தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் – சத்குருவின் பார்வையில்

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனுடனான சத்குருவின் உரையாடலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கட்டுரை, சர்ச்சை மற்றும் குழப்பத்தில் சிக்கியுள்ள - தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் பற்றி விவரிக்கின்றது.
 

சத்குரு: இது வரலாற்று ரீதியாகவோ அல்லது குடும்பங்களுக்குள்ளோ அல்லது தனிநபர்களுடனோ நாம் கவனிக்க வேண்டிய ஒரு நிகழ்வு - மனிதர்கள், நல்வாழ்வில் கூட சோர்வடைகிறார்கள்; அவர்களுக்கு நல்வாழ்விற்கு மாற்றாக கொஞ்சம் சிரமம் வேண்டும் என்று கருதுகிறார்கள்! அமெரிக்காவை கவனியுங்கள், நெடுஞ்சாலைகளை உருவாக்க கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்தது, ஆனால் இப்போது எல்லோரும் கரடுமுரடான பாதையில் பயணிக்கும் வாகனங்களை வாங்குகிறார்கள். ஏனென்றால், மக்கள் சில சிக்கல்களையும், சிறிது குழப்பத்தையும் விரும்புகிறார்கள். அதிகப்படியான ஒழுங்குமுறைகள் சிலநேரங்களில் ஒரு மனிதனில் குறிப்பிட்ட அளவிலான எரிச்சலை உண்டாக்குகிறது.

..இன்று, நீங்கள் இந்தியாவின் கோடியில் இருக்கும் கிராமத்திற்குச் சென்றாலும், நாங்கள் வகுப்புகள் எடுக்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றாலும், போலியோ பாதிப்புக்குள்ளான ஒரு குழந்தையை கூட பார்க்க முடிவதில்லை. இது மிக அருமையான விஷயம்.

எனவே, இந்தத் தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரம் குறிப்பாக கலிபோர்னியாவில் அதிகரித்து வருகிறது. நிறைய பெற்றோர்கள் வந்து இதைப் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம், “அந்தப் பிரச்சாரத்தை நம்பி முட்டாளாக வேண்டாம்.” ஒருவேளை, உங்கள் குழந்தை போலியோ அல்லது வேறு எந்த நோயினாலாவது முடங்கிப்போனால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்."

இதை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன் - நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, போலியோவினால் பாதிப்புக்குள்ளான நான்கு மாணவர்கள் இருந்தனர் - அவர்களில் மூன்று சிறுவர்கள், ஒரு சிறுமி - சக்கர நாற்காலியில்தான் பள்ளிக்கு வருவார்கள். ஆனால் அந்த நாட்களில், சக்கர நாற்காலிகள் உள்ளே செல்ல முடியாத பல இடங்கள் இருந்தன, எனவே அவர்கள் தங்கள் உடம்பை இழுத்துக்கொண்டு செல்வார்கள். அவர்களை அப்படிப் பார்ப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஆனால் இன்று, நீங்கள் இந்தியாவின் கோடியில் இருக்கும் கிராமத்திற்குச் சென்றாலும், நாங்கள் வகுப்புகள் எடுக்கும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றாலும், போலியோ பாதிப்புக்குள்ளான ஒரு குழந்தையை கூட பார்க்க முடிவதில்லை. இது மிக அருமையான விஷயம்.

தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம்

இந்த தடுப்பூசிகளின் மதிப்பை நாம் உணரவில்லை. துரதிர்ஷ்டவசமாக, நாம் நல்வாழ்வில் கூட சோர்வடைகிறோம், மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். அதேவேளை, கலிபோர்னியாவில் உள்ள சில பெற்றோர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர்கள் குழந்தைகளுக்கு நாற்பது வகையான தடுப்பூசிகள் போடுவதாக சொன்னார்கள். அமெரிக்காவில் இதை கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்துகிறார்களோ என தோன்றுகிறது. குழந்தைகளில் செயலிழக்கச் செய்யும் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் அடிப்படை விஷயங்களுக்கு சிகிச்சை அளிப்பதை விடுத்து, சுகாதார அமைப்பு எல்லாவற்றிற்கும் தடுப்பூசி கொடுக்க முயற்சிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

இது குறித்து விமர்சனம் செய்ய நான் மருத்துவ நிபுணர் அல்ல, ஆனால் பெற்றோரின் பேச்சைக் கேட்பதில் இருந்துதான் இதை நான் கூறுகிறேன். எல்லாவற்றிற்கும் தடுப்பூசி என்ற முடிவு அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். ஒரு குழந்தைக்கு காய்ச்சலோ அல்லது சளியோ பிடித்தால் பரவாயில்லை, அவர்கள் வளர்ந்து வரும்போது இந்த நோய்களில் சிலவற்றைச் சந்திப்பது சரிதான். ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையில்லாத பல விஷயங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குகிறார்கள். இன்றைய பெற்றோர்கள் இதன் மூலம் கற்றல் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் சிக்கலை ஏற்படுத்துமோ என்று கருதுகிறார்கள். எனவே இந்த பயமே பரப்பப்படுகிறது.

ஒரு நடைமுறை தீர்வு

தடுப்பூசிகள் நம் வாழ்வில் ஒரு சக்தியையும் நல்வாழ்வையும் கொண்டுவந்துள்ளன - நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் இன்று இங்கு அமர்ந்திருக்கிறோம். இல்லையெனில் நாம் நிச்சயமாக இங்கே இருந்திருக்கமாட்டோம்.

எது அவசியம், எது தேர்வு என்பது குறித்து நம்பகமான அறிவியல் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டால் நல்லது.

பிரச்சனை இதுதான் - குறிப்பாக இப்போது சமூக ஊடகங்கள் காரணமாக - நாம் இப்படி செல்கிறோம் அல்லது அப்படி செல்கிறோம். உதாரணமாக, அமெரிக்காவில் கொடுக்கும் தடுப்பூசிகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். உலக சுகாதார நிறுவனங்கள் மக்களிடம், “இவ்வளவு தேவையில்லை – இவையெல்லாம் கண்டிப்பாக போடக்கூடிய தடுப்பூசிகள், மற்றவை உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் போட்டுக்கொள்ளலாம்" என்று வலியுறுத்தி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால், மக்களது ஆரோக்கியத்தின் விகிதம் சற்று கூடும் என்று நினைக்கிறேன்.

மறுபுறம், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக தடுப்பூசி போடுவதில்லை. நான் அவர்களிடம் கூறுவேன், “நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக தடுப்பூசி போடாமல் இருந்தால், நீங்கள் உங்கள் குழந்தையை இழக்க நேரிடும்.” இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் - குழந்தை பள்ளிக்குச் செல்வதோடு அவர்கள் வாழ்க்கை முடியப்போவதில்லை என்று அறிவுருத்துவேன். ஆனால் தடுப்பூசியானது, தங்கள் குழந்தைகளின் மூளைக்கு சேதம் விளைவிக்கும் என்ற அச்சத்தில், அவர்கள் இந்த வகையான தவறான முடிவுக்கு செல்கிறார்கள்.

WHO போன்ற ஒரு அமைப்பின் தெளிவான அறிக்கை பெற்றோரை அவசியமானவற்றை தேர்வு செய்ய உதவும் என்று நினைக்கிறேன். எது அவசியம், எது தேர்வு என்பது குறித்து நம்பகமான அறிவியல் தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டால் நல்லது.

ஆசிரியர் குறிப்பு: இந்த விவாதம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் 2019 ஜூன் 27 அன்று நடந்தது. இது உலக சுகாதார அமைப்பால் (WHO) வழங்கப்பட்டது. இதன் விரிவான விளக்கம் இங்கு உள்ளது .