மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம்!
மருமகள் சிறு தவறு செய்தாலும் அதனைப் பெரிதாக்கி அவள் மீது பழிசுமத்தி மகிழ்வாள் மாமியார் என்பதை "மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் வெண்கலம்" என்ற பழமொழி சொல்கிறது. இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
மருமகள் சிறு தவறு செய்தாலும் அதனைப் பெரிதாக்கி அவள் மீது பழிசுமத்தி மகிழ்வாள் மாமியார் என்பதை "மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் வெண்கலம்" என்ற பழமொழி சொல்கிறது. இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
சத்குரு:
எல்லோருக்கும் பிடித்த பொதுவான விதி என்ன?
நான் செய்வது சரி; நீ செய்வது தவறு.
Subscribe
ஒரு தனியாளோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகமோ தான் செய்வது சரி என்றும், மற்றவர்கள் செய்வது தவறு என்றும் தீர்ப்பு எழுதுவதுதானே நடைமுறையில் மிகப் பிரபலமான விதியாக இருக்கிறது? இது மாமியார் மருமகள் இடையில் தீவிரமாக உணரப்படுகிறது. அவ்வளவுதான்.
உண்மையில் சரி தவறு என்றெல்லாம் உலகில் எதுவும் இல்லை. புத்தசாலித்தனமாக வாழப் பிரியப்படுகிறீர்களா? முட்டாள்தனமாக வாழ முடிவு செய்கிறீர்களா என்பதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களுக்கோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ துன்பத்தையும், வலியையும் தரக்கூடிய எதைச் செய்தாலும் அது முட்டாள்தனம் என்று உணர்ந்து செயல்பட்டால் போதும்.
யாரும் விரும்பி முட்டாள்தனமாக வாழ்வதில்லை. தன்னையறியாமல், மூடத்தனத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். பகுத்துணரும் பக்குவம் வந்துவிட்டால், யாரும் தொடர்ந்து அப்படி வாழ மாட்டார்கள்.
நீங்கள் மாமியாராக இருந்தாலும், மருமகளாக இருந்தாலும் உங்கள் செயல்கள் மற்றவர்மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை முழுமையாக உணர்ந்து, கவனத்துடன் செயல்படுங்கள்.
முழு விழிப்பு உணர்வு உங்களுக்கு வந்துவிட்டால், உங்கள் முட்டாள்தனம் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். சரி, தவறு என்ற போராட்டங்கள் எல்லாம் ஓய்ந்துவிடும். அடுத்தவரைத் துன்புறுத்தாதே என்று சொல்லித் தருவதெல்லாம் அவசியமற்றதாகி விடும்.
குறிப்பு:
மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!