எடுத்துக்கொண்ட உறுதி

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-pic1

சுவாமி நந்திகேஷா:  “ஒரு அன்பான, அமைதியான, ஆனந்தமான உலகம் உருவாக்க நீங்கள் உறுதி எடுக்க முடியுமா?” என்று வகுப்பை முடிப்பதற்கு முன் ஈஷா யோகா ஆசிரியர் என்னிடம் கேள்வி எழுப்பினார். மிக சப்தமாக, “ஆம்!” என்று கூறினேன். இப்படி நான் வெளிப்படுத்திய அந்த சிறு ஆர்வம், உறுதி என் வாழ்வின் திசையையே அடியோடு மாற்றிப்போட்டது.

1992ல் என் நண்பர்கள் சிலரோடு ஈஷா யோகா வகுப்பில் நான் கலந்துகொண்டேன். டீனேஜ் பருவத்திற்கே உரிய முனைப்போடும் உற்சாகத்தோடும் நாங்கள் புதிதுபுதிதாய் பலவற்றை செயல்படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதுதான், அதுதான் என்றில்லை. எங்களுக்குத் தோன்றியதை எல்லாம் தயக்கமின்றி முயற்சிசெய்து பார்ப்போம். இந்த வகுப்பு முடிந்தபின், கோவையை சுற்றி இந்த வகுப்பு எங்கு நடந்தாலும் தீட்சை நாளன்று தன்னார்வத் தொண்டு செய்யக் கிளம்பிவிடுவோம். அப்படித்தான் திருப்பூரில் சத்குரு நடத்திய பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சிக்கும் வந்தோம். பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியில் பல சமயங்களில் நான் கட்டுக்கடங்காமல் போயிருந்தேன். தரையில் உருள்வதும், குதிப்பதும், கத்துவதும்... தன்னார்வத் தொண்டர்களுக்கு நான் பெரும் சோதனையாக இருந்திருப்பேன் என நினைக்கிறேன். இருந்தும், நிகழ்ச்சி மிக ஆனந்தமாக இருந்தது. எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. பங்கேற்பாளர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்தபோது நானும் என் நண்பர்களும் நடுவரிசையில் நின்றிருந்தோம். அருகில் நின்றிருந்த சத்குருவை நாங்கள் இழுத்து என் மடியில் அமரச் செய்தோம்!

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-group-pic

ஜனவரி 1, 1993 அன்று திருப்பூரில் நடந்த சம்யமா வகுப்பில் நான் முதன்முதலாகக் கலந்துகொண்டேன். அந்நாளில் சம்யமா வகுப்புகளில் ஆக்ரோஷமாக நடந்துகொள்பவர்களை சில ப்ராசஸ்களின் போது சத்குரு ஹாலை விட்டு வெளியே அனுப்பிவிடுவார். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான், ஒருநாள் அந்த அசைவற்ற நிலையின் அனுபவம் எனக்குக் கிட்டியது! அன்று... இயற்கையின் ஏதோவொரு அம்சத்தின் மீது தியானம் செய்யச் சொல்லி இருந்தார்கள். நான் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்த மரத்தின் மீது கவனம் செலுத்தி அதோடு நான் இருக்க இருக்க, முழுமையாக அதில் ஆழ்ந்துவிட்டேன். சுற்றி என்ன நடக்கிறது என்ற உணர்வில்லை. எவ்வித சப்தமும் எனக்குக் கேட்கவில்லை. அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்றும் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து யாரோ என் தோளிலே தட்டினார்கள். “வா, உள்ளே செல்லலாம்,” என்று சத்குருவின் கனிவான குரல் என் பின்னால் இருந்து ஒலித்தது. சற்றே திரும்பி சத்குருவின் மீது கவனம் செலுத்தியதும், மரத்தோடு எனக்கு ஏற்பட்டிருந்த தொடர்பு விட்டுப்போனது. அதை என்னால் தாங்கமுடியவில்லை. அன்போடு என் கைகளை நீட்டி அம்மரத்தைத் தொட முயன்றேன். “அந்த மரம்... அந்த மரம்...” என்று அழ ஆரம்பித்தேன். மிகவும் அன்போடு, அதேசமயம் காரியத்தில் உறுதியோடு சத்குரு என்னை உள்ளே அழைத்துச் சென்று உணவளித்தார். அன்று மதியமும் நான் சாப்பிட்டிருக்கவில்லை! இன்னொரு உயிரோடு ஒன்றி, நானும் அதுவும் ஒன்றே என்பது போன்ற உணர்வில் நான் திளைத்தது அதுதான் முதல்முறை.

1993ஆம் ஆண்டுக்குள் நாங்கள் நண்பர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டு செய்வதில் அதிக ஈடுபாடு காட்டத் துவங்கினோம். 1994ஆம் ஆண்டு துவக்கத்தில், சத்குரு அவர்கள் 90 நாட்கள் ஹோஸ்னஸ் வகுப்பு குறித்து அறிவித்தார்கள். நான் கல்லூரி முதலாமாண்டில் இருந்ததால், என்னால் அந்த வகுப்பில் இணைய முடியவில்லை. அதனால், நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி, பங்கேற்பாளர்களுக்கு உறுதுணையாக இருப்பது என்று முடிவுசெய்தோம். ஜுலை 12ம் தேதி, நிகழ்ச்சி துவங்கியது, அடைமழையுடன் கடும்காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இருட்டுப்பள்ளத்தில் உள்ள சிறு ஓடையில் வெள்ளம் புரண்டோடியது. அதனால், பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆலாந்துரையில் தங்க ஏற்பாடுகள் செய்தோம். இதனால், நிகழ்ச்சி அடுத்த நாள்தான் துவங்கியது. என் நண்பர்களில் ஒருவர் மட்டும் பங்கேற்பாளராய் இணைந்தார், மற்றவர்கள் அனைவரும் அவ்வப்போது ஆசிரமத்திற்கு வந்துபோய், நிகழ்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தோம்.

Frisbee யில் தோற்றேன்

1996ல் என் நண்பர்கள் சிலர் தியான யாத்திரைக்கு செல்லவிருந்தனர். அவர்களை வழியனுப்ப நான் இரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அவர்களைக் காண இரயிலுக்குள் ஏறி, அங்கே அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். கடைசி நிமிடத்தில் சிலர் வரமுடியாமல் போனதால், அப்பயணத்திற்கு இன்னும் சில இருக்கைகள் இருப்பது தெரியவந்தது. “ஆமாம்... இருக்கைகள்தான் இருக்கிறதே... நீயும் ஏன் எங்களுடன் வரக்கூடாது?” என்று அவர்கள் கேட்க, நானும் அதிகம் யோசிக்காமல் உடனே “சரி” என்றுவிட்டேன். வழியனுப்ப வந்த என்னிடம், மாற்றுத்துணி கூட இருக்கவில்லை. இது 15 நாள் பயணம். குளிர் பிரதேசம் வேறு. ஸ்வெட்டர் கிடையாது, ஷூ கிடையாது, எதுவுமே கிடையாது! என் நண்பர்கள் இருந்ததால் எப்படியோ சமாளித்துவிட்டோம். அப்பயணம் மிக ஆனந்தமாக அமைந்தது.

பயணத்தில் இளைப்பாற ஆங்காங்கே நிற்கும் இடங்களில் சத்குரு எங்களுடன் frisbee விளையாடுவார். மற்றவர்கள் விளையாடும்போது நான் அங்கேயே நின்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பேன், ஏனெனில், அந்த frisbeeயை சரியாக பிடிப்பதற்குக்கூட எனக்குத் தெரியாது. ஒருமுறை, சத்குரு என்னை அழைத்து அந்த frisbee யை எப்படி எறியவேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். அது ரிஷிகேஷ் என்று ஞாபகம். சில நிமிடம் கழித்து, அவர் கற்றுக்கொடுத்தது போல் நானும் frisbeeயை என்னால் முடிந்தவரை வேகத்தோடு எறிந்தேன். அது அப்படியே வானில் ஏறிப் பறந்து பறந்து, வெகு தூரத்தில் இருந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்துவிட்டது. அதை எப்படியும் எடுக்கமுடியாது என்ற நிலையில், சத்குரு என்னிடம் விளையாட்டாக, “நான் சில நிமிடம்தான் வேறெங்கோ பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். அதற்குள் எங்கோ எறிந்துவிட்டாயே,” என்று விளையாட்டாகக் கூறிவிட்டுச் சென்றார். அதை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று தேடி ஓடினேன். ஆனால், அது கிடைக்கவில்லை. நான் மனம் உடைந்து போனேன். பேருந்தில் அழுதுகொண்டே வந்தேன். “சத்குரு விளையாட அது ஒன்றுதான் இருந்தது. அதையும் தொலைத்துவிட்டேனே...” என்று பாரம் தாங்காமல் தாரை தாரையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். அப்போது உள்ளிருந்து ஒரு எண்ணம் தோன்றியது, “பரவாயில்லை... ஒரு குருவிற்கு இதெல்லாம் முக்கியமில்லை,” என்று. அதற்குப் பின்னர்தான் எனக்குள் சமாதானம் ஏற்பட்டது.

தியானலிங்க உருவாக்கம் - படைப்பின் ஆழம்

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-constructionpic1

எங்கள் வாழ்க்கை பல விதங்களில் சத்குருவையும், ஈஷாவின் செயல்பாடுகளையும் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இருந்தாலும், “முழுநேரத் தொண்டர்களாக ஆசிரமத்திற்குள் குடியேற வேண்டும்,” என்ற எண்ணம் ஏனோ எனக்குத் தோன்றவில்லை. 1997ல் இயந்திரப் பொறியியல் துறையில் நான் டிப்ளமா பட்டம் பெற்றதும், ஒரே நேரத்தில் 3 தொழில்கள் தொடங்கினேன். தன்னார்வத் தொண்டுகள் வழக்கம்போல் தொடர்ந்தது. இதுபற்றி பேச்சு வரும்போதெல்லாம், “அமைதியான, ஆனந்தமான உலகத்தை உருவாக்க இதுதான் எங்கள் பங்களிப்பு,” என்று சொல்லிக் கொள்வோம். சத்குரு தியானலிங்கப் பணிகளை துவங்கியபோது, இன்னும் தீவிரமாய் தன்னார்வத் தொண்டு செய்யத் துவங்கினோம். சத்குரு எதை செய்தாலும் அது மனித நல்வாழ்விற்காகத்தான் இருக்கும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நாங்கள் அறிந்திருந்தோம்.

எனக்குப் பொறியியல் பின்னணி இருந்ததால், தியானலிங்கக் கட்டுமானப் பணிகளுக்கு உதவுவதற்கு அவ்வப்போது என்னை அழைத்தார்கள். இது எனக்குப் பெருமிதமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பிப்ரவரி 14, 1998 - அப்படி ஒரு மகத்தான நாள். அதுதான் லிங்கத்தை ஆவுடையாரில் பொருத்துவதற்கு குறிக்கப்பட்டிருந்த நாள். அதற்கு முந்தைய நாள் லிங்கத்திலும், அதைப் பொருத்தவிருந்த செம்பு பாத்திரத்திலும் தேவையான குறியீடுகள் செய்யச் சென்றிருந்தேன். அதைச் செய்துவிட்டு, அன்று மாலை கோவையில் என் பங்குதாரரின் அண்ணன் திருமணத்திற்கு சென்றுவிட்டேன். மறுநாள், பிப்ரவரி 14, மாலை 3:30 மணியளவில் ஆசிரமத்திற்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தேன். அச்சமயம், கோவையில் பயங்கரமான குண்டுவெடிப்பு நடந்ததாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. அடுத்த 40 நிமிடங்களுக்குள் அதுபோல் இன்னும் 5 குண்டுவெடிப்புகள் நடந்திருந்தன. இதில் 50 பேர் இறந்து, இன்னும் பலர் படுகாயம் அடைந்திருந்தனர். கோவையின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருந்தது. இதற்கிடையில், “சரியான நேரத்திற்கு ஆசிரமத்திற்கு எப்படிச் செல்வது?” என்ற எண்ணம்தான் எனக்குள் மேலோங்கியிருந்தது. இப்படியே மாலை 5 மணி ஆகிவிட்டது. அதற்குமேல் பொறுக்கமுடியாமல், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கோவை சிங்காநல்லூரில் இருந்து ஆசிரமத்திற்குப் புறப்பட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வீதிகள் வெறிச்சோடி இருந்தன என்றாலும், இன்னும் பல குண்டுவெடிப்புகள் நடக்கலாம் என்ற அச்சுறுத்தல் நிலவியதால் சூழ்நிலை மிகப் பதற்றமாகவே இருந்தது. ஆம்புலன்ஸ் வண்டிகள் இங்கும் அங்கும் விரைந்து கொண்டிருந்தன, வீதிகளில் இரத்தம் சிதறியிருந்தது, பல கட்டிடங்கள் இடிந்து, வாகனங்கள் சேதமாகியிருந்தது. பல சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. ஆசிரமத்திற்கு எப்படி செல்லப்போகிறேன் என்று மலைப்பாக இருந்தது. எத்திசையில் போவது என்று புரியாமல் காந்திபுரம் அருகே குழப்பத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் வந்து லிஃப்ட் கேட்டார். அவருக்கு வீரகேரளம் பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. வீரகேரளம் ஆசிரமம் செல்லும் வழியில்தான் உள்ளது என்பதால், அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டேன். இவருக்கு வழி நன்றாகவே தெரிந்திருந்தால், அடுத்த ஒரு மணிநேரத்தில், செயல்முறை துவங்கவிருந்த சரியான நேரத்தில், நான் ஆசிரமத்தை அடைந்துவிட்டேன்.

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-construction-pic2

லிங்கத்தை ஆவுடையாரில் பொருத்தும் செயல்முறை எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக நடந்துமுடிந்தது. முந்தையநாள் அனைவரும் அமர்ந்து உண்ணும்போது, “யார் அந்தப் பையன்?” என்று சத்குரு முதல்முறையாக என்னைப் பற்றி எவரோ ஒருவரிடம் விசாரித்தார் என்று நான் பின்னர் கேள்விப்பட்டேன்.

“நாமெல்லாம் முழுநேரத் தொண்டர்களாக ஆசிரமத்திற்குச் சென்றுவிடலாமா? இப்போது அது மிகத் தேவையாக இருக்கும்,” என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். அவரும் என்னைப் போலவே ஈஷாவின் செயல்பாடுகளில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தவர். அதிகம் யோசிக்காமல் நானும் உடனே “சரி” என்றுவிட்டு, நான் ஆரம்பித்த 3 தொழில்களையும் முடக்கும் வேலைகளை ஆரம்பித்தேன். இத்தொழில்களை மூடுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல பிரச்சினைகள் முளைத்தன. ஆனால் சத்குருவின் அருளோடும், ஆசிரமவாசிகளின் உதவியோடும் அவற்றை சமாளித்து முடித்தேன். இதில் எனக்கு விசித்திரமாக இருக்கும் ஒரேவொரு விஷயம் - அதுவரை என் வாழ்வில் நான் எடுத்திருந்த எந்தப் பெரிய முடிவுகளும், “நான் சத்குருவின் அருகே இருக்கவேண்டும்,” என்ற எண்ணத்தின் தூண்டுததால் இருந்ததில்லை. எனக்குக் கிடைத்திருந்த அனுபவங்கள் அனைத்தும் சத்குருவின் அருளால், சக்தியால் நான் உணர்ந்ததுதான் என்றாலும், மக்களின் நல்வாழ்வே நோக்கம் என்று அவர் ஏற்றிருந்த செயலின் ஆழம், அதன் பரந்துவிரிந்த தாக்கம், இதுதான் என்னை ஆட்கொண்டது. 2000ம் ஆண்டு மஹாசிவராத்திரி அன்று எனக்கு சத்குரு பிரம்மச்சரிய தீட்சை வழங்கியபோதுதான், என் முன்னே இருக்கும், “ஆன்மீகப் பயணத்தின்” பிரம்மாண்டத்தை சிறிதளவு உணர்ந்தேன்.

குருவிற்கு உணவளிக்க கிடைத்த வாய்ப்பு

சத்குருவுடன் எனக்கு ஏற்பட்ட மிக நெகிழ்ச்சியான அனுபவங்களில் ஒன்று, ஒருநாள் நான் முக்கோண கட்டிடத்தில் இருந்தபோது, அங்கே சத்குரு வந்தார். அவர் இங்கும் அங்கும் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நான் வேகவேகமாக அவர் அருகில் ஓடிச் சென்று, அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். “இங்கே உண்பதற்கு ஏதாவது இருக்கிறதா?” என்றார். அன்று காலை உணவுவேளை முடிந்திருந்தது. நான் ஓடிச்சென்று சில ஆரஞ்சு பழங்களை கொண்டுவந்தேன். உண்பதற்கு ஏதேனும் வேண்டும் என்று சத்குரு கேட்கிறார் என்றால், அவர் உண்டு பல மணி நேரங்கள் ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரியும். அவருக்குக் கொடுக்க இந்த ஆரஞ்சு பழங்கள் தவிர வேறெதுவும் என்னிடம் இல்லையே என்பது எனக்கு பெரும் வேதனையாக, வலியாக இருந்தது. அவர் அருகில் அமர்ந்து, அந்த ஆரஞ்சு பழங்களை உரித்து, துண்டுகளின் தோல் அகற்றி அவற்றை ஒரு தட்டில் அவருக்காக வைத்தேன். அந்த சிறு துண்டுகளை எடுத்து, ஒவ்வொன்றையும் ரசித்து சுவைப்பதுபோல், மெதுவாக, பொறுமையாக உண்டார். என் கையால் அவருக்கு நானே ஏதோவொன்றை வழங்கும் பாக்கியம் கிடைத்த அந்த நொடி, இதுநாள் வரை, என் வாழ்விலேயே மிக உயரிய உன்னதமான தருணங்களில் ஒன்றாக உள்ளது.

உலோக கட்டுமானத்துறை & பராமரிப்புத் துறை

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-sadhguru

தியானலிங்கப் பிரதிஷ்டை முடிந்தபின், அவ்விடத்தின் பராமரிப்பை சுவாமி நிசர்கா என்னை பார்த்துக்கொள்ளச் சொன்னார். அப்போது அங்கு மிகக் குறைவானவர்களே இருந்தோம். அதுமட்டுமல்ல, பணவசதியும் மிகக் குறைவு. அதனால் எந்தத் தேவை வந்தாலும், பிளம்பிங், எலக்ட்ரிகல், தொலைபேசி, கழிவுகள் நிர்வாகம் என எல்லாவற்றையும் நாங்களே கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. வெளிநபர்களை கூப்பிட்டால், அவர்களுக்கு கூலி கொடுக்கும் அளவிற்கு நம்மிடம் பணவசதி இருக்கவில்லை. அக்காலகட்டத்தில், பணத்தை எப்படியெல்லாம் மிச்சப்படுத்தலாம், செய்யும் வேலைகளின் செலவைக் குறைத்து இன்னும் திறம்பட எப்படியெல்லாம் செயல்படலாம் என்று நாங்கள் புதிதுபுதிதாய் யோசிப்போம். அவ்வளவு ஏன், தண்ணீர் தொட்டிகளை காலை நேரத்தில் நிரப்பக்கூட நம்மால் முடியாது. காரணம், அவற்றை நிரப்புவதற்குத் தேவையான மோட்டார் மின்சாரத்தை இரவு 10 மணிக்கு மேல்தான் மின்சார வாரியம் நமக்கு வழங்கியது.

நாம் சந்தித்த மற்றுமொரு பிரச்சினை - நீர் மேலாண்மை. தண்ணீர் செலுத்த ஆசிரமத்தில் நாம் ஆல்கத்தீன் பைப்புகளை உபயோகித்துக் கொண்டிருந்தோம். இது மாதத்திற்கு 2 அல்லது 3 முறை உடைந்துவிடும். ஒவ்வொரு முறை உடையும்போதும் கோவையில் இருந்து பிளம்பரை வரவழைக்க வேண்டியிருந்தது. செலவு என்பதைத் தாண்டி, அந்த சில மணிநேரங்களுக்கு தண்ணீர் பிரச்சினை நிலவும். அந்த நேரத்தில்தான் இந்தியாவில் பி.வி.சி பைப்புகள் பிரபலமாகிக் கொண்டிருந்தது. சுவாமி நிசர்காவிடம், ஆல்கத்தீன் பைப்புகளை அகற்றி, அதற்கு பதிலாக பி.வி.சி பைப்புகளை உபயோகிப்போம் என்று ஒரு யோசனையை முன்வைத்தேன். இது வேலை அதிகமாக இழுக்கும், செலவும் அதிகமாகும் என்றாலும் ஒப்புக்கொண்டார். இதை செயல்படுத்தியதும் ஆசிரமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் பெருமளவு குறைந்து, ஓரளவிற்கு நிலையானது.

இதன்பிறகு ஆசிரமத்திற்குத் தேவையான உலோகக் கட்டுமானப் பணிகளை (fabrication) என்னை கவனித்துக்கொள்ளச் சொன்னார்கள். இதில் எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது, ஆசிரமவாசிகள் தங்கும் சித்ரா கட்டிடம் மற்றும் சில காலம் கழித்து ஸ்பந்தா ஹாலிற்கு தேவையானதை உருவாக்குவதும்தான். சித்ரா கட்டிடத்திற்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் நாம் ஆசிரமத்திலேயே உருவாக்கினோம். இதில் ஈடுபட்டிருந்த யாருமே கட்டுமானப் பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் கிடையாது. அனைவரும் கற்றுக்குட்டிகள். இருந்தாலும் நாங்களே யோசித்துப் புரிந்து தேவையான அனைத்தையும் உருவாக்கினோம். அதிலும் ஸ்பந்தா ஹாலிற்குத் தேவையானதை உருவாக்குவது சிலிர்ப்பூட்டுவதாக, சவாலாக இருந்தது. ஸ்பந்தா ஹாலிற்குத் தேவையான கூரை, நடைபாதை, நுழைவாயில் கதவு, நுழைவாயிலில் இருக்கும் பாம்பு என அனைத்தும் தனித்துவமாக, அழகுநயம் மிளிர, அதேநேரம் குறைவான செலவில் செய்துமுடிக்கும் விதமான வடிவமைப்பை, சிரமமேயின்றி அத்தனை சுலபமாக சத்குரு வகுத்துக் கொடுத்தபோது நாங்கள் அசந்துபோனோம். வெகு சீக்கிரம் அனைத்தையும் கற்றுத்தேரும் திறமைசாலிகள் ஆனோம்... எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை! இன்றும்கூட அப்படித்தான் இருக்கிறது.

சத்குருவின் நம்பிக்கையை காக்கும் பொறுப்பு

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-with-sadhguru

2011ல் ஒருமுறை, இரண்டு அரசியல் தலைவர்களுடன் சத்குரு பேசிச்செல்ல அவர் பின்னே நான் நடந்து கொண்டிருந்தேன். திடீரென பின்னால் திரும்பி, “எத்தனைத் துறைகளை நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்கள், சுவாமி?” என்று சத்குரு என்னிடம் கேட்டார். “சில துறைகள்தான் சத்குரு,” என்றேன். “மொத்தம் எத்தனை பேர்கள் இருப்பார்கள்?” “100-150 பேர் இருப்பார்கள்,” என்றேன், ஏனெனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று அதுவரை நான் கணக்கிட்டதில்லை. அப்போது சத்குரு அவர்களிடம் சொன்னார், “பார்த்தீர்களா... ஒரு தலைவராக இருக்க வேண்டுமெனில் நீங்கள் அசாதாரண மனிதராக இருக்கவேண்டும் என்றில்லை. நோக்கத்தில் உறுதியும், மக்களுடைய நல்வாழ்வினை மனதிலும் வைத்திருந்தாலே போதும்,” என்றார். இந்த சிறு நிகழ்வு என் மீது அத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் சில வருடத்தில் group coordinator பொறுப்பை ஏற்கச் சொன்னபோது, அப்பெரும் பொறுப்பை ஏற்க எனக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. ஆனால், சத்குரு என் மீது வைத்த அந்த நம்பிக்கை, என்னைப் பற்றி அவர் கூறிய அந்த வார்த்தைகள் என் தயக்கங்களை தகர்த்தெறிந்தது. இப்போது நானும் இதே அடிப்படையில்தான் மற்றவர்களுடன் செயல்படுகிறேன்.

இங்கு இருப்பவர்கள் எல்லோருக்குமே சில தடைகள் இருக்கிறது. எனக்கும் உள்ளது. ஆனால் என்னிடம் இருக்கும் தடைகள், குறைகளைத் தாண்டி சத்குரு என்னை ஏற்று என்னுடன் செயல் செய்கிறார் என்றால், மற்றவர்களை தவிர்க்கவும் விலக்கவும் நான் யார்?

இது தவிர ஈஷாவின் செயல்பாடுகளுக்கு நான் எடுக்கும் முடிவுகள், மற்றுமொரு அடிப்படையையும் சார்ந்துள்ளது. ஈஷா அறக்கட்டளை என்பது மக்களின் நல்வாழ்விற்காக சத்குரு உருவாக்கியுள்ள ஒரு உயிரினம். அதிலும் குறிப்பாக, உலகம் தங்களுக்கு கொடுக்கக்கூடிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் விட்டுவிட்டு, தங்கள் வாழ்வை இங்கே அர்ப்பணிக்க வந்திருப்பவர்களின் நல்வாழ்விற்கு. ஆம், இது நிறுவனமல்ல, உயிரினம். இங்கு இருப்பவர்கள் எல்லோருக்குமே சில தடைகள் இருக்கிறது. எனக்கும் உள்ளது. ஆனால் என்னிடம் இருக்கும் தடைகள், குறைகளைத் தாண்டி சத்குரு என்னை ஏற்று என்னுடன் செயல் செய்கிறார் என்றால், மற்றவர்களை தவிர்க்கவும் விலக்கவும் நான் யார்? அதுமட்டுமல்ல. ஒருவரை நம்பி, செயல் செய்வதற்குத் தேவையான சுதந்திரத்தையும் அவருக்கு அளித்தால், தங்களின் தற்போதைய கட்டுப்பாடுகள் எதுவாக இருப்பினும் அதையெல்லாம் தாண்டி அவர்கள் மிகப் பிரமாதமாக செயல் செய்வதைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன். அதற்காக, தேவையிருக்கும்போது தீர்க்கமான முடிவுகளை நான் எடுக்கமாட்டேன் என்றில்லை. ஆனால், அதே நேரத்தில், ஒருவர் எதைச் செய்திருந்தாலும் அவர் மீது நான் வைக்கும் நம்பிக்கையை முழுவதுமாக கைவிட்டு விடமாட்டேன். சத்குருவின் அருளால் இந்தளவிற்கேனும் எனக்குள் முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஒரு உதாரணம்... பல வருடங்களுக்கு முன்பு ஒரு சேவாதார் பற்றி நிறைய புகார்கள் வந்துகொண்டிருந்தது. அவர் பல தவறுகள் செய்து கொண்டிருந்தார். எச்சரிக்கைகள் கொடுத்தும் அவர் தன்னை மாற்றிக்கொள்வதாக இல்லை. அதனால் அவரை ஆசிரம வேலையில் இருந்து நிறுத்தி வெளியே அனுப்பினேன். அப்படி அனுப்பும்போது, அதற்கான காரணத்தையும் விளக்கினேன். நான் பேசும்போது அவர் சோகமாக நின்று கேட்டுக் கொண்டிருந்தார், எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், வேறு வழியிருக்கவில்லை. சில வருடங்கள் கழித்து நான் தியானலிங்கத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது ஒரு நபர் பல நாள் நண்பர் போல் என்னிடம் வேகமாக ஓடிவந்தார். என்னால் அவரை அடையாளம் காணமுடியவில்லை. “சுவாமி, என்னை அடையாளம் தெரியவில்லையா? என்றார் அவர். “நான் செய்வது சரியல்ல என்று சொல்லி வேலையில் இருந்து என்னை வெளியனுப்பினீர்களே... நினைவிருக்கிறதா?” என்று தொடர்ந்தார். “அது என்னை மிகவும் பாதித்தது. நான் செய்து கொண்டிருந்த தவறுகளை அப்போது நான் உணர்ந்தேன். என்னை திருத்திக்கொள்ளவும் முயற்சி மேற்கொண்டேன். இப்போது நான் வேறு இடத்தில் வேலைக்குச் சேர்ந்து நன்றாக இருக்கிறேன்,” என்று சொல்லி தன் நன்றியை வெளிப்படுத்தினார். என் மனதில் இருந்த பாரம் லேசானது.

இந்த ஜி.சி பொறுப்பில் இருப்பதால் ஆலோசனை பெறுவதற்கும், சத்குருவிற்கு தேவையானதை செய்வதற்கும் அவ்வப்போது அவருடன் நான் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் என்னை அளவுகடந்த வியப்பில் ஆழ்த்துவது, எல்லாவற்றையும், எல்லோரையும் தனக்குள் ஒரு பாகமாக ஏற்று சத்குரு அரவணைக்கும் விதமும், சுற்றியிருக்கும் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், தான் எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும் அவர் தன்னை ஒருவிதமாக வைத்துக்கொள்வதும்தான். அவ்வளவு ஏன், ஈஷாவைப் பற்றி அவதூறாகப் பேசி பிரச்சினை எழுப்பியவர்கள், வேறு ஸ்தாபனங்களை உயர்த்துவதற்காக ஈஷாவை கீழிறக்கும் நோக்கத்தோடு இருப்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் ஏதேதோ காரணங்கள் சொல்லி சத்குருவைப் பார்க்க வந்தாலும், சிறிதளவுகூட எதிர்ப்போ தடையோ அவரிடம் பார்க்கமுடியாது. “என் வேலை 710 கோடி மனிதர்கள் சம்பந்தப்பட்டது. இவர்களும் மனிதர்கள்தானே. என்ன ஒன்று... இவர்களுக்கு இன்னும் சிறிது அதிகப்படியாக வேலை தேவைப்படும், அவ்வளவுதான்,” என்பார். சிலசமயம், நாள் முழுவதும் இடைவெளியே இன்றி ஒருவர் மாற்றி ஒருவரோடு அவர் சந்திப்புகளில் இருப்பார். அதைப் பார்க்கும்போது என் மனதில், வலி ரணமாய் அறுக்கும். ஆனால், அவரோ நாளின் முடிவிலும் காலையில் காணப்படும் அதே உற்சாகத்துடன் இருப்பார். எந்த சமயத்திலும், தன் நாய்களுடன் எப்படி ஓடி விளையாடுவாரோ அதே தெம்போடு, அதே வேகத்தோடு விளையாடுவார்!

சத்குருவிற்கு அருகாமையில்

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-nandikesha-pic-10

மனித நல்வாழ்வில் சத்குருவிற்கு இருக்கும் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்யும். சமீபத்தில், கோவில் பராமரிப்பு பணியில் இருக்கும் அனைவருடனும் தியானலிங்கத்தில் இருந்து சர்ப்பவாசல் வரை சத்குரு நடந்துவந்தார். வழியில், நாம் கவனித்து சீர்செய்ய வேண்டிய பல விஷயங்களை சுட்டிக்காட்டினார். ஆதியோகியை சென்றடைவதற்குள் அந்த பட்டியல் வெகு நீளமாக ஆகிவிட்டது. அங்கே ஆதியோகி முன் அவர் கைகூப்பி தலை வணங்கிவிட்டு, “இங்கே நடந்து கொண்டிருப்பது மனித நல்வாழ்விற்கு மிகமிக முக்கியமான ஒன்று. இதை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கிறேன். தயவுசெய்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றார். இவ்வார்த்தைகளை அவர் கூறியபோது, என் கண்களில் வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆதியோகி பிரதிஷ்டைக்குப்பின், தியானலிங்கத் திருப்பணி பலமடங்கு அதிகமாகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதியோகியை தரிசிக்கவும், ஆசிரமத்தைக் காணவும் வருவது நல்லதுதான். இருந்தாலும், பல சமயங்களில் நம்மிடம் இருக்கும் குறைவான மக்களைக் கொண்டு சூழ்நிலையை சமாளிப்பது பெரும் சவாலாக ஆகிவிடுகிறது. இருந்தும், சத்குரு இதை வாய்திறந்து சொல்லும் சூழ்நிலை வந்துவிட்டதே என்பதை என்னால் தாங்க முடியவில்லை. அதனால், எங்கள் அணியிலும், வேலைகளை எங்களுக்குள் பிரித்துக் கொள்வதிலும் சில மாற்றங்கள் செய்து இதை சரிப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். இதுபோல் திடீரென நாம் செய்யும் மாற்றங்கள் சிலருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், எல்லோரும் “மனித நல்வாழ்வு” எனும் ஒரே நோக்கில் தங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் ஒன்றாக சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கும்போது அற்புதமாக உள்ளது.

“இங்கே நடந்து கொண்டிருப்பது மனித நல்வாழ்விற்கு மிகமிக முக்கியமான ஒன்று. இதை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கிறேன். தயவுசெய்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றார்

சத்குருவின் அருகில் இருப்பது பல சமயங்களில் உங்களுக்கு வேண்டாத, அத்தனை விருப்பமில்லாத சூழ்நிலைகளுக்கும்கூட உங்களை ஆட்படுத்திவிடும். என்னையே உதாரணமாக எடுத்துக் கொண்டால், எனக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் சத்குருவின் அருகாமையில், அவர் இருக்கும் இடங்களில் வந்துபோகும் பாம்புகளை சமாளிப்பது. பாம்புகளைப் பார்த்தால் எனக்கு பயம். இதை வைத்து அவர் என்னை பலமுறை கிண்டல் செய்திருக்கிறார். அதோடு பாம்புகளை கையாளக் கற்றுக்கொள்ளவும் பலமுறை அவர் என்னை உந்தியிருக்கிறார். இப்போது சமீபத்தில்கூட 6 அடி நீளமான ஒரு பாம்பு சத்குருவின் குளியலறைக்குள் சென்றுவிட்டது. என்ன செய்வது என்று புரியாமல், அவரிடம் வந்து முறையிட்டேன். “அதைப் பிடித்து வெளியே விட்டுவிடுங்களேன்,” என்று சாதாரணமாகச் சொன்னார். நான் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்தும் நகராமல் அப்படியே நின்றிருந்தேன். “என்னால் முடியாது” என்று நான் நிற்பதைப் புரிந்துகொண்டு, அப்பாம்பை வெளியில் எடுத்துவிட அவரே சென்றார். அதன்பின் ஒரு தரிசன நேரத்தின்போது, என்னுடன் பல காலமாக இருந்தும் பாம்புகளை கையாள, இன்னும் ஒரு சுவாமி கற்றுக் கொள்ளவில்லை என்று சத்குரு சொன்னதும் என்னைப் பற்றித்தான். இதில் அதிசயம் என்னவென்றால், அன்று காலைதான் சுவாமி ஹகேஷா ஒரு சிறு சாரைப் பாம்பு ஒன்றை என்னிடம் கொடுத்து அதை பிடித்துப் பார்க்கச் சொன்னார். விருப்பமேயின்றி என் கையை நீட்டி அப்பாம்பை வாங்கி, “இனியாவது நான் பாம்புகளை கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்!” என்று நினைத்திருந்தேன். அன்று மாலையே எனக்கு இருக்கும் இந்தப் பெரிய தடையை சத்குருவும் சுட்டிக்காட்டினார். அதனால், இந்தத் தயக்கத்தை, பயத்தை மாற்ற நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

சத்குருவுடன் மிக நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தாலும் அவரை நான் ஒரு மனிதராகப் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை, அவர் சிவன்தான். சத்குருவின் உயிர்சக்தி அரவணைக்க, பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இடத்தில் வாழமுடிவது என் பாக்கியம். இன்று எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, இன்று என்னால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அது அனைத்தும் நான் சத்குருவிடமும், இப்புனிதப் பயணத்தில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களிடமும் கற்றுக்கொண்டதுதான்.