ஈஷா யோக மைய வளாகத்திலுள்ள சில கட்டிடங்கள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன என்று சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. வஞ்சகமாக புனையப்பட்ட இந்த தாக்குதல் முற்றிலும் தவறானது. ஒரு குரலில் மீண்டும் உரக்கச் சொல்கிறோம், ஈஷா யோக மையத்திலுள்ள அனைத்து கட்டிடங்களும் சட்டப்பூர்வமானது, சட்டத்திற்கு புறம்பானது அல்ல.

பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட அதே பழைய அவதூறுகளை கிண்டி, புதுச்சாயம் பூசி இந்த கட்டுரையை எழுதியுள்ளனர். இந்த அவதூறுகள் குறித்த அனைத்து ஆதாரங்களும் ஏற்கனவே பொதுத் தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன, அதற்கு உண்டான விவரங்களும் ஈஷாவின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து ஈஷா பொதுச் சபையில் அளித்துள்ள விவரங்களை பற்றி ஒற்றை குறிப்பைக்கூட இக்கட்டுரை கண்டு கொள்ளவில்லை என்பதே இது உள்நோக்கத்துடன் நயவஞ்சகமாய் ஈஷா மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் புனையப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை நிரூபணம் செய்கிறது.

சென்னையில் நடைபெற்ற 59வது மலைத்தள பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில், ஈஷா யோக மையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான அனுமதி உத்தரவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

உண்மை மீது நாட்டமுள்ளவர்களுக்காக அந்த உத்தரவு கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

59th-haca-order-minutes-isha-foundation

"கட்டப்பட்டுள்ள இடம்" என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் யாவும், யோகப் பயிற்சிகள்‌‌ கற்றுக் கொடுக்க பயன்படுத்தப்படும் இடங்களாகும். இந்த யோகப் பயிற்சிகளின் மூலம் பல லட்சம் மக்கள் உடல்நலமும், மனவலிமையும் பெற்று பயனைடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் கிட்டதட்ட ஒரு லட்சம் மக்கள் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் யோக வகுப்புகளில் பங்கேற்கின்றனர். பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கும், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவோருக்கும் மக்களின் நல்வாழ்வின் மீது அக்கறை இல்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவை வெறும் கட்டிடங்கள் அல்ல, மக்களின் உடல், மன நல்வாழ்விற்காகவும் லட்சக்கணக்கான சாதகர்களின் ஆன்மதேடுதலுக்கு உதவிப் புரிவதற்காகவும் எழுப்பப்பட்டுள்ள பயன்பாட்டுக் கருவிகள் இவை.

வெகு நாட்களாக ஈஷா மீது பொய்யையும் புரட்டையும் கிளப்பி,‌ ஏதோவொரு லாபத்திற்காக பணி செய்து வரும் அனைத்து நிறுவனங்களும், தனிநபர்களும் உங்கள் வேலைகளை வேறு பக்கம் முயற்சி செய்யலாம். உங்களது அடுத்தடுத்த முயற்சிகள் ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்களை எவ்விதத்திலும் முடக்காது, மக்கள் நல்வாழ்வை முன்னிறுத்தி ஈஷா முன்னெடுக்கும் செயல்களின் வேகத்தையும் குறைக்காது. இனம், அந்தஸ்து, மொழி, மதம், ஜாதி என அனைத்து வேறுபாடுகளையும் உடைத்தெறிந்து, உலகம் முழுமைக்கும் உடல், மன,‌ ஆத்ம நலனை வழங்கக்கூடிய இவ்வியக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்றிட உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.