"பகையாளியை உறவாடிக் கெடு!" என்ற பழமொழியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது; பகையாளியை உறவாடிக் கெடுத்துவிட முடியுமா?" இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்ட போது, பழமொழி சொல்லப்பட்ட காலகட்டத்தையும், அது இன்றைய சூழ்நிலையில் பொருந்துமா என்பதையும் விளக்குகிறார்.

சத்குரு:

பல துறைகளில், இன்று போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அபத்தம் நேர்கிறது. போட்டியாளர் என்பவர் உங்கள் திறமையை முழுமையாக வெளிக் கொணர்வதற்கு உதவுபவர். உங்கள் குறைபாடுகள் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்த வல்லவர், போட்டியாளர்.

மனித இனம் இவ்வளவு வளர்ச்சி பெற்ற பிறகும், எதிரியிடம் நண்பனாக நடித்து, அவன் அயர்ந்த நேரம், அவனை அழித்துவிடு என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்வது வெகு விபரீதமானது.

அவர் உங்களுடன் ஓடி வருபவர். ஒன்று அவர் உங்கள் பின்னால் இருக்கலாம் அல்லது உங்களைத் தாண்டிப் போகலாம். அவருடைய ஆர்வம் உங்களைப் பற்றியதல்ல. அவரைப் பற்றியது. உங்களுக்கு முன்பாகப் போக வேண்டும் என்பதே அவர் குறிக்கோள்.

ஆனால், பகைவன் அப்படியல்ல. அவர் உங்கள் பாதையை மறித்து எதிரில் ஓடி வருபவர். குறுக்கில் விழுந்து மறிப்பவர் கோபம், ஆத்திரம் இவற்றை முன்வைத்து அவர் உங்களைத் தாக்க வருகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சில சமயம் உங்களை அறியாமலேயே நீங்கள் எதிரிகளை சம்பாதித்து விடுவீர்கள். எந்த உள்நோக்கமும் இல்லாமலேயே நீங்கள் நடக்கும் பாதையில் சிலர் உங்களால் அடிபட்டுப் போவார்கள். காயப்பட்டுப் போவார்கள். அவர்களோ, அவர்களுடன் தொடர்பு கொள்பவர்களோ உங்களை பகையாகக் கருதக்கூடும். உங்களை அவர்கள் முன்பின் பார்த்திராமல் இருந்தால்கூட, பகையை வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு காலத்தில் தன் நாட்டை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் அரசன், ஒருவிதப் போர்த் தந்திரமாக, அடுத்த நாட்டுக்கு ஒற்றர்களை அனுப்புவான். ஒற்றனின் வேலையே எதிரியிடம் நட்பை சம்பாதிப்பதுதான். அந்த நட்பையும், உறவையும் பயன்படுத்தி, எதிரியைப் பற்றி அறிந்து தன் நாட்டுக்கு உளவு சொல்வான் அவன். அந்த அடிப்படையில் இந்த அரசன் போர் தொடுப்பான். எதிரியை வெற்றி கொள்வான்.

அதற்காகச் சொல்லப்ட்ட வாசகமாக இதை நினைப்பவர்கள் இருக்கலாம்.மனித இனம் இவ்வளவு வளர்ச்சி பெற்ற பிறகும், எதிரியிடம் நண்பனாக நடித்து, அவன் அயர்ந்த நேரம், அவனை அழித்துவிடு என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்வது வெகு விபரீதமானது.

உங்கள் எதிரியை அழித்துவிட வேண்டும் என்று நீங்கள் புறப்பட்டால், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்ல முடியாது. யார் கண்டது. அந்த முயற்சி எதிரியை அழிப்பதற்கு பதிலாக உங்களையே அழித்துவிடக்கூடும்.

எல்லா உயிரினங்களிடத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். நீங்கள் பகைவனாக நினைப்பவரிடமும் அந்த எதிர்ப்பு இருக்கும். அவரை அழிக்கப் பார்த்தால், அவர் கடைசி வரை உங்களை அடக்கிவிடப் போராடுவார். வாழ்வா, சாவா என்று வந்துவிட்டால், அவருடைய எதிர்ப்பு வலிமை மிக்கதாகிவிடும்.

அதனால், பகைவனை அழிப்பதற்கு பதிலாக அவர் மீது நீங்கள் பாராட்டும் பகையுணர்ச்சியை அழித்துவிடுங்கள். ஒருவர் மீது பகைமை இல்லாதபோது, அவர் அதற்கு மேல் பகைவனாகத் தொடர இயலாமல் போகிறது. அடிப்படையில் இருக்கும் பகைமையை ஒழித்துவிட்டால், ஒருவேளை அவர் உங்களுக்கு நண்பனாகி விடலாம். உங்களுக்கு பலம் சேர்க்கலாம்.

karpidis@flickr

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!