மனதில் ஒரு கோயில்! - பூசலார் செய்த அற்புதம்!

மனதில் கற்பனை செய்வதெல்லாம் உண்மையாகாதுதான்! ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது! தான் கட்ட நினைத்த கோயிலை வசதியில்லாத காரணத்தால் தன் மனதிலேயே அணுவணுவாய் உருவாக்கிய பூசாலரைப் பற்றி அறிந்துகொண்டால், பூசலாரின் மனக்கோயில் கற்பனையல்ல என்பது புரியும்!
மனதில் ஒரு கோயில்! - பூசலார் செய்த அற்புதம்!, Manathil oru kovil poosalar seitha arputham
 

தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை! பகுதி 1

மனதில் கற்பனை செய்வதெல்லாம் உண்மையாகாதுதான்! ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது! தான் கட்ட நினைத்த கோயிலை வசதியில்லாத காரணத்தால் தன் மனதிலேயே அணுவணுவாய் உருவாக்கிய பூசாலரைப் பற்றி அறிந்துகொண்டால், பூசலாரின் மனக்கோயில் கற்பனையல்ல என்பது புரியும்!

கல்லில்லை, சிலையிருந்தது, மண்ணில்லை, மண்டபமிருந்தது!
கட்டிடமில்லை, உயிர் இருந்தது! கற்பனையில்லை,
கனவுமில்லை, மாயமில்லை, மந்திரமுமில்லை!
விழிப்புணர்வால் உருவிலானை உருப்பெறச் செய்தார்!

மலைத்துப் போன மன்னர் பூசலாரின் பக்திக்கு முன்னே தன்னை மிகச் சிறிதாக உணர்ந்தார். தனது கோயிலை விட பூசலாரின் கோயில் எத்தனை உண்மை என்பதை உணர்ந்தார்.

உளிக்கும் கல்லுக்கும் நடுவே அந்த சிற்பி. உருவத்திற்கும் ஒலிக்கும் நடுவே அந்த அதிர்வு. பீடத்திற்கும் கோபுரத்திற்கும் நடுவே அந்த கர்ப்பகிரகம். கோவிலின் பிரம்மாண்டத்திற்கும் மன்னரின் பக்திக்கும் நடுவே தன்னையே அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான கைகள். பூமிக்கும் வானத்திற்கும் நடுவே பிரம்மாண்டமாய் எழுந்து நின்ற அந்த கோபுரம்.

சிவன் இங்கே எழுந்தருள வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே.

பல ஆண்டுகளாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அந்த கோவில் கட்டுமானப் பணி முடிந்திடும் தருவாயில் இருந்தது.

அது மன்னரின் வாழ்நாள் லட்சியம். நாளை சிவன் அங்கே எழுந்தருள்வான் என்ற எண்ணத்துடன் தூங்கிக் கொண்டிருந்த மன்னரின் கனவில் சிவபெருமான் தோன்றினார். “அரசே நாளை நீங்கள் கட்டிய கோயிலுக்கு என்னால் வர இயலாது. பூசலார் என்பவரும் எனக்கு கோயில் கட்டியுள்ளார். அவரும் நாளை தான் கோயில் கும்பாபிஷேகம் நடத்துகிறார். நான் அவரது கோயிலில் தான் எழுந்தருள உள்ளேன். அதனால் தமது கோயிலுக்கு வர இயலாது,” என்றார்.

எண்ணிலா மனிதர்களின் கைகள், பல ஆண்டு கால செயல், பெரும் செல்வம் எல்லாம் செலவு செய்தும் சிவன் எழுந்தருள மறுத்தான்.

அதிர்ச்சியில் கண் விழித்த மன்னர் “யார் இந்த பூசலார்? அவர் கட்டிய கோயில் எங்கே இருக்கிறது? அவரது கோயிலில் அப்படி என்ன மகிமை இருக்கிறது? நான் கட்டியதை விட அவர் கட்டிய கோயில் பெரிதா? எனக்கு தெரியாமல் அவ்வளவு பெரிய கோயிலை யார் கட்டியிருக்க முடியும்?”

மன்னர் குழப்பத்தில் தவித்தார். மன்னரின் ஆட்கள் நாட்டின் நான்கு பக்கங்களிலும் சென்று பூசலாரை தேடத் துவங்கினர். கோவில் இருக்கும் இடத்தை தேடினர். “அப்படி எந்த கோவிலும் இங்கே இல்லை” என்ற பதிலே ஊர் மக்களிடமிருந்து வந்தது.

பூசலார் சிவனுக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணியிருந்தார். அந்த ஏழை பக்தர் அதற்காக நன்கொடை திரட்டிட பல முயற்சிகள் செய்தார். அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இருப்பினும் சிவனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற தனது ஆசையை அவரால் துறக்க இயலவில்லை. “கோயில் கட்ட இடம் இல்லை என்றால் என்ன? என் மனதில் தான் விசாலமாக இடம் இருக்கிறதே!” என்று பக்தியில் உருவானது அந்த எண்ணம்.

தன் மனதிற்குள்ளேயே பிரம்மாண்டமாய் ஒரு கோயில் எழுப்பி அதில் சிவனை எழுந்தருளச் செய்து அனுதினமும் அவனுடன் அளவளாவி பக்தியில் கரைந்துருக ஆசை கொண்டார்.

தன் மனதிலேயே சிவன் எழுந்தருள தகுந்த இடமொன்று தேடினார். அது விளைநிலம் தானா எனப் பரிசோதிக்க அதில் பயிர் வளரச் செய்தார். தான் தேர்வு செய்த இடத்திற்கு மனதிலேயே வேலி கட்டினார். வேலையாட்களை அமர்த்தினார். ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு உலோகமும் ஒவ்வொரு மரமுமாய் தன் மனதிலேயே அடுக்கி கோவிலாய் உருபெறச் செய்தார். ஒவ்வொரு பாகமாக ஒவ்வொரு அங்கமாக தனது கோவில் வளர்வதை அவர் தன் மனதில் கண்டார்.

தனது உயிருக்கும் மேலான அந்த சிவனுக்கு கோயில் எழுப்ப உலகிலேயே மிகச் சிறந்த கட்டுமானப் பொருட்களை உபயோகப்படுத்தினார். தன் மனதில் செதுக்கிய சிலையின் ஒவ்வொரு வளைவையும் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கூர்ந்து கவனித்து உருவாக்கினார். சில நேரங்களில் கட்டுமானப் பணி தொடர்ந்து நடக்கவே இரவெல்லாம் கண் விழித்து தன் மனதிலேயே கண்காணிப்பும் நிகழ்த்தினார். இவர் மனதிற்குள் நடந்து கொண்டிருந்த அந்த பிரம்மாண்டம் அந்த ஊரில் இருப்பவர் எவருக்கும் தெரியவில்லை.

ஆனால், பூசலார் என்ற சிவபக்தர் இந்த ஊரில் இருக்கிறார் என்பதை ஊர் மக்கள் அடையாளம் காட்டினர். பல நாட்கள் தேடலுக்கு பிறகு மன்னரின் ஆட்கள் பூசலாரைக் கண்டனர். காலணிகளைப் பழுது பார்க்கும் தொழில் செய்திடும் பூசலாரின் மிகச் சிறிய குடிலை கண்டு, மன்னரிடம் அதைப் பற்றி கூறினர்.

மன்னர் பூசலாரின் குடிலுக்கு வந்தார். “எங்கே தமது கோயில்?” அதை எங்கே கட்டியிருக்கிறீர்கள்? எப்படி கட்டினீர்கள்?” என்று கேட்க, பூசலார் “நான் சிவனுக்கு மனதிலேயே கோயில் கட்டினேன்” என பதில் அளித்தார். “ஒவ்வொரு கல்லாக ஒவ்வொரு மரமாக என் மனதிலேயே எடுத்துக் கட்டினேன். கற்களின் மீது உளியைப் பதித்து என் மனதிலேயே சிற்பம் செதுக்கினேன். கோயிலுக்கு நீர் எடுக்க என் மனதிலேயே பூமியைத் தோண்டி ஆழ்கிணறு வெட்டினேன். தலவிருட்சம் உருவாக்க என் மனதிலேயே மரம் நட்டேன். அதற்கு தண்ணீரும் ஊற்றினேன். ஒவ்வொரு கல்லாக அடுக்கி என் மனதிலேயே கோபுரம் உருவாக்கினேன். கோயிலின் ஒவ்வொரு பிரகாரத்தையும் என் மனதிலேயே உருவாக்கினேன்,” என்றார்.

மலைத்துப் போன மன்னர் பூசலாரின் பக்திக்கு முன்னே தன்னை மிகச் சிறிதாக உணர்ந்தார். தனது கோயிலை விட பூசலாரின் கோயில் எத்தனை உண்மை என்பதை உணர்ந்தார்.

இது வெறும் கற்பனை அல்ல. கனவும் அல்ல. பக்தியில் கரைந்துருகிய மனதின் ஈடுபாடு! விழிப்புணர்வின் உச்சத்தால் உருவிலானை உருவாய் கொண்டு நிறுத்திடும் திறமை! தனது உள்ளத்தின் சக்தியால் உருவம் செய்திடும் உள்நிலை!

இதுபோன்ற மனிதர்கள் சிவனை ‘வா’ வென அழைத்தால் அவன் அவர்கள் முன்னே உருவம் கொண்டு நடப்பான். இது கற்பனை அல்ல, இது படைப்பு. இவர் படைத்தவராகிறார், இனி இவர் பக்தர் அல்ல! ஆனால், இன்னமும் தன்னை பக்தரென எண்ணிக் கொண்டிருக்கிறார்.

'தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதை!' தொடரின் பிற பதிவுகள்