நீங்களும் புத்தராகலாம்
புத்த பௌர்ணமியை முன்னிட்டு, புத்தரைப் போல மலர்வதற்கு என்ன தேவைப்படுகிறது என்று சத்குரு சொல்கிறார்.
புத்த பௌர்ணமியை முன்னிட்டு, புத்தரைப் போல மலர்வதற்கு என்ன தேவைப்படுகிறது என்று சத்குரு சொல்கிறார்.
சத்குரு:
ஆன்மீகப் பாதையில் வளரும் ஒருவரால் கௌதமரின் பங்களிப்பை மறுக்க முடியாது, ஏனென்றால் அவர் உலகெங்கும் அவ்வளவு பரவலாக பின்பற்றப்படுகிறார். அவர் வாழ்நாளிலேயே, ஆன்மீக செயல்முறையை உலகெங்கும் பரிமாறிய 40,000 துறவிகள் அவரிடம் இருந்தார்கள். அவருக்கே உரிய பாணியில், அமைதியாக, உலகை நிரந்தரமாக மாற்றிச்சென்றார். பூமியின் பிரம்மாண்டமான ஆன்மீக அலைகளில் ஒன்றாக அவர் இருந்துள்ளார். யோக கலாச்சாரத்தில், ஆன்மீகத் தேடுதல் உடைய ஒருவரின் வாழ்க்கையில் புத்த பௌர்ணமி தினம் எப்போதும் மிகவும் புனிதமான நாளாக இருந்துள்ளது. ஆனால் இன்று கௌதம புத்தரின் நினைவாக நாம் அந்த தினத்திற்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளோம். 2500 வருடங்களுக்கு முன்னர் இந்த பௌர்ணமி தினத்தில் ஒரு மனிதர் உயிர் மலர்ந்தார்.
Subscribe
பொதுவாக புத்தர் என்றாலே மக்கள் கௌதமரைத் தான் நினைப்பார்கள், புத்தர் என்பது அவரை மட்டும் குறிப்பதல்ல. நம் பூமியில் ஆயிரக்கணக்கான புத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள், இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். "பு" என்றால் புத்தி. புத்திக்கு அப்பாற்பட்டு அல்லது அதற்கு மேலே இருக்கும் ஒருவர், தன் மனதின் ஒரு பகுதியாக மட்டுமே இருப்பதைக் கடந்த ஒருவர், புத்தராகிறார்.
இப்போது பெரும்பாலான மனிதர்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள், கருத்துக்கள், மற்றும் முன்முடிவுகளின் குவியலாக மட்டுமே இருக்கிறார்கள். கவனித்துப் பாருங்கள், எதை "நான்" என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அது வெளியிலிருந்து நீங்கள் சேகரித்த பல விஷயங்களின் ஒரு சிக்கலான கலவை. நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டீர்களோ, அப்படிப்பட்ட குப்பையைத்தான் உங்கள் மனதில் சேகரித்துள்ளீர்கள். உங்கள் மனம் என்பது சமுதாயத்தின் குப்பைத் தொட்டி, ஏனென்றால் அதில் எதை எடுத்துக்கொள்வது எதை விடுவது என்று உங்களால் தேர்வு செய்திட முடியாது. உங்களைக் கடந்துபோகும் ஒவ்வொருவரும் உங்கள் தலைக்குள் எதையாவது போட்டுவிட்டுச் செல்கிறார். மனதின் இக்குப்பையையே நீங்கள் விரும்பினால் தெய்வீகம் என்று சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அது தெய்வீகமாகாது, அது சாதாரண மனம். மனம் என்று நீங்கள் அழைக்கும் செயல்முறையைக் கடந்து, வாழ்க்கையை உணர்ந்திட, வேறொரு வழி உள்ளது. அதற்கு நீங்கள் இந்தக் குப்பைத் தொட்டியை மூடி ஓரமாக வைக்கவேண்டும்.
மனம் என்பது வியக்கத்தக்க விஷயம், ஆனால் அதனோடு சிக்கிப்போனால் அது முடிவில்லாமல் உங்களை அலைக்கழிக்கும். நீங்கள் மனதில் இருந்தால், இடைவிடாமல் துன்புறும் மனிதராக இருப்பீர்கள் - உங்களால் தப்பித்துக்கொள்ள முடியாது. பாதிப்பைத் தவிர்க்க இயலாது. சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது அதன் கொள்ளை அழகில் எல்லாவற்றையும் ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் கூட, பாதிப்பு என்பது உங்கள் பின்னால் வால் போல காத்துக்கொண்டு இருக்கும். அடுத்த க்ஷணத்தில் பின்னால் திரும்பிப் பார்த்தால், அது அங்கேயே இருப்பதை கவனிப்பீர்கள். எதை நீங்கள் "என் சந்தோஷம்" என்று சொல்கிறீர்களோ, அவை உங்கள் வேதனைகளை மறந்த க்ஷணங்கள். நீங்கள் மனதில் இருக்கும்வரை, பயங்கள், பதற்றங்கள், மற்றும் போராட்டங்களைத் தவிர்க்க இயலாது, அதுதான் மனதின் இயல்பு.
மனம் படுத்தும் பாட்டை மனிதர்களால் தாங்கமுடியாத காரணத்தால் தான், சமூகத்தில் மனதிற்குக் கீழே செல்வதற்கு பல வழிகளை உருவாக்கியுள்ளனர். அதிகமாக சாப்பிடுவது, மதுப்பழக்கம், உடல் சம்பந்தப்பட்ட இன்பங்களில் வரம்புமீறி ஈடுபடுவது, இவை அனைத்தும் மனதிற்குக் கீழே செல்வதற்கான வழிகள். இவற்றை மக்கள் பயன்படுத்தி, ஒருசில க்ஷணங்களுக்கு அவர்களுடைய வேதனையை மறக்கிறார்கள். குடித்துவிட்டுத் தூங்குகிறீர்கள் என்றால், சிலமணி நேரத்திற்கு உங்கள் மனம் உங்களை தொல்லை செய்வதை நிறுத்திவிடும், ஏனென்றால் நீங்கள் மனதிற்குக் கீழே சென்றிருப்பீர்கள். திடீரென உங்கள் மனதின் தொல்லை இல்லாமல் போனதால் அது மிகவும் இனிமையாக, உங்களை தளர்வுசெய்வது போல் தோன்றும். அதனால் அதற்கு ஆழமாக அடிமையாகிறீர்கள்.
ஆனால் பரிமாண வளர்ச்சியின் இயற்கையான செயல்முறையில், மனதிற்குக் கீழே இருந்த இந்த உயிர் இப்போது மனதிலிருந்து இயங்கும் நிலைக்கு வந்துள்ளது. அது விடுதலையாக விரும்பினால், அது மனதைக் கடந்து செல்ல வேண்டும். திரும்பிப் பின்னால் போக வழியில்லை. ஏதோ ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்தி மனதிற்குக் கீழே சென்றால், எப்போதுமே அதன் தாக்கம் போனபிறகு வாழ்க்கை அதிக தீவிரத்திதுடன் உங்களைத் துரத்திப் பிடித்துக்கொள்ளும். எப்போதும் இப்படித்தான் நிகழும், வேதனை தீவிரமாகத் தான் மாறும். யோகாவின் செயல்முறை, மனதை எப்படிக் கடந்து செல்வது என்பது குறித்தது. மனதைக் கடந்து செல்லும்போது தான் உங்களால் உண்மையில் நீங்களாக இருக்கமுடியும்.