மனித உடலமைப்பில் கீழிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள சுவாதிஷ்டான சக்கரம் வழங்கும் அளப்பரிய சாத்தியங்கள், அதன் சூட்சும தன்மைகள் மற்றும் இனப்பெருக்க செயல் முதல் தெய்வீகத்தை உருவாக்குவது வரை அனைத்தையும் விளக்குகிறார் சத்குரு!

மனித உடலமைப்பின் ஏழு சக்கரங்கள் அல்லது பரிமாணங்கள், ஒவ்வொன்றும் தனித்து செயல்படும் தன்மையுடையவை அல்ல. படித்துப் புரிந்து கொள்வதற்காகவும், இதை உணர்வதற்கு அளப்பரிய கிரகிப்பு தேவைப்படுவதாலும், நாம் இவற்றை தனித்தனியே பார்க்கிறோம். இந்த ஏழு பரிமாணங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து பூட்டப்பட்டிருப்பதால், ஒன்றை இன்னொன்றிலிருந்து உண்மையில் பிரிக்க முடியாது. சுவாதிஷ்டானா சக்கரத்தில் மூலாதாரா இருக்கிறது. மணிப்பூரகா சக்கரத்தில் சுவாதிஷ்டானாவும் மூலாதாராவும் இருக்கிறது. அனஹதா சக்கரத்தில் மூன்று தன்மைகளும் இருக்கின்றன. இப்படி எல்லாவற்றிலும் எல்லாம் இருக்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தில், சில தன்மைகள் ஆதிக்கமானதாய் இருக்கின்றன.

உடலிடமிருந்து இடைவெளி!

சுவாதிஷ்டானா என்றால், “சுயத்தின் ஸ்தானம் அல்லது வீற்றிடம்,” என்று பொருள்.
மனித உடலமைப்பின் அடிப்படையாக விளங்கும் மூலாதாரத்திற்கு அடுத்த பரிமாணம் சுவாதிஷ்டானம். சுவாதிஷ்டானா என்றால், “சுயத்தின் ஸ்தானம் அல்லது வீற்றிடம்,” என்று பொருள். மூலாதாரா மீது ஒருவர் ஆளுமை எடுத்துவந்தால், மிகவும் ஸ்திரமான உடலைக் அடையமுடியும், அல்லது அனுபவத்தில் பரவச நிலையைத் பெறமுடியும், அல்லது உயர்ந்த கிரகிப்பு நிலையைத் பெறமுடியும். மூலாதாரத்தை ஒருவர் ஸ்திரமான அடித்தளமாக மட்டும் உருவாக்கியிருந்தால், சுவாதிஷ்டானா புத்துணர்வு மற்றும் இன்பத்திற்கான ஸ்தானமாகிறது. மூலாதாராவை, பரவசநிலையை எட்டுவதற்குப் பயன்படுத்தியிருந்தால், சுவாதிஷ்டானா என்பது உடலற்ற நிலையின் ஸ்தானமாகிறது - காற்றைப்போல உடல் ஆகும் விதமாக அல்ல, இதன்மூலம் உடலிடமிருந்து சற்று இடைவெளியை அனுபவத்தில் உணர முடியும். ஒரு ஆரஞ்சுப்பழத்தை எடுத்துக் கொண்டால், தோலில் இல்லாத இனிப்பு பழத்தில் இருக்கிறது; இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தாலும், சற்று இடைவெளி இருக்கிறது. அதேபோல, சுயத்தின் இனிப்பு இருக்கும்போது, உடல் அதன்மீது சற்று இடைவெளியுடன் தளர்வாக அமர்ந்திருக்கும். மனிதர்களுக்கு இருக்கக்கூடிய உடலின் வேட்கைகளிலிருந்து இது சற்று சுதந்திரம் தரும்.

மூலாதாரா அல்லது அம்ருதத்தைப் பயன்படுத்தி, ஒருவர் தன் கிரகிப்பு நிலையை மேம்படுத்தியிருந்தால், சுவாதிஷ்டானா அதற்கு உறுதுணையாக செயல்பட்டு, அந்த சாத்தியத்தை மேம்படுத்தும். சுவாதிஷ்டானாவில் சக்தி ஆதிக்கமாக இருக்கும்போது, ஒருவர் சுற்றியுள்ள உயிர்களுக்கு இன்னும் விழிப்புணர்வுடையவராய் மாறுகிறார். சுவாதிஷ்டானா சாதனா உங்களுக்கு சற்று சுதந்திரம் தரும். நம் தேசத்தில் சுதந்திரத்திற்கான இயக்கம் “சுவதந்திரா” என்று அழைக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுவ-தந்திரா என்றால் “சுயத்தின் தொழில்நுட்பம்” -  சுதந்திரமடைவதற்கான வழி. மிகப்பெரிய பிணைப்பு என்றால், ஒருவிதத்தில் இனப் பெருக்கத்தால் நாம் உருவாகும் விதம்தான். மிகப் பெரிய வேட்கை என்றால் இனப்பெருக்கத்திற்கான வேட்கைதான். உடல், மனம் மற்றும் உணர்வளவில் இது மனிதர்களைப் பிணைக்கிறது. சுவாதிஷ்டானாவிற்கும் சுதந்திரத்திற்கும் தொடர்புண்டு. சுதந்திரம் என்பது, இப்படிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் கட்டாயங்களிலிருந்து நம்மை விடுதலை செய்துகொள்வதற்கான வழி.

இனப்பெருக்கமா, கடவுள்களைப் படைப்பதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுவாதிஷ்டானாவில் சக்தி ஆதிக்கமாக இருக்கும்போது, ஒருவர் சுற்றியுள்ள உயிர்களுக்கு இன்னும் விழிப்புணர்வுடையவராய் மாறுகிறார்.
சுவாதிஷ்டானாவை, குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக பயன்படுத்தியுள்ளவர்கள் பலர் உள்ளனர். அதன் கீழ்மட்டத்தில் சுவாதிஷ்டானம் நிலைபெற்றால், அது வெறும் இனப்பெருக்கத்திற்காக செயல்படும். அதன் உயர்மட்டத்தில், நீங்கள் விரும்பினால் அதனால் கடவுளையும் உருவாக்க முடியும். தெய்வீகம் என்று நீங்கள் கருதும் ஒன்றை உருவாக்குவது, மிக கவனமாக அணுகப்பட வேண்டிய ஒன்று. கடவுளை உருவாக்கும் தொழில்நுட்பம், சுவாதிஷ்டானா மீதுள்ள முழு ஆளுமையை அடிப்படையாகக் கொண்டது. தெய்வீக சக்திகளை உருவாக்கிய பல யோகிகள், ஒன்றை உருவாக்கியதே போதுமென்று உணர்ந்தார்கள். அவர்களை முழுமையாக அதற்குக் கொடுத்து, அந்த படைப்பு நிறைவடைந்ததோடு அவர்களும் விடை பெற்றார்கள். அல்லது அவர்களை முழுமையாகக் கொடுக்கும் செயல்முறையில் தங்களை கரைத்துக் கொண்டார்கள். சிலர் இன்னும் அதிகமாகச் செய்யும் திறனை தக்கவைத்துக் கொண்டார்கள். உங்கள் சுவாதிஷ்டானா துடிப்பாக இருந்தால், நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம், அல்லது கடவுளை ஈன்றெடுக்கலாம். ஆனால் கடவுளை ஈன்றெடுத்த பிறகு, மற்ற ஆறு சக்கரங்களும் அதே அளவு துடிப்பாக இருந்தால்தான், நீங்கள் தொடர்ந்து உயிர் வாழமுடியும், வீரியத்துடன் இருக்க முடியும்.

சுயத்தை சுதந்திரமாக்கும் தொழில்நுட்பம், உங்கள் உயிர்சக்தியில் ஒரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவது பற்றியது, உடலின் கட்டுப்பாடுகள் அதை பிணைக்காத அளவு அதனை இளகச்செய்வது பற்றியது. இந்த உடலை துடிப்பாகவும், ஆரோக்கியமாகவும், திறமைகரமாகவும் வைத்துக்கொள்ள, ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை நீங்கள் முதலீடு செய்யவேண்டும். அந்த மூலதனம் இல்லாவிட்டால் அது தன் திறமைகளை இழந்து, செயல்படும் ஆற்றலை இழந்துவிடும். ஒரு கடவுளை ஈன்றெடுக்க விரும்பினால், உங்களிடமுள்ள எல்லாவற்றையும் அதில் நீங்கள் முதலீடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் தெய்வீக சக்தியை உருவாக்குவது சாத்தியமாக இருக்காது. யாரோ ஒருவர் நம்மை ஈன்றெடுத்தார் - அதுவும் முக்கியம்தான்; அதனால்தான் நாம் இங்கு இருக்கிறோம். உங்கள் சுவாதிஷ்டானா கொண்டு நீங்கள் செய்யக்கூடிய அதி மகத்துவமான செயல், தெய்வீக சக்தி ஒன்றை ஈன்றெடுப்பதே.

மனிதர்களை பிரதிஷ்டை செய்தல்

உங்கள் சுவாதிஷ்டானா கொண்டு நீங்கள் செய்யக்கூடிய அதி மகத்துவமான செயல், தெய்வீக சக்தி ஒன்றை ஈன்றெடுப்பதே.

தெய்வீக சக்தியை ஈன்றெடுப்பது, அல்லது வேறுவிதமாகச் சொன்னால் பிரதிஷ்டை என்பது, பலவிதங்களில் நடக்கமுடியும். உலகிலுள்ள பொருட்கள் அனைத்திலும், பிரதிஷ்டை செய்வதற்கு மிக சுலபமானது மனித உடல்தான். ஆனால் நாளை காலையே தலைகீழாக மாறி, உங்களிடம் நேர்மாறாக ஏதாவது சொல்லக்கூடியதும் மனித மனம்தான். ஒருவர் தன் மனதை, கேள்விக்கிடமின்றி ஒரே விஷயத்தின்மீது குவிந்திருக்கும் பக்குவத்திற்குக் கொண்டு வந்திருந்தால், அந்த உடலை தெய்வீக சக்தியாக செயல்படும் விதமாய் பிரதிஷ்டை செய்வது சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய உலகில் மக்களில் பெரும்பாலானவர்களால் அப்படிப்பட்ட ஒருமுகமான கவனத்துடன் இருக்க முடிவதில்லை. அவர்கள் வாழ்க்கையில் சரியானதைத்தான் செய்கிறார்களா என்று அடிக்கடி கேள்வி கேட்கத் துவங்கிவிடுகிறார்கள் - அது திருமணம், பிரம்மச்சரியம், ஆன்மீகம் என்று பொதுவாக எல்லாவற்றுக்கும் பொருந்தும். நவீன சமுதாயத்திற்கு நடந்திருக்கும் மிக மோசமான பேரழிவு என்றால், அவர்களால் எந்தவொன்றின் மீதும் அசையாத கவனத்துடன் இருக்கமுடிவதில்லை. ஒட்டு-மொத்த கலாச்சாரமே, “எனக்கு என்ன கிடைக்கும்?” என்றாகிவிட்டது. “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பது பிரதானமாக இருக்கும் வரையில், பார்ப்பதையெல்லாம் பொறுக்கிக்கொள்ளும் நோக்கத்தில், மனம் ஒன்றிலிருந்து அடுத்ததிற்கு தாவிக்கொண்டே இருக்கும்.

சுவாதிஷ்டானாவின் இன்னொரு பரிமாணம், அதனை அதன் இயற்கையான கட்டாயங்களுக்கு அப்பால் எடுத்துச்செல்ல முடியும். பாலுணர்வு என்று கூறப்படுவது, அடிப்படையில் இயற்கை உங்களை இனப் பெருக்கம் செய்வது நோக்கி உந்தித்தள்ளுவதே. நவீன சமுதாயங்களில், மனிதர்கள் இதையே ஒரு தனி நோக்கம் போல நடத்துகிறார்கள். ஒருவரோடு ஒருவரை பிணைத்துக்கொள்ள, இதை மக்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் அடிப்படையில், உடலின் ஏக்கம் இனப்பெருக்கத்திற்கானது. இது இல்லாமல் இருந்திருந்தால், நாம் இங்கு இருந்திருக்க மாட்டோம். ஆனால் வாழ்வின் சுழற்சியான தன்மையைத் தாண்டிச் செல்ல விரும்பினால், இந்த பரிமாணங்களைக் கடப்பது முக்கியமாகிறது.

தந்திரா கலாச்சாரத்தில் சுவாதிஷ்டானா

சுவாதிஷ்டானத்தை பயன்படுத்துவது மிக சிக்கலானதாக இருப்பதோடு, மிக அற்புதமாகவும் இருக்கிறது.
சுவாதிஷ்டானத்தை பயன்படுத்துவது மிக சிக்கலானதாக இருப்பதோடு, மிக அற்புதமாகவும் இருக்கிறது. இதைச் செய்ய மூன்று வழிகள் உள்ளன. இதை சடங்குகள் மூலம் செய்யமுடியும், உடலைக் கொண்டு செய்யமுடியும், அல்லது வெறும் உயிர் சக்தியைக் கொண்டு செய்யமுடியும். சுவாதிஷ்டானா, அதன் உச்சநிலையில், உடல் மூலமாகவும் வெளிப்பட முடியும், அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்திகளை உயர்த்துவது மூலம் வெளிப்பட முடியும், அல்லது வெளியிலுள்ள பொருட்களைக் கொண்டு வெளிப்பட முடியும். பொதுவாக 'தந்திரம்' எனும் முறையில், மூன்று அடிப்படைகள் உள்ளன. இவற்றை கௌலா, மிஷ்ரா மற்றும் சமயா - அதாவது கீழ், நடு, மற்றும் உயர்நிலை முறைகள் என்று சொல்வார்கள். இதில் ஒன்று வெளிப் பொருட்களை பயன்படுத்துகிறது. உங்கள் உடலமைப்பின் மீது உங்களுக்கு ஆளுமை இல்லாவிட்டால், உங்களைவிட உயர்ந்த நிலையில் செயல்படக் கூடிய ஒரு சக்தியை, அதாவது தெய்வீக சக்தி என்று அழைக்கக்கூடிய ஒன்றை உருவாக்க, பிற பொருட்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.

சடங்குமுறைகள் மூலமாக, தாந்திரிகர்கள் பல்வேறு தெய்வ உருவங்களை, அவை அவற்றுக்கே உரிய விதங்களில் நின்று நடமாடும் விதமாக உருவாக்கியுள்ளார்கள். அந்த தாந்திரிகர் எவ்விதத்திலும் பரிணாம வளர்ச்சியில் முன்னேறியிருக்காவிட்டாலும், சடங்குகளைப் புரிந்துகொண்டு அவற்றை அப்படியே பின்பற்றுகிறார். அவர் அந்த சடங்கு எப்படி நடக்கவேண்டுமோ அப்படியே பிறழாது செய்வதால், ஒருவித சக்தி உருவாகிறது. இந்தியாவில் சில கோயில்களில் இப்படி நடப்பதை நீங்கள் கவனிக்க முடியும். பூசாரிகள் தன்னளவில் பரிணாம வளர்ச்சியில் முன்னேறாமல் இருக்கலாம் - ஆனால் அவர்கள் சடங்கினை மட்டும் பின்பற்றுவார்கள். அவர்களிடம் அந்த செயல்முறையை மாற்றவே கூடாது என்று கற்றுத்தந்துள்ளார்கள். அதைச் செய்யும்போது, திடீரென வெடிபோல சக்தி பிரவாகமெடுக்கும். ஆனால் இப்படிச் செய்தால், அந்த சக்தியை உறுதிப்படுத்த முடியாது, பல தலைமுறைகளுக்கு உயிரோட்டமாக வைத்துக்கொள்ளவும் முடியாது. நீண்டகாலம் வாழும் ஒரு சக்தி வடிவத்தை நீங்கள் உருவாக்க விரும்பினால், அதைச்செய்ய ஒரு வழி, உடலைக்கொண்டு செய்வது. ஆனால் அது வெகுநீண்ட காலத்திற்கு இருக்கவேண்டும் என்றால், வெறும் உயிர்சக்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவு சக்தியை அதில் முதலீடு செய்தால், அது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும்.

அடுத்த பகுதியில்...

சுவாதிஷ்டான சக்கரத்தைப் பயன்படுத்தி மனித ஆரோக்கியத்தை மீட்கும் வழிமுறைகள், சித்தர்கள் மூலிகைச் செடிகளை கண்டறிய உதவும் சுவாதிஷ்டானம் என பல்வேறு சுவாரஸ்ய அம்சங்கள் காத்திருக்கின்றன!