அமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு!.

கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். அது உண்மை என்றால், இன்று நாங்கள் காணும் சத்குரு யார்? அப்படி உண்மையான சத்குரு ஒருவர் இருந்தால், அவர் யார்?

சத்குரு: இதைச் சொன்னவர்கள் என்னுடன் முன் ஜென்மங்களில் இருந்தவர்கள். இன்று என்னுடன் இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ பிறப்பெடுத்து வந்தவர்கள். அவர்களுக்கு சத்குரு என்றால், தீப்பொறியாய் தெறிப்பவர் என்றுதான் தெரியும். அவரை அவர்கள் அப்படித்தான் பார்த்திருக்கிறார்கள். தற்போது, அதே மனிதரை இவர்கள் சிரித்தும், பேசியும், ஜோக்குகள் சொல்லியும் பார்ப்பதால், “இது அவரல்ல” என்று நினைக்கிறார்கள். அவர்கள் யார் வசம் காதலில் விழுந்தார்களோ அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சத்குரு அபாரமான தீவிரம் கொண்டவராகவும், சீற்றம் மிக்கவராகவும் எதிலும் இணக்கம் செய்து கொள்ளாதவராகவும் இருந்தார், அதனால் அவர்களுக்கு இவரைப் பார்த்தால் ஏமாற்றமாகவே இருக்கிறது. எவரையும் அவர் பெயர் சொல்லிக்கூட அழைத்ததில்லை, “ஏய்” என்பார். அவரிடமிருந்த அந்த கடுமைக்கும், உருட்டல் மிரட்டலுக்கும் பழகியதால் இன்று இவரைப் பார்த்தால் மிக மென்மையானவராக அவர்களுக்கு தெரிகிறது. அது மட்டுமா இவர் பொதுமக்களுடன் இருக்கிறார். சத்குரு ஸ்ரீ பிரம்மாவுடனோ, பொதுமக்கள் வந்தமர அஞ்சுவர்.

இதனை உங்களுக்குச் சொன்னவர்கள், சீற்றம் கொண்ட மக்கள், தங்களுக்குள் ஒரு பெருந்தீயுடன் இருந்தவர்கள். அதனால், அவர்களுக்கு அவர்தான் சத்குரு. அவர்தான் சத்குரு என்பதை நானும் மறுக்கவில்லை. ஆனால், இன்று இருப்பவரிடம் என்ன குறை? (இன்றிருக்கும் சத்குருவை குறித்து சொல்கிறார்) அவர் (சத்குரு ஸ்ரீபிரம்மா) அற்புதமானவர், ஆனால் அவருடைய நோக்கம் தோற்றது. இவர் அவர் அளவுக்கு அற்புதமான மனிதராய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இவர் எது நடக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்தாரோ அதை இவரால் நிறைவேற்ற முடிந்தது. விழிப்புணர்வாக இவர் தன் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டார்.

இப்போது நாம் மக்களை விரட்டியடிப்பதில்லை, அவர்களை வரவேற்கிறோம். உலகம் சுற்றுகிறோம், தன் வாழ்க்கையைப் பணத்திற்கும், தான் சேகரித்தவற்றிற்கும், குடும்பத்திற்கும் வழங்கிவிட்ட பல முட்டாள்களிடம் ஆன்மீக சமாச்சாரங்களைப் பேசுகிறோம். என்னுடன் முந்தைய ஜென்மங்களில் இருந்தவர்கள் இவற்றைப் பார்க்கும்போது, “இது சத்குருவிற்கு அவமானம் அல்லவா, இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் அவர் உள்ளாகிறாரே” என்று கோபம் கொள்கின்றனர். பணத்திற்கும், பொருளிற்கும் அலைகின்ற மக்களை அவர் பார்த்திருந்தால், பார்வையாலேயே பஸ்பமாக்கி இருப்பார். இன்று இருப்பவர் அப்படிப்பட்டவர் அல்ல. பிறருக்கு ஆன்மீகம் வேலை செய்வதற்காக தரையில் புரளவும் தயாராய் இருப்பவர் இவர்.

அவர் இந்த ஜென்மத்தில் இது போன்ற வடிவம் எடுத்ததற்கான காரணம், இது வேலை செய்யும் என்று அவர் நினைத்ததால்தான். அது வேலையும் செய்துவிட்டது தானே? தன் விருப்பப்படி இந்தப் பரிமாணத்திலும், மற்றொரு பரிமாணத்திலும் அவர் வேலை செய்கிறார். ஒரு சமயம் இவர் இவரைப் போலவே இருப்பார், மற்றொரு சமயம் இவர் அவர் போல இருப்பார். அவர் பிரமாதமானவர், இவருக்கோ வாழ்வின் சூட்சுமங்கள் தெரியும். சூரியனின் வெப்பத்தை ரசிக்கும் உங்களுக்கு, நிலவின் குளுமையையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தியானம் செய்த சமயத்தில் மட்டுமே அவர் கண்களில் பரவசக் கண்ணீர் சிந்தும். தாயோ, நண்பரோ யார் இறந்தாலும் அவர் கண்களில் ஒரு சொட்டு நீரைப் பார்க்க முடியாது. அவர் எடுத்த காரியம் தோல்வியுற்ற போதுகூட அவரது கொந்தளிப்பே அதிகமானது. ஆனால், தற்போது நான் கண்களைத் திறந்தாலும், மூடியிருந்தாலும் கண்களில் நீர் பெருகுகிறது. யாரோ ஒருவர் இறந்தால் என்னால் கண்ணீர் சிந்த முடியும், மரம் வெட்டப்பட்டால் என்னால் கண்ணீர் சிந்த முடியும். அல்லது கண்கள் ஜொலிக்க அசையாமல் என்னால் அமர்ந்திருக்கவும் முடியும். எதற்கும் என்னை எளிதாக மாற்றிக் கொள்ளவும், வளைந்து கொடுக்கவும் நான் பழகிவிட்டேன். ஏனெனில், நாம் எடுத்திருக்கும் பணி அத்தகையது. முன் ஜென்மத்தில் என்னுடன் வந்த பழையவர்கள், நீங்கள் சொல்வதைப் போல், “அவர்தான் சத்குரு” என்று உணர்வதில் தவறொன்றும் இல்லை. இவற்றை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. ஆனால், ஒரு சிஷ்யர் தன் குருவே தனக்கு சிறந்தவர் என்று பார்ப்பது அவருக்கு நல்லது. இல்லாவிட்டால், அவர்களது மனது ஒருநிலைப்படாது. உங்களுக்கு வாய்த்தவரே உங்களுக்கு சிறந்த மனைவி என்று நீங்கள் நம்பாவிட்டால் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதைப் போலவே, “எனக்கு இவரைவிட சிறந்த குரு இல்லை” என்று நினைத்தால்தான் அந்தச் சாத்தியத்துடன் இணைந்து, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தகுதி உங்களுக்கு ஏற்படும்.

அவர் பிரமாதமானவர், இவருக்கோ வாழ்வின் சூட்சுமங்கள் தெரியும். எதற்கும் என்னை எளிதாக மாற்றிக் கொள்ளவும், வளைந்து கொடுக்கவும் நான் பழகிவிட்டேன். ஏனெனில், நாம் எடுத்திருக்கும் பணி அத்தகையது.

நீங்கள் குருவைத் தேடிக் கொண்டு ஷாப்பிங் போனால், எங்குமே போய் சேர மாட்டீர்கள். இதனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால், ஆழமாய் பார்த்து, அதனை உணரத் துடிப்பீர்கள். ஒவ்வொரு நாளும் மனதை மாற்றிக் கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கை பாழாய்ப் போகும். இதோ இந்த மக்களும் அப்படிப்பட்டவர்கள் தாம், பலவிதங்களில் அவர்தான் இவர் என்று தெரிந்திருந்தாலும் சத்குரு ஸ்ரீபிரம்மா தான் இந்த சத்குருவைவிட சிறந்தவர் என்றே நினைக்கின்றனர். நான் தற்போது இருக்கும் விதத்தை அவர்கள் பாராட்டத் தேவையில்லை. சத்குரு ஸ்ரீபிரம்மாவுடனேயே அவர்கள் பிணைந்திருப்பது அவர்கள் வளர்ச்சிக்கும் அவர்களது நல்வாழ்வுக்கும் உதவும்.

நான் உலக வாழ்க்கையுடன் இணங்கிப் போய்விட்டேன் என்று கிடையாது, மாறாக உலகுடன் ஒன்றி வாழ நான் கற்றுக் கொண்டுவிட்டேன். உலகியல் வாழ்க்கையில், சில காரியங்களைச் செய்ய முடிவு செய்தால் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும். உலகுடன் வேலை இல்லாது போனால், பழைய நிலைக்கு என்னை மாற்றிக் கொள்வேன். ஆனால் அந்த நிலை, மக்களை என் அருகில் நெருங்கவிடாது.