நோய்கள் வருவதன் காரணம் என்ன?
கர்மாவைப் பற்றி நாம் நிறைய கேள்விப்படுகிறோம். ஆனால் நோய்கள் வருவதும் கர்மாவினால் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சரி இதன் அடிப்படை என்ன? நோய்கள் வருவதன் காரணம் என்ன? இதை தீர்க்க வழி என்ன? இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு...
கர்மாவைப் பற்றி நாம் நிறைய கேள்விப்படுகிறோம். ஆனால் நோய்கள் வருவதும் கர்மாவினால் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சரி இதன் அடிப்படை என்ன? நோய்கள் வருவதன் காரணம் என்ன? இதை தீர்க்க வழி என்ன? இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு...
சத்குரு:
காரணம், விளைவு என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் தான் புறநிலை வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பருகக்கூடாத ஒன்றைப் பருகவோ, உண்ணக் கூடாத ஒன்றை உண்ணவோ செய்தால் ஒரு தொற்று நோய் உங்களுக்கு ஏற்படுகிறது.
நீங்கள் செய்த ஒரு செயலினுடைய விளைவு இந்தத் தொற்று நோய். எனவே நீங்கள் தொற்றுநோயைக் கொல்லக்கூடிய மருந்துகளை உட்கொள்ளுகிறீர்கள். தொற்றுநோயை ஏற்படுத்திய காரணத்தை அந்த மருந்தால் கொல்கிறீர்கள். ஏனென்றால் அது வெளிநிலையில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உள்நிலையிலே சில நோய்கள் ஏற்படுகிற போது தொற்றுநோயோடு ஒப்பிட்டால் இன்னும் ஆழமான காரணங்களால் அவை ஏற்படுகின்றன. சமச்சீரற்ற ஒரு தன்மையினாலோ சக்திநிலையில் ஏற்பட்டிருக்கிற கோளாறுகளினாலோ சில நோய்கள் ஏற்பட்டு, அவை உடல்நிலையிலோ அல்லது மனநிலையிலோ வெளிப்படும்.
Subscribe
ப்ராணிக் ஹீலிங்
இப்போது பரவலாகப் பேசப்படும் ப்ராணிக் ஹீலிங் ஆகட்டும் மற்ற ஹீலிங் முறைகளாகட்டும், விளைவை மட்டுமே அவை அகற்றுகின்றன. உங்கள் சக்திநிலையில் ஓரளவு உங்களுக்கு ஆளுமை வந்துவிடுகிறது என்றால் காரணத்துக்கும், விளைவுக்கும் இடையிலே நீங்கள் ஒரு திரையைப் போட்டுவிடுகிறீர்கள். இதனால் விளைவு கரைந்துபோகிறதே தவிர, காரணம் அப்படியே இருக்கிறது.
இயற்கையைப் பொறுத்தவரை, உயிர் எனும் சக்திநிலையைப் பொறுத்தவரை, விளைவு என்பதே உள்ளே ஒரு காரணம் இருப்பதை உங்களுக்குக் காட்டிக் கொடுப்பதற்குத் தான். நீங்கள் எதை காரணம் என்று அழைக்கிறீர்களோ அது சக்திநிலையை சற்றே சலனப்படுத்தி, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.
உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆஸ்துமாவை நான் அகற்றிவிடுகிறேன். ஆஸ்துமா இல்லாமல் உங்களுக்குள் அதேவிதமான சக்திநிலை இருக்கிறபோது உங்களுக்கு வேறுவிதமான சீர்கேடுகள் எந்த விநாடியிலும் ஏற்படலாம். நோயை நீங்கள் அகற்றி இருப்பீர்கள், மாறாக ஒரு விபத்து ஏற்படக் கூடும்.
‘ஆஸ்துமா’ என்பது ஆழ்நிலையில் இருக்கிற ஒரு தொந்தரவின் வெளிப்பாடுதான். ஆஸ்துமாவை மட்டும் அகற்றிவிட்டால் அது வேறுவித தீமையாகவோ அசம்பாவிதமாகவோ நிகழலாம். ஏனென்றால் உங்கள் சக்திநிலைகள் இன்னும் அதே சூழலில் தான் இருக்கின்றன. அதன் விளைவுகள் மட்டுமே அகற்றப்பட்டிருக்கின்றன. எனவே இன்னும் ஆழமாக, இன்னும் துல்லியமாக அது மற்றொரு விளைவை ஏற்படுத்தும். அதற்குப் பதில் அந்த நோய் குறித்த விழிப்புணர்வை உங்களுக்குக் கொண்டு வருகிறபோது, அந்த நோய்க்கான காரணத்தோடும் நீங்கள் தொடர்பு கொள்கிறீர்கள். தொடர்பு படுத்தப்படுகிறீர்கள்.
நோய் குறித்த விழிப்புணர்வு என்று நாம் பேசுகிற போது, என்ன இருக்கிறதோ ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது நோயிடம் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. நோய் குறித்த உண்மையான விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்படுகிறபோது, அந்த நோய்க்கு என்ன காரணம் என்கிற விழிப்புணர்வும் ஏற்படும். உங்கள் உடம்பின் எந்த ஒரு பாகத்திற்கு நீங்கள் சக்திநிலையில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், உடனே அங்கே செயல் தூண்டப்பட்டு சில விஷயங்கள் அங்கே நடக்கின்றன.
இதைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டுமானால் உங்கள் உடலின் ஏதாவது ஒரு பாகத்தின் மீது முழு கவனத்தை செலுத்தி வெறுமனே இருந்தால், அங்கே சக்திநிலையில் எழுச்சி ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள். ஏனென்றால் உடம்பின் அந்த பாகத்திற்கு ஒரு விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். அங்கே உயிர் சக்திகள் ஊட்டம் பெறுகின்றன. இப்படி ஒருவர் ஏதோ ஒன்றை சமன்படுத்தி சக்திநிலையை ஓரளவு மாற்றமுடியும்.
உங்கள் சக்திநிலை ஏன் தொந்தரவிற்கு உள்ளானது? உங்கள் வாழ்க்கை முறை சரியில்லாமல் இருக்கலாம், எண்ணங்கள் சரியில்லாமல் இருக்கலாம், உணர்வுகள் சரியில்லாமல் இருக்கலாம், அல்லது இவையனைத்துமே காரணமாக இருக்கலாம். ஒருவிதமான கர்மவினையின் கட்டமைப்பை நீங்கள் ஏற்படுத்தியிருப்பதால், உங்கள் சக்திநிலையில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி உடலளவில் தொந்தரவிற்கு ஆளான சக்தியாகவோ அல்லது ஒரு நோயாகவோ அது வெளிப்படுத்துகிறது.
இந்த சக்திநிலையை நீங்கள் ஓரளவு ஹீலிங் முறையிலோ, கவனக்குவிப்பின் முறையிலோ, சிறிது விழிப்புணர்வின் நிலையிலோ சமன்படுத்திவிட்டாலும் கூட, அதை ஏற்படுத்திய கர்மவினை அப்படியே தான் இருக்கிறது. அது உங்களுடைய சக்தி உடம்பில் ஒரு மென்பொருள் போல் பதிவாகியிருக்கிறது. ஒரு மென்பொருள் செயல்படுகிற அதே விதத்தில் அதுவும் செயல்பட முடியும்.
உங்களுக்குள் இருக்கும் உயிர்சக்திதான் உடலை உருவாக்கியிருக்கிறது. உங்கள் எலும்புகள், ரத்தம், சதை, உங்கள் மூளை உட்பட எல்லாமே இந்த சக்தியால் உருவாக்கப்பட்டவைதான். நீங்கள் பிறந்த போது உங்கள் உடல் சின்னஞ்சிறியதாய் இருந்து இன்று இவ்வளவு பெரியதாய் வளர்ந்திருக்கிறது. வெளியே இருக்கிற யாரும் அதை இழுத்துப் பெரிதாக்கவில்லை. உங்களுக்குள் இருக்கின்ற சக்திதான் அந்த உடம்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு அது செய்கிறபோது ஒரு சிறிய எலும்பு முறிவையோ, இதயத்திலிருக்கிற துவாரத்தையோ அதனால் அடைக்க முடியாதா என்ன?
ஹீலிங் சரியா?
யாரையாவது, எப்படியாவது ஹீலிங் செய்யவேண்டுமென்று முயற்சி செய்வது கடவுளின் பங்கை கையில் எடுத்துக் கொள்வது. சக்திநிலைகளை முறைகேடாகக் கையாள்வது தான் அந்த வேலை.
இங்கே நாம் மனிதர்களுக்கு யோகக் கிரியைகள் சொல்லித்தருகிறோம். அதன்மூலமாக ஹீலிங் தானாகவே நிகழ்கிறது. நம்முடைய நோக்கம் ஹீலிங் அல்ல. ஆனால் அது தானாகவே நிகழ்கிறது. ஆத்ம சாதனையில் ஈடுபடுகிறபோது உங்கள் கர்மவினையே கரைந்து போகிறது. காரணம் கரைந்து போகிற போது, அதனுடைய விளைவு இருப்பதில்லை.