ஈஷா யோகா மையத்தில், இந்திய கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

மஹாசிவராத்திரி

இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈஷா மஹாசிவராத்திரியும் ஒன்றாக உள்ளது. 2013ல் சுமார் 6 லட்சம் மக்கள் இதில் கலந்துகொண்டனர். ஹார்ப்பர்ஸ் பசார் இந்தியா இதழின் கூற்றுப்படி, “மஹா கும்பமேளாவிற்கு அடுத்தபடி அதிகப்படியான மக்கள் ஓரிடத்தில் கூடும் நிகழ்வு”. மஹாசிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வு இணைய தளம் வாயிலாகவும், ஆஸ்தா டிவி, விஜய் டிவி மற்றும் ஈஷா அறக்கட்டளையின் ஆன்லைன் தளம் வாயிலாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம் இந்நிகழ்வை 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு களிக்கின்றனர்.

யக்ஷா

3 நாட்கள் கலை இரவு கொண்டாட்டமான யக்ஷா ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. மஹாசிவாத்திரியின் முன்னோட்டமாக அமையும் யக்ஷா வண்ணமயமான இசை மற்றும் நாட்டிய கலைநிகழ்ச்சிகள், தொடர்ந்து 7 நாட்களும் அரங்கேறும். இதில் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா, பண்டிட் ஜஸ்ராஜ் மற்றும் உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோர் யக்ஷாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை வழங்கிய ஒருசில பாரம்பரிய இந்திய இசையின் ஜாம்பவான்கள் ஆவர்.

நவராத்திரி

ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி கொண்டாட்டங்களின் கலைநிகழ்ச்சிகள் மூலம் வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளை நேரடி இணைய ஒளிபரப்பில் காணமுடியும்!

கலையின் கைவண்ணம் - கைவினை கண்காட்சி

நலிந்து வரும் நமது இந்திய பாரம்பரிய கலையான கைவினைக் கலைக்குப் புத்துயிரூட்டும் விதமாக, மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு ஆண்டும், 'கலையின் கைவண்ணம்' என்ற கைவினைக் கண்காட்சி ஈஷா யோகா மையத்தில் நடைபெறுகிறது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, எண்ணற்ற கலைக் குழுவினர் தங்கள் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றனர். காணாமல் போகும் நிலையில் உள்ள அற்புதக் கலையான கைவினைக் கலையை, அனைவருக்கும் பறைசாற்றச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஈஷா மேற்கொள்ளும் ஒரு முதற்கட்ட முயற்சி இது!