சத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள் பங்களித்திருக்கிறார்கள். தன்னலன் பற்றி சற்றும் யோசிக்காத அழகான மனிதர்கள் அவர்கள். அவர்களுக்குத் தர என்னிடம் என்ன இருக்கிறது? உருகவைக்கும் வார்த்தைகள் என் அகராதியில் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை... ஏனெனில் எவ்வழியில் எல்லாம் முடியுமோ, அவ்வழியில் எல்லாம் அவர்களை என்னில் ஒரு பாகமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். அதைவிட சிறந்தது... எனக்குத் தெரிந்து வேறொன்றுமில்லை. இவர்களைத் தவிர வேறுசில சக்திகளையும் இப்பணியில் நாம் ஈடுபடுத்திக் கொண்டோம். அந்த உயிர்களுக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பிரகாசம் நிறைந்தவை, விகாரமானவை, என வித்தியாசமின்றி அனைவரையும் பயன்படுத்திக் கொண்டோம். முயற்சிகள் விரயமாகாமல் நம் செயல்கள் நன்னிலையில் நடப்பதற்கும், நம் வாழ்க்கை சாதகமாக நிகழ்வதற்கும் வழிசெய்த அந்த உயிர்கள் எல்லோருக்கும் என் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்

எல்லா விதமான உயிர்கள்... பூதங்கள், துஷ்ட தேவதைகள், யோகிகள், உடலற்ற ஆன்மாக்கள், தெய்வங்கள், என எல்லா சக்திகளையும் கடத்திவந்தேன்.

இவ்வுலகில் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டு, மனித திறமைக்கு அப்பாற்பட்டு, பல சக்திகள் இருக்கின்றன. அவற்றை மென்மையாகக் கையாளவேண்டும். மாதக்கணக்காக பலவித ஹோமங்கள், பூஜைகள், நிவேதனங்கள், பலி என செய்து அந்த சக்திகளை வேண்டி அழைத்து, அவர்களிடம் ஆசி பெற மக்கள் முயல்கிறார்கள். ஆனால் நானோ அவர்களைக் கடத்தி வந்தேன். 'அவர்கள்' என்றால், எல்லா விதமான உயிர்கள்... பூதங்கள், துஷ்ட தேவதைகள், யோகிகள், உடலற்ற ஆன்மாக்கள், தெய்வங்கள், என எல்லா சக்திகளையும் கடத்திவந்தேன். அவர்களை வேண்டிவிரும்பி, அவர்கள் தானாக மணமும்வந்து வருவதற்கு நான் முயலவுமில்லை, காத்திருக்கவுமில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துவந்தேன். வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்தால் அவர்கள் அமைதியாக வந்துவிடமாட்டார்கள். அதற்குக் கடுமையான பின்விளைவுகள் உண்டு.

என் சக்தியை இப்படிப் பயன்படுத்தினால், அது என் உடலை அழித்துவிடும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அச்சமயத்தில் என் உடலைப் பாதுகாத்து அதிகநாள் வாழவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கிருக்கவில்லை. தியானலிங்கம் முடிந்தபின் எனக்கிங்கு வேலையில்லை என்றே நினைத்திருந்தேன். அதனால் தியானலிங்கம் உருவாகத் தேவையான செயல்களை மட்டுமே நான் செய்தேன்... அது என் உடலிற்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும். எப்படியும் இதுதான் 'என் பயணத்தின்' கடைசிக்கட்டம் என்பதால், அவர்களால் வேறெப்போதும் என்னைப் பிடித்து என் செயல்களுக்கான வினையாய் என்னைச் சித்திரவதை செய்யமுடியாதே! இப்படிப் பல சக்திகள் ஒன்றிணைந்ததால் தியானலிங்கப் பிரதிஷ்டை சாத்தியமாயிற்று. அவர் (என் குரு)... தியானலிங்கத்தை நான் செய்வேனா? மாட்டேனா? என்று என்னைக் கேட்கவில்லை. அதை நான் செய்துதான் ஆகவேண்டும் என்று அவரே முன்முடிவு எடுத்துவிட்டார். என் குருவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற என் உறுதியான முடிவு, வேறெந்த கட்டுப்பாடுகள், நெறிகள், பாதுகாப்பை விடவும் எனக்கு மிக முக்கியமானது. அந்த ஒன்றின் முன் வேறெதுவுமே பொருட்டல்ல... ஏனெனில் என் குருவிற்கு முன், என் வாழ்வும்கூட தூசுதான்.

தியானலிங்கம் உருவாகத் தேவையான செயல்களை மட்டுமே நான் செய்தேன்... அது என் உடலிற்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும்.

சாஸ்திரங்களின் அளவுகோளில் நான் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தாலும், தேவர்கள், தெய்வங்கள் போன்ற சக்திகள் என்மீது நிறைவான சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் கடவுள் என்பதற்கு 'தேவா' என்பார்கள். ‘தேவா’ என்றால் ‘பிரகாசமான உயிர்’ என்று அர்த்தம். இங்கு பல பிரகாசமான உயிர்கள் இருக்கிறார்கள். தற்சமயத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள். "ஒன்று, இவர்களின் அசீர்வாதம் மனிதயினத்தை காத்துக் கரைசேர்க்கும், அல்லது இவர்களின் சாபம் மனிதயினத்தை முற்றிலுமாய் அழித்துவிடும்" என்று சிவனவனே கூறியிருக்கிறார். ஆக, தேவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே இது இருக்கிறது. என் மீது அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்டுணர முடிகிறது.