எவராலும் தியானத்தை செய்யமுடியாது!
தியானம் என்பது நீங்கள் செய்யும் ஒரு செயலன்று என்பதை சத்குரு விளக்கும் சத்குரு, ஆனால் ஒருவரால் தியானமாக மாறமுடியும் என்பதை உணர்த்துகிறார்!
யாருமே தியானம் செய்யமுடியாது!
யாருமே தியானம் செய்யமுடியாது. தியானம் செய்ய முயன்றவர்கள் பலர், அது மிகவும் கடினமானது என்றோ, செய்யமுடியாத ஒன்று என்றோ முடிவு செய்ததற்குக் காரணம், அவர்கள் தியானத்தை 'செய்ய' முயற்சித்ததுதான். நீங்கள் தியானம் செய்யமுடியாது... தியானநிலையில் இருக்கத்தான் முடியும்.
சத்குரு:"மெடிடேஷன் (meditation)" என்ற சொல்லைப் பற்றி பல தவறான கருத்துக்கள் நிலவுகிறது. முதலில் ஆங்கிலத்தில் இந்த சொல்லிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை. ஆம்... இது நிஜம்தான்... ஏனெனில் கண்களை மூடி அமர்ந்தாலே அதை ஆங்கிலத்தில் "மெடிடேஷன்" என்று சொல்கிறார்கள். உண்மையில் கண்களை மூடி அமர்ந்த நிலையில், பலவற்றைச் செய்யலாம். இதற்கு பல பரிமாணங்கள் உண்டு. கண்களை மூடியநிலையில் நீங்கள் ஜபம், தவம், தாரணம், தியானம், சமாதி, ஷூன்ய என பலவற்றைச் செய்யலாம். அவ்வளவு ஏன்... அமர்ந்த நிலையில் தூங்கும் கலையில் கூட நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கலாம்! அப்படியெனில் "மெடிடேஷன்" என்றால் என்ன? பொதுவாக "மெடிடேஷன்" என்ற சொல்லால் மக்கள் தியானத்தைக் குறிக்கின்றனர். அப்படிப் பார்த்தால், 'மெடிடேஷன்' என்பது நீங்கள் செய்யக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் யாருமே தியானம் செய்யமுடியாது. தியானம் செய்ய முயன்றவர்கள் பலர், அது மிகவும் கடினமானது என்றோ, செய்யமுடியாத ஒன்று என்றோ முடிவு செய்ததற்குக் காரணம், அவர்கள் தியானத்தை 'செய்ய' முயற்சித்ததுதான். நீங்கள் தியானம் செய்யமுடியாது... தியானநிலையில் இருக்கத்தான் முடியும். நீங்கள் தியானம் செய்ய முடியாது... வேண்டுமானால் தியானநிலையில் இருக்கலாம். தியானம் என்பது ஒரு தன்மை. அது நீங்கள் செய்யும் செயலல்ல. உங்கள் உடல், மனம், சக்தி மற்றும் உணர்வுநிலை ஒருவித முதிர்ச்சியை அடைந்தால், தியானம் என்பது இயற்கையாகவே நிகழும். அதாவது, தேவையான உரமிட்டு, தண்ணீர் பாசனமும் செய்து, நிலத்தை வளமாகப் பராமரித்து, அங்கு சரியான விதை ஒன்றை விதைத்தால், செடி தானாகவே வளர்ந்து மலர்களும், பழங்களும் காய்ப்பதுபோல். ஒரு செடியில் மலர்களோ, கனிகளோ, நீங்கள் விரும்புவதால் வருவதில்லை. நீங்கள் அதற்கு தேவையான, சாதகமான சூழ்நிலையை உருவாக்கியதால்தான் அவை மலர்ந்தன, கனிந்தன. அது போலவே உங்கள் உடல், மனம், சக்தி, உணர்வு என உங்களுக்குள் எல்லா நிலைகளிலும் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், தியானம் இயற்கையாகவே உங்களுக்குள் மலரும். அது மலரின் நறுமணம் போன்ற வாசம். அதை உங்களுக்குள் நீங்கள் முகர்ந்து அனுபவிக்கலாம்.
மனமும் தியானமும்
மனதிற்கு தியானம் பிடிப்பதில்லை... ஏனெனில் உடல் அசைவற்றிருந்தால் உங்கள் மனமும் இயற்கையாகவே அசைவற்றுப் போகும். இதனால்தான் யோக முறையில், ஹடயோகத்திற்கும், ஆசனங்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உடலை எவ்வித அசைவுமின்றி ஒரே நிலையில் வைத்திருக்க நீங்கள் பழகிவிட்டால், உங்கள் மனமும் அசைவின்றிப் போகும். நீங்கள் நிற்கும் போதும், அமரும் போதும், பேசும் போதும் எத்தனை தேவையற்ற அசைவுகளைச் செய்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். வாழ்வை உற்று நோக்கினால், உங்கள் கவனத்தில் கூட வராத இதுபோன்ற பல விஷயங்கள் உங்கள் வாழ்வின் பாதி நேரத்தை எடுத்துக் கொள்வதை நீங்களே பார்ப்பீர்கள். உங்கள் உடலை அசைவற்ற நிலையில் வைத்திருந்தால், உங்கள் மனம் சிறிது சிறிதாக நிலைகுலையத் துவங்கும். இதை அனுமதித்தால், அது உங்களுக்கு அடிமையாகிவிடும் என்று அதற்கு நன்றாகத் தெரியும். இன்றைய நிலையில் உங்கள் மனம் உங்களுக்கு முதலாளி போன்றும் நீங்கள் அதற்கு அடிமை போன்றும் இருக்கிறீர்கள். தியானத்தில் ஈடுபட்டு நீங்கள் தியானநிலையில் இருக்க ஆரம்பித்தால், நீங்கள் முதலாளியாகவும், உங்கள் மனம் உங்களுக்கு அடிமையாகவும் ஆகிவிடும். இதுதான் நீங்கள் எப்போதும் இருக்கவேண்டிய நிலை. உங்கள் மனதை உங்களுக்கு அடிமையாக நீங்கள் வைக்கவில்லை என்றால், உங்களை அது தீராத துன்பத்தில், துயரத்தில் ஆழ்த்தும். அதன் கையில் ஆட்சிப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால், அது கொடுங்கோள் ஆட்சிதான் புரியும். ஆனால் ஒரு அடிமையாக, அது அற்புதமான கருவி - அதி அற்புதமான கருவி!