பக்தி உங்களுக்குள் உருவாக என்ன செய்ய வேண்டும் ?
கடவுள் வழிபாடு, பக்தி போன்ற கருவிகளெல்லாம் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை பார்க்கிறோம். இதனால் பக்தர்களை சிலர் மூடநம்பிக்கைவாதிகளாக பார்க்கும் நிலை உள்ளது. பக்தி என்பது ஒருவருக்கு ஏன் தேவை என்பதையும், பக்தியை உருவாக்க செய்ய வேண்டியதையும் சத்குரு இங்கே பேசுகிறார்!
கடவுளை வழிபடுவதால் கஷ்டங்கள் தீரும் என்கிறார்கள். இது மனிதனுக்குள் ஒரு லாப நோக்கத்தை ஏற்படுத்துகிறதே? இது சரியா?
வழிபாட்டினை மேற்கொள்வதால் கடவுள் உங்களுக்கு ஏதேனும் செய்வார் என்ற நோக்கத்தில் வழிபாடு உருவாக்கப்படவில்லை. உங்களுக்குள் ஒரு நல்லசூழ்நிலையை உருவாக்க வழிபாடு என்ற கருவியை பயன்படுத்தினோம். உலகில் எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும், அதற்கு புத்திசாலித்தனம் மட்டும் போதுமானதல்ல, பக்தியும் தேவை. இங்கிருக்கும் இந்த மரத்தை உருவாக்கியதும் கடவுள்தான் என்பதை உணர்ந்தால் அவர்மீது வெறுப்பு வருமா?
ஒரு சாதாரண மனிதனிடம், அவன் அறியாமலேயே எல்லாவிதமான தன்மைகளும் உருவாக பக்தியென்பது நல்ல கருவி. பக்தியை உருவாக்கிட தற்போது ஏதேனும் செயல் தேவைப்படுகிறது. அமர்ந்தவாறே பக்திநிலையை எய்த அனைவராலும் இயலவில்லை. எனவே அதற்கென ஒரு செயலை உருவாக்கினோம். அதுதான் வழிபாடு. இந்த வழிபாடு காலப்போக்கில் வடிவங்களை எடுத்துவிட்டது. இந்த படிவங்களால் பக்தியென்பது மறந்துவிட்டது. இப்படித்தான் வழிபட வேண்டும் என்றில்லை. வழிபாடு, கோயிலில்தான் செய்யப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. கோயிலில் வழிபடத்தான் உங்களுக்கு விருப்பமென்றால் அங்கே செல்லலாம் அல்லது பணியாற்றுமிடத்தில் பக்தியோடு செயல்படுவதில்தான் உங்களுக்கு விருப்பமென்றால், அங்கே அப்படியிருக்கலாம். அல்லது மரத்தடியில் அமர்ந்து பக்தியோடு இருக்க முடியுமென்றால் அப்படிச் செய்யலாம். குறிப்பிட்ட செயலைச் செய்தால்தான் பக்தியோடு இருக்க முடியும் என்றில்லை.
சிலகாலங்களுக்கு முன்பாக என்னிடம் ஒருவர் இவ்வாறு கூறினார், "25 வருடங்களாக ஏராளமான வழிபாடுகளை நான் செய்து வருகிறேன். ஆனால் எனக்குள் பக்தியென்பதே வரவில்லை. எனக்குத் தெரிந்தமனிதர் ஒருவர் இருக்கிறார். கடவுள் முன்பு அமர்ந்தாலே அவர் கண்களில் கண்ணீர் வருகிறது. எப்பொழுதும் அவர் ஆனந்தமாக இருக்கிறார். எனக்கு அப்படி நடக்கவில்லை" என்று கூறினார். நான் அவரிடம் "உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்?" என்று கேட்டேன். அவர், "எனக்கு என் மனைவி என்றால் மிகவும் பிரியம். ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. நான் அவரிடம் கூறினேன், "அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியின் புகைப்படத்தை வைத்து வழிபடுங்கள், உங்களுக்கு வழிபாடு வந்துவிடும்" என்று. ஒரு வாரம் கழித்து வந்தவர், "இப்போது என் கண்ணிலும் கண்ணீர் வருகிறது, ஆனந்தமாக இருக்கிறது" என்றார்.
பக்தியை உருவாக்கவே வழிபாடு. அதனைமூட நம்பிக்கையாக வளர்த்துக் கொள்ளாமல் சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். அருகிலிருப்பவர்கள் யாரைப் பார்த்தாலும் அன்பு வரவில்லை. ஆனால் அனைத்தையும் உருவாக்கியவன் மீது அன்பு வருகிறது. படைத்தவர் மீது அன்பு வருகிறபோது அவன் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்புதானே வர வேண்டும். நமக்கு யாரோ ஒருவரை மிகவும் பிடிக்குமென்றால் அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் நமக்குப் பிடிக்கும்தானே. எனவேபிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளின் மீது வழிபாட்டின் காரணமாக அன்பு பெருகுமாயின் அதே வழிபாட்டை சரியானவிதத்தில் பயன்படுத்தினால் அவர் உருவாக்கிய படைப்புகளின் மீதும் அன்பு பெருகும். இப்படி இருந்தால் தான் ஒரு மனிதன் முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்.
Subscribe