பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்!
"நேரம் சரியில்லேன்னா அப்படிதாம்ப்பா... பட்ட காலிலேயே படும்! கெட்ட குடியே கெடும்!" சோதனை மேல் சோதனைகளை சந்தித்து நொந்து போயிருப்பவரிடம், இப்படி சொல்லிவிட்டு சோகமான முகபாவத்துடன் கடந்துபோகும் மனிதர்களை இன்றும் பார்க்க முடிகிறது. இப்படிச் சொல்வதில் உண்மை உள்ளதா? சத்குருவிடம் கேட்டபோது...
 
சத்குரு:

வாகனத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். சாலையில் ஒரு குழியை கவனிக்கிறீர்கள். அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் சாலையின் மற்றப் பகுதிகளை கவனிக்க வேண்டும். ஆனால், என்ன செய்கிறீர்கள்? குழியையே கவனிக்கிறீர்கள். அதிலேயே போய் சிக்குகிறீர்கள்.

இது மனதின் இயல்பு. எது மனதால் வேண்டாம் என்று நினைக்கப்படுகிறதோ அதுவே நடக்கும்.

எந்த துன்பம் வந்தாலும், நம்பிக்கை இழந்து விடாமல், செய்ய வேண்டியதை கவனித்துச் செய்தால், ஏற்கனவே கெட்ட குடி மேலும் ஏன் கெடப்போகிறது?

ஒரு சோதனை செய்து பாருங்கள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு குரங்கைப் பற்றியே நினைக்கக்கூடாது என்று மனதுக்குக் கட்டளையிடுங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். ஐந்து நிமிடமும் குரங்குகளே மனதை ஆக்கிரமிக்கும்.

காலில் ஒரு அடி பட்டுவிட்டால், அது எப்போதும் உங்கள் கவனத்தில் இருக்கும். அதில் எதுவும் பட்டுவிடக்கூடாது என்று அதே நினைப்பாக இருந்தால், அதில் மேலும் மேலும் அடிபட்டுக் கொண்டேதான் இருக்கும்.

ஏதோ ஒரு பிரச்சனை வந்துவிட்டால், "ஐயோ, என் நட்சத்திரம் சரியில்லையோ? எனக்கு அதிர்ஷ்டம் இல்லையோ? நான் மேலே வரவே முடியாதா?" என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தால், பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதேபோல், ஒரு குடும்பத்தில் ஒரு பிரச்சனை வருகையில், அதைப் பற்றியே நினைத்து கவலையில் மூழ்கியிருந்தால், அடுத்து செய்ய வேண்டியது செய்யப்படாமல் நின்று போகும். இருப்பது போதாது என்று மேலும் மேலும் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். தலை நிமிரவே விடாது.

எந்த துன்பம் வந்தாலும், நம்பிக்கை இழந்து விடாமல், செய்ய வேண்டியதை கவனித்துச் செய்தால், ஏற்கனவே கெட்ட குடி மேலும் ஏன் கெடப்போகிறது?

பிரச்சனைகள் தாமாக வருவதில்லை. உங்களை அறியாமல், நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

பட்ட காலையும், கெட்ட குடியையும் பற்றி கவனம் வைக்காமல், செய்ய வேண்டியதை மட்டும் ஒழுங்காகத் திட்டமிடுங்கள். முழுமையாக அதில் ஈடுபட்டு செயல்பட்டுப் பாருங்கள்.

இந்த அச்சம் அர்த்தமற்றது என்று புரிந்துவிடும்.

  0 Comments
 
Login / to join the conversation1