தியானலிங்கம்
தியானலிங்க பிரதிஷ்டையின்அறிவியலை சத்குரு விளக்குகிறார்!
தியானலிங்கம்
சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு நிலையில் பிரபலித்துள்ளது. படைப்பு என்பது ஒரே சக்திதான், மிக ஸ்தூலமான நிலையிருந்து மிக சூட்சுமமான நிலை வரை அது விரிகிறது.
நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, நான் பயணம் செய்வதற்குப் பணம் சம்பாதிக்க, நினைத்து ஒரு கோழிப் பண்ணையைத் துவங்கினேன். ஒருநாள் நான் சுவருக்கு பெயிண்ட் அடிக்க நினைத்தேன். பிரஷ்ஷை பெயிண்டில் நனைத்து சுவற்றில் வைத்தேன். சுவர் முழுவதையும் முறையாக பெயிண்ட் அடிக்க நான் நினைக்கவில்லை, சுவர் முழுவதும் பெயிண்ட் பூசப்பட்டால் போதுமென்று நினைத்தேன். அதனால் சுவரில் பெயிண்ட் பிரஷ்ஷை வைத்து சுவரின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நடந்தேன். பெயிண்ட் பூச்சு அடர்த்தியாக ஆரம்பித்து மெல்லியதாகிக்கொண்டே சென்று இறுதியில் காணாமல் போனது. இப்படி அடர்த்தியாக ஆரம்பித்து, மெல்லியதாகிக் கொண்டே வந்து, காணாமல் போனதைக் கண்டதும், வெடித்தெழும் அனுபவமொன்று என்னுள் ஏற்பட்டது. என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, காரணம், பிரபஞ்சம் முழுவதும் என் கண் முன்னால் அங்கேயே விரிந்திருந்தது. இதுதான் படைத்தல் முழுவதும் - ஒரு பெயிண்ட் பூச்சு. இது மிகவும் அடர்த்தியாகவும் ஸ்தூலமாகவும் துவங்குகிறது, பிறகு மெல்லியதாகிக் கொண்டே போகிறது, இறுதியில் ஒன்றுமில்லாமல் போகிறது. மிகத் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்தது வரை எல்லாம் அங்கு இருந்தது. இந்த விஸ்வரூப தரிசனம் எனக்கு அந்த பெயிண்ட் பூச்சில் கிடைத்தது. பித்துப் பிடிக்கும் பரவசத்தில் திளைத்தபடி நான் அங்கேயே அமர்ந்திருந்தேன். மூன்று நாட்களுக்கு நான் பெயிண்ட் பூசவில்லை. பிறகுதான் மீண்டும் துவங்கினேன்.
எல்லாம் அதே சக்திதான். பாறையும் அதே சக்திதான், கடவுளும் அதே சக்திதான். ஒன்று ஸ்தூலமானது, மற்றொன்று சூட்சுமமானது.
அது இன்னுமின்னும் சூட்சுமாக மாறி ஒரு கட்டத்தைக் கடக்கும்போது அதை தெய்வீகம் என்கிறீர்கள். அது ஒரு நிலைக்குக் கீழ் ஸ்தூலமாக இருக்கும்போது அதை விலங்கு என்கிறீர்கள். அதற்கும் கீழே இருந்தால் ஜடப்பொருள் என்கிறீர்கள். எல்லாம் அதே சக்திதான். எனக்கு பிரபஞ்சம் முழுவதும் ஒரு பெயிண்ட் பூச்சு தான், நீங்கள் இதை கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். எதை தியானலிங்கம் என்று அழைக்கிறீர்களோ, இது சக்திகளை சூட்சுமமாக்கிக்கொண்டே சென்றதன் விளைவாக உருவானது
யோக செயல்முறை முழுவதும், பொருள்த்தன்மையைக் குறைத்து அதிக நீர்மத்தன்மையை அடைவது, அல்லது அதிக சூட்சுமமாகும் நோக்குடையது. உதாரணத்திற்கு சமாதி நிலையை எடுத்துக்கொண்டால், இந்நிலையில் உடலோடு இருக்கும் தொடர்பு ஒரே புள்ளியாகக் குறைக்கப்படுகிறது, மீதி சக்தி முழுவதும் தளர்த்தப்பட்டு உடலோடு பிணைக்கப்படாமல் இருக்கிறது. சக்தி இப்படி இருந்துவிட்டால், அதை வைத்து நிறைய விஷயங்கள் செய்யமுடியும். சக்தி உடலோடு ஒட்டிக்கொண்டு உடலோடு அடையாளப்பட்டு இருக்கும்போது அதைவைத்து அதிகம் செய்யமுடியாது. அதைவைத்து எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்கி, உடல்செயல் செய்யமுடியும், அவ்வளவுதான். ஆனால் பொருள்தன்மையுடன் இருக்கும் அடையாளத்திலிருந்து விடுபட்டு சக்தி நீர்மநிலையை அடையும்போது, அதை வைத்து கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத விஷயங்களைச் செய்ய முடியும்.
தியானலிங்கம் ஒரு அற்புதம், ஏனென்றால் உயிரை அதன் முழு ஆழத்தில் அறிந்து, வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து உணர்வதற்கான சாத்தியமது.
அற்புதம் என்று நான் சொல்லும்போது, ஒரு பொருளை இன்னொன்றாக மாற்றுவது பற்றி நான் பேசவில்லை. வாழ்க்கை உங்களைத் தொட முடியாதபடி நீங்கள் அதை எதிர்கொண்டு, நீங்கள் வாழ்க்கையுடன் எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும்போதும் வாழ்க்கை உங்கள் மீது சிறு கீரலைக் கூட ஏற்படுத்த முடியாதபடி நீங்கள் ஆகிவிட்டால் அதுதான் அற்புதம். இதை எல்லாருடைய வாழ்விலும் நிதர்சனமாக்கிட பல விதங்களில் நாங்கள் வேலை செய்து வருகிறோம். இதுதான் ஈஷா யோகா நிகழ்ச்சிகளின் அற்புதமும் கூட. தியானலிங்கத்தின் இருப்பும் அதன் சக்தியும், அதோடு தொடர்பில் வரும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சாத்தியத்தை உருவாக்கும் - நேரடியாக அருகில் வந்தாலும் சரி, தனது விழிப்புணர்வு நிலையால் தொடர்பில் வந்தாலும் சரி - ஒருவர் தன்னைத் திறந்திட விருப்பத்தோடு இருந்தால் இந்த சாத்தியம் அவர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. அதுவே அவர்களின் உச்சபட்ச சாத்தியமாகவும் அமையும்.
"வேறொரு ரகத்தைச் சேர்ந்த இந்த அறிவியலின் சக்தியையும் அதுதரும் விடுதலையையும் நீங்கள் உணரவேண்டும் என்பதே என் விருப்பம். இந்த உள்நிலை அறிவியல் மூலமாக, இந்த யோக அறிவியல் மூலமாக ஒருவர் தன் விதியைத் தானே எழுதிட முடியும்." – சத்குரு
நீங்கள் நவீன அறிவியலின் சொகுசையும் அது தரும் சௌகரியத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; அப்படியென்றால் தியானலிங்கம் எதற்காக? வேறொரு ரகத்தைச் சேர்ந்த உள்நிலை அறிவியலை, அதன் மூலமாக உங்கள் விதியையே உங்கள் விருப்பப்படி எழுதிக்கொள்ளக்கூடிய இந்த யோக அறிவியல் தரும் சக்தியையும் விடுதலையையும் நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகத் தான் தியானலிங்கம்.
இப்படிப்பட்ட அறிவியல் உங்களுக்கு வாழ்க்கை மீது முழுமையான ஆளுமையை வழங்குகிறது. தியானலிங்கத்தின் செயல்முறை முழுவதும் இதற்குத்தான் - இந்த அறிவியலை அழிக்கமுடியாதபடி நிறுவுவதற்கும், விருப்பத்துடன் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எக்காலத்திலும் இது கிடைக்கும்படியாக நிறுவுவதற்கும் தான் தியானலிங்கம். நீங்கள் விரும்பும்படி உங்கள் வாழ்க்கையை உருவாக்குவது மட்டுமல்ல, வாழ்வையும் சாவையும் மறுபிறப்பையும் கூட உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் எந்தக் கருவில் நீங்கள் பிறக்கப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்வது உட்பட, இறுதியில் உங்கள் விருப்பப்படி கரைந்துபோகவும் உங்களால் முடியும்.