்த காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போலிருக்கிறதே? உண்மையில், நிகழ்காலத்தில் கடவுளை அனுதினமும் ஒவ்வொரு கணத்திலும் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கடவுளைத் தவிர வேறு எதையும் எங்கேயும் காணவில்லை.

எப்படி என்கிறீர்களா? கடவுள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? உங்களைச் சுற்றி படைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது? எங்கெல்லாம் படைப்பு நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தானே?
அதாவது அதோ அந்த மரத்தில், இந்தப் பூவில் உங்களில், என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத் தவிர வேறு எதை நீங்கள் காண முடியும்?

ஒரு படைப்பை அணுகும்போது, கவனம் பலவிதங்களில் அமையலாம். உங்கள் உடலைப் பற்றி தெரிந்து கொள்ள விழிகளால் கவனிக்கலாம். உங்கள் மனதைப் புரிந்து கொள்ள உங்களுடன் சிறிது நேரம் பேச்சு கொடுத்துக் கவனிக்கலாம். அல்லது உங்களுள் அடிப்படையான இயங்கும் உயிர்ச் சக்தியைக் கவனிக்கலாம்.

காலையில் நீங்கள் சாப்பிட்ட சிற்றுண்டி மாலைக்குள் உங்கள் உடலின் ஒரு பகுதியாக மாறுகிறதே, இந்த அற்புதத்தை யார் நிகழ்த்துவது? உங்களைப் படைத்தவர்தானே? அதை அவர் வெளியில் இருந்து கொண்டா செய்கிறார்? உங்களுக்குள் இருந்து கொண்டு அல்லவா செய்கிறார்? அப்படியானால், கடவுள் உங்களுள் இருக்கிறார் அல்லவா?

ஒவ்வொரு படைப்பிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான் என்று புரிந்து கொண்டால், கடவுளைப் பார்க்கத் தனியாக எந்தப் பயணமும் மேற்கொள்ளத் தேவை இல்லையே?

கடவுளை நான் பார்க்கிறேன். தினம் தினம் கணத்துக்குக் கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காண்கிறேன், கண்டு கொண்டே இருக்கிறேன்.