தோராயமாக 35 ஆண்டுகளாக நான் தொடர்ந்து ஊர் ஊராக பயணித்தபடி இருக்கிறேன். என் பயணங்களை நான் குறைக்க விரும்புகிறேன், ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நம்மிடம் மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு அதிகரிக்கும் விதத்தை பார்த்தால், நீங்கள் அனைவரும் என்னை உழைத்து உழைத்தே உயிர் பிரியச் செய்துவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. நான் குறைபட்டுக் கொள்ளவில்லை. நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது, நம் நிகழ்ச்சியின் மொத்த அனுபவமும் பங்கேற்பாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இது பெரும்பாலும் நம் தன்னார்வத் தொண்டர்களால்தான். நான் போகும் இடமெல்லாம் நம் தன்னார்வத் தொண்டர்கள் அற்புதமானவர்கள் என்று மக்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

மனித புத்திசாலித்தனம் முன்பு எப்போதும் இல்லாத அளவு மலர்ந்து வருகிறது. பூமியில் இவ்வளவு பேரால் முன்பு எப்போதும் தங்களுக்குத் தாங்களே சிந்திக்க முடிந்ததில்லை. அடுத்த சில ஆண்டுகளில், மிகப் பெரியதொரு மாற்றத்தை நீங்கள் கவனிப்பீர்கள். நெடுங்காலமாக மக்கள் நம்பியிருந்த அபத்தங்கள் எதுவாயினும் அவை இனி விற்காது. ஆன்மீக செயல்முறையை பெரிய அளவில் மனிதகுலத்திற்கு பரிமாறவேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் மத நம்பிக்கைகளும் சொர்க்கத்திற்கு செல்லும் உத்தரவாதங்களும் மறையும்போது, மதுவும் போதைப்பொருளும் தலைதூக்கும். ஒன்று, உலகம் முழுவதும் குடிகாரர்களாகவும், போதைப்பொருளுக்கு அடிமைகளாகவும் மாறும். அல்லது தியானித்து இருக்கும் அற்புதமான மனிதர்களாக மலர நம்மால் மக்களை வழிநடத்த முடியும். இதுவே நம் கைகளில் இப்போது இருக்கும் பொறுப்பு. உங்களில் இந்த உணர்வு கொண்டவர்கள் அனைவருமே இதற்காக எழுந்து நின்று ஏதோவொன்றைச் செய்யவேண்டும்.

 

அன்பும் அருளும்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.