சிவயோகி பெற்ற தீட்சை... ஈஷாவின் துவக்கம்!
இன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது? தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா? தெரிந்துகொள்ளலாம் இங்கே!
தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை! பகுதி 6
இன்று தியானலிங்கம் பலரின் வாழ்வை மாற்றியமைத்து அளப்பரிய அருள் பிரவாகமாய், சக்தி உச்சம்பெற்ற ஒரு குருவாய் வீற்றிருக்கிறது. இதன் துவக்கம் எங்கிருந்து வந்தது? தியானலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது ஸ்ரீபழநி சுவாமிகளின் விருப்பமா? தெரிந்துகொள்ளலாம் இங்கே!
முட்டையின் ஓட்டைப் பிளந்து வெளிவரத் துடிக்கும் குஞ்சுப்பறவையாய், பூமியைக் கிழித்து வெளிப்படத் தவிக்கும் விதையின் முளையாய், அந்த ஆத்ம சாதகனின் உயிராற்றல், ஆக்ஞை சக்கரத்தில் முட்டி மோதிக் கொண்டிருந்தது. எண்ணிலடங்காத நாட்கள், இடைவிடாத முயற்சி, முனைமுறியாத பயிற்சி, மூலாதாரத்தின் கனலை உசுப்பி, எழுப்பி, மேலெழும்பச் செய்து, சக்கரங்கள் ஒவ்வொன்றாய்க் கதவு திறந்து, உள்ளுக்குள் பிரவாகமெடுத்த உயிராற்றல், ஆக்ஞையில் அலைமோதிக்கொண்டிருந்தது. நெருப்பின் அலைபோலச் சுழன்றடித்த வெப்பத்தில் உடல் தகித்துக்கொண்டிருக்க, குளிர்ந்த காற்று அந்த ஆத்ம சாதகனை, தாய்மையின் தவிப்போடு தழுவிக்கொண்டது. வியர்வை வெள்ளமாய்ப் பெருகிற்று.
Subscribe
இந்த அவஸ்தை, ஒரு அற்புதத்துக்கு முந்தைய அனுபவம். தன்னை உணரும் பேரானந்தம் சித்திக்கும் முன்னர் ஏற்படும் பிரசவ வேதனை. மரங்களில் அமர்ந்திருந்த பறவைகள் சிலிர்த்தன. கீச்சுக்குரலில் பேசிக்கொண்டன.
“பார்! பார்! சிவயோகியைப் பார்! அந்த அவஸ்தையைப் பார்!” என்று தவித்தன. தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது, பிரபஞ்சம் இயக்கம் பற்றியெல்லாம் புரிந்துணர்ந்த தெளிவோடு மிக நிதானமாய் அது நகர்ந்து வந்தது. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது ஞானம். பளிங்கு போன்ற கண்களில் சூரியவெளிச்சம். கருணைத் திருவுருவாய் கனிந்த மோனத் திருவடிவாய் தகதகத்த அந்த வடிவம், மிக அமைதியாக சிவயோகியை நெருங்கி வந்தது. பறவைகள் பரவசமாயின. பறந்து பறந்து பூக்களைப் பறித்துத் தூவின, “பழனி சுவாமிகள்! பழனி சுவாமிகள்” என்று சந்தோஷக் குரலெழுப்பின. “ஏதாவது செய்வார்! சிவயோகிக்கு அருள் செய்வார்!” என்று நம்பின. “ஆம்!ஆம்!” என்று தாவரங்கள் தலையசைத்தன.
உள்ளுக்குள் நிகழ்ந்த மௌனபிரளயத்தை மிக உறுதியோடு எதிர்கொண்டிருந்த சிவயோகியை, பழனிசுவாமிகளின் கண்கள் கருணையோடு வருடின. வலக் கை மெல்ல உயர்ந்தது. கையிலிருந்த கோல், சிவயோகியின் நெற்றிப்பொட்டை நோக்கி நீண்டது. இருபுருவங்களுக்கு மத்தியில், ஆக்ஞை சக்கரத்தைத் தட்டியது. கணப்பொழுதில் கதவு திறந்தது. பீறிட்டெழுந்தது பேரானந்தம். ஆயிரமாயிரம் தாமரைகள் உள்ளுக்குள் மலர்ந்தன. அமுத ஊற்றாய்ப் பிரவாகமெடுத்த ஆனந்தத்தில் ஆன்மாவின் நீராடல். ஒருபெரிய போராட்டத்தின் உச்சியில் பூப்பூத்த ஞானம், கணங்களை, நிமிஷங்களை எல்லையில்லாத அருளுனுபவத்தில் நனைத்து போட்டது.
கண்விழித்த சிவயோகிக்கு குருதரிசனம் கிட்டியது. மனஉறுதியின் மறுபெயராய் நின்ற சீடனும், மகத்துவத்தின் திருவுருவாய் வந்த குருநாதனும் பகிர்ந்து கொண்ட நேரமென்னவோ குறைவுதான். அதற்குள், பல நூறாண்டுகளை நிர்ணயிக்கப்போகும் நூதனப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
தான் பாதபூஜை செய்வதெனில், அது பரமனுக்குத்தான் என உறுதி பூண்டிருந்த சிவயோகிக்கு, பழனிசுவாமிகள், சிவசொரூபத்தில் காட்சி தந்து பூஜையினை ஏற்றார்.
பணிந்து நின்ற சீடனிடம் பழனிசுவாமிகள் குரு காணிக்கை கேட்டார். தியானலிங்கம்..... அவருக்கான காணிக்கை. குருநாதர் வாய்திறந்து கேட்காதபோதும் அவரது நோக்கினை நுட்பமாய் உணர்ந்தார் சிவயோகி. தியானலிங்கம் 13 அடி 9 அங்குலம் உயரத்தில் அமைய வேண்டுமென்பதும் குருவின் சித்தமாயிருந்தது.
சில நூறாண்டுகளுக்கான உழைப்புக்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கான பலனுக்கும், விதை அங்கே விழுந்தது. இந்த பிறவியில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும், பிறவிகளிலாவது தியானலிங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற உறுதி சீடனின் மனதில் பிறந்தது. இந்த பரவசச் சந்திப்பை பார்த்த சிலிர்ப்புடன் காலம் மெதுவாய் நகர்ந்தது. சிவயோகியின் உயிர், உடல் கூட்டைத் துறந்து சிறகடித்தது.
'தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை!' தொடரின் பிற பதிவுகள்