தந்திரா கலாச்சாரத்தில் சுவாதிஷ்டான சக்கரம் பற்றிய பல்வேறு ஆழமான பார்வைகளை கடந்த பதிவில் பேசிய சத்குரு, இந்தப் பகுதியில் மனிதனின் ஆரோக்கிய மேம்பாடு மற்றும் நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சுவாதிஷ்டானத்தின் பங்கு போன்ற இரகசியங்களை கட்டவிழ்க்கிறார். சித்தர்கள் அரிய மூலிகை செடிகளை கண்டறிந்த வழிமுறையும் நமக்கு இங்கே புரியவருகிறது!

புத்துணர்வுக்கான வழி!

யோக மரபில் நாம் செய்யக்கூடியவற்றில், சுவாதிஷ்டானாவுடன் வேலை செய்வதுதான் மிக சிக்கலானதும் அழகானதும்கூட. ஆனால் அதைச் செய்யும் அந்த தனிநபருக்கு, செயல்படுவதற்கு ஆபத்தான வழியும் கூட. அதை நீங்கள் அதிகப்படியாக செய்தால், அல்லது அதைச் செய்வதில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், உங்கள் சுயம் என்பது மிக அழகாக மாறிவிடலாம், ஆனால் உங்கள் உடலை இழக்க நேரிடலாம். சுவாதிஷ்டானா மற்றும் மூலாதாராவின் கலவையைப் பயன்படுத்தி, மனிதர்களுக்கு மிக அழகான விளைவுகளை பல சூழ்நிலைகளில் உருவாக்கியுள்ளார்கள். பலர் மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு புத்துணர்வடைந்து, மிக துடிப்பாகவும் உயிர்ப்பாகவும் மாறியுள்ளார்கள்.

மூலாதாரா மற்றும் சுவாதிஷ்டானா உறுதிபெற்றால், ஆரோக்கியம் உள்ளிருந்து தன்னால் மிளிரும், ஏனென்றால் இவைதாம் உடலின் அடிப்படையே. மூலாதாரா மற்றும் சுவாதிஷ்டானாவிற்கான யோகப் பள்ளிகள்
நம் ஈஷா ரெஜுவினேஷன் சென்டர் இதை ஓரளவு செய்கிறது. நீங்கள் 50 வயதுக்குக் குறைவாக இருந்து, 3 வாரங்களுக்கு இங்கு வந்தால், உங்கள் செல்களின் வயதைப் பொருத்தமட்டில், உங்களை 5 வருடம் இளமையாக்கிட முடியும். நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், 3 வாரங்களில் உங்களை 3 வருடம் இளமையாக்கிட முடியும். 6 வாரங்கள் தங்கினால், 5 வருடம் இளமையாக முடியும். நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், 3 வாரங்களில், ஒன்றரை முதல் 2 வருடம் இளமையாக்கிடலாம். 6 வாரங்கள் தங்கினால், 3 வருடங்கள் இளமையாக்-கிடலாம். எங்களுடன் 12 வாரங்களுக்குத் தங்கினால், செல்களின் வயது 6 முதல் 8 வருடங்கள் வரை இளமையாகும் விதமாகச் செய்யமுடியும். இப்படி வயதின் மூப்பு எவ்வளவோ, அதைப் பொருத்து தங்க வேண்டிய கால அளவு சற்று மாறுபடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடனடி நல்வாழ்வா உச்சநிலை நல்வாழ்வா?

இதை சிகிச்சைமுறைகள் கொண்டு, சித்தா மற்றும் ஆயுர்வேத எண்ணெய்கள் மற்றும் மருந்துகள், மூலிகைகள், பிற பொருட்கள், உலோகங்கள் ஆகியவற்றின் மூலம் செய்யமுடியும். அது ஒரு நுட்பமான செயல்முறை. ஆனால் இதை செய்வதற்கு இன்னும் மேலான வழி, உங்கள் மூலாதாரா மற்றும் சுவாதிஷ்டானாவை நீங்களாக தூண்டினால், உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும். மூலாதாரா மற்றும் சுவாதிஷ்டானா உறுதிபெற்றால், ஆரோக்கியம் உள்ளிருந்து தன்னால் மிளிரும், ஏனென்றால் இவைதாம் உடலின் அடிப்படையே. மூலாதாரா மற்றும் சுவாதிஷ்டானாவிற்கான யோகப் பள்ளிகள், மருத்துவத்திற்கான விரிவான வழிமுறைகளையும், ஆரோக்கியமடைவதற்கான முறைகளையும் உருவாக்கினர். அன்றைய சந்தையில் இதற்கான தேவையே அதிகமாக இருந்ததால் இப்படி நடந்தது. மக்கள் ஒரு யோகியைக் கண்டால், “என் நோயை குணப்படுத்துவீர்களா? என்னை மீண்டும் இளமையாக்குவீர்களா? என் பாட்டியை மீண்டும் உயிருடன் நடமாட வைப்பீர்களா?” என்று கேட்டுக் கொண்டதுதான் அதிகம். வெகு சிலரே, “எனக்கு என் எல்லைகளைக் கடக்க உதவுவீர்களா?” என்று கேட்டார்கள்.

மக்கள் கேட்டுக்கொண்டவற்றுக்கு ஏற்ப யோகா உருக்கொண்டது. இன்றைய உலகில், மக்கள் இதையே மிகவும் சரியானது என்றும், யோகாவின் மிகச் சிறந்த அம்சம் என்றும் கருதுகிறார்கள். யோகமுறையை ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துவது அதன் மிகக்குறைவான சாத்தியத்தைப் பயன்படுத்துவதாகும். ஆனால் அதுவே இன்று மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. உடல் நலத்தில் பலன்கள் தந்தால்தான் அது உண்மையானது என்று மக்கள் நினைக்கிறார்கள். உலகில் சந்தைக்கு செல்வதற்கு, மூலா-தாராவை மையமாகக் கொண்ட யோகமுறைகள்  மிகவும் உதவியாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கவனத்தை ஈர்த்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினால், பிற்காலத்தில் அதைவிடப் பெரிய சாத்தியங்களுக்கு அதுவே நுழைவாயிலாக அமையமுடியும். எனக்கு அவ்வளவு பொறுமை இல்லை. மூலாதாராவிற்கு, பூமியையும் மூலிகைகளையும் பயன்படுத்தலாம், ஏனென்றால் மூலிகைகள் மண்ணிலிருந்தே வருகின்றன. சுவாதிஷ்டானாவிற்கு, பெரும்பாலும் நெருப்பும் ஆகாயமும் பயன்படுத்தப்படுகிறது. பஞ்ச பூதங்களிலிருந்து உரிய தத்துவங்களையும் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம், ஒருவித திறமையை ஒருவர் சம்பாதித்துக்கொள்ள முடியும், அதன் மூலம் வெளி விஷயங்கள் உங்களை பாதிக்க முடியாத நிலையை எட்ட முடியும். இதுகுறித்து அற்புதமான கதைகள் இருக்கின்றன.

ஆளுமையே சுதந்திரம்!

சுவாதிஷ்டானா மற்றும் மூலாதாரா, இவ்விரண்டின் மீதும் போதிய ஆளுமை உங்களுக்கு இருந்தால், செடிகள் உங்களிடம் பேசும்.
1960களில், நீம் கரோலி பாபாவிடம், இன்று ராம்தாஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்கர் ஒருவர் வந்தார். அப்போது அந்த அமெரிக்க இளைஞர், LSD எனப்படும் போதைப்பொருள்தான் வாழ்க்கைக்கான உச்சக்கட்ட தீர்வு என்று நம்பினார். பலர் இதனை எடுத்துக் கொண்டனர். சிலர் இதை எடுத்துக் கொண்ட பிறகு, தங்களால் பறக்கமுடியும் என்று நினைத்து உயர்ந்த கட்டிடங்களிலிருந்து குதித்தார்கள். நீம் கரோலி பாபாவிடம் கொடுப்பதற்காக கை நிறைய LSD - உடன் ராம்தாஸ் வந்தார். ஆனால் நீம் கரோலி பாபா, தன்னளவில் பரவசத்தில் லயித்திருந்தார். ராம்தாசின் அன்றைய பெயர் வேறு. அவர் தன்னிடம் வேறு பொருள் இருப்பதாகச் சொன்னார். ராம்தாஸ் அவரிடம் சில LSD மாத்திரைகளைத் தந்தார். நீம் கரோலி பாபா அவற்றை வாயில் போட்டுக் கொண்டார். அவ்வளவு அதிகமான மாத்திரைகளை ஒரே சமயத்தில் போட்டிருந்தால், வேறு யாராக இருந்தாலும் இறந்திருப்பார்கள். ஆனால் அவரோ அதனால் துளியும் பாதிக்கப்படாமல், எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து தனது வாடிக்கையான செயல்களில் ஈடுபட்டார். ராம்தாஸ் இதைக் கண்டு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார். அவருடைய திறந்த நிலையாலோ, அவர் எடுத்துக் கொண்ட போதைப் பொருளாலோ, நீம் கரோலி பாபாவின் கருணையினாலோ, அவருக்குள் சில விஷயங்கள் நிகழ்ந்தன. அதற்குப் பிறகு அவர் அமெரிக்கா திரும்பியபோது, இதனை மக்கள் வாழ்க்கைக்கு எடுத்துச் செல்வதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர்கள் கற்பனை செய்துகூட பார்த்திராத அளவு பெரிதான ஒரு சாத்தியம் இருக்கிறது என்பதற்கு, மேற்கத்திய மனங்களை திறக்க வேண்டுமென்று விரும்பினார்.

சுவாதிஷ்டானா மற்றும் மூலாதாரா, இவ்விரண்டின் மீதும் போதிய ஆளுமை உங்களுக்கு இருந்தால், செடிகள் உங்களிடம் பேசும். விரிவான ஆயுர்வேத முறையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன, இது நவீன மருந்தியலின் பட்டியலைக் காட்டிலும் நீளமானது. இது ஆய்வகத்தில் சோதனை செய்த ஒருவரிடமிருந்து வர-வில்லை. அவர்கள் காட்டுவழியாக சாதாரணமாக நடந்துசென்றார்கள், அப்போது செடிகள் அவர்களிடம் பேசின. சுயத்தின் இனிமை உங்களை உடலின் கட்டாயங்-களி-லிருந்து விடுவித்தால், உங்களை சுற்றி-யிருப்பவை அனைத்தின் மொழியும் உங்களுடையதாகிறது.

செடிகள் உங்களிடம் பேசும்போது...

செடிகள் அவர்களிடம் பேசியபோது, “சர்க்கரை நோயை நான் குணப்படுத்துவேன்” என்றெல்லாம் அவை கூறவில்லை, ஆனால் ஒவ்வொரு தாவரத்தின் தன்மையும் தெள்ளத் தெளிவானது. நீங்கள் களரிப்பயட்டு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதனால் உடலில் துர்நாற்றம் வீசுகிறது என்று வைத்துக்கொள்வோம். பாரிஜாத மலர்ச்செடியின் அருகில் செல்லும்போது, உங்கள் வாடையை நுகர்ந்து செடி சுருங்கி விடலாம். குளித்துமுடித்த பிறகு, மீண்டும் அந்த செடியின் வழியாகச் சென்றால், திடீரென பாரிஜாத மலரின் நறுமனம் உங்களை மெய்சிலிர்க்கச் செய்துவிடலாம். இரண்டும் சாத்தியமே. உங்கள் உடலளவில் நீங்கள் இருக்கும் விதத்தால் மட்டுமல்ல, உங்கள் மனநிலையையும் பொருத்து இப்படி நடக்கமுடியும். சிலசமயம் நீங்கள் நடந்து செல்லும்போது உங்களை வசீகரிக்கும் நறுமணத்தை கவனிப்பீர்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உங்கள் அலைப்பேசியில் மும்முரமாக மூழ்கியிருப்பீர்கள்.

உங்கள் இருப்பின் எல்லைகளை நீங்கள் உணர்ந்தால், சொல்வதற்கு எதுவும் இருக்காது. நீங்கள் பெரிய ஆள் என்று நினைத்தால், உங்களுக்கு சொல்வதற்கு எப்போதும் ஏதாவது இருக்கும்.
நிறைய மக்கள் அவர்கள் மனத்தின் குப்பையில் தொலைந்திருக்கிறார்கள்; அவர்களால் இந்த நறுமனத்தை நுகர இயலாது. தெலுங்கில் ஒரு பழமொழி இருக்கிறது, “கழுதைக்குத் தெரியுமா சந்தன வாசனை?” நறுமணத்தை நுகர சற்று நுண்ணுணர்வு தேவைப்படுகிறது. மலருக்கும், மலர் அல்லாது ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு உயிருக்கும் அதற்கே உரிய நறுமணம் மட்டுமல்லாது, அதற்கென ஒரு அதிர்வும் உண்டு. அதை உள்வாங்கும் திறமையுடன் இருக்கவேண்டும் என்றால், உங்களுக்குள் சற்று இனிமையான மற்றும் ஆனந்தமான நிலையில் இருக்கவேண்டும். அப்போது செடிகள் உங்களுடன் பேசும். இப்படித்தான் பழங்காலத்தில் முனிவர்கள் பல்லாயிரம் மூலிகைகளையும் வேர்களையும், அவை நமக்கு என்ன செய்யமுடியும் என்பதையும் கண்டறிந்தனர். எவரும் மைக்ரோஸ்கோப் வைத்துக்கொண்டு அவற்றின் மூலக்கூறையும், வடிவமைப்பையும், அவை நம் மரபணுக்கள் மீது எவ்வித தாக்கம் ஏற்படுத்துகின்றன என்றும் ஆராய்ச்சி செய்யவில்லை. நீங்கள் முற்றிலும் வாய்மூடி இருந்தால், செடிகள் உங்களிடம் பேசும்.

உங்கள் இருப்பின் எல்லைகளை நீங்கள் உணர்ந்தால், சொல்வதற்கு எதுவும் இருக்காது. நீங்கள் பெரிய ஆள் என்று நினைத்தால், உங்களுக்கு சொல்வதற்கு எப்போதும் ஏதாவது இருக்கும். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் போனில் பேசுவார்கள். வருடத்திற்கு ஒருநாள், கருப்பு பூதம் போல இருக்கும் அந்த பெரிய தொலைபேசியை பயன்படுத்த தபால் நிலையத்திற்குச் செல்வார்கள். அதுவே ஒரு பெரிய நிகழ்ச்சி. அவர்கள் போன் பயன்படுத்தும் அளவு அவர்கள் வாழ்வில் பெரிதாக ஏதாவது நடந்திருக்கும். இன்று திடீரென எல்லோருக்கும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது, எல்லோரும் ஞானோதயமடைந்து பகிர்வதற்கு நிறைய இருக்கிறது என்றில்லை - அவர்களுக்கு சும்மாவே சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதில் எவ்வளவு சொன்னாலும், அது போதாதது போலவே இருக்கிறது.

நமது நல்வாழ்வுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. ஆனால் தொழில்நுட்பத்தின் சக்தியால், நாம் சக்திவாய்ந்த மனிதர்களாக மாறிவிட்டோம் என்று நினைக்கிறோம். ஒரு மொபைல் போன் வைத்துக்கொண்டு நீங்கள் பெரிய ஆள் என்று நினைத்தால், பேட்டரி தீர்ந்துபோய் ரீச்சார்ஜ் செய்ய இடமில்லாமல் போகும்போது, அந்த ஸ்மார்ட்போன் இல்லாமல் நீங்கள் முட்டாள் போல உணர்வீர்கள்.

அதனால் சுவாதிஷ்டானா மற்றும் மணிப்பூரகா ஆகிய இரண்டு பரிமாணங்களும், அவற்றின்மூலம் செய்வதற்கு பலவிதமான விஷயங்களை வழங்குகின்றன.