நிறைகுடம் தளும்பாது, கடவுள் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது - இந்த இரு பழமொழிகளுக்கும் சத்குருவின் விளக்கங்கள் இங்கே...

சத்குரு:

"நிறைகுடம் தளும்பாது!"

எத்தனைக் கற்றாலும், மேலும் கற்பதற்கு மிச்சம் இருக்கும். எத்தனைப் பொருள் ஈட்டினாலும், ஈட்டாத பொருள் பாக்கி இருக்கும். வேறு எதிலும் நிறைவு கொள்ள முடியாது. சேர்ப்பதற்கு மிச்சம் இருப்பதால், அது பற்றிய கவலை இருக்கும். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உள்ளிருந்து ஒரு வற்புறுத்தல் இருக்கும். அதன் காரணமாக ஏதோ ஓர் ஆரவாரம் இருக்கும்.

எத்தனைக் கற்றாலும், மேலும் கற்பதற்கு மிச்சம் இருக்கும். எத்தனைப் பொருள் ஈட்டினாலும், ஈட்டாத பொருள் பாக்கி இருக்கும்.

இப்படி தன்னை உணராதவர்களிடம் நிறைவின்மை இருக்கும். எதையோ தேடும் பரபரப்பு இருக்கும். அவர்கள் தளும்பிக் கொண்டிருப்பதாகத் தெரியும்.

ஆனால், தன்னை ஒருவன் உணர்ந்தால், அந்த நிறைவு முழுமையாக இருக்கும். அந்த ஞானத்தை மட்டுமே நிறைகுடம் என்று நான் கருதுகிறேன்.

பாரதத்தில் தங்களை உணர்ந்த ஞானிகள் பெரும்பாலும் மௌனமாகவே இருந்திருக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏதாவது பேச வேண்டும் என்று எந்த வற்புறுத்தலும் அவர்களுக்கு இல்லை. எதையாவது செய்து காட்டி மற்றவர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் அவர்களுக்கு இல்லை. சூழ்நிலையின் தேவைக்கேற்ப, அவசியமான வார்த்தைகளை அவசியமானவர்களிடம் மட்டுமே அவர்கள் உதிர்ப்பதைக் காணலாம்.

முழுமையாக இருப்பதால், எதையாவது இட்டு, தங்களை நிரப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

அந்த நிறைகுடங்கள் தளும்புவதில்லை.

"கடவுள் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது!"

நீங்கள் ஒழுங்காகச் செயலாற்றினால், உங்களுக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்து பழிவாங்கிக் கொண்டிருக்க கடவுள் ஒன்றும் சினிமா வில்லன் அல்ல.

விதியை மட்டுமே நம்பி உங்களை ஒப்படைத்துவிட்டால், விரைவிலேயே அது உங்களைப் புதைத்து மண்மூடி விடும்.

விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச் சுற்றி வளர்ந்து நிற்கின்றன. அவற்றைக் கடவுள் கொண்டுவந்து உங்கள் தோட்டத்தில் நட்டுவிட்டதாகப் பெருமூச்சு விடுவதில் அர்த்தமில்லை.

முழு கவனத்தோடு உங்கள் பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை உங்களுக்கு இருந்தும், அதைப் பயன்படுத்தாமல், இருப்பது மாபெரும் குற்றம்.

உங்கள் உடலின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், உங்கள் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளத் தெரிந்து கொண்டுவிட்டால், ஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் வரை விதி உங்கள் சொல்படி கேட்கும். உங்கள் உயிர்சக்தியை முழுமையாக ஆளக் கற்றுக் கொண்டு விட்டீர்களென்றால்...

எந்தக் கருப்பையில் உதிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும், எப்படி இறக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் நீங்கள் விரும்பிய வண்ணம் அமைத்துக்கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஏன் உங்கள் மரணத்தின் தருணத்தைக்கூட முற்றிலுமாக நூறு சதவிகிதம் தீர்மானிப்பது நீங்கள்தான். இது புரியாமல், வேறு யாரோ எல்லாவற்றையும் கொண்டு வந்து உங்கள் தலையில் கொட்டிவிட்டதாக நினைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

விதி உங்களை செலுத்தட்டும் என்று வெட்டியாக இருந்தால், எது எதுவோ உங்களை இப்படியும் அப்படியுமாகப் பந்தாடி விட்டுத்தான் போகும்.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!