சுய இன்பம் (Suya Inbam) பற்றிய உண்மை என்ன? 

கேள்வி: “எந்தளவுக்கு சுய இன்பம் செய்வது நல்லது அல்லது கெட்டது என்று நாங்கள் எப்படி தெரிந்துகொள்வது? அதைப்பற்றிய உண்மையை நீங்கள் சொல்ல முடியுமா?”

சத்குரு:   ஓ... மிகவும் பிரபலமான கேள்வி போல தெரிகிறது. நம் உடலில் ஒரு சில விஷயங்கள் நடக்கிறது, அதை நாம் மறைத்து வைக்க முடியாது, அது இருக்கத்தான் செய்கிறது. அதை நேரடியாக அணுகுவதுதான் சிறந்தது. ஆனால், இன்று உலகத்தில் பிரச்சனை என்னவென்றால், அடிப்படையான மனித உடலியல் செயல்பாடே மிகவும் தவறானது என்பது போன்ற ஒரு நிலைப்பாட்டை சில மத அமைப்புகளில் எடுத்துள்ளார்கள். இதனால் பல கலாச்சாரங்களில் அனைத்தையும் மறைத்து வைக்க துவங்கிவிட்டார்கள். இந்த கலாச்சாரத்தில், அந்த மறைக்கும் குணம் என்றுமே இருந்ததில்லை.

ஒருமுறை நீங்கள் மனிதராக பிறந்துவிட்டால், உடல்ரீதியானவை உங்களது வாழ்வின் முதன்மையான விஷயமாகிவிடக்கூடாது. அது உங்களது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான்.

ஆங்கிலேயர்கள் வந்து சென்ற பிறகு, அவர்களை விடவும் நாம் வெளி நடத்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துபவர்களாக மாறிவிட்டோம். ஆனால், அதற்கு முன்பிருந்த நம் கோவில்களைப் பார்த்தீர்கள் என்றால், கோவிலுக்கு வெளியில் உள்ள சிலைகள், உங்களின் கண்ணோட்டம் அவ்வாறு இருந்தால், அதை நீங்கள் காமச்சிலைகள் என சொல்லலாம். ஆனால், அவற்றை காமச்சிலைகள் என்று நாம் இங்கு சொல்வதில்லை.

நாம் மனித உடல் இயக்கத்திலுள்ள பல்வேறு பரிமாணங்களை பற்றிதான் பேசுகின்றோம். அதை தவறான ஒரு விஷயமாக பார்க்கவில்லை, வாழ்க்கையின் மேலோட்டமான அம்சமாகவே அதை பார்க்கின்றோம். நீங்கள் அங்கேயே தங்கிவிட்டீர்கள் என்றால், உடல் சார்ந்த பரிமாணத்திலேயே நிரந்தரமாக தேங்கிவிடுவீர்கள், வேறு எவற்றையும் தேடி உணரமாட்டீர்கள்.

அதனால், கோவில்களில் இந்த சிலைகளை எப்போதுமே வெளிப் பிரகாரத்தில் நிர்மாணித்தார்கள். அதைப் பார்த்து, இது வாழ்க்கையின் மேலோட்டமான அம்சம் என புரிந்துகொண்டு, வாழ்க்கையில் இன்னும் ஆழமாக செல்ல நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்பதற்காக அவ்வாறு செய்தார்கள்.

ஆனால் அதே நேரத்தில், உடல் இயல்பு பற்றி அறிந்தும் அறியாதது போலிருக்கவும் தேவையில்லை, கொண்டாடவும் தேவையில்லை. அதை கொண்டாடாமலோ அல்லது மறுக்காமலோ இருப்பது மிகவும் முக்கியம்.

கோவிலில் உள்ள சிலைகள், Temple Sculptures

 கோவிலில் உள்ள சிலைகள், Temple Sculptures

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தொழில்நுட்பம்: ஒரு மகத்தான சாத்தியம்.. தவறாக பயன்படுத்தப்படுகின்றது

ஆனால், வலைதளங்கள் மூலம், இன்டர்நெட் மூலம் இன்று ஆபாசப்படங்கள் கல்லூரிகளில் பார்க்கப்படுவது பற்றி சிலர் என்னிடம் பேசினார்கள். அவர்கள் கூறிய சதவிகிதங்கள் சரியானதா என்று எனக்கு தெரியவில்லை.

இன்டர்நெட்டைப் பற்றி நான் புரிந்துகொள்வதற்காக அதனைப் பற்றியும், அதில் உள்ள விஷயங்கள், அதில் அதிகமாக பேசப்படுகின்ற விஷயம் எது என்றும் கேட்டேன். நீங்களும் இதை தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு கிடைத்த பதில், இன்டர்நெட்டில் 70 சதவிகிதம் இருப்பது ஆபாசம் சம்பந்தபட்டவை என்று கூறினார்கள். 70 சதவிகிதம் என்பது, அநியாயமானது, நோய்பிடித்த அளவுக்கு மோசமானது என்று அவர்களிடம் கூறினேன். ஏதோ குறைந்த சதவிகிதம் என்றால் பரவாயில்லை.

லட்சக்கணக்கான விஷயங்களை செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்ப தளத்தின் 70 சதவிகிதம் ஆபாசம் சம்பந்தப்பட்டது என்பது துரதிருஷ்டமானது. வெறுமே உடல் சம்பந்தப்பட்டது மட்டுமே இவ்வளவு இடத்தைப் பிடித்திருப்பது துரதிருஷ்டமானது. ஏனென்றால், ஒருமுறை நீங்கள் மனிதராக பிறந்துவிட்டால், உடல்ரீதியானவை உங்களது வாழ்வின் முதன்மையான விஷயமாகிவிடக்கூடாது. அது உங்களது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும்தான்.

வாழ்வில் நாம் கடந்துசெல்லும் பல கட்டங்கள்

இந்த அளவிற்கு மூளை திறனுடன் நீங்கள் பிறப்பு எடுப்பதற்கான காரணம், உங்களது புத்திசாலித்தனம் உங்களது வாழ்க்கையின் முதன்மையான விஷயமாக வேண்டும் என்பதற்காகத்தான். அதிலும், நீங்கள் விழிப்புணர்வாக வாழ்கிறீர்கள் என்றால், உங்கள் விழிப்புணர்வு நிலை உங்கள் வாழ்க்கையின் முதன்மையான அம்சமாகும். உடலியல் என்பது ஒரு காளைக்கு வேண்டுமானால் முதன்மையான அம்சமாக இருக்கலாம், அது பரவாயில்லை, அவ்வளவு தான் அவனுக்கு தெரியும். ஆனால், ஒரு மனிதரின் வாழ்க்கையின் முதன்மையான விஷயமாக உடல் இருக்கக்கூடாது. அது நமது வாழ்க்கையில் ஒரு பாகம்தான்; நாம் அதை மறுக்கவில்லை.

உங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இப்படித்தான் இருக்கும் - ஒரு 95 வயது தாத்தா மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக மருத்துவரிடம் சென்றார். மருத்துவரும் நன்றாக பரிசோதித்து விட்டு சொன்னார், "பெரியவரே, 95 வயதுக்கு நீங்க நல்ல உடல் ஆரோக்கியத்தோட இருக்கிறீங்க, ஒரு பிரச்சனையும் இல்லை". அதற்கு, "ஆனால் டாக்டர், என் அந்தரங்க வாழ்க்கை நல்லா இருக்கா?" என்று அந்த முதியவர் கேட்டார். உடனே டாக்டர், பெரியவரை பார்த்து, "அதைப் பற்றி யோசிப்பதைக் கேட்கிறீர்களா அல்லது பேசுவதைப் பற்றி கேட்கிறீர்களா?" என்று கேட்டார்.

அதனால், உங்களது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில், ஒரு சில நேரங்களில் நீங்கள் அதைப்பற்றி சிந்திக்கவும் பேசவும் மட்டுமே செய்கிறீர்கள், சில நேரங்களில் அதில் ஈடுபடுகிறீர்கள். இவை அனைத்தும் வாழ்க்கையில் நாம் கடந்துபோகின்ற பல கட்டங்கள். உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும், அதே நேரத்தில் நீங்கள் இந்த கல்லூரிக்கு வந்தது உங்கள் பயாலஜி பற்றி தெரிந்துக்கொள்வதற்காக இல்லை. குறைந்தது நீங்கள் MSc Biology படிப்பதற்கு கலைக்கல்லூரிக்கு சென்றிருக்கலாம். ஒரு தொழில்நுட்ப கல்லூரியில், உங்களது பயாலஜி பற்றி தெரிந்துகொள்வதற்காக நீங்கள் நேரத்தை வீணடிக்கக்கூடாது. 

சலசலக்கும் மேற்பரப்பிலிருந்து மையத்திற்கு:

அதற்காக, உங்கள் உடலில் எதுவும் நடக்கவில்லை, உங்களுக்கு உடலியல் சார்ந்த தேவைகள் இல்லை என்று அர்த்தமில்லை. உங்களுக்கு உடலியல் சார்ந்த தேவை நிச்சயமாக இருக்கிறது, ஆனால் அது வெளிப்பிரகாரத்தில் இருக்க வேண்டும். அதை மையம் கொண்டு உங்களது வாழ்க்கை நடப்பதாக ஆகிவிடக்கூடாது, அப்படி ஆகிவிட்டால் அது உங்களையே குறைத்துவிடும். எந்த விதத்தில் என்றால், வெறுமனே உடல்ரீதியானதாக இருந்த ஒரு உயிரினம், தனது உடலியலையும் தாண்டி, தனக்கேயான ஒரு புத்திசாலித்தனத்துடன் பிறப்பெடுக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது.

விலங்குகளின் புத்திசாலித்தனம் அதன் உடல் சார்ந்து மட்டுமே செயல்படுகிறது. தன்னுடைய உணவுக்காகவும், தன்னுடைய துணைக்காகவுமே விலங்குகளின் மொத்த வாழ்க்கையும் கழிகிறது. மனித அறிவும் அவ்வாறு செயல்பட்டது என்றால், பரிணாம வளர்ச்சியை நீங்கள் முடக்கி வைக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

பின்னோக்கி செல்வது எப்படி, அதாவது பரிணாம வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுவது எப்படி என்று பார்க்கின்றீர்கள். அது தேவையில்லை. ஆனால் உங்களுக்கு உடல் இல்லை என சொல்லவில்லை. உடலுக்கான தேவைகள் இருக்கத்தான் செய்கின்றது. பசி எடுப்பது போல, காமத்துக்கான தேவையும் இருக்கிறது.

நீங்கள் அதற்கு ஏதோவொரு வகையில் வழிசெய்ய வேண்டும், எந்த அளவுக்கு என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். ஆனால் நிச்சயமாக அதுவே உங்களது வாழ்க்கையின் முதன்மையான அம்சமாக ஆகிவிடக்கூடாது. அப்படி செய்யும்போது, பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கி சென்று, உங்கள் புத்திசாலித்தனத்தையும் விழிப்புணர்வையும் நீங்கள் முடக்குகின்றீர்கள் என்று அர்த்தம். உங்கள் அறிவாற்றலையும் விழிப்புணர்வையும் முன் வைப்பதற்கு பதிலாக, உங்களது உடலைப் பிரதானமானதாக நீங்கள் முன் வைக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

முழுமையான நல்வாழ்வில் ஒருவரின் விந்தணுவின் முக்கியத்துவம்

உங்களுக்கே தெரியும், விந்தணுதான் நீங்கள் இங்கு உடலோடு இருப்பதற்கு காரணமாக இருக்கின்றது. நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, விந்தணுவினால் தான் நீங்கள் இங்கு பிறந்துள்ளீர்கள், உங்கள் பிறப்பில் அது 50 சதவிகிதம் பங்கு வகிக்கின்றது, அப்படித்தானே?

நமக்கு தோல் இருக்கிறது, மேல்தோல் செல்கள் இருக்கிறது, முடி இருக்கிறது, மேலும் உடலின் பல்வேறு அம்சங்களும் இருக்கிறது. இதயம், கல்லீரல், சிறுநீரகம் என இன்னும் பலவும் இருக்கிறது. உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அவற்றிற்கென ஒரு குறிப்பிட்ட வீரியம் உள்ளது. ஆனால், விந்தணு அசாத்தியமான வீரியம் கொண்டது, புதிதாக ஒரு உயிரையே படைக்கக்கூடியது.

இன்று, மேல்தோல் செல்கள் மூலமாக பரிசோதனை கூடங்களில் பல விஷயங்களை நீங்கள் செய்ய முடியும், உங்களை க்ளோனிங் கூட செய்ய முடியும். அந்த சாத்தியம் மேல்தோல் அணுக்களிலும் இருந்தாலும், விந்தணு என்று நீங்கள் குறிப்பிடுவதில் உள்ள செயலாற்றலின் அளவிற்கு, பிற செல்களில் இல்லை.

அதனால்தான் யோகக் கலாச்சாரத்தில் இது "வீரியம்" என்று வழங்கப்படுகின்றது. வீரியம் என்பது நீங்கள் அழைக்கும் "வஜ்ரம்" என்பதனையும் குறிக்கிறது. வஜ்ரம் என்றால் திடமான தன்மை அல்லது வைரத்தையும் குறிக்கும். இந்த உலகத்திலேயே கடினமான பொருள் என்றால் அது வைரம். எனவே, மனித உடலில், வீரியம் என்பது வைரத்தைப் போல கருதப்படுகின்றது. அப்படியென்றால், உங்களுக்கு முறையாக பயன்படுத்தத் தெரிந்தால், மிகவும் வீரியமானது என்றால் அது விந்தணுதான்.

வைரம், Diamond

மகத்தான சாத்தியம்.. சரியாக பயன்படுத்தத் தெரிந்தால்

விந்தணுவை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டீர்கள் என்றால், நீங்கள் ஒரு குழந்தை பெற்றெடுக்க பயன்படுத்த முடியும், அது ஒரு வழி. இந்த கேள்வியே ஏன் வருகின்றது என்றால், நீங்கள் உங்கள் விந்தணுவை உங்கள் கல்லூரி படுக்கை விரிப்புகளில் சிந்தி வீணடித்துக்கொண்டு இருப்பதால்தான்.

நீங்கள் அவ்வாறு தான் பயன்படுத்திகொண்டு இருந்தீர்கள் என்றால், நீங்கள் நிர்பந்தத்தினால் அவ்வாறு செய்கின்றீர்கள் என அர்த்தம். நீங்கள் என்னவோ செய்துகொள்கிறீர்கள். ஆனால் அதற்காக இதை மட்டும் வைத்து ஒருவரை நல்லொழுக்கம் சார்ந்து எடை போடக்கூடாது. அது அப்படி அர்த்தமாகாது. ஒருவர் எந்தளவுக்கு கட்டாயத்தால் உந்தப்படுகிறார் என்பதையே இது காட்டுகிறது.

ஆனால் இந்த உடலில் உள்ள எதையும், வேறொரு நிலையிலான செயல்பாட்டுக்கு மாற்றமுடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியும். விந்தணு மட்டுமல்ல, இந்த உடலில் உள்ள எல்லாவற்றையுமே நம்மால் மாற்றியமைக்க முடியும். நான் உங்களிடம் சூப் செய்வதற்கான எல்லா பொருட்களையும் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் அனைவருக்கும் ஒரேவிதமான பொருட்களைக் கொடுத்தாலும், அனைவரும் ஒரேவிதமான சூப் தயார் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா? ஒரேவிதமான பொருட்களாகவே இருந்தாலும், ஐநூறு பேரும் ஐநூறு விதமான சூப்புடன் வருவீர்கள். தற்போது நமக்கும் அதுதானே நடந்துள்ளது. நாம் எல்லோருமே அடிப்படையாக ஒரே விதமான மூலப்பொருட்களால் உருவாகியுள்ளோம், ஆனால் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றோம் என்று பாருங்கள், விதவிதமான சூப்களாக இருக்கின்றோம்.

சூப் செய்வதற்கான பொருட்களைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் நல்ல சூப் செய்யமுடியும், இல்லையென்றால் மோசமான சூப்பும் செய்யமுடியும். அது உங்களது திறமையைப் பொருத்த விஷயம். இது உங்களது விந்தணுவிற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்.

உங்களது உடல் மற்றும் மனதின் ஒவ்வொரு பரிமாணத்தையும் நீங்கள் அசாத்தியமான ஏதோவொன்றாக மாற்றியமைக்க முடியும். அல்லது சுமாரானதாக வைத்துக்கொண்டு, மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இவ்வாறு செய்யமுடியும். அது உங்களது வாழ்க்கையின் இந்த பரிமாணத்துக்கும் பொருந்தும்.

அதே சக்திதான்... நான் சொல்கின்ற வார்த்தைகளை மட்டும் மக்கள் அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்கிறார்கள். எனவே, உங்களின் மேல்தோல் செல்களை உருவாக்க உங்களது உடல் எவ்வளவு சக்தியை செலவழிக்கிறது என பாருங்கள், நீங்கள் விந்தணு என்று சொல்லும் அந்த செல்லை தயாரிக்க உங்களது உடல் எவ்வளவு சக்தியை செலவழிக்கிறது என பாருங்கள். இரண்டிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இதை அறிவியல்பூர்வமாகவும் நாம் நிறுவமுடியும்.

எனவே, நீங்கள் விந்தணுவிற்காக அதிகளவு சக்தியை முதலீடு செய்யும்போது, உங்களுக்கு தேடி தெரிந்துகொள்ள வழிதெரிந்தால், அதனுடைய மகத்தான ஆற்றலை உங்களால் நிச்சயமாக உணரமுடியும். ஆனால், நீங்கள் தேடி தெரிந்துகொள்ள தேவையான திறமையுடன் உள்ளீர்களா? அதற்கு தேவையான ஆன்மீக சாதனாவும், தேவையான வழிகாட்டுதலும் உங்களுக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குரிய விஷயம்தான்.