கிருஷ்ணனின் பாதையில் நடையிடுவது
கிருஷ்ணனின் பாதையில் நடப்பதென்பது புத்தகங்களை படிப்பதோ அல்லது தர்மத்தை புரிந்துகொள்வதோ அல்ல, அது உங்களுக்குள் ஒரு கிருஷ்ணனாகவே மாறுவது என்பதை சத்குரு விளக்குகிறார்!
கிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல்
சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே உணர்வீர்கள். மனதளவில் உயிரோட்டம் இருந்தால், சிறிதளவு அறிவுப்பூர்வமாக வாழ்வை உணர்வீர்கள். உணர்வளவில் உயிரோட்டம் இருந்தால், ஓரளவிற்கு உணர்வுப்பூர்வமான வாழ்வை வாழ்வீர்கள். அதேபோல் வாழ்வின் மற்ற பரிமாணங்களில் உயிரோட்டத்துடன் இருந்தால், அந்தப் பரிமாணத்தில் வாழ்வை உணர்வீர்கள்.
உங்களுக்குள் நீங்கள் கிருஷ்ணராக ஆகாதவரை பகவத்கீதை உங்களுக்கு உண்மையாக முடியாது. பகவத்கீதையை கண்மூடித்தனமாக நம்புவதாலும், அதைப் போற்றுவதாலும் மட்டுமே உங்களுக்கு அது உண்மையாக ஆகிவிடாது.
உங்கள் அனுபவத்தில் உண்மையாக இல்லாத ஒன்றை, வேறொருவர் சொன்னார் என்பதற்காக நம்புவது, (அதை கிருஷ்ணரே சொல்லி இருந்தாலும் கூட) அது வெறும் கதைதான். தன் வாழ்வில் உண்மை எதுவோ, தான் உணர்ந்தது எதுவோ அதைத்தான் கிருஷ்ணர் பேசினார். அவர் எதைப் பற்றிப் பேசினார் என்று அவருக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு அது தெரியாது. அவரைப் போன்றே உயிரோட்டத்துடன் வாழ்வை உணரும்வரை, அவர் பேசியவற்றை, அவர் பேசிய அர்த்தத்தில் நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. அப்பாதையில் நடப்பதற்கு அவர் வாழ்வை நீங்கள் ஒரு தூண்டுகோலாக பயன்படுத்தலாம். ஆனால் அவர் வார்த்தைகளை உண்மையென்று வாதிப்பது சரியல்ல. ஏனெனில், தற்சமயம் உங்கள் வாழ்வில் அது உண்மையில்லை. உங்களுக்குள் நீங்கள் கிருஷ்ணராக ஆகாதவரை பகவத்கீதை உங்களுக்கு உண்மையாகாது. பகவத்கீதையை கண்மூடித்தனமாக நம்புவதாலும், அதைப் போற்றுவதாலும் மட்டுமே உங்களுக்கு அது உண்மையாக ஆகிவிடாது. அந்நிலை உங்களுக்குச் சாத்தியமானால், இதுவும் உங்களுக்கு உண்மையாகும்.
பகவத்கீதை, பைபிள், குர்ரான் என்று எழுதப்பட்டுள்ள எல்லா நூல்களுமே இதுபோலத்தான். ஒருமுறை இது நடந்தது. விடியற்காலைப் பொழுதில் ஒருவர் கடற்கரைக்குச் சென்றார். அங்கு காற்று மிக இதமாக வீச, அவர் அப்படியே மெய்மறந்து பேரானந்தத்தில் ஆழ்ந்தார். மிக அற்புதமான ஒன்றை நீங்கள் உணரும்போது, அதை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள விரும்புவது இயற்கைதானே? அவ்வளவு ஏன், ஒரு ஜோக் கேட்டாலும்கூட போர்வைக்குள் மறைந்துகொண்டு அதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளமாட்டீர்கள். அதை இன்னொருவருக்குச் சொல்லவேண்டும் என்றுதான் விரும்புவீர்கள். அதேபோல் இவரும் இவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை தனக்குப் பிரியமான ஒருவருடன் பகிர விரும்பினார். அந்த ஒருவரோ உடல்நிலை சரியின்றி மருத்துவமனையில் இருந்தார். அவரால் கடற்கரைக்கு வரமுடியாத சூழ்நிலை. எனினும், எப்படியாவது இந்த அனுபவத்தை அவருடன் பகிர்ந்தே ஆகவேண்டும் என்று விரும்பிய இவர், சவப்பெட்டி போன்ற பெரிய பெட்டி ஒன்றை வாங்கி, அதில் கடற்காற்றை அடைத்து, ஒரு கடிதத்துடன் அதை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணரின் வழியில் நீங்களும் நடந்தால் - அடடே! எவ்வளவு பிரமாதமாக இருக்கும்! ஆனால் அதைச் செய்யாமல், வெறுமனே பகவத்கீதையை போற்றிப்பேசி தலையில் சுமந்தால், நீங்கள் முட்டாளாகத்தான் ஆவீர்கள்.
அப்பெட்டி மருத்துவமனைக்கு வந்தது. இப்போது நீங்கள்தான் மருத்துவமனையில் இருக்கும் அந்த நபர் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளது. ஒன்று, நீங்கள் மிக கவனமாக அந்த பெட்டியைத் திறந்து, அதற்குள் சென்று, அதை மூடிக் கொண்டு அற்புதமான காற்றை உணரலாம். அல்லது அவர் அனுப்பிய தகவலைப் பெற்று, உடல் தேரியவுடன் அவர் வழியிலேயே அதை உணர முயற்சி செய்யலாம். அதாவது, கடற்கரைக்குச் சென்று அந்த அற்புதமான காற்றை நீங்கள் நேரடியாக உணரலாம். உங்களுக்கு இந்த இரண்டு தேர்வுகள்தான் உள்ளன.
எல்லாப் புனிதநூல்களும் இப்பெட்டி போன்றவைதான். யாரோவொருவர் தனக்குள் பிரம்மாண்டமான ஒரு அனுபவத்தை உணர்ந்தார். அதை மற்றவருடன் பகிரவேண்டும் என்று விரும்பி, அந்த ஆர்வத்தில், வாய் வார்த்தைகளாகவோ, எழுத்து வடிவத்திலோ அல்லது வேறேதேனும் ஒரு வகையிலோ அதைப் பகிர முனைந்தார். அம்முயற்சியில் உருவான அப்புத்தகத்தை, இப்போது நீங்கள் "புனிதம்" என்று சொல்லி தலைமேல் சுமந்துகொண்டு மேன்மேலும் மந்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள். கிருஷ்ணரின் வழியில் நீங்களும் நடந்தால் - அடடே! எவ்வளவு பிரமாதமாக இருக்கும்! ஆனால் அதைச் செய்யாமல், வெறுமனே பகவத்கீதையை போற்றிப்பேசி தலையில் சுமந்தால், நீங்கள் முட்டாளாகத்தான் ஆவீர்கள். இன்று பகவத்கீதையை தம் தலையணையின் கீழ் வைத்துத் தூங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். நேரடியாக எல்லாம் உள்ளே சென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு போலிருக்கிறது! பகவத்கீதையை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், உங்களுக்கு கழுத்துவலி வேண்டுமானால் வரும், ஆனால் நீங்கள் கிருஷ்ணராக முடியாது.
"கிருஷ்ணர் என்பதெல்லாம் முட்டாள்தனம்" என்று அவற்றை நிராகரிக்கவும் வேண்டாம். அதுபற்றி உங்களுக்குத் தெரியாது; தற்சமயம் உங்கள் அனுபவத்தில் உண்மையாகாதவற்றைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். இந்தளவிற்கு திறந்த மனப்பான்மையுடன், “இவர் இத்தனை விஷயங்கள் சொல்கிறார்... சரி பார்ப்போம்” என்பதுபோல் நீங்கள் இருந்தால், அந்நிலையை நீங்கள் அடைவதற்கான சாத்தியம் உள்ளது.
கிருஷ்ணர் நடந்த பாதையில் நீங்களும் நடந்தால், அவர் தனக்குள் உருவாக்கிக் கொண்ட சாத்தியத்தை நீங்களும் உங்களுக்குள் உருவாக்கினால், அப்போது பகவத்கீதை உங்களுக்கும் உண்மையாகும். ஆனால் அதுவரை யார் சொல்வதையும் நீங்கள் நம்பாதீர்கள். அதற்காக "கிருஷ்ணர் என்பதெல்லாம் முட்டாள்தனம்" என்று அவற்றை நிராகரிக்கவும் வேண்டாம். அதுபற்றி உங்களுக்குத் தெரியாது; தற்சமயம் உங்கள் அனுபவத்தில் உண்மையாகாதவற்றைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதைப் பாருங்கள். இந்தளவிற்கு திறந்த மனப்பான்மையுடன், “இவர் இத்தனை விஷயங்கள் சொல்கிறார்... சரி பார்ப்போம்” என்பதுபோல் நீங்கள் இருந்தால், அந்நிலையை நீங்கள் அடைவதற்கான சாத்தியம் உள்ளது.
கிருஷ்ணராக இருப்பது என்றால் என்ன? “நான் காதலிக்க வேண்டுமா அல்லது போர் ஒன்றைத் துவங்க வேண்டுமா?”. இது அது பற்றியல்ல. கிருஷ்ணர் என்னென்ன செயல் செய்தார் என்பது இங்கு முக்கியமல்ல. ஏனெனில் கிருஷ்ணர் எதைச் செய்திருந்தாலும், அதை அவர் செய்யக் காரணம் அவர் சந்தித்த சூழ்நிலைகள் அத்தகையது. சூழ்நிலைக்கு எது தேவையோ அதையே அவர் செய்தார். மஹாபாரதம் ஒரு மிகத் தீவிரமான வாழ்க்கை நாடகம் - மிகமிகச் சிக்கலான பல சூழ்நிலைகளை பலரும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அதில் நல்லவர்களும் இருந்தார்கள், கெட்டவர்களும் இருந்தார்கள், கடைந்தெடுத்த வஞ்சகர்களும் இருந்தார்கள், அற்புதமான மனிதர்களும் இருந்தார்கள். எல்லாவிதமான மனிதர்களும் - அதாவது, மனித விழிப்புணர்வின் கீழ்மட்டம் முதல், மிக உயரிய நிலை வரை எல்லா வகையான மனிதர்களும் அதில் இருந்தார்கள். ஆனால் சூழ்நிலை ஓரளவிற்கு மேல் தீவிரமாக ஆனபோது, அதில் எல்லோருமே துன்புற்றனர். நல்லவர்களும் துன்புற்றனர், கெட்டவர்களும் துன்புற்றனர். அதுதான் மஹாபாரதம். நல்லவர்கள், கெட்டவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் இடம்பெற்ற நாடகத்தில் அவர்கள் துன்புற்றார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும்தான் தொடர்ந்து கடைசிவரை துன்பமறியாது இருந்தார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை நேசிப்பது கிருஷ்ணரின் பாதையல்ல. யாருடனும் போர் செய்யமுனைவது கிருஷ்ணரின் பாதையல்ல. வாழ்வில் எதுவே நடந்தாலும், அதனால் பாதிப்பின்றி வாழ்வதுதான் கிருஷ்ணரின் பாதை.
கிருஷ்ணரின் பாதையில் நடப்பது என்றால் அதற்கு இதுதான் அர்த்தம். வாழ்வெனும் நாடகத்தில் நீங்கள் துன்பமின்றி பங்கெடுத்துச் சென்றால், அதுதான் கிருஷ்ணரின் பாதை. பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை நேசிப்பது கிருஷ்ணரின் பாதையல்ல. யாருடனும் போர் செய்யமுனைவது கிருஷ்ணரின் பாதையல்ல. வாழ்வில் எதுவே நடந்தாலும், அதனால் பாதிப்பின்றி வாழ்வதுதான் கிருஷ்ணரின் பாதை.