மரத்திலிருக்கும் பலாக்காயை விட, கையில் இருக்கும் கலாக்காயே மேல்!

தன் தகுதிக்கு மீறி ஆசைபடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் ஒரு பழமொழி இது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் என்பதை அறிந்துகொள்வோம்...
 

தன் தகுதிக்கு மீறி ஆசைபடுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் ஒரு பழமொழி இது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் என்பதை அறிந்துகொள்வோம்...

சத்குரு:

இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு செயல்பட்டால், இன்னும் குகை மனிதர்களாகவே வாழ வேண்டியதுதான். பலாக்காய் என்ன? அதைவிட எட்டுவதற்கு அரியதாக விண்ணில் தொங்கும் நிலாக்காய்க்கே ஆசைப்படுங்கள் என்றுதான் சொல்வேன்.

நிலாவைக் குறி வைத்து அம்பு எய்தாலே, சூழ்நிலை காரணமாக அது கூரையைக் கூட சில சமயம் தாண்டாது.

எதற்கோ ஆசைப்பட்டீர்கள். கிடைக்காது என்ற அச்சம் கொண்டீர்கள். எளிதாகக் கிடைக்கக்கூடியதை எட்டிப் பிடித்தீர்கள். இதன் பெயரா வெற்றி?

உங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள முழு முயற்சி செய்து, அதில் தோற்றால் கூட பரவாயில்லை. விரும்பாத ஒன்றைக் கைப்பற்றி அதை வெற்றி என்று எப்படிக் கொண்டாடுவீர்கள்? உங்கள் கனவைக் கொன்றுவிட்டபின், அது வெற்றியல்ல; படு தோல்வி.

நிலாவைக் குறி வைத்து அம்பு எய்தாலே, சூழ்நிலை காரணமாக அது கூரையைக் கூட சில சமயம் தாண்டாது. அம்பு அவ்வளவு தூரம் எங்கே பயணம் செய்யப்போகிறது என்று நம்பிக்கை இழந்து கூரைக்குக் குறி வைத்தால், அம்பு உங்கள் காலடியில் செயலற்று வீழ்ந்து விடக்கூடும்.

எனக்குத் தெரியும். நான் தோற்றுப் போனவனாகத்தான் இறக்கப்போகிறேன். ஏனென்றால், என் கனவு அவ்வளவு பெரியது. உலகமே அன்பாக மாற வேண்டும் என்ற கனவை என் வாழ்நாளுக்குள் சாதித்துவிட முடியாது.

அதற்காக என் கனவை சிறிதாக்கிக் கொள்ள முடியுமா? நான் தோற்றாலும், எனக்குப் பின்னால் அந்தக் கனவை நனவாக்க, சில ஆயிரம் பேரை விட்டுப் போகிறேனே, அது என் வெற்றி. அவர்கள் மும்முரமாக முனைவார்கள். என்றாவது ஒருநாள் என் கனவு நிறைவேறும் இன்று நான் தோற்றாலும், அதுவே என் வெற்றி.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1