தியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மூவருக்கிடையே ஒரு முக்கோண சக்தி வடிவம் உருவாக்கப்பட்டது. அந்த முக்கோண சக்திவடிவத்தின் அச்சாணியாக சத்குரு செயல்பட்டார். பிரதிஷ்டை நடந்துகொண்டிருந்த சமயத்தில், 'என்ன நடந்து கொண்டிருக்கிறது' என்பது தெளிவாக புரியவில்லை என்றாலும், அசைக்கமுடியாத உறுதியோடு அதில் தான் ஈடுபட்டதாக நம்மிடம் பகிர்கிறார் பாரதி.

பாரதி: தியானலிங்கப் பிரதிஷ்டையில் நானும் பங்குவகிக்கப் போகிறேன் என்று யாரும் எனக்கு சொல்லவில்லை. அதில் நான் எப்படி பங்குபெற ஆரம்பித்தேன் என்பது இன்றும்கூட எனக்குப் புலப்படவில்லை. 1996ல் ஆகஸ்ட் (அ) செப்டம்பர் மாத பௌர்ணமி அன்று என்னை இங்கு வரச்சொன்னார்கள். நானும் வந்தேன். அன்று மாலை, சத்குரு, விஜி மற்றும் நான்... நாங்கள் மூவரும் ஒன்றாக தியானத்தில் அமர்ந்தோம். அதில் என் பங்கு என்னவாக இருக்கும் என்பது தெரியாமல், ஒருவித கலக்கத்தோடுதான் நான் தியானத்தில் அமர்ந்தேன். ஆனால் சத்குருவின் இருப்பில் கண்களை மூடி அமரும் அடுத்த கணம், என் கலக்கங்கள், சந்தேகங்கள் எல்லாம் மறைந்துவிடும். என்னைத் தாண்டிய வேறேதோ சக்தி என்னை ஆட்கொள்ள, நான் உடனேயே ஆழ்ந்த தியானத்திற்கு சென்றுவிடுவேன். அன்றும் அதுபோல்தான். ஆனால் அன்று அதைத் தாண்டி வேறொன்றும் நடந்தது. முழுமையாக ஆட்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல், என் அடி ஆழத்தினின்று நான் சுத்திகரிக்கப்படுவதை உணர்ந்தேன். தேவையில்லாத பல உள்நிலை உளைச்சல்கள் என்னைவிட்டு நீங்கியது.

மிக வலிமையான முக்கோண சக்தி வடிவத்தை உருவாக்குவதற்கு, விஜியின் சக்திநிலையும், எனது சக்திநிலையும் உராய்வின்றி ஒன்றுபோல் இணைந்து செயல்படுவது மிக முக்கியம் என்று சத்குரு விளக்க, அதன்பின் தியானம் செய்யும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலும் நான் விஜியுடன் இருக்க ஆரம்பித்தேன். அதேநேரத்தில் சத்குரு லிங்க-ரந்திரம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். லிங்க-ரந்திரம் என்பது, பாதரசம் கொண்ட ஒரு செம்புக் குழாய். ஏழு சக்கரங்களின் தன்மையையும் உள்ளடக்கியவாறு சக்தியூட்டி, பிரதிஷ்டை முடிவடைவதற்குள் அதை லிங்கத்திற்குள் வைத்து மூடவேண்டும். தியானலிங்கப் பிரதிஷ்டையில் இதுவொரு பெரிய படி. லிங்க-ரந்திரத்திற்குள் ஒவ்வொரு சக்தி சக்கரத்தின் தன்மையையும் பதியச் செய்வதற்கு பல நாட்கள் தீவிரமான சாதனா செய்ய வேண்டியிருந்தது. அச்சமயங்களில் விவரிக்கமுடியாத சக்திசூழல்கள் உருவாகும். சக்திச்சக்கரம் ஒவ்வொன்றும் முடிவடைந்த பின்னும், அந்த விபரங்களை பிரம்மச்சாரிகள் மற்றும் ஆசிரமவாசிகளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என சத்குரு விரும்புவார். பல நாட்கள் நீடித்த அந்த சாதனா செயல்முறைகளை அந்த சிறு நேரத்தில் சத்குரு பகிரும் சத்சங்கள், பரவசம் நிறைந்ததாய் அமையும்.