ஸ்பந்தா ஹால் பிரதிஷ்டையிலிருந்து ஆதியோகி ஆலயப் பிரதிஷ்டை எந்த வகையில் மாறுபட்டது?
 
 

Question:அமெரிக்காவிலுள்ள ஈஷாவின் மஹிமா மற்றும் இங்குள்ள ஸ்பந்தா ஹால் பிரதிஷ்டையிலிருந்து ஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை எந்த வகையில் மாறுபட்டது என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

உங்களுடைய அனுபவத்திலிருந்தே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் தியானலிங்கத்திலோ அல்லது லிங்கபைரவி வளாகத்திலோ போய் உட்கார்ந்தால், உங்களால் அங்கு ஏதாவது வித்தியாசத்தை உணர முடிகிறதா? அங்கு நடைபெறும் சடங்குகள், உங்களது உணர்ச்சிகளையெல்லாம் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள். வெறுமனே அங்கு சென்று உட்கார்ந்திருக்கும்போது உங்களுக்கு ஏதாவது வித்தியாசத்தை உணர முடிந்தால், நான் சொல்லப் போகும் பதில் உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கிறது. இல்லாவிட்டால், இதை நீங்கள் புரிந்து கொள்வது கடினம்.

ஸ்பந்தா ஹால் அனைத்து வகையினரையும் மிகச் சுலபமாக இளகச் செய்து, தியானலிங்கத்துடனும் லிங்கபைரவியுடனும் குறிப்பிட்ட விதத்தில் ஒத்திசைவையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

மஹிமா பிரதிஷ்டை செயல்முறை, அமெரிக்க மக்களை பயமுறுத்தாத வகையில் மிக மென்மையாக, சூட்சுமமான முறையில் செய்யப்பட்டது. ஆதியோகி ஆலயப் பிரதிஷ்டை முறை அவர்களை கலவரப்படுத்தியிருக்கும் (சிரிக்கிறார்கள்). இவர் (ஆதியோகி) பார்ப்பதற்கு சற்று பயமுறுத்தும் விதத்தில் காட்சியளிப்பது போலவே சக்திநிலையிலும் சற்று தீவிரமானவராகவே இருப்பார்.

மஹிமா மிகவும் மென்மையான, சூட்சுமமான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தியாவில் செய்வதைப்போல அமெரிக்காவில் செய்யமாட்டேன். இங்கு நாம் அனைத்தையும் உறுதியான முறையில் செய்ய விரும்புகிறோம், ஏனென்றால் தமிழ் மக்களுக்கு இப்படி இருப்பதுதான் பிடிக்கும் (சிரிக்கிறார்கள்).

மஹிமாவில் செய்யப்பட்டது மிகவும் சூட்சுமமான, மென்மையான பிரதிஷ்டை செயல்பாடு. அந்த செயல்பாடு முழுவதும் ஆரோக்கியம் மற்றும் தியானத் தன்மையை உருவாக்கும் குறிப்பிட்ட நோக்கத்துக்காக செய்யப்பட்டது. நிச்சயமாக அது ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும், தியானத் தன்மையையும் உருவாக்கும். மனநிலையில் சமநிலையைக் கொண்டு வருவதுதான் மஹிமா பிரதிஷ்டையின் முக்கியமான நோக்கமாக இருந்தது, ஏனென்றால் அதுதான் மேற்கத்திய நாடுகளில் பெரிய பிரச்சனையாக இருப்பதை நான் கண்டேன். அங்கிருக்கும் மக்கள் துயரப்படுவதற்குக் காரணம், அவர்களுக்கு மனதளவில் சமநிலை இல்லை. அவர்கள் சுலபமாக சுழற்சிகளில் சிக்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆகவே நாம் மஹிமா பிரதிஷ்டை செய்தபோது, அவர்களது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் அந்த மன சமநிலையின்மையை சரி செய்வதே நம்முடைய முக்கிய நோக்கமாக இருந்தது. முக்கியமாக, இதனை மனதில் வைத்தே மஹிமா பிரதிஷ்டையை நிகழ்த்தினோம்.

ஸ்பந்தா ஹாலை நாம் பாவஸ்பந்தனா மற்றும் சம்யமா நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கினோம். சம்யமாவைவிட பாவஸ்பந்தனாவுக்காகத்தான் முக்கியமாக எழுப்பினோம். அது ஒரு கொதிஉலை போன்றது. பாவஸ்பந்தனா நிகழ்ச்சிகள் அங்கு மிக அற்புதமாக நிறைவேறுவதற்கு ஸ்பந்தா ஹால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முறைதான் காரணம். பாவஸ்பந்தனா நிகழ்ச்சியை நடத்தும் ஆசிரியர்கள், அந்நிகழ்ச்சியை வேறொரு இடத்தில் நடத்துவதற்கும், ஸ்பந்தா ஹாலில் நடத்துவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை மிகத் தெளிவாக உணர முடியும்; அதற்குக் காரணம் ஸ்பந்தா ஹால் அவ்விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்பந்தா ஹால் அனைத்து வகையினரையும் மிகச் சுலபமாக இளகச் செய்து, தியானலிங்கத்துடனும் லிங்கபைரவியுடனும் குறிப்பிட்ட விதத்தில் ஒத்திசைவையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆனால் மஹிமா அப்படி உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அதிகமான தியானத்தன்மையுடன், மனதளவில் சமநிலையை வழங்குகிறது. உண்மையில் மஹிமா ஹால் உருவாக்கும் இந்த மனோதிடம் மற்றும் சமநிலை, பாவஸ்பந்தனாவில் நிகழும் பரவச நிலை உருவாவதை சற்று சிரமப்படுத்துகிறது. மஹிமாவில் சக்திநிலை ஒரு சமநிலையை அடைய முயல்கிறது, ஆனால் நாமோ மக்களை உச்சநிலைக்கு மேலெழுப்ப தூண்டுகிறோம். ஆனால் மஹிமாவில் சம்யமா நிகழ்ச்சிகள் மிகவும் அற்புதமாக நிகழ்ந்தேறும். அங்கு நாம் ஒரே ஒரு சம்யமா நிகழ்ச்சியைத்தான் நடத்தினோம், அது அத்தனை அற்புதமானதாக இருந்தது. ஆனால் அங்கு பாவஸ்பந்தனா நிகழ்ச்சி நடத்துவது கொஞ்சம் கஷ்டம்தான், ஏனென்றால் அங்கு மனதின் சமநிலையைக் கொண்டு வருவதை மனதில் வைத்துதான் பிரதிஷ்டை செயல்பாட்டை செய்தோம். ஆனால் பாவஸ்பந்தனாவில் கலந்து கொள்பவர்கள் பரவச நிலையை அடைய வேண்டும் என்று நாம் விரும்புவதால், ஸ்பந்தா ஹால் வேறுவிதமான தன்மையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நீங்கள் தியானலிங்கத்துக்குச் செல்லும்போது, சரியான அளவில் தயாராக இல்லாவிட்டால், அங்கு ஒரு பெரிய பாறை நின்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றும்.

இந்த ஆதியோகி ஆலயம் பலவகைப்பட்ட செயல்பாடுகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் இவ்விடம் யோகத்திற்காக எழுப்பப்பட்டுள்ளது. நாம் யோகா என்று சொல்லும் போதே அதில் அத்தனையும் அடங்கிவிடும்.

யோகத்தின்படி ஆதியோகி லிங்கம் தியான லிங்கத்தின் சிறிய ரூபம் எனலாம். யோகா அல்லது யோகப் பாதை என்பதை உங்கள் உடலிலிருந்து துவங்கி நீங்கள் யார் என்பது வரை பல பரிமாணங்களுக்கு எடுத்துச் சென்று, உயிரின் அடியாழத்துக்குக் கொண்டு போய் சேர்க்கும். அந்த வகையில் பார்த்தால், ஆதியோகி லிங்கம் மிகுந்த திறமைசாலி. இந்த இடத்தைப் பிரதிஷ்டை செய்ததைப்போல நாம் வேறெந்த இடத்தையும் பிரதிஷ்டை செய்ததில்லை, ஏனென்றால் இந்த இடம் யோகப் பரிமாணத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் ஆராய்கிறது.

இங்கு அமர்ந்து கொண்டு உங்கள் உடலின் தன்மையை கவனிக்கத் துவங்கினால், இந்த லிங்கம் உங்களை இன்னும் அதிக வேகமாக, உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத தூரத்துக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடியும். நாம் ஹட யோகம் செய்யும்போதும், அல்லது வேறெந்த வகையான தியான செயல்முறைகளைச் செய்யும்போதும், கண்களை மூடிக் கொண்டு செய்யும் எந்த ஒரு ஆராய்ச்சியாக இருந்தாலும், அது இங்கு மிக அற்புதமாக நடந்தேறும்.

ஆதியோகி ஆலயம் பாவஸ்பந்தனாவுக்கு அத்தனை சிறந்த இடமாக இருக்காது, ஏனென்றால் இங்கு மிக அதிகமாக சமநிலை ஏற்படுகிறது. பாவஸ்பந்தனாவுக்கு கொஞ்சம் பித்துநிலை வேண்டுமென்று நினைக்கிறோம். மக்கள் அந்த நிலையை அடையாவிட்டால், பாவஸ்பந்தனா வெற்றியடையாது. ஆம்! அவர்கள் கொஞ்சம் தரையிலிருந்து எழும்பிப் பறக்கவேண்டும்; அது ஆதியோகி ஆலயத்தில் சாத்தியமில்லை என்பதில்லை. அதை இங்கும் செய்யமுடியும். ஆனால் நாமே கொஞ்சம் நாடி அறிந்து கொள்ளக் கூடிய தன்மையில் இருக்கிறது. பேரானந்தத்தை வரவழைப்பதை விட உங்களை உள்நிலையை நோக்கி செலுத்தக் கூடியதாக இருக்கிறது. நீங்கள் ஸ்பந்தா ஹாலுக்குள் நடந்து சென்றால், இங்கிருப்பதை விட இன்னும் பேரானந்தமாக உணர முடியும். ஆனால் இங்கு உட்கார்ந்திருக்கும்போது இங்கு என்ன வழங்கப்படுகிறதோ அது உங்களுள் மெதுவாக ஒன்றாவதை நீங்கள் உணர முடியும்.

நீங்கள் தியானலிங்கத்துக்குச் செல்லும்போது, சரியான அளவில் தயாராக இல்லாவிட்டால், அங்கு ஒரு பெரிய பாறை நின்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். உங்களுக்கு வேறெதுவும் தெரியாது. ஆனால் லிங்கபைரவி கோவிலுக்குள் செல்லும்போது, பளீரென்று உங்களை தாக்கிவிடும், ஏனென்றால் அது பேரானந்த அதிர்வில் இருக்கிறது; தியானலிங்கம் முழு அசைவற்ற நிலையில் சலனமில்லாமல் அமர்ந்துள்ளது. அந்த பேரானந்தத்தை உணர்வதை விட, இந்த அசைவற்ற நிலையை உணர்வதற்குத்தான் அதிக முயற்சி தேவைப்படும். அங்கு ஏற்கனவே பேரானந்த நிலை இருப்பதால் அதை உணர்வது எளிது; அந்த அசைவற்ற நிலையை நீங்கள்தான் கண்டுணர வேண்டும், இல்லாவிட்டால் அதை கவனிக்கத் தவறிவிடுவீர்கள்.

ஆதியோகி ஆலயம், அடிப்படையில் நாமே நாடி அறியும் தன்மை உடையதாய் உள்ளது. நீங்கள் அவரை ஆழமாக நாடினால், அவர் உங்களை இன்னும் ஒரு படி மேலே அழைத்துச் செல்வார். அதாவது, நீங்கள் நூறு ரூபாய் சம்பாதித்தால், அவர் உங்களுக்கு இன்னுமொரு நூறு ரூபாய் ஊக்கத்தொகையாகத் தருவார். இது ஒரு நல்ல பேரம், இல்லையா? கண்டிப்பாக.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1