கேள்வியாளர்: சைவ சமயம் என்றால் அது சிவனோடு சம்பந்தமுடையது என்று
நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் சைவம் என்றால் என்ன என்பதை
எளிமையாக விளக்குங்களேன்?

சைவ கலாச்சாரம் - உயிர்நோக்கத்தின் வழி


சத்குரு: இரண்டு விதமான வளர்ச்சி இருக்கிறது. சமூகத்தில் வளர வேண்டும் என்றால் கோஷமுழக்கம் தேவை. ஆனால், ஒரு தனிமனிதனின் உள்ளம் கோஷங்கள் முழங்குவதால் மட்டுமே வளரமுடியாது. நம்முடைய நோக்கம் எப்போதுமே ஒரு தனிமனிதன், உள்ளத்துள் வளர வேண்டும் என்பதுதான்.
சமூகத்தில் இதை பரப்ப வேண்டும் என்ற நோக்கம் நமக்கு என்றுமே கிடையாது. வெளியில் போட்டி வந்துவிட்டதால் இப்போது நாம் அந்த விதமாக யோசிக்கத் தேவையில்லை. சமூகத்தில் பத்து நபர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் நமக்கு என்றும் கிடையாது.

சைவம் என்பது ஆன்மீகத்திற்கான அடிப்படை. சைவம் என்பது மதம் இல்லை. ஒரு ஆன்மீகத்திற்கான ஆர்வம். இது நீங்களோ, மற்றவரோ, இல்லை நானோ உருவாக்குகின்ற தன்மை இல்லை. எது எல்லாவற்றுக்கும் உயர்ந்ததோ, எது எல்லையில்லாததோ, அதற்காக உயிர் தானாகவே ஏங்குகின்ற நோக்கம் இது.

தனிமனிதன் உள்ளத்தில் மலர வேண்டும். அதற்கு ஒரு கோஷத்தைக் கொடுத்து, இதை செய், அதை செய் என்று சொல்வது பலனளிக்காது. வளர்ச்சி அடைவதற்கு,நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சிவா என்று சொன்னால், அங்கே மேலே யாரோ ஒருவர் அமர்ந்து இருக்கிறார் என்பது அர்த்தமில்லை. ‘சி -வா’ என்றால், எது இல்லாததோ, அதைக் குறிக்கிறது. எது இங்கு இல்லையோ, அது சிவா. இல்லாததிற்காகவே நாம் எப்போதும் ஏங்குகிறோம். எது இல்லையோ, அதை தேடுகிறீர்கள் என்றால் எங்கு தேடுவீர்கள்? எங்கும் தேடமுடியாது.

எங்கும் எதிலும் உளது

அதற்கு இப்போது என்ன செய்வது? எங்கெங்கு எதனுடன் இப்போது நமக்கு தொடர்பு இருக்கிறதோ அதைப் பார்த்து சிவா என்று வணங்குவது. உங்களைப் பார்த்தாலும் சிவா என்று வணங்குவதுதான்; நாயினைப் பார்த்தாலும் சிவா என வணங்குவதுதான்; மாட்டினைப் பார்த்தாலும் சிவா என்று வணங்குவதுதான்; மேகத்தைப் பார்த்தாலும் சிவாதான்; மண்ணைப் பார்த்தாலும் சிவாதான்; எதைப் பார்த்தாலும் சிவம்தான் இருக்கிறது. எதனால் இப்படி என்றால், நாம் தேடிக்கொண்டிருப்பது எல்லை இல்லாத ஒன்றை. இல்லாதது என்றால் அதன்அர்த்தம் எல்லை இல்லாதது; இருக்கிறது என்பதன் அர்த்தம் எல்லையுடன் இருப்பது.

உருவத்துடன் இருப்பவை அனைத்துமே குறிப்பிட்ட எல்லையுடன் இருக்கிறது. முழுமையான சுதந்திரம் என்றால், எல்லையே இல்லாமல் இருப்பது. எல்லை இல்லாததிற்காக எப்போது தேடுகிறீர்களோ அப்போது அதற்கு நோக்கம் கிடையாது. இதற்கு கோஷமுழக்கம் கிடையாது. இதற்கு ஒரு மந்திரம் கிடையாது. நம் உயிர்சக்தி எந்த ஒரு தடையும் இல்லாமல், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல், இந்த பிரபஞ்ச சக்தி எந்த ஒரு அதிர்வில் இருக்கின்றதோ, அந்த விதமான அதிர்வுக்கு வருவது.

இங்கு உட்கார்ந்தால் பிரபஞ்சத்தின் அதிர்வு எப்படி உள்ளதோ நாமும் அப்படிஆகிவிடவேண்டும். அப்போதுதான் நாம் முழு உயிர். இதுதான் நம் நோக்கம். இதற்காகதான் நாம் ஏங்குகிறோம், இதுதான் நம் முக்தி. இந்த நான்கினை செய்யுங்கள், இப்படி ஆகிவிடும். ஐந்தினை செய்திடுங்கள், இப்படி ஆகிவிடும் என்று முழக்கத்தினைக் கொண்டு உள்ளத்துள் வளர முடியாது. இந்த நான்கு, ஐந்து சொல்வது எதற்கு என்றால், சமூகத்தில் வளரவேண்டும் என்ற ஆசையினால்.

சைவம் என்றால் என்ன?

மூன்று கோஷமுழக்கங்களை வைத்துக்கொண்டு, அரசியல் கட்சிகள் வளர்த்துக் கொள்ளலாம். அதேவிதமாக, மதங்களையும் வளர்த்துக் கொள்ளலாம். ஆனால், சைவம் என்பது ஆன்மீகத்திற்கான அடிப்படை. சைவம் என்பது மதம் இல்லை. ஒரு ஆன்மீகத்திற்கான ஆர்வம். இது நீங்களோ, மற்றவரோ, இல்லை நானோ உருவாக்குகின்ற தன்மை இல்லை. எது எல்லாவற்றுக்கும் உயர்ந்ததோ, எது எல்லையில்லாததோ, அதற்காக உயிர் தானாகவே ஏங்குகின்ற நோக்கம் இது. இப்போது நீங்கள் இருக்கின்றீர்கள், உங்களுக்கு ஒரு எல்லையிட்டால், ஐந்துக்கு ஐந்து அளவிலான ஒரு அறையில் உங்களை வைத்து பூட்டிவிட்டால், உங்களுக்கு அது பிடிக்காது. சிறையில் வைத்தது போல இருக்கின்றது. நாளையே உங்களுக்கு விடுதலை வழங்கி, ஒரு பத்துக்கு பத்து அளவிலான அறையில் வைத்தோம். ஒருநாள் சிறிது சந்தோஷமாக இருக்கிறது. அடுத்தநாள் அதுவும் சிறைதானே?

அடுத்து, இன்னும் பெரிய, நூறுக்கு நூறு அளவிலான ஒரு அறை கொடுத்தோம்.  ஒரு மூன்று நாள் சந்தோஷமாக இருப்பீர்கள். மூன்று நாளைக்கு பிறகு அதுவும் சிறைதானே? எங்கு வைத்தாலும் சரி, எல்லை இருக்கிறது என்ற உணர்வு உங்களுக்கு வந்துவிட்டது என்றால், அதைத் தாண்டிப் போகவேண்டும் என்ற ஆர்வம் உயிரில் தானாகவே இருக்கிறது. நாம் இப்படி நினைக்கத் தேவையில்லை. நம்முடைய உயிர்நோக்கத்திலேயே இது இருக்கின்றது. 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அத்தனைக்கும் ஆசைப்படு

இதனை நாம் பலவிதமாக வெளிப்படுத்தி இருக்கலாம். ஒரு ஆசையாக
வெளிப்படுத்தி இருக்கலாம், ஒரு ஆக்கிரமிப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம்.
இல்லை, ஒரு பொருள் சேகரிப்பாக வெளிப்படுத்தி இருக்கலாம். இவை
அனைத்துமே எதனால் என்றால், இப்போது நாம் எந்த நிலையில்
இருக்கின்றோமோ, அதைத் தாண்டி இன்னும் சற்று அதிகமாக வளரவேண்டும்
என்ற ஆர்வத்தினால்.

இதை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அதிகமாக சேர்த்துக்கொள்வதற்கான ஆர்வம் நம்மிடம் இல்லை. நாம் அனைத்துமாக ஆகிவிட வேண்டும் என்ற ஆர்வமே நமக்கு உள்ளது. அனைத்துமாக ஆகவேண்டும் என்றால் ஒன்றும் இல்லாமல் ஆகவேண்டும். எல்லையில்லாமல் ஆகவேண்டும் என்றால், ஒன்றும் இல்லாமல் தானே ஆகவேண்டும். அதனால்தான் சிவா. ‘சி - வா’ என்றால் ஒன்றும் இல்லாதது. ஒன்றும் இல்லாததிற்காக எப்போது ஏங்குகின்றீர்களோ, இப்போது உங்களது சக்தி ஒரு நோக்கத்தில் இருக்காது. முழுமையாக பிரபஞ்ச சக்தி எவ்வாறு இருக்கின்றதோ, அவ்வாறு ஆகிவிடும். அப்படி ஆகிவிட்டீர்கள் என்றால், நீங்கள் யோகாவில் இருக்கின்றீர்கள்.

சைவமும் யோகாவும்

யோகா, Yoga, சைவம் என்றால் என்ன?, Saivam Vainavam

நாம் சொல்வது என்னவென்றால், யோகா என்று சொல்லப்படுவதற்கும், சைவம் என்று சொல்லப்படுவதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. யோகாவில் விஞ்ஞானப்பூர்வமாக வெளிப்படுத்துகின்றோம்; இன்னொருவர் பக்தியாக வெளிப்படுத்திக் கொள்கிறார், அவ்வளவுதான்.

நாம் சொல்வது என்னவென்றால், யோகா என்று சொல்லப்படுவதற்கும், சைவம் என்று சொல்லப்படுவதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. யோகாவில் விஞ்ஞானப்பூர்வமாக வெளிப்படுத்துகின்றோம்; இன்னொருவர் பக்தியாக வெளிப்படுத்திக் கொள்கிறார், அவ்வளவுதான். இது இறந்தகாலத்தின் நோக்கம் இல்லை. ஓரளவுக்கு இறந்த காலத்தில் நடந்தது. இது எதிர்கால நோக்கம்.

எப்போது மனிதனின் புத்திக்கூர்மை மேன்மை அடைகின்றதோ, அவனுக்கு இதுபோல வெறுமனே இந்த கோஷம், அந்த கோஷம் என்று முழங்குவதால், ஒன்றுக்கு ஒன்று எதிரியாகத்தான் மாறுகிறது என்பது எப்போது புரிகின்றதோ, அப்போது இவையெல்லாம் நிறைய நாள் வேலை செய்யாது. இன்று நான் சொல்வது உங்களுக்கு எதிர்மறையாக இருக்கின்றது. நீங்கள் சொல்வது எனக்கு எதிர்மறையாக இருக்கின்றது. இதனால், எனக்கு முழுமை வராது என்று உணர்ந்துகொள்ளும் ஞானம் மனிதர்களுக்கு வளர்ந்து வந்துள்ளது.

எதிர்காலத்தில் யோகாதான் நிற்கப்போகின்றது. ஏனென்றால், விஞ்ஞானப்பூர்வமாக இது ஒன்றுதான் நிற்கும். மற்றவை அனைத்தும், போதனை, கோஷமுழக்கம் இவை அனைத்தும் விழுந்துவிடும். விஞ்ஞான வளர்ச்சி தொடர்ந்து நிகழும்போது, ஒரு மனிதனுக்குள் அனுபவப்பூர்வமாக நிகழ்வது ஒன்றே நிலைத்து நிற்கும்.

சிவன் விஷ்ணு, யார் உயர்ந்தவர்?

கேள்வியாளர்: ஆழ்வார்கள் எல்லாம் பெருமாளையே வணங்கி முக்தி அடைந்தார்கள் என்று வைணவம் பற்றி நிறைய படித்துள்ளேன். ஹரனோடு உங்களுக்கு ஹரியை சேர்க்க விருப்பம் இல்லையா?

சத்குரு:  இது போட்டி இல்லை. இது சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் இடையேயான போட்டியா? அப்படி இல்லை. இங்கிலாந்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், உலகின் பழமையான கடவுள் ருத்ரன் என்று குறிப்பிட்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். 12,600 வருடங்களுக்கு முன்பே சமூகத்தில் தெய்வீகத்தின் உருவம்‌ என்றால், அது ருத்ரனாக இருந்தது என்பதை இப்போது நிரூபித்துள்ளார்கள். இந்த புத்தகம் வெளியிடப்பட்டது அங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. எதனாலென்றால், அவர்கள் மூன்றாயிரம் வருடங்களுக்கு முன்தான் உலகமே பிறந்தது என்று கூறி நடத்திவருகிறார்கள்.

இந்தவிதமான நிரூபணங்கள் எல்லாம் நமக்குத் தேவையில்லை. அடிப்படையாக, நாம் சிவா என்று சொல்வது ஒன்றும் இல்லாததையே. ஒன்றும் இல்லாததிற்கு ஏன் மதிப்பு என்றால், இந்த ஹாலில் ஒன்றும் இல்லாததால் தானே நாம் உள்ளே வந்தோம்? ஏதோ ஒன்று இருந்தால் வரமுடியுமா? இந்த பிரபஞ்சத்தில் ஒன்றும் இல்லாததினால்தான் இந்த படைப்பே நிகழ்ந்துள்ளது. ஏதோ ஒன்றாக இருந்தால் இங்கு ஒன்றும் செய்யமுடியாது.

சிவன், Shiva, சைவம் என்றால் என்ன?, Saivam Vainavam

விஷ்ணு, Vishnu, சைவம் என்றால் என்ன?, Saivam Vainavam

ராமேஸ்வரம் என்று ஏன் அழைக்கின்றோம் தெரியுமா? ராமன் வந்து சிவனை பூஜை செய்த இடம். அதேவிதமாக, சிவபூஜை செய்யாமல் கிருஷ்ணன் ஒரு நாளும் தனது வாழ்க்கையை துவங்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் என்னம்மா?

எதற்கு இப்படி செய்தார்கள் என்றால், இது அவனுக்கும், இவனுக்கும் போட்டி என்று கிடையாது. அனைத்திற்கும் அடிப்படையான தன்மையுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதன்மேல் வந்த தன்மைகள் நிறைய இருக்கிறது. நாம் அவற்றிற்கு எல்லாம் ஒவ்வொரு ரூபம் கொடுத்தோம். அவற்றிற்கு எல்லாம் ஒவ்வொரு பெயர் கொடுத்தோம். அவையனைத்தும் நமக்கு தேவைதான். ஆனால் வாழ்க்கை என்பதற்கு, எல்லாவற்றிற்கும் அடிப்படையானது எது?

கத்திமுனையில்…

இப்போது, நாம் இங்கு இருக்கிறோம். நாம் உயிருடன் இருப்பது எல்லாவற்றிலும் முக்கியமானது. ஆனால் உயிருடன் இருந்தால் மட்டும் போதுமா? நமக்கு உணவு வேண்டும், உடை வேண்டும், வீடு வேண்டும், கல்யாணம் வேண்டும், குழந்தை வேண்டும், சொத்து வேண்டும், என்னென்னவோ வேண்டும். இப்போது கழுத்தில் கத்தி வைத்து என்ன வேண்டும் என்று கேட்டால், உயிருடன் மட்டும் விட்டுவிடுங்கள் வேறு என்ன வேண்டும் என்றாலும் கொடுக்கிறேன் என்று சொல்வீர்கள். கத்தியை எடுத்துவிட்டால், வேறுவிதமாக பேசுவீர்கள். இந்த உயிர் நிலையில்லாதது, எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்ற ஞாபகம் வரும்பொழுது, அடிப்படையானதைப் பற்றி மட்டும்தான் நமக்கு கவனம். 

இந்த ஞாபகம் மறந்துவிட்டது என்றால், இன்று நாம் பணத்துக்காகவே பிறந்தது போல நடந்துக்கொள்கிறோம். இன்று அப்படிதானே? இன்று நம் கையில் இருக்கின்ற ரூபாய் நழுவி போய்விட்டது என்றால், நான் உயிரையே விட்டுவிடுவேன் என்பது போன்ற மனநிலைக்கு சிலர் வந்துவிடுவார்கள். ஆனால், நீங்கள் நிறைய பணம் எடுத்துப்போகிறீர்கள், அப்போது உங்களுடைய கழுத்தில் கத்தி வைத்து, "பணத்தை தருகின்றாயா அல்லது உயிரை விட்டுவிடுகிறாயா" என்று கேட்டால், "ஐயோ, பணத்தை எடுத்துக்கொண்டு போப்பா, போனால் போகட்டும்’ என்பீர்கள். நீங்கள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக பேசுகிறீர்கள். 

கழுத்தில் கத்தி எப்போதும் இருக்கிறது, எடுத்துவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். எடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? இப்போது கழுத்தில் கத்தி இருக்கிறதா, இல்லையா? இருக்கிறது. அப்படியென்றால், எல்லாவற்றுக்கும் அடிப்படையானது எது? அதைப்பற்றி நினைப்பது, அதை நோக்கிப் போவது மிகவும் முக்கியமானது. மற்றது அனைத்துமே செய்துகொள்ளலாம். கழுத்தில் கத்தியை வைத்துள்ளார்கள், ஆனால் வெட்டவில்லை என்றால், நாம் சிலவற்றை செய்துக்கொள்ளலாம். வெறுமனே வெட்டப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், இன்னும் வெட்டவில்லையே. ஆனால் ஒருநாள் வெட்டிவிடுவார்கள். அது நிகழ்வதற்குள் நாம் கொஞ்சம் அப்படி, இப்படி பொழுதுபோக்கிக் கொள்ளலாம். ஆனால், கழுத்தில் கத்தி இருக்கிறது என்று நமக்கு ஞாபகம் வந்தபோது, இது ஒன்றுதான் நமக்கு.

அதனால் இது விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் போட்டியா? அவர்கள் இருவருக்கும் எந்த போட்டியும் இல்லை. இரண்டு கோயிலுக்குப் போகின்ற நீங்கள் இரண்டு பேரும்தான் இங்கு போட்டி போட்டுக் கொள்கிறீர்கள்.

உண்மையான மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை என்றால் அனைத்திற்கும் வணங்காமல் இருப்பது என்று நாம் தவறாக புரிந்துக்கொண்டுள்ளோம். அது அப்படியில்லை. மதச்சார்பின்மையின் அர்த்தம் அதுவல்ல. மதசார்பின்மை என்றால் அனைவரின் வாழ்க்கை முறையினையும் மதிப்பதாகும். மற்றொருவரின் வழியைவிட நம்முடையது உயர்ந்தது என்று நாம் நினைப்பதில்லை. ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட வழியை தேர்ந்தெடுத்துள்ளோம். எதனாலென்றால், இது சிறந்தது என்று நாம் நினைப்பதால். ஆனால் வேறொருவர் அது சிறந்தது என்று நிரூபித்தால், முடிவில்லாமல் அதைப் பற்றி விவாதிக்க நாம் விருப்பத்துடன் உள்ளோம்.

தமிழ்நாட்டில் ஒரு முழுமையான கலாச்சாரம் இருந்தது, தமிழ் மக்கள் குறிப்பாக மன்னர்கள், புத்தத்திலிருந்து சமணம், சமணத்திலிருந்து சைவம், சைவத்திலிருந்து சமணம், மீண்டும் சைவத்திற்கு என மாறியுள்ளார்கள். அந்த காலத்தில் உதித்த ஞானியர்களுக்கு ஏற்றது போல் அவர்கள் அமர்ந்து விவாதித்தார்கள். அந்த விவாதத்தில் சமணர்கள், "இந்த வழிதான் உயர்ந்த வழி, இது ஒரு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்" என்பதை நம்பவைத்ததால் அனைவரும் அதற்கு மாறினார்கள். அடுத்து, வேறு தலைமுறை, வேறு ஞானியர்கள் வந்தார்கள், அந்த ஞானியர்கள் சைவ வழிமுறை தான் சிறந்தது என்று நிரூபித்தார்கள், அனைவரும் அதற்கு திரும்பினார்கள். அது அற்புதமானது என்று நினைக்கிறேன். இப்படிதான் நிகழவேண்டும். 

இன்று எது நமக்கு அர்த்தமுள்ளதாக இருக்கின்றதோ அதையே நாம் அனைவரும் செய்ய வேண்டும். நாளை ஒருவர் இதைவிட அர்த்தமுள்ள ஒன்றைக் காண்பிக்கும்போது நாம் அனைவரும் அதை செய்ய வேண்டும். இதிலோ அதிலோ நாம் ஏன் சிக்கிப் போகவேண்டும். ஏதோவொன்றை உங்களுடைய அடையாளமாக ஏற்றுக்கொண்டுள்ளதால், அதுதான் எல்லாமே‌ என்று தோன்றுகிறது, அப்படித்தானே? உங்களுடைய அடையாளம் என்று எதிலும் சிக்கிக்கொள்ளாமல் இருந்தால், எது மிகவும் அர்த்தமுள்ளதோ, அதைதான் நீங்கள் எப்போதும் தேடுவீர்கள்.

கேள்விகள் எதற்கு?

அதனால், யார் ஒருவர் உங்களுடைய வீட்டிற்கு வந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட விதத்தில் உடை அணிந்திருக்கலாம், அவர்கள் குறிப்பிட்ட நம்பிக்கையினை சார்ந்திருக்கலாம், அவர்கள் ‌எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்கள் பேசுவது அர்த்தமளிக்கிறதா இல்லையா என்பதை கவனித்து கேட்கவேண்டும். அவர்கள் பேசுவது உங்களுக்கு அர்த்தமளிக்கவில்லை என்றால், ஒருவேளை அவர்கள் அர்த்தமாகவே பேசுகிறார்கள், ஆனால் அது உங்களால் புரிந்துகொள்ள முடியாதவிதத்தில் இருக்கிறது என்றால், அப்போதுதான் நீங்கள் கேள்விகள் கேட்கவேண்டும்.

கேள்விகள், அவர்களை இழிவுப்படுத்த அல்ல - கேள்விகள் எதற்கென்றால், உண்மையை அறிந்துகொள்ள நீங்கள் ஏங்குவதால். உங்களுடைய ஒரே இலக்கு வாழ்க்கையைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதுதான் என்பது மிகமிக தெளிவாக இருந்தால், நீங்கள் குழப்பத்திலிருந்து தெளிவிற்கு செல்ல தொடர்ந்து விருப்பம் கொண்டிருந்தால், நீங்கள் இதைத்தான் செய்ய விழைவீர்கள்: யாரோ ஒருவர் சரியா-தவறா என்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்காது, நீங்கள் தொடர்ந்து உயர்ந்த மேன்மையான அளவிலான தெளிவிற்கும், உங்களுக்குள் இருக்கும் உண்மையினை நோக்கி செல்லவும் முனைவீர்கள். நீங்கள் இப்படிப்பட்டவராக, உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருந்தால், யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம், எந்த பிரச்சனையும் இல்லை.