ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ்
ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ் மனித விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, தனிமனித மாற்றத்தின் வாயிலாக உலகளாவிய மேம்பாட்டினை கொண்டுவரும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது!
அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள மிக ரம்மியமான 'கம்பர்லேண்ட் மேட்டுநிலத்தில்' ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்ஸஸ் அமைந்துள்ளது. மனித விழிப்புணர்வை மேம்படுத்தும் அமைப்பாய் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்விடம், தனி மனித மாற்றத்தின் மூலம் உலக ஒற்றுமையை நிலை நாட்டும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள், ஒருவரின் உடல், மன, ஆன்மீக நல்வாழ்விற்கு வழிசெய்கிறது. அதுமட்டுமல்ல... மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்தை ஆழமாக்கிக் கொள்ளவும், தம் உச்சபட்ச சாத்தியத்தை அடைந்திடவும் உறுதுணையாய் இருக்கும் தனித்தன்மை வாய்ந்த இடம் இது. அவ்விதத்தில், பல்லாயிரம் ஆண்டுகளாய் நம் இந்திய யோகக் கலாச்சாரத்தில் வடிவமைக்கப்பட்ட பல ஆன்மீக செயல்முறைகளை, வடஅமெரிக்காவில் பரிமாறுவதிலும் இவ்விடம் தனித்து நிற்கிறது. “உலகின் இந்தப் பாகத்தில் யாரும் உணர்ந்திடாத மறைஞானத்தின் பரிமாணங்களை இங்கே வழங்கும் முயற்சியில் இது முதல்படி” என்கிறார் சத்குரு.
தொன்மையான யோக விஞ்ஞானத்தின் ஆழத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும், அதன் முழுமையில் ஆராய்ந்து அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு, ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்ஸஸ், இன்றும், இனி வரும் பல காலங்களுக்கும் அடிப்படை ஆதாரமாக அமையும். வருடத்தின் 365 நாட்களும், வாழ்வின் அனைத்து நிலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் இவ்விடம் திறந்தே இருக்கும். இங்கு 'மஹிமா' என்றழைக்கப்படும் 39,000 சதுரடி கொண்ட, தூண்களற்ற தியானமண்டபத்தை சத்குரு பிரதிஷ்டை செய்திருக்கிறார். இப்பகுதியில் ஆன்மீகப் பாதையை மேற்கொள்ள நினைக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது காலத்திற்கும் உறுதுணையாய் நிற்கும்.